திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில்

விக்கிமூலம் இலிருந்து
திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில்
பொருட்பால்
60. ஊக்கமுடைமை

ஊக்கமுடைமை என்னும் அதிகாரம் பொருட்பாலில், அரசியல் எனும் பகுப்பில் அமைந்துள்ளது. ஒற்றாடல் என்னும் அதிகாரத்தின் பின் உள்ளது.

ஊக்கமுடைமை என்பதற்கு உரையாசிரியர் பரிமேலழகர் பின்வருமாறு விளக்கம் தருவர். “மனம் மெலிதல் இன்றி, வினைசெய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல்” என்று கூறுவர். கிளர்ச்சி என்பது, மன எழுச்சியாம். அதாவது, ஒரு செயலைச் செய்கின்றவன் மனச் சோர்வு இல்லாமல் அச்செயலை மன எழுச்சியோடு -ஊக்கத்தோடு- செய்தலாம்.

ஊக்கமே அனைத்திலும் சிறந்தது

ஒருவனது உடைமை (சொத்து) என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது ஊக்கமே. அந்த ஊக்கம் இல்லாதவர், வேறு எதனைப் பெற்றிருந்தாலும் அவர் உடையவர் ஆவரோ? ஆகார்! என்கிறார் தமிழ்மறை முனிவர் வள்ளுவப்பெருமான்.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று.

ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வம் ஆகும். மற்ற பொருட்செல்வங்களோ ஊக்கம் இல்லாதவனிடம் இருந்து, நில்லாது நீங்கி விடும். அதாவது நிலைபெறாமல் அவனிடம் தங்காமல் சென்றுவிடும் என்பதாம்.

இதனை,

உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.

- எனக் கூறுகிறார்.

நிலைபெற்ற ஊக்கத்தினைத் தன் கைப்பொருளாகக் கொண்டவர்கள், பொருள் செல்வத்தை இழந்தாலும், அதனை இழந்துவிட்டோம் என்று கவலைப்படார்.

சலிப்பே இல்லாத ஊக்கத்தை உடையவனிடம் செல்வமானது தானே வழிகேட்டுக் கொண்டு சென்றடையும் என்கின்றார் செந்நாப் போதார் எனும் சிறப்புப் பெயர்பெற்ற வள்ளுவப்பெருமான்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.

என்பதுதான் அந்தக் குறள்.

அதாவது, ஆக்கமானது -வளர்ச்சியானது- வழிகேட்டுக் கொண்டு செல்லுமாம். யாரிடம் தெரியுமா? சலிப்பே இல்லாத (அசைவு இலா) ஊக்கத்தை தன்னிடம் பெற்றிருப்பவன் இடத்திற்கு.

ஊக்கம் உடையவர்தம் உயர்வு

நீர் நிலையின் நீர் அளவைப் பொறுத்து அங்கு மலரும் நீர்ப்பூக்களின் நாளங்களின் நீட்சி (தண்டுகளின் நீளம்) அமையும். அதுபோல, மக்கள்தம் ஊக்கத்தின் அளவினதாம் அவர்தம் உயர்ச்சி.

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

எவ்வளவு அழகான உவமை. வெள்ளம் வரும்போது நீர் எந்த அளவு உயர்கின்றதோ அந்த அளவு நீரில் பூக்கும் பூக்களின் தண்டின் நீளமும் உயர்ந்து நீளுமாம். அதுபோல, ஊக்கம் உடையவனின் ஊக்கமானது (மன எழுச்சியானது) எந்த அளவிற்கு உயர்ந்து உள்ளதோ, அந்த அளவு அவனுக்கு உயர்வும் உண்டு என்கின்றார்.

நினைப்பவற்றை எல்லாம் உயர்வாகவே நினைக்க! அந்த நினைவானது நிறைவேறாமல் போனாலும், அந்த உயர்ந்த நினைவானது தவறாத (தள்ளாத) தன்மையைக் கொண்டுவிளங்கும்.

முயற்சிக்கு எடுத்துக்காட்டாகக் களிற்றினை (களிறு=ஆண்யானை) கூறுகின்றார் முப்பால் முனிவர் திருவள்ளுவர். ஒரு களிறானது -ஆண்யானையானது- கட்டான அம்புகள் பாய்ந்து புண்பட்டு நின்றாலும், தளராது போர்க்களத்தில் தன் பெருமையை நிலைநிறுத்தும். அதுபோல, ஊக்கமுடையவர்கள் தாம் செய்யும் முயற்சிக்குச் சிதைவு வந்தாலும் தளராமல் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டுப் பாடு ஊன்றும் களிறு.

ஊக்கம் இல்லாதவர்கள், இந்த உலகத்தார் எவரிலும் யாம் பிறருக்குக் கொடுக்கின்ற வள்ளல் தன்மை உடையவர் எனும் பெருமையினைப் பெறார் என்பதாம். (அதாவது, ஒருவன் வள்ளலாக, பிறருக்குக் கொடுப்பவராக இருக்கவேண்டுமானால் செல்வம் வேண்டும், அது ஊக்கம் உடையவனிடம்தான் இருக்கும், ஊக்கம் இல்லாத சோம்பேறி இடம் செல்வம் இருக்காது. செல்வம் இல்லாதவன் பிறருக்கு எப்படிக் கொடுக்க முடியும்? எனவே, ஒருவன் சிறந்த வள்ளல் தன்மை உடையவனாய் இருந்து புகழ்பெறவேண்டுமானால் ஊக்கம் தேவை என்றுகூறுகிறார்). இதனைப் பரிமேலழகர், “ஊக்கம் இல்லையாகவே, முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம்” என்று அழகுபட இதனை மேலும் விளக்குவார். (கொடை - பிறருக்குக் கொடுத்தல், செருக்கு அதனால் வரும் பெருமிதம்).

ஊக்கம் இல்லாதவர்தம் இழிவினைப் 'பிறிது மொழிதல் அணி' என்னும் 'ஒட்டணி' அலங்காரத்தில் சுவைபட விளக்குகின்றார் பொய்யாமொழியாராகிய வள்ளுவப் பெருந்தகை.

பரியது கூர்ம் கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்.

- என்கின்றார்.

யானை மிகவும் பருத்த ஒரு விலங்கு; அது தன்னிடம் கூர்மையான கோடுகளையும் -கொம்புகள்- கொண்டுள்ளது. என்றாலும், யானையானது, ஊக்கம் நிறைந்த புலியானது தாக்கினால் அஞ்சும், பயப்படும்.

இதன்மூலம் ஓர் உண்மையைக் கூறுகின்றார் வள்ளுவப் பெருந்தகை. பகைவரைக் காட்டிலும் மிகுந்த மெய்வலிமையும் (உடல் வலிமை), கருவிச் சிறப்பும் (பல்வேறு படைக்கலங்கள், ஆயுதங்கள்) பெற்றிருந்தாலும், ஊக்கம் இல்லாத அரசர் அஞ்சுவர், பயப்படுவர் பகைவனைக் கண்டு என்பதாம்.

ஊக்கமே செல்வம்:

ஒருவனுக்கு அறிவு என்பது, ஊக்கமாகிய செல்வமே! அந்த ஊக்கம் இல்லாதவர் மக்கள் வடிவம் பெற்றிருந்தாலும் மரமே ஆவர்; மக்கள் என்று கூறப்படார். மக்களின் வடிவத்தைப் பெற்றிருப்பதுதான் அம்மரத்திற்கும், இம்மரத்திற்கும் உள்ள வேறுபாடு!

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அது இல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு.

(உரம்-அறிவு; வெறுக்கை- செல்வம்; இல்லார் - இல்லாதவர்).

'மக்கட்கு உள்ள நல்லறிவும், காரிய முயற்சியும் இன்மை பற்றி மரம்' என்றார் என்று விளக்குவர் பரிமேலழகர்.

பார்க்க[தொகு]பரிமேலழகர் எளிய தமிழில்- 39. இறைமாட்சி

பரிமேலழகர் எளிய தமிழில்- 48. வலியறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 49. காலமறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 60. ஊக்கமுடைமை

பரிமேலழகர் எளிய தமிழில்- 65. சொல்வன்மை


பரிமேலழகர் எளிய தமிழில்- 69. தூது

பரிமேலழகர் எளிய தமிழில்- 82. தீநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 83. கூடாநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 99. சான்றாண்மை

பரிமேலழகர் எளிய தமிழில்- 109. தகையணங்குறுத்தல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 65. சொல்வன்மை

பரிமேலழகர் எளிய தமிழில்- 69. தூது

பரிமேலழகர் எளிய தமிழில்- 65. சொல்வன்மை

பரிமேலழகர் எளிய தமிழில்- 69. தூது[[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]] [[]]