திருக்கோவையார்/பதினேழாம் அதிகாரம் - வரைவு முடுக்கம்

விக்கிமூலம் இலிருந்து

பதினேழாம் அதிகாரம்
17. வரைவு முடுக்கம்

பேரின்பக் கிளவி
வரைவு முடுக்கம் ஒருபதி னாறும்
சிவனது கருணை தெரிய உரைத்தல்
இன்பம் பெறஅருள் எடுத்தியம் பியது.

1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்
எழுங்குலை வாழையின் இன்கனி தின்(று)இள மந்திஅந்தண்
செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்(கு)என் னோநின் னருள் வகையே. .. 250


கொளு
இரவுக் குறியிடத்(து) ஏந்திழைப் பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.

2. பெரும்பான்மை கூறி மறுத்தல்
பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தின் என்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடம் தோன்றும்இக் குன்றிடத்தே. .. 251


கொளு
குலம்புரி கொம்பர்க்குச் சிலம்பின் செப்பியது.

3. உள்ளது கூறி வரைவு கூடாதல்
சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந் தேனிழும்என்(று)
இறால்கழி வுற்(று)எம் சிறுகுடில் உந்தும் இடமி(து)எந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளும் கொடிச்சி உம்பர்
பெறாஅருள் அம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே. .. 252


கொளு
இன்மை உரைத்த மன்னனுக்கு
மாழை நோக்கி தோழி உரைத்தது.

4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்
கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயம்கங்குல்
இடம்தொறும் பார்க்கும் இயவொரு நீஎழில் வேலின்வந்தால்
படந்தொறும் தீஅர வன்னம் பலம்பணி யாரின்எம்மைத்
தொடர்ந்தொறும் துன்(பு)என் பதேஅன்ப நின்னருள் தோன்றுவதே. .. 253


கொளு
இரவரு துயரம் ஏந்தலுக்(கு) எண்ணிப்
பருவரல் எய்திப் பாங்கி பகர்ந்தது.

5. பழிவரவுரைத்ததுப் பகல்வரவு விலக்கல்
களிறுற்ற செல்லல் களைவயின் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோ(டு)
ஒளிறுற்ற மேனியின் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகல் நீசெய்யும் மெய்யருளே. .. 254


கொளு
ஆங்ஙனம் ஒழுகும் அடல்வேல் அண்ணலைப்
பாங்கி ஐய பகல்வரல் என்றது.

6. தொழுதிரந்து கூறல்
கழிகண் தலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல்
குழிகண் களிறு வெரீஇஅரி யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின்வரல்கழல் கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலில் துவளும் இவள்பொருட்டே. .. 255


கொளு
இரவரவின் ஏதம் அஞ்சிச்
சுரிதருகுழல் தோழி சொல்லியது.

7. தாய் அறிவு கூறல்
விண்ணும் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழில் கானல் அரையிரவில்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டாம் எனச்சிறிது
கண்ணும் சிவந்தன்னை என்னையும் நோக்கினள் கார்மயிலே. .. 256


கொளு
சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப
வெறிக்குறல் பாங்கி மெல்லியற்(கு) உரைத்தது.

8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்
வான்தோய் பொழில்எழில் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்
தேன்தோய்த்(து) அருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல்
மீன்தோய் புனற்பெண்ணை வைத்துடை யானையும் மேனியைத்தான்
வான்தோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. .. 257


கொளு
வரிவளையை வரைவு கடாவி
அரிவை தோழி உரை பகர்ந்தது.

9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனல் சீர்நகர் காக்கும்செவ் வேல்கிளைஞர்
பறைக்கண் படும்படும் தோறும் படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே. .. 258


கொளு
நகர்காவலின் மிகுகழி காதல்.

10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்
கரலா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்(கு)அன்
பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்இல்லை யோநும் வரையிடத்தே. .. 259


கொளு
விரைதரு தாரோய் இரவரல் என்றது.

11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்
இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின்(று) எழிலியுன்னிக்
குறவரை ஆர்க்கும் குளிர்வரை நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம் பலம்நெஞ்(சு) உறாதவர்போல்
உறவரை மேகலை யாட்(கு)அலராம்பகல் உள்ளருளே. .. 260


கொளு
இகலடு வேலோய் பகல்வரல் என்றது.

12. இரவும் பகலும் வரவு விலக்கல்
கழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ லாள்திறத்(து) ஐயமெய்யே
பழியாம் பகல்வரில் நீயிர(வு) ஏதும் பயனில்லையே. .. 261


கொளு
இரவும் பகலும் வரவொழி கென்றது.

13. காலங் கூறி வரைவு கடாதல்
மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா(து) அயின்றன மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதென் அம்பலத் தான்மதி யூர்கொள் வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே. .. 262


கொளு
முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
வரைதரு கிளவியில் தெரிய உரைத்தது.

14. கூறுவிக் குற்றல்
தேமாம் பொழில்தில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயின்என்னாம் சொல்லும் தன்மைகளே. .. 263


கொளு
ஒத்த(து) ஒவ்வா(து) உரைத்த தோழி
கொத்தவிழ் கோதையால் கூறுவிக் குற்றது.

15. செலவு நினைந்து உரைத்தல்
வல்சியின் எண்கு வளர்புற்(று) அகழமல் கும்இருள்வாய்ச்
செல்(வு)அரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போல்
கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல்
கல்லதர் என்வந்த வாறென் பவர்ப்பெறின் கார்மயிலே. .. 264


கொளு
பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைபுறக் கிளவி.

16 பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்
வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்
வேரிக்(கு) அளிக்கும் விழுமலை நாட விரிதிரையிண்
நாரிக்(கு) அளிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞைஇந் நீர்மைஎன் எய்துவதே. .. 265


கொளு
வரைவு விரும்பு மன்னுயிர்ப் பாங்கி
விரைதரு குழலி மெலிவு ரைத்தது.