உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாசகத்தேன்/சிவபதம் அளித்த செல்வம்!

விக்கிமூலம் இலிருந்து





சிவபதம் அளித்த செல்வம்!


மானிட வாழ்வு. காலத்தினால் இயக்கப்படுவது. காலம் என்ற நியதி மானிட வாழ்வுக்கு இயற்கையாய் அமைந்தது; தவிர்க்க முடியாததும் கூட! மாணிக்கவாசகர், வாழ்க்கையின் போக்கைப் ‘பொய்யினைப் பெருக்கிப் பொழுதினைச் சுருக்கி’ என்று குறிப்பிடுகின்றார். ஆன்ம வாழ்க்கையின் அருமைப்பாட்டை அறியும் அறிவும் அதனை உரிய காலத்தில் உரியவாறு பயன்படுத்துவது பற்றிய அறிவும் நமக்கு வரவேண்டுமானால் நாள்தேர்றும் கிழிக்கும் நாட்காட்டியை (Calendar) வைத்துக்கொள்வது நல்லது. இந்த நாட்காட்டி ஜனவரி முதல் தேதி கனமாக, புதியதாக; பொலிவாக விளங்கும். நாள் ஆக, ஆக இளைத்து டிசம்பர் 31ம் தேதி முற்றாக இதழ்கள் இல்லாமல் போய் வெறும் அட்டையே மிஞ்சியிருக்கும். எடை குறைந்து விட்டது; அழகு போய்விட்டது. அது போலத்தான் மனிதன் குழந்தையாகப் பிறக்கிறான்; சிறுவனாக ஓடி விளையாடுகிறான்; இளைஞனாகிறான்; முதியவன் ஆகிறான்; கிழவன் ஆகிறான்; கடைசியில் மூளையின் இயக்கம் ஓய்கிறது. மூச்சு நின்றுபோகிறது. இந்த நிலை ஒரு நாளில் எய்துவதில்லை. காலம் காட்டும் கருவிகடிகாரம் டிக் டிக் என்ற சப்தத்துடன் நகர்கிறது. முள்ளா நகர்கிறது? மனிதனின் வாழ்வு நக்ர்கிறது. இறுதி நிலை நோக்கி நகர்கிறது. காலத்தின் நில்லாமையை அப்பரடிகள் விளக்கும் முறை எளிதில் விளங்குவதாய் அமைந்துள்ளது. கைகள் இரண்டையும் இணைத்து ஒரு தடவை உற்று நோக்குங்கள். விரல்களுக்கிடையில் ஓட்டைகள்! கைகள் இரண்டால் தண்ணிரை அள்ளி ஓட்டைப் பானையில் ஊற்றி குடத்தை மூடி தண்ணீரைக் காப்பாற்ற நினைத்த மனிதனின் மனப்பாங்கினை ஒத்தது மனிதன் காலத்தை அனுபவிக்கும் பாங்கு என்று விளக்குவார்.

கோடி தீர்த்தம் கலந்து குறித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே!

(அப்பரடிகள்- தேவாரம்)

“நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வானது உணர்வார்ப் பெறின்

என்றது திருக்குறள்.

ஒரு மரம் ஒரே அறுவையில் விழுந்துவிடுவதில்லை! பல அறுவைகளால் நூல் நூல் அளவாக அறுபடுகிறது. அப்படித்தான் வாழ்க்கையும் ஒரு நாளில் முடிவதல்ல. பல நாட்கள் கழிந்த பின்னேயே முடிகிறது. ‘காலம்’ என்ற நியதி கடவுள் திருவுள்ளத்தின் வழி அமைந்தது. ஏன்? உயிர்களின் மேம்பாட்டை ஒரு வரையறுத்த காலத்துக்குள் முடிக்கவேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம்! இல்லையெனில் உயிர்கள்- மனிதர்கள் “இன்று நன்று; நாளை நன்று" என்று பேசியே காலங்கடத்திவிடுவர். “நாள் பார்த்தல்” என்ற மரபு நாளைக் கணித்தல், நாளைப் பாதுகாத்தல் என்ற அமைவிலேயே தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் ‘நல்ல நாள்’ ‘கெட்ட நாள்’ என்ற சித்தாந்தம் தொடங்கி விட்டது. இதன் காரணமாக வாழ் நாள்கள் வீழ்நாள்களாகவே போகின்றன. காலம் வீணாவதைத் தவிர்க்கவே “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று ஒரு பழமொழி ஏற்பட்டது. இது ஒரு அனுபவ ஞானமொழி. ஆனால், இன்றைய மானுடச் சந்தையில் இந்தப் பழமொழிக்கு வழங்கும் பொருள் வேறு. உடம்பில் உயிர்க் காற்று இயங்குவது வாழ்தலுக்கு அடையாளம்! அந்தக் காற்றோட்டம் தடைப்படும் முன் பாவத்தைத் துாற்றிவிட்டுப் புண்ணியத்தை எடுத்துக்கொள் என்பது தான் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள். வாழ்க்கைச் சந்தையில் “பொருள் சுருட்டுவதற்கு நேரம் வந்துழி சுருட்டிக்கொள். ஒரு தரம் கிடைத்த வாய்ப்பு மறுதரம் கிடைக்காது” என்பர். ஆனால் நாட்டிலோ வயது கழிவதை வளர்கிறது என்று குறிப்பிடுகின்றனர். ஆம்! உடல் வளர்கிறது! ஆனால் வாழ்க்கை நாள் குறைகிறது. வாழ்க்கையின் படிகளில் மனிதன் வெள்ளி விழா, பொன் விழா, மணிவிழா, முத்துவிழா என்றெல்லாம் கொண்டாடி மகிழ்கிறான்! அவன் எடுத்துக்கொண்ட விழா, வயதுக்கா? அல்லது பொன்னும் மணியும் போன்ற சாதனைகளுக்கா? வரலாறுதான் கூறவேண்டும்!

யாருடைய வாழ்க்கையில் பொய்ம்மை பெருகுகிறது? பொழுது சுருங்குகிறது? மூளைப் புலன்கள் இயங்கவில்லை! அறிவு இல்லை! ஆள்வினைத் திறம் இல்லை! இரத்த அணுக்கள் மட்டுமே நெளியும் தலை! அதிலும் வெள்ளை அணுக்கள் மிகுதியாக நெளியும் தலை! இந்நிலைக்கு மாற்று என்ன? மருந்து என்ன? அன்புதான் மாற்று மருந்து “அன்பலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாற்னார்க்கே!” என்பார் அப்பரடிகள். மானிட மூளையில் புலன்கள் பல உண்டு. இப்புலன்கள் அனைத்தும் முறையாகத் தூண்டி வளர்க்கப்பெறுதல் வேண்டும். அது நடைபெறுவதில்லை. இன்றைய கல்வி முறை நினைவுப் புலனையும், சமுதாயம் தேவைப் புலனை புலனையும் தொட்டுத் தூண்டிவிடுகின்றன. ஆனால், சிந்தனை: படைப்பாற்றல், அன்பு முதலிய புலன்கள் தொடப்படுவது கூட இல்லை. அன்புப் புலன் தூண்டி வளர்க்கப் பெற்றால் வையகம் வளரும்; வாழும். இறைவனை அடைவதற்கு, அன்பே தேவை. அம்மையும் அப்பனுமாக ஆட்கொண்டருளும் ஈசன் கூட அன்பின் வலைக்குள்தான் அகப்படுகின்றார். சிவபோகம், பெருமானின் கருணையினால் விளைவதன்று. ஆன்மாவின் அன்பினில்- ஆற்றல் மிக்க அன்பினில் விளைவதே சிவபோகம்! அம்மை சிவசக்தி ஆன்மாவுக்கு வாழ்க்கையில் விருப்பத்தை உண்டாக்குகிறாள். ஆன்மாக்கள் வாழ்தல் வேண்டும்; நன்றாக வாழ்தல் வேண்டும். வாழ்வதற்குரிய பொன் வேண்டும் என்பதனாலேயே அன்னை பராசக்தி- சிவசக்தி, காமாட்சியாக விளங்குகிறாள். அதனாலேயே அவள் காமாட்சி என்று அழைக்கப்படுகிறாள்! அன்னை காமாட்சியின் கையில் கரும்பு வில்! ஏன்? கரும்பு வில் காமத்தின் சின்னம்! சிவம்- பரசிவம் துணையாக இருந்து துறப்பிப்பது! அப்பன் சிவம், ஒளி பெருக்கும் சிவம்! ஞான ஒளி! செம்மை! அனைத்து நலன்களும் சேர்ந்தது செம்மை! இம்மை, மறுமை நலன்களை வழங்கும் செல்வம்! ‘செல்வன் சுழலேத்தும் செல்வம் செல்வமே!’ என்று திருஞானசம்பந்தரும் அருளிச் செய்தார்.

“செத்த பிறகு சிவலோகம் என்பது பித்தர் கூறும் வார்த்தை இங்கேயே இன்ப அன்பு கிடைக்கும்! இங்கேயே வாழலாம்! இம்மையே நன்மை தருவார். இப்பிறப்பிலேயே இன்பம்! இந்த மண்ணிலேயே விண்ணகம்! இந்த மண்ணில் விண்ணரசு என்பதே மானிட வாழ்வின் இலக்கு! அதனாலன்றோ சிவன், இந்தப் புவிக்கோளத்தைச் சுற்றி வருகிறான்! மனிதன் பின்னே நடந்து வருகிறான். சிவம் ஆட்கொள்ளும் களம், இந்த பூமிதான்! திருக்குறள் கடவுள் வாழ்த்தில்

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”


என்கிறது. இதில் மரபு வழி காணும் பொருள் நிற்கப்புதிய கோணத்தில் பார்க்கலாமே! பழைய காலத்தில் ‘அ’ எழுத்து பெரியதாக இருக்கும். ‘அ’ என்ற எழுத்தின் மேற்பகுதியில் ஒரு புள்ளியில் தொடங்குகிறது. அந்த வட்டமானது கோணல் இல்லாதது. கோணல் இல்லாத வட்டம் “குறைவிலா நிறைவை”க் குறிக்கும். அது பரம்பொருள்- சிவம்! அந்த வட்டத்திலிருந்து எழுத்து தொடங்கி கீழிறங்குகிறது. இது, பரசிவம் உயிர்களை நோக்கி இறங்கி வருவதைப் புலப்படுத்துகிறது. ‘அ’ எழுத்தின் கீழ்ப்பகுதி வளைவுள்ளது; நடுப்பகுதி தொந்தி போல வளைந்து தொங்கும். இந்தப் பகுதி உயிர் தன் முனைப்பில் வாழ்க்கையை நடத்தும் பாங்கைக் குறிப்பது. பின் எழுத்து வளைந்து மேல் நோக்குகிறது. மேல் நோக்கும் மையத்தில் எழுத்து தடித்து இருக்கிறது. மெல்லிய கோடு இந்த ஆணவம் அடங்குதலைக் காட்டுகிறது. குறிக்கோள் சார்ந்த வாழ்க்கை. கூர்மைப்படுத்தப்படுகிறது. இதுவரையில் உயிருக்கே உரிய அறியாமையைத் தொடர்ந்து வந்து உயிருக்கு நுகர்வனவெல்லாம் அருளிப் பக்குவப்படுத்தி வந்த சிவம், இந்த இடத்தில் உயிரை முந்திச் சென்று வழிகாட்டுகிறது. அழைத்துச் செல்கிறது. ‘அ’ எழுத்தின் மேற்பகுதி நேர் கோடு. சிவம் உயிரை, பிறவியென்ற வளையத்திலிருந்து விடுதலை செய்து இன்ப அன்பில் திளைக்க வைக்கிறது. அதன் அடையாளம் ‘அ’ என்ற எழுத்து வளைவுகளைக் கடந்து நேர் கோட்டில் முடிகிறது. சிவம் உயிர்களை ஆட்கொண்டருளும் பாங்கினை எடுத்துக்காட்ட இது ஒரு எளிய விளக்கமாகும்.

மாணிக்கவாசகர் அமைச்சராகப் பணி செய்தார். அவர் தம் அமைச்சுப் பணி சிறப்பாகவே அமைந்திருந்தது.

"எக்கோலம் கொண்டால் என்ன
ஏதவத்தைப் பட்டால் என்ன
முத்தர் மனமிருக்கும் மோனத்தே”

என்றபடி மாணிக்கவாசகரின் மனம் அமைச்சுப் பணியில் இருந்தபொழுதும் இறை வாழ்க்கை நடத்தினார்; சிவச் சிந்தனை மறவாமல் இருந்தார். அவர்தம் வாழ்க்கையே தவமாக விளங்கியது.

அரிமர்த்தன பாண்டியன், போருக்கு அரசுக்கு குதிரைகள் வாங்க எண்ணினான். கிழக்குக் கடற்கரையில் அரபு நாட்டுக் குதிரைகள் வந்திருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. அரசன், அமைச்சர் வாதவூரரை அழைத்துக் குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அறநெறியில். வளர்ந்து, சமுதாயச் சிந்தனையில் தழைத்து தவத்தில் முதிர்ந்திருந்த வாதவூரருக்குக் குதிரை வாங்குவதில் விருப்பமில்லை. ஏன்? குதிரைகள் அழகுக்குப் பயன்படும். அல்லது போருக்குப் பயன்படும். போர், மனித உலகத்திற்குத் தீயது. எந்தச் சூழ்நிலையிலும் போரைத் தவிர்க்க வேண்டும். அரசுக்கு மக்கள் வரி செலுத்துவது ஆள்கிறவர்கள் ஆரவாரத்துடன், ஆடம்பரமாக விாழ்வதற்கு அல்ல. மக்கட் சமுதாயத்தின் தேவை பலப்பல! ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே அந்தத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள இயலாது. கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, உத்தரவாதம் போன்றவற்றை அரசுதான் செய்ய இயலும். ஏன்? அரசினிடம் மட்டுமே தொகுப்பு நிதிய்ம் இருக்க வாய்ப்பு இருக்கிறது; மேலாண்மையும் இருக்கிறது. அதனாலேயே “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே” என்று புறநானூறு பேசுகிறது. ஆதலால், வாதவூரருக்குக் குதிரைகள் வாங்க தொடக்க நிலையில் முழு விருப்பம் இல்லை. ஆயினும் அரசின் ஆணையை மேற்கொண்டு கிழக்குக் கடற்கரையில் உள்ள திருப்பெருந்துறைக்கு வருகிறார். திருப்பெருந்துறையை அணுக, அணுக. வாதவூரரின் சிந்தனை வளர்கிறது. குதிரைகள் வாங்க. ஒருப்படவில்லை. இதற்கு முதற் காரணம் தவம் பயந்த, நெஞ்சம் குதிரைகள் வாங்குவதற்குப் பதிலாகத் திருக் கோயில் கட்டுகிறார். அரசின் பண்ம் அரசின் ஆணை குதிரைகள் வாங்கவேண்டும் என்பது! ஆனால் வாதவூரர். திருக்கோயில் கட்டுகிறார்! இதற்கு முதற் காரணம் சிவம் ஆட்கொண்டருளியதால் ஏற்பட்ட மாற்றம் மட்டும் அல்ல. குதிரைகள் வாங்கினால் போருக்கு மட்டுமே பயன்படும். திருக்கோயில் கட்டினால் மக்கள் வழிபட்டு இன்புறுவர்; சிற்பம் வளரும்; ஒவியம் வளரும்; இசை வளரும்; வேலை வாய்ப்புப் பெருகும். ஆதலால், சமுதாயத்தின் மையமாக விளங்கும் திருக்கோயில் கட்டினார். அரசன் ஆணை என்னாவது வாதவூரர் முதலமைச்சர் அரசனால் மதிக்கப்பெற்ற முதலமைச்சர்! ஆதலால் வாதவூரரின் எண்ணம் அரசன் செய்யும் பணியின் நன்மை நோக்கி ஏற்பன் என்பது. ஆனால், அரசன் வாதவூரர் செயலை ஏற்றுக் கொண்டானில்லை. வாதவூரர் தண்டனைக்கு ஆளாகிறார். வாதவூரருக்காக. இறைவனும் தண்டனை- பிரம்படி பெறுகிறான்.

அருட்செல்வர் நாடிய மாணிக்கவாசகர் ஆட்சியில் பொருளும் பயனும் அன்பில் மாறாமல் இருந்ததால் இந்த மடை மாற்றம்; அவர்தம் அன்பினில் சிவம் விளைந்தது: அன்பும் சிவமும் கலந்த மாணிக்கவாசகரால் திருவாசகம் விளைந்தது: திருவாசகம் நம்மனோர் இதயத்தில் இருளகற்றி இன்பம் விளைவிக்கின்றது.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுக் தருளுவது இனியே!

(பிடித்தபத்து-3)