தாவோ - ஆண் பெண் அன்புறவு/வன்மை - மென்மை

விக்கிமூலம் இலிருந்து


வன்மை / மென்மை
101. பிறப்பிற்கும் இறப்பிக்கும் இடையே

பிறக்கும்போது, முதன் முதலாகப் புதிய உடல் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது இறக்கும் போதும், பழைய உடல் மற்றவர்களிடம் கொடுக்கப்படுகிறது

ஆகவே பிறப்பு இறப்பு இவற்றிற்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு சிறப்பான பணிவு இருப்பதுதான் பொருத்தமானதாகும்.

102. வெல்லலும் தோற்றலும்

நேருக்கு நேர் எதிர்ப்பதைத் தவிர், கடினம் கடினத்தை சந்திப்பதைத் தவிர் உரத்தக் குரலுக்குப் பின் பல நேரம் மென்மையான குரல் கேட்கப்படுகிறது சினத்தை விடப் பெருந்தன்மை பலம் வாய்ந்தது

வெற்றி என்பது ஒரு வகை இழப்பே இழப்பும் ஒரு வித வெற்றியே. வெற்றியும், தோல்வியும் இருக்க வேண்டுமெனில் இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொள்

103. அவர்களின் மென்மையால்

கொடுமனம், கொடுமனத்துடன் இணையாது ஏனெனில் இரண்டுமே தத்தம் நிலையை வலியுறுத்தும் ஆகவே, மென்மையாக இருப்பதால் ஆணும் பெண்ணும் நெருங்கி வருகின்றனர்.

சம நிலையிலிருக்க ஆணும் பெண்ணும மென்மையாக இருப்பது இன்றியமையாதது அவர்களிடம காணும் மென்மைதான் அவர்களை ஒன்று சேர்க்க உறுதி அளிக்கும் அவர்களது கடினப் பண்போ அவர்களை வேறாக்கும உறுதி அளிக்கும்

104. ஆழ்ந்த அமைதி

நாம் ஆழ்ந்த பேசாமையிலிருந்து உருவாகி நீடிக்கும் அமைதியால் வளப்படுத்தப்படுகிறோம்

அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கும் பெரும் கூச்சலகள் கேட்கப்படாத பேரிரைச்சலாக மாறுகின்றன ஆனால் அமைதியான பேச்சு ஆழமாக நுழைந்து ஒவ்வொரு நாளையும் நடத்திச் செல்லும், தூய்மையான நீரைப் போலக் கண்ணுக்குப் புலப்படாமலும், சிற்றோடை போல ஒலி எழுப்பாமலும் அவை வளர்ந்து, நெருங்கிய தோழர்களாகவும், ஆசானாகவும் மாறுகிறார்கள் மென்மையாகப் பேசு, ஒருவர் மற்றவரிடம் உள்ள ஆழ்ந்த ஓசையற்றிருப்பதைக் கவனி

105. ஒவ்வொன்றிலும் மெய்யறிவு

பெண்ணின் மென்மை ஆணின் வன்மையைச் சூழ்ந்துள்ளது. ஆணின் வன்மை பெண்ணின் நளினத்தைச் சுற்றி உள்ளது. இதுதான் உலகப் போக்கு
வன்மையின் உள்ளே இருக்கும் அறிவுதான் மென்மையை அறிகிறது. சற்றே போதுமான நளினத்துடன் ஆணின் வன்மை பெண்ணைச் சந்திக்கிறது. அவளது மென்மையைப் புரிந்து கொள்கிறது. மென்மைக்குள் உள்ள அறிவு வன்மையை அறிகிறது. போதுமான வன்மையுடன் பெண்ணின் மென்மை ஆணைச் சந்திக்கிறது. அவனது வன்மையை அறிந்து கொள்கிறது.

வன்மையில் நளினமும், மென்மையில் வன்மையும்தான் ஒவ்வொன்றின் அறிவு. இதுதான் வெளிப்புறத்தை உட்புறம் அறிகிறது. இது அதைத் தொடுகிறது. ஒன்று மற்றதைப் புரிந்து கொள்கிறது. இது அதைத் தெரிந்துகொள்கிறது.

106. மென்மைப்படுதல்

உள்ளே உள்ள முழுமையை வெளிக்கொணர மென்மை அனுமதிக்கிறது. மென்மைதான் வெளியில் உள்ளதை உள்ளே முழுமையாக நுழைய அனுமதிக்கிறது.

107. பயன்படுத்தல்

வன்மை அடக்குவதாயும், மென்மை அனுமதிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தும், அதிக வன்மையும் அதிக மென்மையும் அதிகமாகவும், போதுமானதாக இல்லாமலும் இருக்கிறது. தடை செய்யும் மென்மையும், அனுமதிக்கும் கடினமும் உள்ளது ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் ஒழுங்காக இருப்பதற்கு அவர்களது சமநிலை எங்குள்ளது?

பனி உறைந்த ஓடையில் மீன் நகர இயலாது, அல்லது அதிகாலைப் பணியில் நீந்த முடியாது வேர்கள் திடமான கல்லைக் கிழித்துச் செல்லவோ பறக்கும் மணலிலோ தங்க இயலாது. இருந்தும் மென்மையான காற்றில் பறவைகள் உயரே எழும்பிக் கடினமான நிலத்தில் நிறைவுடன் தங்குகின்றன.

எப்படி வன்மையையும், மென்மையையும் பயன்படுத்துவது என ஆண், பெண் கேட்கக் கூடாது ஆனால் இருவரும் ஒன்று சேர்ந்து பணிவுடன் இவற்றால் பயன்படுமாறு இருங்கள் பயன்படுத்தும் வகையில், மென்மையாக வன்மையுடனும் வன்மையாக மென்மையுடனும் இருங்கள்

மீனாகவும், ஓடும் சிற்றோடையாகவும் இருங்கள் வேராகவும், வேர் பாயும் நிலமாக இருங்கள் பறவையாக, காற்றாக இருங்கள்.

108. வன்மைக்கும் மென்மைக்கும் இடையே

வன்மையான மென்மையும், மென்மையான வன்மையும் தான் ஆண், பெண் இருவருக்குமிடையே உள்ள பிணைப்பு இது மாற்றத்திற்கு விட்டுக்
கொடுத்தாலும், ஆணையும் பெண்ணையும் பிணைத்து வைக்கிறது ஒருவருக்கொருவர் வளைந்து கொடுக்க வைத்தாலும், அவர்கள் இருவரையும் திடமாக இணைத்து வைக்கிறது

வன்மை, மென்மை இவற்றின் நடுவே, ஆணும் பெண்ணும் விட்டுக் கொடுத்து உறுதியாக இருக்க, அங்கே வளைந்தும், வளையாததுமான அமைதி நிலவுகிறது

109. மென்மையின் தொடக்கம்

பெண்ணுக்குள் ஆண் மென்மையையும், கருவாயையும், தொடக்கத்தில் கதகதப்பான பெரிய கடலையும் காண்கின்றான் மேலும், பிறப்பு, கடினம் இவற்றால் வெற்றி கொள்ளப்பட்ட தனது பிறப்பிடத்தையும காண்கிறான்

பெண் என்ற கடலில இழந்த ஆண் தொடக்கத்தின் மென்மைக்குத் திரும்புகிறான் பின் தான் போரிட வேண்டிய வன்மைக்கு வருகிறான்

இப்படித்தான் பெண்ணின் மென்மை ஆணின் வன்மையை வெல்கிறது இப்படி ஆண் ஏன் மென்மையை வெல்வதைக் காண்கிறான்

110. கருக் கடல்

பிறப்பினாலும், வன்மையாலும் ஆணினால் வெல்லப்பட்ட பெண், மென்மையான வாக்குறுதியையும் நினைவூட்டலையும் தனக்குள்ளேயே தூக்கிச் செல்கிறாள்

வன்மையாகப் பிறந்ததால், அவளது உடல் மென்மையான தொடக்கம் என்ற கடல் போன்ற பிறப்புறுப்பை வளர்க்கிறாள் அவளது உடல் நினைவு படுத்தும்போது, அவளை மறக்க முடியாது மறக்கப் படமாட்டாள்

111. வேறுபட்ட சமநிலை

பெண்ணின் மென்மை, வன்மையால் பக்குவப் படுத்தப்படும்போது வெற்றி கொள்ள முடியாது. மென்மையால் பக்குவப்படுத்தப்பட்ட ஆணின் வன்மையை உடைக்க முடியாது

பெண்ணை, வன்மை இயக்கம் இவற்றால் வலுப்படுத்து இதனால் அவள் தண்ணீர், ஆண் இரண்டையும் புரிந்து கொள்வாள். ஆணை மென்மை, காத்திருத்தல் இவற்றால் வலுப்படுத்து இதனால் அவன் பெண்ணையும் நிலத்தையும் அறிந்து கொள்வான்.

சமன்படும் போது, ஆணும் பெண்ணும்
வேறுபட்ட சமமானவர்களாகச் சந்திப்பார்கள் அவன் அவளுக்குத் தங்கியிருக்கும் நீர் போலப் வலுவாா யிருப்பான் அவள் அவனுக்கு நகரும் நிலம் போலப் வலுவாயிருப்பாள்

112. வன்மையின் வழியில்

தனது வன்மையைப் பெண்ணின் மென்மையையும் வெறுமையையும் வெல்கிறது என ஆண் அறிய வேணடும்.

தனது மென்மையுடனும் வெறுமையுடனும் பெண் ஆணை, அவனது பலம், வன்மைக்காகத் தேடுகிறாள். அவனைத் தன்னை நிரப்பி, வலுவூட்டி அதன் வழி அடங்கத் தேடுகிறாள்

ஆண் பெண்ணின் நளினத்தின் மூலம் மென்மை அடைகிறான். பெண் ஆணின் வன்மை மூலம் வல மடைகிறாள்

113. மென்மையின் வழியில்

தனது மென்மை ஆணின் வன்மையையும், பலததையும் வெல்கிறது எனப் பெண் தெரிந்து கொள்ள வேண்டும்

தனது பலம், வன்மை இவற்றால் ஆண் பெண்ணை அவளது மென்மையை, வெறுமையைத் தேடுகிறான். இதனால் அவன் தன்னை அமைதிப்படுததி அடங்க முயலுகிறான்

பெண் ஆணின் வன்மையால் பலம் பெறுகிறாள். ஆண் பெண்ணின் மென்மையால் பலமடைகிறான்.

114. வன்மை ஒரு சுமை

வன்மை என்ற சுமையை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் மென்மையால் சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்

விட்டுக் கொடுக்கப், பலத்திற்குக் கூட அறிவு தேவை

வன்மையிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது வன்மைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும் விட்டுக் கொடுக்கப் பலம் தேவை பலத்திற்குத் தேவை சமநிலை

மென்மையின்மையால், வன்மை தொல்லையின் மூலமாகும், வன்மை இல்லையானால் மென்மை துன்பத்தின் மூலமாகும்

115. வெறுமைப்படுத்தல்

வெறுமையாக்குவதால் எந்த இழப்புமில்லை பெறுவதற்காக வெறுமையாக்கிய கிண்ணம் இன்னமும் கிண்ணம்தான். அதனது உருவமும் அடையாளமும்
அதைப் போலத்தான் உள்ளது அதனது நிலைதான், பெறுவதற்காக மாறுகிறது

ஆண், பெண் இருவரில் ஒருவருக்கொருவர் இரு மடங்கு விட்டுக் கொடுப்பதுதான் மென்மை இதிலிருந்து தான் வெறுமையாக்கலும், பெறுவதும் வந்தது

வெறுமையாக்குவது ஒருவரை மற்றவரால் நிரப்ப அனுமதிக்கிறது. இதனால் இருவரும் இணைய முடிகிறது

116. பின்னிருந்து வழிநடத்தல்

முதலில் வழி காட்டி நடத்திச் செல்லாதே தொடக்கத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பின்பற்றிச் செல்வதே நல்லது

பின்பற்றிச் செல்வதிலிருந்து வழி நடத்தல் வரும் இது ஒரு வகையான மென்மையான, பின்னாலிருந்து வழி நடத்திச் செல்லும் தனித்த வகை ஆகும்

மென்மையிலிருந்து பணிவு வருகிறது இப் பணிவிலிருந்து நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை யிலிருந்து ஒன்றாக இருப்பதும், ஒரே மனமும் வருகின்றன.

ஒரு மனம் தன்னைத் தானே தொடரவும் முடியாது வழிகாட்டிச் செல்லவும் முடியாது. முற்றிலும் எதிரான வையிலிருந்து விடுபட்டதால், வழி நடத்துதலோ, பின் பற்றுவதோ இல்லை

117. அச்சம் தருவதைக் கண்டறிதல்

மதிப்பச்சம் காண் அஞ்சற்க, வியப்பைக் காண் அச்சம் என்ற இறுக்கம் உடையக் கூடியது, கடினமாகி தடை செய்து சுமையாகிக் கட்டுப்படுத்துகிறது அச்சத்தினால் கடினத்தன்மை உருவாகிப் பிரிவும், முறிவும் உண்டாகின்றன

அச்சத்தில் நம்பிக்கையும், வெளிப்படை யாயிருத்தலும் இருக்க முடியாது. ஒன்றாகக் கொடுப்பதும் வருவதும் இராது. நம்பிக்கை என்ற மென்மைதான் வியப்பிற்கு வழி கோலும்

118. வன்மை மென்மை இரண்டும்

பள்ளத்தாக்கின் கற்கள் ஓடையை வழிநடத்தும் மலைக் குன்றுகள் மழை பொழியச் செய்கின்றன உருளும் கூழாங் கற்கள் நீரைப் பிரிக்கின்றன

முதலில் மென்மை கடினத்திற்கும், பின்னர் இறுதியாகக் கடித்தன்மை மென்மைக்கும் விட்டுக் கொடுப்பதேன்?

நடப்பதற்கெல்லாம் பெயர் ஒன்றிருந்தால், அதைப் பெரிய மாற்றம், மாபெரும் தாய் எனக் கூறலாம் அல்லது அதை இயற்கை எனலாம்

'இயற்கை நெறி' க்குக் கடினமும், மென்மையும் தேவை. ஆண்களுக்கு ஆண்மை தேவை, ஆனால் பெண்மையை வளர்த்துக் கொள் பெண்களுக்கு பெண்மை தேவை, கூடவே ஆண்மையை உண்டாக்கிக் கொள்.

119. ஒவ்வொரு கல்லுக்கும் அப்பால்

வன்மையாயிரு. ஆனால் மென்மையைப் புறக்கணிக்காதே. வன்மை என்பது தான் எனப்படுவது இது விளக்குவதுடன் வரையறுக்கின்றன மென்மை ‘தான்’ என்பதன்று. இது திறந்து ஒப்புக்கொள்கிறது

வன்மையினால் உருவாக்கப்பட்ட சச்சரவுகள் மென்மையால் தீர்க்கப்படுகின்றன.

ஓடைகளில், நீர் ஒவ்வொரு கல்லுக்கப்பாலும் வழியைக் கண்டு பிடிக்கின்றது.

120. கல்லும் இல்லை நீரும் இல்லை

நீர் மென்மையானதென்றும் கல் கடினமான தெனவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் மென்மையான நீரில் உள்ள விட்டுக்கொடுக்காத ஏதோ ஒன்று கடினமான கல்லையும் அரித்து அழிக்கிறது. கடினமான கல்லில் உள்ள ஏதோ ஒன்று நீரின் மென்மைக்கு
விட்டுக்கொடுக்கிறது நீரில் உள்ள கடினத்தையும் கல்லின் மென்மையையும் கண்டுபிடி

நீருக்குக் கடினமாகத் தோன்றும் கல் போல அல்லது கல்லுக்கு மென்மையான நீர் போலப் பாசாங்கு செய்துகொண்டு நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்

சொற்களுக்கு அப்பால் நாம் உள்ளோம் நாம் நீரோ கல்லோ இல்லை. மென்மை அல்லது கடினம் இல்லை, ஆனால் ‘இயற்கை நெறி’ தான் இது ஒவ்வோர் உருவம் பெற்று அதையே கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது

121. எண்ணமின்றி இரு

'நான் முதலில் இங்குத் தான் பாய்வேன், பின்னால் அங்கே வழிந்தோடுவேன்’ என நீர் கருதுவதில்லை நீரோட்டம் தானே ஏற்படுகிறது

ஓசையிடும் நீர் அருவிகளிலும், அமைதியான குளங்களிலும் நீர் எதையும் கருதுவதில்லை தானே நகரும் போது, அதை நகர்த்துவதில் எந்தப் பரபரபிற்கும் பயனில்லை

இது தான் கமுக்கம் நீரைப் போல மென்மை யாயிரு. உள்ளே இருக்கும் உந்துதலை நம்பு. ஒவ்வொரு வினாடியையும் அதன் படிவிட்டு விடு பின் தவறில்லாத வழியே நகர் எவ்வித நோக்கமின்றி இரு