திருக்குறள் புதைபொருள் 2/006-010

விக்கிமூலம் இலிருந்து

6. கொன்றதுபோலும் நிரப்பு

       "இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
        கொன்றது போலும் நிரப்பு."

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

“நேற்று வந்து என்னைக் கொன்றது போன்ற வறுமைத் துன்பம் இன்றும் வருமோ?” என்பது இதன் பொருள். இது “நல்குரவு” என்ற தலைப்பில் வந்த ஒன்று.

104, 105, 106 அதிகாரங்கள் என, ‘உழவு’ ‘நல்குரவு’ ‘இரவு’ என்பன அமைந்து, சங்கிலித் தொடர்போன்று ஒன்றை ஒன்று பற்றிநின்று ஒர் உண்மையை விளக்கிக் கொண்டிருக்கின்றன. அது ‘உழவுத்தொழிலே தலை சிறந்தது. இன்றேல் வறுமை வரும். வந்தால் இரந்துண்ண நேரிடும்’ என்பதே.

நல்குரவு என்பது வறுமை. வடமொழியாளர் இதனைத் ‘தரித்திரம்’ என்பர். வள்ளுவர் இதனை இன்மை, இடும்பை, நிரப்பு என்ற சொற்களாற் காட்டுகிறார். வறுமை அடைந்த மக்களை ‘நல்கூர்ந்தார்’ ‘துப்புரவு இல்லார்’ எனக் குறிப்பிடுகிறார்.

இன்மை, இல்லாமையையும்; இடும்பை, துன்பத்தையும் குறிப்பன. நிரப்பு நிறைவையும், குறைவையும் காட்டி நிற்கும் ஒரு சொல்; அது இக்குறளின் இறுதியில் நின்று துன்ப நிறைவையும், பொருட் குறைவையும் காட்டுவதோடு, வள்ளுவரது புலமையையும் காட்டி நிற்கிறது.

வறுமை வாய்ப்பட்டவன் அடையும் துன்பம் அளவு கடந்தது எனினும், வள்ளுவர் அதற்கொரு அளவு காட்ட முயன்றார்; முடியவில்லை. சம அளவு துன்பத்தை விளைவிக்கும் ஒன்றையாவது காட்டியாகவேண்டும் என எண்ணினார். வெற்றிபெற்று நமக்கும் காட்டிவிட்டார். அது எது தெரியுமா? "வறுமை விளைக்கின்ற அளவு து ன் ப த் தை விளைவிக்கக்கூடியது வறுமைதான்" என்பதே.

வறுமைத் துன்பத்திற்கு ஒரு உவமைத் துன்பத்தை காட்ட வள்ளுவர் தேடி அலைந்தார். சாவுத் துன்பம் எதிர்ப்பட்டது; அது துன்பமே அல்ல என ஒதுக்கி விட்டார். கொலைத் துன்பது குறுக்கிட்டது; இது ஒரு சிறு துன்பந்தானே, கொல்லப்பட்ட பிறகு அத்துன்பமுமிராதே எனத் தள்ளிவிட்டார். இறுதியாக, அவர் கண்ட உவமைத்துன்பம் எது தெரியுமா? கொல்லாமற் கொல்லும் கொடுமை; அக் கொடுமையை இக் குறளிலுள்ள "கொன்றது போலும்" என்ற உவமையிற் கண்டு மகிழுங்கள்.

நெருநல் என்பது நேற்று என்றாகும். "நேற்று வந்த துன்பம்" என்றே இதற்குப் பலரும் பொருள் கூறியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் படித்தேன். அது தவறு. குறளில் நெருநல் மட்டுமில்லை; "உம்" ஒன்றும் அதனுடன் சேர்ந்திருக்கிறது. அதற்கு 'நேற்றும்' என்று பொருள் காண்பதே உண்மையாகவிருக்கும். இதனால் வறுமைத் துன்பம் அவனை நேற்று மட்டும் வந்து வருத்தவில்லை. அதற்கு முன்பும் பல தடவை வந்து அவனை வருத்தியிருக்கிறது என்று கொள்ளவேண்டியிருக்கிறது.

"நாள்தோறும் வந்து என்னைத் துன்புறுத்தும் வறுமைத்துன்பம் நேற்றும் வந்தது: அது இன்றும் வரும் போலிருக்கிறது. வந்தால் நான் என்ன செய்வேன்?” என்று வறுமைத் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் ஒருவன் ஏங்கி அஞ்சி நடுங்கும் காட்சியை இக் குறள் படம் பிடித்துக் காட்டுகிறது. இதைக் காணும் பொழுது நமது உள்ளமும் நடுங்குகிறது.

“வருவது” என்ற ஒரு சொல் இக்குறளிலிருந்து நாள் தோறும் வருவது நேற்றும் வந்தது, இன்றும் வரும் போலிருக்கிறது என்ற பொருளைமட்டும் காட்டிக் கொண்டில்லை. “வந்த அது நாள்தோறும் போய்க் கொண்டிருக்கிறது” என்ற பொருளையும் காட்டிக் கொண்டிருக்கிறது.

“வந்து நிலைத்து நின்றுவிடும் வறுமையைவிட, அடிக்கடி வந்து போகும் வறுமை அதிகத் துன்பத்தை விளைவிக்கும்” என்பது, இக்குறளில் புதைத்து கிடக்கும் பொருளாகும்.

வறுமையாளர் இருவகை. எப்போதுமே இல்லாதவர்; இடையிலே இல்லாமற்போனவர் என்று. இடையிலே இல்லாமற்போனவர் அடையுந் துன்பமும் இருவகை. வருவார்க்கு வழங்கப் பொருளில்லாமை, வந்த பசிக்கு உணவில்லாமை என்று. இதனை ஈய முடியாமை, துய்க்க முடியாமை என்பர். இவ்விரண்டுகூட நிலைத்து நில்லாமல் அடிக்கடி வந்துபோய் விளைக்கும் கொடுமையையே, இக்குறள் “கொன்றது போலும் நிரப்பு” என்று கூறிக்கொண்டிருக்கிறது.

இரப்போர்க்கு இல்லையென்னாது வழங்கிவந்த ஒரு பெருமகனுக்கு, உண்ண உணவு இல்லாத வருத்தம் தரும் துன்பத்தைவிட வழங்கப் பொருளில்லாது வருந்தும் துன்பம் மிகப்பெரியதாக விருக்குமாம். பிறருக்கு வழங்க முடியாமல் வருந்தும் நல்குரவை வள்ளுவர் “அறஞ் சாரா நல்குரவு” என அறிமுகப்படுத்துகிறார். அவனது சொல்லிலும் சோர்வு காணப்படுமாம். இவையனைத்தும் வள்ளுவர் கருத்துக்கள். இவற்றை எண்ணிப் பார்க்கும் பொழுது, “கொன்றது போலும் நிரப்பு” நம்மையும் கொன்றுவிடும்போலத் தோன்கிறது.

நல்ல வழியிற் பொருளைத்தேடி நல்லோர்க்கு வழங்கி வந்த ஒரு நன்மகன் வறுமையடைந்ததும், வருகிறவர்களுக்கு வழங்க முடியாமற் போயிற்று என்று எண்ணுந் துன்பம்; பிறரது துன்பத்தைப் போக்க முடியாது வாழ்கின்றன வாழ்வு என்ன வாழ்வு என்று எண்ணுந் துன்பம்; பலநாள் வழங்கிவந்த நான் இல்லை யென்று இப்பொழுது எப்படிக் கூறுவது என்று எண்ணுந்துன்பம்; நாம் வறுமைப்பட்டோம் என்பதை நல்லறிஞர்கள் அறிந்தால், நம்மிடம் வாராமற் போய் விடுவார்களே என்று வருந்துந் துன்பம்; ஆகிய அனைத்தையும் ‘கொன்றது போலும் நிரப்பு’ என்ற சொற்றொடர் தன்னுள் நிரப்பிக் காட்டிக்கொண்டுதானிருக்கிறது.

“மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, சிற்றின்பம் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம்” என ஒரு புலவர் கூறினார். வள்ளுவர் பதினோராவதாக உறக்கமும் பறந்து போய்விடும் என்று கூறுகிறார். விறகு எரிக்கும் நெருப்பினுள்ளே ஒருவன் உறங்கினாலும் உறங்கலாம், பசி எரிக்கும் நெருப்பினுள்ளே எவனும் உறங்க முடியாது என முடிவு கட்டிக் கூறிவிட்டார்.

பசி வந்த மக்கள் அதைப் போக்குவதற்கு வேறு வழியின்றி இரக்க எண்ணுந் துன்பம், இரப்பதற்குச் செல்வர்களை நோக்கிச் செல்லுந் துன்பம், அவர்களைக் காத்திருந்து கானுந் துன்பம், கண்டு கெஞ்சிக் கேட்குந் துன்பம், கேட்டதும் அவர் இல்லை என்பரோ என்று எண்ணுந் துன்பம், கொடுப்பதாயினும் அதை அவரது வேலையாட்களிடமிருந்து கைதாழப் பெறுந் துன்பம், பெற்றதை உண்ணும்பொழுது தம் இழி நிலையை எண்ணுந் துன்பம், இவற்றை எண்ணி எண்ணி இரவில் உறங்கமுடியாமல் துடிக்குந் துன்பம், அதனால் விளையும் உடல்நலக் கேட்டின் துன்பம், ஆகிய பல்வேறு துன்பங்களையும் "கொன்றது போலும் நிரப்பு" தன்னுள் நிரப்பியே காட்டுகிறது.

"ஈயாமை துவ்வாமை ஆகிய இல்லாமை இரண்டும் ஒருருவாகி, ஒருவனைப்பற்றி அவனை உண்ணமுடியாமலும், வழங்கமுடியாமலும் வாழச்செய்கின்ற வாழ்வு என்ன வாழ்வு? அவ்விதம் ஒருவனை வாழவைப்பதை விடக் கொன்று மடித்துவிடுவது நல்லது. இந்நிரப்பு அதையும் செய்யாமல் நாள்தோறும் கொல்வது போலும் கொடுமைகளை நிரப்பிக்கொண்டே வருகிறது" என இக்குறள் கூறுவது நம்மையுங் கலங்கவைத்துவிடுகிறது.

'நாள்தோறுங் கொல்லாமற் கொல்லுகின்ற இத் தகைய வறுமையானது இன்றும் வருமோ?’ என்றெண்ணி ஒருவன் அஞ்சி நடுங்குகின்ற நடுக்கமானது, நேற்றுக் கொல்லவந்த புலி இன்றும் கொல்ல வருமோ? நேற்று வந்து அழித்த வெள்ளம் இன்றும் வந்து

அழிக்குமோ?' என்று ஒருவன் அஞ்சி ஏங்குவதிலும் அதிகமானது என்பதை. “இன்றும் வருவது கொல்லோ” என்ற சொற்கள் அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

உழுது உழைத்துண்டு வாழ முடியாதவனை வறுமை கைப்பற்றி இரந்துண்ணும்படி செய்துவிடும். அது உப்புக்கும் கஞ்சிக்கும் கூற்றாக இருக்குமே தவிர, வாழ்வாக இராது. அஞ்சி நடுங்கி, இரந்துண்டு வாழும் இந்நிலையை எண்ணும்பொழுது அதைவிட மடிவது நல்லது எனத் தோன்றும் என்பன இவ்வதிகாரத்தின் திரண்ட கருத்துக்கள், இதுவும் நம்மைக் கொல்வது போன்றிருக்கிறது.

குறளைப் படியுங்கள் மறுமுறையும்,

       "இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
        கொன்றது போலும் நிரப்பு."

வாழ்க குறள் அறம்!
வளர்க குறள் நெறி!!