திருக்குறள் மணக்குடவருரை/அன்புடைமை

விக்கிமூலம் இலிருந்து

அ-வது.-அன்புடைமை.

அன்புடைமை யாவது, தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதலுடையவ னாதல், இல்வாழ்வான் தனது வாழ்க்கைத் துணை மக்கள் முதலியவரிடத்து அன்புசெலுத்துதல் அவ்வாழ்க்கைக்கு இன்றியமையா ததொன் றாதலான் இஃது ஈண்டுக் கூறப்பட்டது.

ன்பி லதனை வெயில்போலக் காயுமே,
அன்பி லதனை அறம்.

இ-ள்:- என்பு இலதனை வெயில்போல காயும் - என்பு இல்லாத சீவனை வெயில் சுடுமாறு போல் சுடும், அன்பு இலதனை அறம் - அன்பு இல்லாத உயிரினை அறம். [ஏகாரம் அசை, அறம் - அறக்கடவுள். சீவனை - பிராணியை. உயிரினை - மனிதனை.]

இஃது, அன்பு இல்லாதார் துன்பமுறுவர் என்றது. ௭௧.

ன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பார்க்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

இ-ள்:- அகத்து அன்பு இல்லாத உயிர்வாழ்க்கை - தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை, வன் பார்க்கண் வற்றல் மரம் தளிர்த்தால் அற்று - வன்பாரிடத்து (நடப்பட்ட) உலர்ந்த மரங்கள் தளிர்த்தால் போலும். (தளிர்த்தற்குக் காரணம் இன்மையால் தளிரா தென்றவாறு.)

[இல்லாத என்பது ஈறுகெட்டு நின்றது. ஆல் என்பது கெட்டது. வன்பார் - பாலைநிலம்.]

இஃது, அன்பு இல்லாதார் அழிவ ரென்றது. ௭௨.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும், யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு?

இ-ள்:- யாக்கை அகத்து உறுப்பு அன்பு இல்லவர்க்கு - உடம்பிற்கு அகத்து உறுப்பாகிய அன்பு இல்லார்க்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - புறத்து உறுப்புக்க ளெல்லாம் யாதினைச் செய்யும்? (ஒருபயனையும் செய்யா.) [புறத்துறுப்பு - மெய், வாய், கண், மூக்கு, செவி, கை, கால் முதலியன. இல்லவர்க்கு என்பது லகர ஒற்றுக் கெட்டு நின்றது.]

இஃது, அன்பில்லாதவர் அங்கவீனரை ஒப்பர் என்றது. ௭௩.

ன்பின் வழிய துயிர்நிலை : அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு.

இ-ள்:- அன்பின் வழியது உயிர் நிலை - அன்பின் வழியதாகிய அறத்தினால் உயிருக்கு நிலைபேறு உளதாம்; அஃது இலார்க்கு, என்பு தோல் போர்த்த உடம்பு - அன்பு இலாதார்க்கு என்பின் மேல் தோலினால் போர்த்தப்பட்ட உடம்புகளே (உளவாம்). [ஏகாரம் கெட்டது.]

இஃது, அன்பில்லார் வீடு பெறா ரென்றது. ௭௪.

ன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

இ-ள்:- அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் எல்லாப் பொருள்களையும் தமக்கு உரிமையாக வுடையர்; அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் (பொருளேயன்றி) எலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்.

இஃது, அன்புடையா ரல்லது மற்றையோர் அறம்செய்தல் அரிதென்றது. ௭௫.

ன்போ டியைந்த வழக்கென்ப, ஆருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.

இ-ள்:- உயிர்க்கு ஆர் என்போடு இயைந்த தொடர்பு - உயிர்க்கு (இப்பிறப்பின் கண்) பெறுதற்கரிய மனித உடம்போடு பொருந்திய (இடைவிடாத) நட்பு, அனபோடு இயைந்த வழக்கு என்ப - (முன்பிறப்பின்கண்) அன்போடு பொருந்திச் சென்ற- செலவின் பயனென்று சொல்லுவர் (ஆன்றோர்).

இது, மானிடப்பிறப்பை எய்தியதற்குக் காரணமே அன்பென்றது. ௭௬.

ன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றார் எய்தல் சிறப்பு.

இ-ள்:- வையகத்து இன்பு உற்றார் சிறப்பு எய்தல் - (இப்பிறப்பின்கண்) உலகத்தில் இன்பமுற்றார் அதன்மேலும் சிறப்பெய்துதல், அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - (முன்பிறப்பின்கண்) பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவின் பயனென்று சொல்லுவர் (ஆன்றார்). [சிறப்பு - வீடு, செலவு - நடை, ஒழுக்கம்.)

இஃது, அன்புடையார் போகம் துய்த்து வீட்டை அடைவ ரென்றது. ௭௭.

ன்பீனும் ஆர்வ முடைமை; அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

இ-ள்:- அன்பு ஆர்வமுடைமை ஈனும் - அன்பு ஆர்வமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாத சிறப்பு தரும் - அவ்வார்வமுடைமை நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பைத் தரும்.

[ஆர்வம் - தொடர்பிலார் மாட்டும் செல்லும் காதல், நாடாத என்பது ஈறு கெட்டு நின்றது. நட்பு - நட்பினர். ஆராய்தல் இல்லாத- ஆராய்தல் வேண்டாத.]

இஃது, அன்புடையார்க்கு உலகத்தாரெல்லாம் நட்பினரானவ ரென்றது. ௭௮.

றத்திற்கே அன்புசார் பென்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

இ-ள்:- அறியார் அன்பு அறத்திற்கே சார்பு என்ப - அறியாதார் அன்பானது அறம்செய்வாற்கே சார்பாம் என்பர்; அஃதே மறத்திற்கும் துணை- அன்பே மறம்செய்வாற்கும் துணையாம்.

இஃது, ஒருவன் மறம்செய்தற்கும் அவன் ஒரு பொருளின் மீது கொண்ட அன்பே காரண மென்றது. ௭௯.

ன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

இ-ள்:- அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பினையும் (வெளிப்படாது) அடைக்கும் தாழ் உளதோ? ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும் - அன்புடையார்மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர் தானே ஆரவாரத்தைத் தரும்.

இது, பிறர் துன்பத்தைக் கண்ட மாத்திரத்தில் அன்புடையார்ககுக் கண்ணீர் பெருகு மென்றது. ௮0.