திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/எஸ்தர் (கிரேக்கம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"எல்லா வாயில்களையும் கடந்து எஸ்தர் மன்னர்முன் வந்து நின்றார். பொன்னாலும் விலையுயர்ந்த மணிகளாலும் அணிசெய்யப்பட்ட மனிதருக்குரிய ஆடம்பர உடைகளை அணிந்தவராக மன்னர் தம் அரியணை மீது வீற்றிருந்தார். அவரது தோற்றம் பேரச்சத்தைத் தருவதாக இருந்தது. மாட்சியில் துலங்கிய தம் முகத்தை நிமிர்த்தி அவர் கடுஞ்சீற்றத்துடன் எஸ்தரை நோக்கினார். முகம் வெளுத்து மயக்கமுற்ற எஸ்தர் தடுமாறி விழுந்தபோது தம்முன் சென்ற பணிப்பெண்ணைப் பற்றிக் கொண்டார். ஆனால் கடவுள் மன்னரின் மனத்தை மாற்றிக் கனிவுகொள்ளச் செய்தார்." - எஸ்தர் (கி) 5:1c-1e


எஸ்தர் (கிரேக்கம்) (The Book of Esther [Greek])[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

எஸ்தர் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தல்[தொகு]


1 மூன்றாம் நாள் எஸ்தர் தம் மன்றாட்டை முடித்துக்கொண்டு,
வழிபாட்டுக்குரிய உடைகளைக் களைந்துவிட்டு
பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்;
1a சிறப்பாக ஒப்பனை செய்து கொண்டபின்,
அனைத்தையும் காண்பவரும் மீட்பவருமான கடவுளிடம் மன்றாடினார்;
பின்பு இரண்டு பணிப்பெண்களை அழைத்து,
ஒருத்திமீது மெல்லச் சாய்ந்துகொள்ள,
மற்றவள் தம் ஆடையின் பின்பகுதியைத் தாங்கி வரச்செய்தார்.
1b அழகின் நிறைவோடு விளங்கிய அவரது முகத்தில்
மகிழ்ச்சியும் அன்பும் பொலிந்தன;
அவருடைய உள்ளமோ அச்சத்தால் கலங்கியிருந்தது.


1c எல்லா வாயில்களையும் கடந்து எஸ்தர் மன்னர்முன் வந்து நின்றார்.
பொன்னாலும் விலையுயர்ந்த மணிகளாலும் அணிசெய்யப்பட்ட
மனிதருக்குரிய ஆடம்பர உடைகளை அணிந்தவராக
மன்னர் தம் அரியணை மீது வீற்றிருந்தார்.
அவரது தோற்றம் பேரச்சத்தைத் தருவதாக இருந்தது.
1d மாட்சியில் துலங்கிய தம் முகத்தை நிமிர்த்தி
அவர் கடுஞ்சீற்றத்துடன் எஸ்தரை நோக்கினார்.
முகம் வெளுத்து மயக்கமுற்ற எஸ்தர் தடுமாறி விழுந்தபோது
தம்முன் சென்ற பணிப்பெண்ணைப் பற்றிக் கொண்டார்.
1e ஆனால் கடவுள் மன்னரின் மனத்தை மாற்றிக்
கனிவுகொள்ளச் செய்தார்.
மன்னர் கலக்கத்துடன் தம் அரியணையினின்று விரைந்து வந்து,
எஸ்தரின் மயக்கம் தெளியும்வரை
தம் கைகளில் அவரைத் தாங்கிக் கொண்டார்;
இன்சொற்களால் அவரைத் தேற்றியபின்,
1f "எஸ்தர், என்ன நேர்ந்தது?
நான் உன் அன்புக்குரியவன்.
ஆகவே அஞ்சாதே. நீ இறக்கமாட்டாய்;
ஏனெனில் நம் ஆணை நம்முடைய குடிமக்களுக்கு மட்டுமே உரியது.
அருகில் வா" என்றார்.


2 பின்பு அவர் தம் பொற் செங்கோலை உயர்த்தி
அதைக் கொண்டு, எஸ்தரின் கழுத்தைத் தொட்டபின்
அவரைத் தழுவிக்கொண்டு,
"இப்போது சொல்" என்றார்.
எஸ்தர் மறுமொழியாக, "என் தலைவரே,
கடவுளின் தூதரைப்போலத் தாங்கள் காணப்பட்டீர்கள்.
தங்களின் மாட்சியைக் கண்டு என் உள்ளம் அஞ்சிக் கலங்கியது.
என் தலைவரே, தாங்கள் வியப்புக்குரியவர்!
தங்கள் முகம் அருள் நிறைந்தது விளங்குகிறது" என்றார்.
எஸ்தர் பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிக் கீழே விழுந்தார்.
இதனால் மன்னர் கலக்கமுற்றார்.
எஸ்தருடைய பணியாளர்கள் அனைவரும் அரசியைத் தேற்றினார்கள்.
3 அப்பொழுது மன்னர்,
"எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்?
உன் விருப்பம் யாது?
ஏன் பேரரசில் பாதியைக் கேட்டாலும்
அதை உனக்குக் கொடுப்பேன்" என்றார்.
4 அதற்கு எஸ்தர், "இன்று எனக்கு ஒரு பொன்னாள்.
மன்னருக்கு விருப்பமானால் இன்று நான் கொடுக்கவிருக்கும் விருந்தில்
மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன்" என்று கூறினார்.

எஸ்தர் அளித்த முதல் விருந்து[தொகு]


5 அப்பொழுது மன்னர்,
"எஸ்தரின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன்.
எனவே ஆமானை உடனே அழைத்து வாருங்கள்" என்று சொன்னார்.
எஸ்தர் அழைத்தவாறே விருந்தில் இருவரும் கலந்துகொண்டனர்.
6 திராட்சை மதுவை அருந்திய வண்ணம் மன்னர் அரசியை நோக்கி,
"எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்?
நீ கேட்பதெல்லாம் உனக்குக் கொடுப்பேன்" என்றார்.


7 அதற்கு எஸ்தர்,
"என் வேண்டுகோளும் விருப்பமும் இதுதான்:
8 மன்னரின் பரிவு எனக்குக் கிட்டுமாயின்,
நான் நாளை கொடுக்கவிருக்கும் விருந்திலும்
மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
இதைப்போன்றே நாளையும் செய்வேன்" என்றார்.

மொர்தெக்காய்க்கு எதிராக ஆமானின் சூழ்ச்சி[தொகு]


9 ஆமான் மகிழ்ச்சியுடனும் உவகை உள்ளத்துடனும்
மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்;
ஆனால் அரண்மனையில் யூதராகிய மொர்தெக்காயைக் கண்டபோது
அவன் கடுஞ்சீற்றங்கொண்டான்;
10 தன் வீட்டுக்குச் சென்றதும்
அவன் தன் நண்பர்களையும் மனைவி சோசராவையும் அழைத்தான்;
11 தன் செல்வத்தை அவர்களுக்குக் காட்டி,
மன்னர் தன்னைப் பெருமைப்படுத்தியதையும்,
மற்றவர்களுக்கு மேலாகத் தன்னை உயர்த்திப்
பேரரசில் தனக்கு முதலிடம் கொடுத்ததையும் அவர்களிடம் விளக்கினான்.
12 பின் ஆமான்,
"மன்னரோடு விருந்துக்கு வருமாறு
அரசி என்னைத் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை.
நாளைய விருந்துக்கும் என்னை அழைத்திருக்கிறார்.
13 ஆனால் அரண்மனையில் யூதனாகிய மொர்தெக்காயைக் காணும்போது
இதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை" என்றான்.


14 "ஐம்பது முழம் உயரமுள்ள தூக்குமரம் ஒன்றை நாட்டச் செய்யும்;
நாளைக் காலையில் மன்னரிடம் சொல்லி
அதில் மொர்தெக்காயைத் தூக்கிலிடச் செய்யும்.
பின் மன்னரோடு விருந்துக்குச் சென்று உண்டு மகிழும்"
என்று அவனுடைய மனைவி சோசராவும்
நண்பர்களும் அவனிடம் கூறினார்கள்.
இது ஆமானுக்கு உகந்ததாய் இருந்தது.
உடனே அவன் தூக்குமரத்தை ஏற்பாடு செய்தான்.


அதிகாரம் 6[தொகு]

யூதர்களின் வெற்றி[தொகு]

மொர்தெக்காய் பெற்ற சிறப்பு[தொகு]


1 ஆண்டவர் அன்று இரவு மன்னருக்குத் தூக்கம் வராமலிருக்கச் செய்தார்.
ஆகவே குறிப்பேட்டைக் கொண்டு வந்து
தமக்குப் படித்துக் காட்டுமாறு மன்னர் தம் செயலரைப் பணித்தார்.
2 காவற்பணியில் இருந்த இரண்டு அலுவலர்கள்
அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தியிருந்தது பற்றி
மொர்தெக்காய் மன்னரிடம் தெரிவித்தது தொடர்பான குறிப்புகள்
அதில் எழுதியிருக்கக் கண்டார்.
3 உடனே மன்னர்,
"இதற்காக மொர்தெக்காய்க்கு நாம் என்ன சிறப்பு
அல்லது கைம்மாறு செய்தோம்?" என்று வினவினார்.
"அவருக்குத் தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை" என்று
மன்னரின் பணியாளர்கள் மறுமொழி கூறினார்கள்.


4 மோர்தெக்காய் செய்திருந்த நற்பணி பற்றி
மன்னர் விசாரித்துக் கொண்டிருந்தபோது
ஆமான் அரண்மனை முற்றத்திற்குள் வந்தான்.
"முற்றத்தில் இருப்பவர் யார்?" என்று மன்னர் வினவினார்.
தான் ஏற்பாடு செய்திருந்த மரத்தில்
மொர்தெக்காயைத் தூக்கிலிடுவதுபற்றிப் பேசுவதற்காக
ஆமான் அப்போதுதான் உள்ளே வந்திருந்தான்.
5 "ஆமான்தான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்" என்று
பணியாளர்கள் மன்னரிடம் கூறினார்கள்.
"அவரை உள்ளே வரச்சொல்" என்று மன்னர் சொன்னார்.
6 பின் மன்னர்,
"நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்?"
என்று ஆமானிடம் கேட்டார்.
'என்னைத் தவிர வேறு யாரை மன்னர் பெருமைப் படுத்தப்போகிறார்' என்று
ஆமான் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
7 எனவே அவன் மன்னரிடம்,
"மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கென,
8 மன்னர் அணியும் விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளையும்,
பயன்படுத்தும் குதிரையையும் பணியாளர்கள் கொண்டு வரட்டும்.
9 அந்த ஆடைகளை மன்னரின் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவரிடம் கொடுக்கட்டும்.
அவர் அவற்றை மன்னர் அன்புசெலுத்தும் அம்மனிதருக்கு அணிவிக்கட்டும்.
குதிரைமீது அவரை அமர்த்தி நகரின் தெருக்களில் வலம் வரச்செய்து,
'மன்னர் பெருமைப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும்'
என அறிவிக்கட்டும்" என்றான்.


10 அதற்கு மன்னர்,
"சரியாகச் சொன்னீர். அரண்மனையில் பணிபுரியும் மொர்தெக்காய்க்கு அவ்வாறே செய்யும்.
நீர் சொன்னவற்றில் எதையும்விட்டுவிட வேண்டாம்" என்று ஆமானிடம் கூறினார்.


11 எனவே ஆமான் ஆடைகளையும் குதிரையையும் கொண்டுவந்தான்;
ஆடைகளை மொர்தெக்காய்க்கு அணிவித்து, குதிரைமீது அவரை அமர்த்தினான்.
'மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும்'
என்று அறிவித்துக்கொண்டே
நகரின் தெருக்களில் அவர் வலம் வரச்செய்தான்.
12 பின் மொர்தெக்காய் அரண்மனைக்குத் திரும்பினார்.
ஆமானோ தன் தலையை மூடிக்கொண்டு
துயரத்தோடு தன் வீட்டுக்கு விரைந்தான்.


13 தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஆமான்
தன் மனைவி சோசராவிடமும் நண்பர்களிடமும் தெரிவித்தான்.
"மொர்தெக்காய் யூத இனத்தைச் சார்ந்தவர் என்றால்,
அவருக்கு முன்பாக நீர் சிறுமைப்படும் நிலை தொடங்கி விட்டது என்றால்,
நீர் வீழ்ச்சி அடைவது உறுதி.
அவரை எதிர்த்து வெல்ல உம்மால் முடியாது;
ஏனெனில் என்றுமுள கடவுள் அவரோடு இருக்கிறார்"
என்று அவர்கள் அவனிடம் கூறினார்கள்.
14 அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அண்ணகர்கள் வந்து
எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு
ஆமானை விரைவாக அழைத்துச் சென்றார்கள்.


(தொடர்ச்சி): எஸ்தர் (கிரேக்கம்): அதிகாரங்கள் 7 முதல் 8 வரை