உள்ளடக்கத்துக்குச் செல்

தாவிப் பாயும் தங்கக் குதிரை/9

விக்கிமூலம் இலிருந்து




சிற்றப்பன் சூழ்ச்சி


இவனிடம் கோபமாகப் பேசக்கூடாது. நயமாகப் பேசித்தான் கொல்லவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட சிற்றப்பன் தன் அண்ணனை நினைத்து வருந்துவதுபோல் நடித்தான்.

“வெற்றிவேலா, அன்று நாடாளும் ஆசையில் அண்ணனைக் காட்டுக்கு விரட்டி விட்டேன். ஆனால் அதன் பிறகுதான் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்காட்டியது. எப்படியாவது அண்ணனைத் தேடிப்பிடித்து மீண்டும் அரசர் ஆக்கி அவர் கீழே இருந்து பணி செய்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் என் ஆட்கள் அவரைத் தேடிப்போன போதெல்லாம் அவர்கள் தன்னைப் பிடித்துக் கொல்லத்தான் வருகிறார்கள் என்று பயந்து ஓடிவிட்டார். என்னால் அவரைக் கண்டு பிடிக்க முடியாமலே போய்விட்டது. நல்ல வேளையாக நீ இப்போது வந்து சேர்ந்தாய். உன் அப்பா எங்கே இருக்கிறார்? சொல். அவரை அழைத்து வந்து அடுத்த மாதமே உனக்குப் பட்டம் கட்டிவிட்டு நான் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினான்.

வெற்றிவேலன் தன் சிற்றப்பனின் பேச்சை உண்மை என்று நம்பிவிட்டான். தன் தாய்தந்தையர், இருக்குமிடத்தை அந்த வஞ்சகனிடம் கூறிவிட்டான். அந்த வஞ்சகனுடைய சொற்களை நம்பி அவனிடம் அன்பு பாராட்டவும் தொடங்கினான்.

அன்று இரவு அவன் தன் சிற்றப்பனுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிடும்போதே அவர்கள் பல செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். வீரர்களைப் பற்றிய பேச்சு வந்தது. பேச்சோடு பேச்சாக அந்தச் சிற்றப்பன் “அந்தக் காலம் மலையேறி விட்டது. அப்படிப்பட்ட வீரர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்” என்று சலித்துக் கொண்டான்.

“ஏன் இல்லை? எத்தனையோ வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வீரத்தை நிலைநாட்டும் வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை” என்றான் வெற்றிவேலன்.

இதைக் கேட்டு அவன் சிற்றப்பன் சிரித்தான். “உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறது. இங்கிருந்து மிகத் தொலைவில் தேன்கதலி நாடு என்று ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டிலே ஒரு தங்கக் குதிரை இருக்கிறது. அந்தத் தங்கக் குதிரையை இங்கு கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒரு வீரனை தேடித்தேடிப் பார்த்து எனக்கு அலுத்து விட்டது. அந்தக் குதிரை மட்டும் கிடைத்து விட்டால் நம் நாட்டிற்கு ஒரு பெருஞ்செல்வம்கிடைத்த மாதிரி இருக்கும்” என்று மொழிந்தான் சிற்றப்பன்.

“அந்தத் தங்கக் குதிரையை அடைவதில் என்ன தடை இருக்கிறது?’ என்று கேட்டான் வெற்றிவேலன்.

“அல்லும் பகலும் கண்மூடாமல் அங்கு ஒரு வேதாளம் காவல் இருந்து வருகிறது. அந்த வேதாளத்தைக் கொன்று வீழ்த்தக்கூடிய வீரன் இந்த மண்ணுலகில் இன்னும் பிறக்கவில்லை” என்று சொன்னான் சிற்றப்பன்.

“இதோ நான் பிறந்திருக்கிறேன். சிற்றப்பா இப்பொழுதே என்னை அனுப்பி வையுங்கள். எப்படியும் அந்தத் தங்கக் குதிரையை இங்கே கொண்டு வந்து சேர்க்கிறேன். இந்த முயற்சியில் நான் இறந்தாலும் சரியே” என்று வீராவேசமாக முழங்கினான் வெற்றிவேலன்.

உண்மையிலேயே இந்த வீரமொழிகளைக் கேட்டு அவன் சிற்றப்பன் மகிழ்ந்து போனான். தன் சூழ்ச்சி பலித்தது என்று கருதினான். வேதாளத்தின் கைப்பிடியில் சிக்கியவர்கள் உயிருடன் மீண்டதில்லை. அவர்களோடு இவனும் போய்ச் சேரட்டும் என்றுநினைத்துக் கொண்டு வெற்றிவேலனை வழி அனுப்பி வைத்தான்.