உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/தவமுடைமை

விக்கிமூலம் இலிருந்து

௨௮-வது.-தவமுடைமை.

தவமாவது, ஊணும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பனியும் தாங்கலும், தேவர் வழிபாடு முதலாயின மேற்கொண்டு முயறலுமாம். [அடக்கமடைந்த பின்னரே தவம் செய்ய முடியுமாதலான் இஃது அதன்பின் கூறப்பட்டது.]

வம்செய்வார் தம்கருமம் செய்வார்;மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையிற் பட்டு.

இ-ள்:- தம் கருமம் செய்வார் தவம் செய்வாரே - தம் கருமம் செய்வார் தவம் செய்வாரே; அல்லார் ஆசையில் பட்டு அவம் செய்வார்-அஃதல்லாத செய்வா ரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றனர்.

[மற்று என்பது அசை. ஏகாரம் தொக்கது.]

இது, தவம் பண்ண வேண்டு மென்றது. ௨௭௧.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்?

இ-ள்:- துறந்தார்க்கு துப்புரவு வேண்டி-துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டி, மற்றையவர்கள் தவம் மறந்தார் கொல்- இல்வாழ்வார் தவம் செய்தலைத் தவிர்ந்தா ராயினரோ?

இது தானத்தினும் தவம் மிகுதியுடைத் தென்றது. ௨௭௨.

வமும் தவமுடையார்க் காகும்; அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

இ-ள்:- தவமும் தவம் உடையார்க்கு ஆகும்-தவம் செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அஃது இலார் அதனை மேற்கொள்வது அவம்-நல்வினை யில்லாதார் தவத்தை மேற்கொள்வது பயனில்லை.

இது, முன் அறம் செய்யார்க்குத் தவம் வராது,, வரினும் தப்பு மென்றது. ௨௭௩.

ற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

இ-ள்:- உற்ற நோய் நோன்றல்- (தமக்கு) உற்ற நோயைப் பொறுத்தலும், உயிர்க்கு உறு கண் செய்யாமை அற்றே- பிற வுயிருக்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே, தவத்திற்கு உரு-தவத்திற்கு வடிவாம்.

இது, தவம் இன்னதென்று கூறிற்று. ௨௭௪.

ன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்.

இ-ள்:- தன் உயிர் தான் அற பெற்றானை-தன் உயிரானது தானென்று கருதும் கருத்து அறப் பெற்றவனை, ஏனைய மன் உயிரெல்லாம் தொழும்- ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும்.

உயிரென்றது சலிப்பற்ற அறிவை. தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை. தான் அறுதலாவது அகங்காரம் நீங்குதல்.

இது, தான் அறப் பெற்றான் தெய்வம் ஆவா னென்றது. ௨௭௫.

சுடச்சுடப் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

இ-ள்:- சுட சுட (ஒளி விடும்) பொன் போல்-நெருப்பின் கண்ணே இட இட (த் தன்னோடு கலந்த மாசு அற்று) ஒளி விடுகின்ற பொன்னைப் போல, துன்பம் கட சுட நோற்கிற்பவர்க்கு ஒளி விடும்-துன்பம் நலிய நலியத் தவம் செய்வார்க்கு (த்தம்மொடு மருவின வினை விட்டு) ஒளி விடும்.

இது, தவம் செய்வாரது வினை நீங்கி ஒளி உண்டா மென்றது. ௨௭௬.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவற்கு.

இ-ள்:- கூற்றம் குதித்தலும் கைகூடும்-கூற்றத்தைத் தப்புதலும் கைகூடும், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவற்கு-தவத்தினாலாகிய வலியைக் கூடினாற்கு.

இது, தவம் செய்வார், (மார்க்கண்டன் தப்பினாற் போல) மரணத்தைத் தப்பலா மென்றது. ௨௭௭.

ன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணிற் றவத்தான் வரும்.

இ-ள்:- ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்-(இவ்விடத்துப்) பகைவரைத் தெறுதலும் நட்டோரை ஆக்குதலுமாகிய வலி, எண்ணின் தவத்தான் வரும்-ஆராயின் முன் செய்த தவத்தினாலே வரும்.

இது, பிறரை ஆக்குதலும் கெடுத்தலும் தம் தவத்தினாலே வரு மென்றது. ௨௭௮.

லர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

இ-ள்:- இலர் பலர் ஆகிய காரணம்-பொருளில்லாதார் (உலகத்துப்) பலராதற்குக் காரணம், நோற்பார் சிலர்-தவம் செய்வார் சிலர்; (உளர் சிலர் ஆகிய காரணம்) நோலா தவர் பலர்-பொருளுள்ளார் (உலகத்துச்) சிலராதற்குக் காரணம் தவம் செய்யாதார் பலர்.

[உளர் சிலராகிய காரணம் என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது.]

இது, பொருள் உண்டாதற்கும் தவம் காரண மென்றது. ௨௭௯.

வேண்டிய வேண்டியாங் கெய்தலான் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

இ-ள்:- வேண்டிய வேண்டியாங்கு எய்தலான்-விரும்பியன விரும்பின படியே வருதலால், செய் தவம் ஈண்டு முயலப் படும்-நல்ல தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும்.

இது, போக நுகர்ச்சியும் தவத்தானே வரு மென்றது. ௨௮0.