திருக்குறள் மணக்குடவருரை/ஈகையுடைமை

விக்கிமூலம் இலிருந்து

௨௩-வது.-ஈகையுடைமை.

ஈகையாவது இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுத்தல். [இது செல்வரால் செய்யப்படுவ தொன்றாதலால், இவ்வதிகாரம் நல்கூர்ந்தா ரல்லாதாரால் செய்யப்படும் ஒப்புரவுடைமையின்பின் கூறப்பட்டது.]

ல்லா றெனினும் கொளல்தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

இ-ள்:- நல் ஆறு எனினும் கொளல் தீது-(ஒருவன் மாட்டுக் கொள்ளல்) நன்மை பயக்கும் நெறியெனினும் கொள்ளல் தீது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - (ஒருவருக்குக் கொடுத்தால்) பாவம் உண்டெனினும் கொடுத்தல் நன்று.

கொள்வோர் அமைதியை அறிந்து கொடுக்க வேண்டுமேனும், இது வரையா வித்தையா தலால் யாதொற்றானும் கொடை நன்றென்பது கூறிற்று. ௨௨௧.

றியார்க்கொன் றீவதே யீகை;மற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இ-ள்:- ஈகை வறியார்க்கு ஒன்று ஈவதே-ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து-(இஃது) ஒழிந்த கொடையெல்லாம் குறிஎதிர்ப்பை கொடுத்த நீர்மையாதலை யுடைத்து.

[குறிஎதிர்ப்பை-குறித்த எதிர்ப்பை, எதிர்ப்பை - எதிர் கொடுப்பது - கைம்மாறு.]

இது, கொடுக்குங்கால் இல்லாதார்க்குக் கொடுக்க வேண்டு மென்றது. ௨௨௨.

லனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்,
குலனுடையான் கண்ணே யுள.

இ-ள்:- இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்-(இரந்து வந்தாற்கு) இல்லையென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும், குலன் உடையான் கண்ணே உள-குடிப்பிறந்தார் மாட்டே யுளதாம்.

[ஈதல் என்றும் ஒருமைப் பெயர் உள என்னும் பன்மை வினையோடு பொருந்தி நின்றது.]

இது, கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டு மென்றது. ௨௨௩.

ன்னா திரக்கப் படுதல், இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

இ-ள்:- இரக்கப்படுதல் இன்னாது-(பிறனொருவனால்) இரக்கப்படுதலும் இன்னாது; (எவ்வளவுமெனில்), இரந்தவன் இன்முகம் காணும் அளவு-இரந்துவந்தவன் (தான் வேண்டியது பெற்றதனானே காட்டும்) இனிதான முகங் காணும் அளவும் (என்க).

இது, கொடுக்குங்கால் தாழாது கொடுக்கவேண்டு மென்றது. ௨௨௪.

சாதலின் இன்னாத தில்லை; இனிததூஉம்
ஈதல் இசையாக் கடை..

இ-ள்:- சாதலின் இன்னாதது இல்லை-சாதலின் மிக்க துன்பம் தருவது இல்லை; ஈதல் இசையாக்கடை அதூஉம் இனிது-(இரந்து வந்தார்க்குக்) கொடுத்தல் முடியாதவிடத்து அதுவும் இனிதாம்.

இஃது, ஈயாது வாழ்தலிற் சாதல் நன் றென்றது. ௨௨௫.

த்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாமுடைமை
வைத்திழக்கும் வன்கண் ணவர்.

இ-ள்:- தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கண்ணவர்-தாம் உடைய பொருளைக் கொடாதே வைத்து (ப்பின்) இழக்கின்ற வன்கண்ணார், ஈந்து உவக்கும் இன்பம் அறியார்கொல்-(கொடுத்த) கொடையினால் (பெற்றவர்) முகமலர்ச்சி கண்டறியாரோ?

[ஈந்து என்பது வலித்து நின்றது. கொல் என்பது ஈண்டு ஐயப்பொருளைத் தந்து நின்றது.]

இது, பிறர்க்கு இடாதார் தம் பொருளை இழப்ப ரென்றது. ௨௨௬.

ரத்தலின் இன்னாத மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

இ-ள்:- இரத்தலின் மன்ற இன்னாத-இரத்தல்போல மெய்யாக இன்னாவாம், நிரப்பிய தாமே தமியர் உணல்-(தாமே) தேடின உணவைத் தாமே தமியராயிருந்து உண்டல்.

தமியராய்-ஒருவருங் காணாமல். [உணல் என்னும் ஒருமைப் பெயர் இன்னாத என்னும் பன்மைச் சொல்லோடு பொருந்தி நின்றது.]

இது, பிறர்க்கு இடாதார் துன்பம் உழப்ப ரென்றது. ௨௨௭.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

இ-ள்:- பாத்து ஊண் மரீஇயவனை-பகுத்து உண்டலைப் பழகியவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசியாகிய பொல்லா நோய் தீண்டுதல் இல்லை.

(ஒருவன் பிறற்கு ஈயாதொழிதல், ஈந்தால் பொருள் குறையும்; அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா.) பகுத்துண்ணப் பசி வாரா தென்று இது கூறிற்று. ௨௨௮.

ற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

இ-ள்:- அற்றார் அழிபசி தீர்த்தல்-பொருளற்றாரது (குணங்களை) அழிக்கும் பசியைப் போக்குக; அஃது ஒருவன் பொருள் வைப்பு உழி பெற்றான்-அதுசெய்தல் ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றது போலாம்.

இது, பகுத்துண்ணப் பொருள் அழியா தென்றது. ௨௨௯.

ற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

இ-ள் :- ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்-பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்-(அதுவும் பெரிதாவது) பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.

இது, தவம் பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது. ௨௩0.