திருவாசகத்தேன்/யார் சதுரர்?

விக்கிமூலம் இலிருந்து

யார் சதுரர்?

வாழ்க்கையே ஒரு வாணிகம் தான்! வாணிகம் தவறல்ல. ஆனால், இலாபமே வேட்டையாக எண்ணி வாழ்தல் தீது. இருபாலும் பயனும் மகிழ்வும் உண்டாகும் வகையில் நடப்பதே நல்ல வாணிகம். ஆன்மிக வாழ்க்கையிலும் வாணிக நடைமுறை உண்டு.

"கொண்டும் கொடுத்தும் ஈசர்க்கு ஆட்செய்தல்" என்று. இசைப்பா கூறும். "மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு" என்பார் திருவள்ளுவர். இஃது ஓர் உயர்வு நவிற்சி! மாரி, உயிரினங்களுக்குச் செய்யும் அளவு நாம் அதற்குக் கைம்மாறு செய்ய இயலாது என்பது உண்மை. ஆயினும் மழைக்குரிய சாதனங்களாகிய ஏரி, குளங்களைப் பராமரிப்பதும், புயலை நீர்த் திவலைகளாக மாற்றும் குளர்ச்சியைத் தரக்கூடிய மரங்களை வளர்ப்பதும் நாம் மழைக்குச் செய்யும் கைம்மாறு! ஆனாலும் மழையின் உதவி அளவிலும் பயனிலும் கூடுதலானது. பொதுவாகவே மானிடரைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே நிறையக் கொடுக்கும்; குறைவாகப் பெறும். மரங்கள் நம்மிடத்திலிருந்து பெறுவது குறைவு. ஆனால், நமக்குத் திருப்பித் தருவது அதிகம். பசு மாடுகள் நம்மிடம் பெறுவது குறைவு. ஆனால், நமக்குத் தருவது அதிகம். இதுதான் நாகரிக வாழ்க்கை; பண்பாட்டு வாழ்க்கை! மானிடரோ சமுதாயத்தினிடமிருந்தும் மற்ற உயிர்க் குலங்களிடமிருந்தும் நிறையப் பெறுகிறார்கள். ஆனால் மிகமிகக் குறைவாகவே திருப்பித் தருகிறார்கள். சிலர், திருப்பித் தருவதே இல்லை. அதனாலேயே மழை குறைகிறது; மண் வளம் கெடுகிறது; மாடுகள் இளைத்துச் சாகின்றன. இது இயற்கைக்குப் பொருந்தா, வாழ்க்கை. நாம் எவ்வளவு பெறுகிறோமோ அவ்வளவு திருப்பித்தர வேண்டும். இதுவே மத அறநெறி; திருவாசக நெறி. 'தந்தது உன்றன்னை' என்றதால் திருப்பெருந்துறையுறை சிவனின் எளிவந்த கருணையும் மாணிக்கவாசகர் ஆன்மாவின் வளர்ச்சியும் புலப்படுகிறது.

மாணிக்கவாசகர் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர்தம் சிந்தையில் திருப்பெருந்துறையுறை, சிவன் குடிகொண்டான். அதுமட்டுமா? எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள் இருக்க, திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரின் உடலையே. இடமாக-திருக்கோயிலாகக் கொண்டு எழுத்தருளினான். இது என்ன வியப்பு! எண்ணற்ற கற்கோயில்கள் உள்ளன! இவ்வளவு திருக்கோயில்களையும் விட்டு விட்டு மாணிக்கவாசகரின் உடலைத் திருக்கோயிலாகக் கொள்வானேன்?

இறைவனுக்கு உவப்பானவை கற்கோயில்கள் அல்ல; உடற்கோயிலே, மனக்கோயிலே; இறைவன் கற்கோயில்களில் எழுந்தருள்வது முதல்நிலை! அங்குவரும் மனிதர்களைச் "சந்தித்து உறவாடிப் பக்குவப்படுத்தி அவர்தம் உடற்கோயிலில் புகுந்து தங்கி அருள்வான்! காஞ்சிபுரத்து பல்லவ மன்னன் காடவர் கோமான் கட்டிய கற்றளியில் எழுந்தருள்வதைவிட, பூசலார் நாயனார் பொன்னுடலில் கட்டிய மனக்கோயிலில் எழுந்தருள்வதை முன்னுரிமை யாகக் கொண்டனன் என்ற" வரலாறு உணர்த்தும் உண்மை என்ன? இறைவனு க்கு மனக்கோயிலே உவப்பானது என்பதுதானே. திருப்பெருந்துறை இறைவன், மாணிக்கவாசகரின் ஆடலை இடமாகக் கொண்டு எழுந்தருளினன். இதனால் மாணிக்கவாசகர் புறம்போகாமல் பாதுகாப்புக் கிடைக்கிறது. இறைவனால் மாணிக்கவாசகரின் அன்பைத் தூண்டி அனுபவிக்க முடிகிறது. திருவாசக அமுதம் பருகக்கிடைக்கிறது. இருபாலும் நலஞ்சார்ந்த் பண்டமாற்று! விண்ணவர்கள் தேடரிய, பழமறைகள் தேடரிய, முனிவர்கள் தேடரிய திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரின் உடலையே திருக்கோயிலாகக் கொண்டனன்! இந்த அரிய அருட்செயலுக்குக் கைம்மாறு செய்ய இயலுமா? பொருள் பற்றிச் செய்யும் பூசனைகள் கைம்மாறு ஆகுமா? ஆகாது ஆகாது! புன்புலால் யாக்கை! இதில் புண்ணியத்தின் புண்ணியம் சிவம் புகுந்து முடியமர்ந்தருள் செய்தலுக்கு ஏது கைம்மாறு? இந்த உலகியலில் சாதாரணமான செயல்களுக்கே கைம்மாறு செய்ய இயல்வதில்லையே! முடியவில்லையே! நமது நாட்டு விஞ்ஞானிகள்- குறிப்பாகக் காரைக்குடி மத்திய மின் வேதியியல் விஞ்ஞானிகள் வழங்கும் அறிவியல் கொடைக்கு எப்படிக் கைம்மாறு செய்ய இயலும் நன்றி! என்று சொற்களால் கூறலாம்! அது எங்ஙணம் கைம்மாறு ஆகும் பெற்றதற்கு ஏற்பக் கைம்மாறு கொடுத்தல் வேண்டும்! அதுதான் உண்மையில் கைம்மாறு! இன்று, நன்றி கூறுதல் ஒரு சடங்கு இங்ஙணம் இருக்க இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்? அப்பரடிகள் கூறியதைப் போல "உன்னை நினைந்தே என் ஆவி கழியும்” என்பதே கைம்மாறு. மாணிக்கவாசகரும் "நின்று ஆடிப்பாடி அலறவேண்டும்" என்கிறார். உடல் எல்லாம் நெஞ்சமாக, கண்ணாக அலறி அழவேண்டும் என்கிறார்.

திருப்பெருந்துறையுறை. சிவன் மாணிக்கவாசகரை ஏற்றுக் கொண்டான்! மாணிக்கவாசகரும் விருப்புடன் ஆட்பட்டார். இறைவன்-திருப்பெருந்துறையுறை சிவன் தன்னை மாணிக்கவாசகருக்குத் தந்தனன். இங்கு எடுத்த்து- தந்தது இரண்டும் இறைவன் செயலேயாம். மாணிக்கவாசகரின் விருப்பம் ஏதும் இல்லை! அதனாலேயே தனது விருப்பம் எல்லாம் இறைவன் தன் விருப்பமே என்று பாடுகின்றார். “வேண்டுவது உன்றன் விருப்பன்றே” என்பது திருவாசகம்.

இறைவன்- திருப்பெருந்துறையுறை சிவன், தன்னை மாணிக்கவாசகருக்குத் தந்ததால் மாணிக்கவாசகரின் உடலை இடமாகக் கொண்டதால் முடிவே இல்லாத இன்பத்தை மாணிக்கவாசகர் பெற்றார்; அனுபவித்தார். திருப்பெருந்துறையுறை சிவனின் அருளாரமுதத்தை அண்ணித்தும் தேனித்தும் துய்த்தும் இன்புறுகின்றார். ஆனால், திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரை ஏற்றுக்கொண்டதால் என்ன பெற்றார்? ஆன்மர்விடமிருந்து ஆண்டவன் எதைப் பெறமுடியும்? ஒன்றுமில்லை என்றுதான் கூறுவர்.

கொள்வது- கொடுப்பதில் அல்லது எடுப்பது-தருவதில் இருபாலும் பயனில்லையானால் வாழத் தெரியாதவர், சாமர்த்தியமில்லாதவர் என்று பொருள்படும். இறைவன் சதுரப்பாடில்லாதவனா? இறைவனை. விட மாணிக்கவாசகர் சதுரப்பாடுடையவரா? இல்லை! இல்லை! திருப்பெருந்துறையுறை இறைவனே சதுரப் பாடுடையவன்! எப்படி? மாணிக்கவாசகர் என்ற ஓர் அன்பரை ஆட்கொள்ள இறைவன். எடுத்த முயற்சியின் அளவு என்ன? குதிரைச் சேவகனானான்! உதிர்ந்த பிட்டைத் தின்றான்! கொற்றாளாகி மண் சுமந்தான்! பிரம்படிபட்டான்! அம்மம்ம எவ்வளவு இடர்ப்பாடுகள்! இத்தனை இடர்ப்பாடுகளையும் கடந்து மாணிக்கவாசகர் ஏற்றுக்கொள்ளப்பெற்றார். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையுறை சிவனிடம் பெற்ற அந்தமில்லா இன்ப அனுபவத்தை, திருவாசகப் பாடல்களாகத் தந்தார். திருவாசகம் பாடல்கள் மட்டும் அல்ல; திருவருளனுபவம்! இறைவனின் திருவருளுக்கு மொழியால் வடிவம் தந்தவர் மாணிக்கவாசகர். இந்தப் பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெற்றான். இறைவன். திருவாசகப் பாடல்களை அனுபவிக்கும் ஆரா வேட்கையில் தாமே அதனை எழுதிப் படியும் எடுத்து வைத்துக் கொண்டனன். இதனைச் சிவப்பிரகாசர் “கைகளோ முறிபடும் கைகள்” ஆயினும் திருவாசகத்தைப் படியெடுத்தான் என்பதனை,

கைகளோ முறியடுங் கைகள் காணின்
கண்களோ ஒன்று காலையில் காணும்
மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும்
பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும்
ஆயினும் தன்னை நீ புகழ்ந் துரைத்த
பழுதில் செய்யுள் எழுதினன்

என்று கூறி விளக்குகின்றார். . மாணிக்கவாசகர் காலத்துக்குப் பிறகு, இறைவன் தம்மை வழிபடுதலினும் திருவாசகத்தினைப் பூசை செய்தல், ஓதுதல் முதலிய செயற்பாடுகளாலேயே தம்மை அடையமுடியும் என்ற நியதியை வகுத்தருளினன். ஒவ்வொரு ஆன்மாவையும் ஆட்கொள்ள எத்தனை தடவை மண் சுமப்பது? பிரம்படிபடுவது? இந்தத் துன்பத்திலிருந்து திருப்பெருந்துறையுறை சிவன் தப்பித்துக் கொண்டனன். திருவாசகம் ஓதினாலேயே திருப்பெருந்துறையுறை சிவன் அருள் கிடைக்கும். ஆட்கொள்ளப் பெறுவர்; இது நியதியாகவேயாயிற்று. இது திருப்பெருந்துறையுறை சிவனுக்கு மாணிக்கவாசகரிடமிருந்து கிடைத்த பாதுகாப்பு. மக்களுக்கும் எளிய வழியில் இறைவனை அடைய். முடிந்தது. அதுமட்டுமா? கடையூழிக் காலத்தில் இறைவனின் தனிமைத் துன்பத்தை மாற்றிக் கொள்வதற்காக- படிக்க மாணிக்கவாசகர் திருவாசகத்தைத் தந்தார். “கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள் உடையாருன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே” என்று இதனை மனோன்மணியம் கூறி விளக்கும். இப்போது யார் சதுரர்? மாணிக்கவர்சகர் பெற்றது அந்தமொன்றில்லா இன்பம்! ஆனால், திருப்பெருந்துறையுறை சிவன், தேனமுதத் தமிழில். திருவருள் தலங்கொழிக்கும் திருவாசகப் பாடல்களை, பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெற்றான்! கடையூழிக் காலத்தில் இறைவன் தன் தனிமைத் துன்பத்தை நீக்கிக் கொள்ளத் திருவாசகத்தைப் பெற்றுக் கொண்டனன்! மேலும் வழிவழி வரும் தலைமுறைகளை ஆண்டு கொண்டருளக் கருவியாக விளங்கும் திருவாசகத்தைப் பெற்றனன்! மீண்டும் மீண்டும் மண் சுமத்தல், பிரம்படிபடுதல் முதலிய துன்பங்களிலிருந்து திருப்பெருந்துறையுறை சிவன் விடுதலை பெற்றனன். திருவாசகம் பெற்றதால் திருப்பெருந்துறையுறை சிவன் அடைந்தவை பலப்பல. அவையும் நில்லையானவை! ஆதலால், சதுரர் திருப்பெருந்துறையுறை சிவனே!

ஆயினும் பலர் மாணிக்கவாசகரே சதுரர் என்பர். மாணிக்கவாசகர் ஆன்மா; அறியாமை உடைய ஆன்மா! இத்தகைய மாணிக்கவாசகர் பாசம் நீங்கப் பெற்று, அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றதே பேறு. ஆதலால், மாணிக்கவாசகர் சதுரர் என்பர். ஆயினும் ஆன்மாக்களை ஆட்கொண்டருளுதல் இறைவனின் கடமை. இப்பிறப்பில் இல்லையாயினும் எப்பிறப்பிலா வது ஆட்கொண்டருளப் பெறுதல் வேண்டும். திருவருன் நலம் பெற்றவர்கள் எல்லாரும் மானிக்கவாசகரைப் போல திருவாசகம் தந்தனரா? இறைவனையே எழுத வைத்தார்களா? இல்லை! இல்லை. ஆதலால் திருப்பெருந்துறையுறை சிவனே சதுரர்!

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னை
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன்று என்பான்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர் கைம் மாறே

(கோயில் திருப்பதிகம்- 10)