உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/கள்ளாமை

விக்கிமூலம் இலிருந்து

௨0-வது.-கள்ளாமை.

கள்ளாமையாவது யாதொரு பொருளையும் களவிற் கொள்ளாராதல். [கொலைக்கும் புலைக்கும் பின்னர்த் தவிர்க்க வேண்டுவது களவாதலால், இவ்வதிகாரம் அவற்றின் பின் கூறப்பட்டது.]

ள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

இ-ள்:- எள்ளாமை வேண்டுவான் என்பான்-பிறரால் இகழப்படாமையை வேண்டுவான் (இவன்) என்று சொல்லப்படுமவன், எனைத்து ஒன்றும் கள்ளாமை-யாதொரு பொருளையும் களவில் கொள்ளாமல், தன் நெஞ்சு காக்க-தன் நெஞ்சைக் காக்க.

இது களவு ஆகா தென்றது. ௧௯௧.

ள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருள்;
கள்ளத்தால் கள்வோம் எனல்.

இ-ள்:- பிறன்பொருள் உள்ளத்தால் உள்ளலும் தீது-பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; கள்ளத்தால் கள்வோம் எனல்-( ஆதலால், அதனை) மறைவினாலே கள்வோமென்று முயலா தொழிக. [ஏகாரம்-அசை. எனல்-எதிர்மறை வியங்கோள்.]

இது களவு தீ தென்றது. ௧௯௨.

ள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

இ-ள்:- கள்வார்க்கு-பிறர் பொருளைக் கள்வார்க்கு, உயிர் நிலை தள்ளும்-உயிர் நிலையாகிய வீடு (பெறுதல்) தப்பும்; கள்ளார்க்கு புத்தேள் உலகு தள்ளாது-கள்ளாதாருக்குத் தேவருலகம் (பெறுதல்) தப்பாது.

இது, கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளார் சுவர்க்கம் பெறாமையு மிலர் என்றது. ௧௯௩.

ளவினால் ஆகிய ஆக்கம், அளவிறந்
தாவது போலக் கெடும்.

இ-ள்:- களவினால் ஆகிய ஆக்கம்-களவிற்கொண்ட பொருளால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து ஆவதுபோல கெடும்-மேன்மேல் ஆவது போலக் கெடும்.

இது, களவினால் வரும் பொருள் நிலையா தென்றது. ௧௯௪.

ளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

இ-ள்:- களவின்கண் கன்றிய காதல்-களவின் மிக்க ஆசையானது, விளைவின் கண்- பயன்படும் காலத்து, வீயா விழுமம் தரும்-கேடு இல்லாத நோயைத் தரும்.

இது, களவு நரகம் புகுத்தும் என்றது. ௧௯௫.

ளவல்ல செய்தாங் கெடுவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

இ-ள்:- அளவு அல்ல செய்து-நேர் அல்லாதன செய்து, ஆங்கு கெடுவார்-அவ்விடத்தே கெடுவார், களவு அல்லாத மற்றைய தேற்றாதவர்-களவல்லாத மற்றை அறங்களைத் தெளியாதவர்.

[ஆங்கு என்பது ஈறு கெட்டு நின்றது. நேர்-நீதி.]

இது, கள்வரை அரசர் கொல்வ ரென்றது. ௧௯௬.

ருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

இ-ள்:- அருள் கருதி அன்பு உடையர் ஆதல்-அருளைக் குறித்து உயிர்மீது அன்பு உடையராய் ஒழுகுதல், பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்-பொருளைக் குறித்து (ப்பிறரது) மறவியைப் பார்ப்பார்மாட்டு இல்லை.

இது, கள்வார்க்கு அருளும் அன்பும் இல்லையா மென்றது. ௧௯௭.

ளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

இ-ள்:- களவின் கண் கன்றிய காதல் அவர்-களவின் கண்ணே மிக்க ஆசையை யுடையவர், அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்-நேரின் கண் நின்று ஒழுகுதலைச் செய்ய மாட்டார்.

இது, கள்வார் நேர் செய்யமாட்டா ரென்றது. ௧௯௮.

ளவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

இ-ள்:- களவு என்னும் கார் அறிவு ஆண்மை-களவாகிய பொல்லா அறிவுடைமை, அளவு என்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல்-நேர்மையாகிய பெருமையைப் பொருந்தினார் மாட்டு இல்லை.

இது நேர்மையை அறிந்தவன் களவு காணா னென்றது. ௧௯௯.

ளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு,

இ-ள்:- அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல-நேர் அறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறு போல, களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்-களவு அறிந்தவர் நெஞ்சில் வஞ்சகம் நிற்கும்.

இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்க்க முடியா தென்றது. ௨ 00.