திருக்கோவையார்/இருபதாம் அதிகாரம் - ஓதற் பிரிவு
இருபதாம் அதிகாரம்
20. ஓதற் பிரிவு
பேரின்பக் கிளவி
கல்வியில் பிரிவொரு நான்கும் காதல்
புல்லும் ஆனந்த இன்பப் பூரணம்
சொல்லும் பயனின் திறம்பா ராட்டல்.
1. கல்வி நலங்கூறல்
சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென் றார்அம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஓருவன் இருங்கழல் உன்னினர்போல்
ஏரள வில்லா அளவினர் ஆகுவர் ஏந்திழையே. ... 308
கொளு
கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக்(கு) அறிவறி வித்தது.
2. பிரிவு நினைவுரைத்தல்
வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரும் என்பதுகொண்டு
ஓதலுற் றார்உற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. ... 309
கொளு
கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது.
3. கலக்கம் கண்டுரைத்தல்
கற்பா மதில் தில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த
விற்பா விலங்கல்எங் கோனை விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பினர் என்னமெல் லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. ... 310
கொளு
ஓதற்(கு) அகல்வர் மேதக் கவரெனப்
பூங்கொடி கலக்கம் பாங்கிகண்(டு) உரைத்தது.
4. வாய்வழி கூறித் தலைமகள் வருந்தல்
பிரியா மையும்உயிர் ஒன்றா வதும்பிரி யிற்பெரிதும்
தரியா மையும்ஒருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரர்அன்ன
புரியா மையும்இது வேயினி என்னாம் புகல்வதுவே. ... 311
கொளு
தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப்
போதுறு குழலி புலம்பியது.