திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

விக்கிமூலம் இலிருந்து
"திராட்சை இரசத்தை அளவோடு குடிக்கின்றபோது அது மனிதருக்கு வாழ்வை அளிக்கின்றது. திராட்சை இரசம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை! மானிடரின் மகிழ்வுக்காக அது படைக்கப்பட்டது." - சீராக்கின் ஞானம் 31:27

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

அதிகாரம் 31[தொகு]

செல்வம்[தொகு]


1 செல்வத்தின் மீதுள்ள விழிப்பு உடலை நலியச் செய்கிறது;
அதைப்பற்றிய கவலை உறக்கத்தைத் துரத்தியடிக்கின்றது.


2 கவலை நிறைந்த விழிப்பு ஆழ்துயிலைக் கெடுக்கிறது;
கொடிய நோய் உறக்கத்தைக் கலைக்கிறது.


3 செல்வம் திரட்டச் செல்வர் கடுமையாய் உழைக்கின்றனர்;
தம் ஓய்வின்போது இன்பத்தில் திளைக்கின்றனர்.


4 ஏழைகள் கடுமையாய் உழைத்தும் வறுமையில் வாழ்கிறார்கள்;
ஓய்வின்போது தேவையில் உழல்கிறார்கள்.


5 பொன்னை விரும்புவோர் நீதியைக் கடைப்பிடியார்.
மேன்மையை நாடுவோர் அதனாலேயே நெறி பிறழ்வர். [1]


6 பொன்னை முன்னிட்டுப் பலர் அழிவுக்கு ஆளாயினர்;
அவர்கள் அழிவை நேரில் எதிர்க்கொண்டனர்.


7 அதன்மீது பேராவல் கொள்வோருக்கு அது ஒரு தடைக்கல்;
அறிவிலிகள் அனைவரும் அதனால் பிடிபடுவர்.


8 குற்றமில்லாது காணப்படும் செல்வர் பேறுபெற்றோர்;
அவர்கள் பொன்னை நாடிப் போவதில்லை.


9 இத்தகையோர் யார்? அவர்களைப் பேறுபெற்றோர் எனலாம்;
ஏனெனில் அவர்கள் தங்கள் மக்களிடையே வியக்கத் தக்கன செய்திருக்கிறார்கள்.


10 பொன்னால் சோதிக்கப்பட்டு நிறைவுள்ளவராய்க் காணப்பட்டோர் யார்?
அவர்கள் அதிலே பெருமை கொள்ளட்டும்.
தவறு செய்யக்கூடிய சூழ்நிலை இருந்திருந்தும் தவறு செய்யாமல் விட்டவர் யார்?
தீமை புரியக்கூடிய சூழ்நிலை இருந்திருந்தும் தீமை புரியாமல் விட்டவர் யார்?


11 இத்தகையோருடைய சொத்து நிலையாய் இருக்கும்;
இஸ்ரயேலர் கூட்டம் அவர்களுடைய தருமங்களை எடுத்துரைக்கும்.

விருந்து[தொகு]


12 அறுசுவை விருந்து உண்ண அமர்ந்திருக்கிறாயா?
அதன்மீது பேராசை கொள்ளாதே.
'நிறைய பண்டங்கள் உள்ளன' என வியக்காதே.


13 பேராசை படைத்த கண் தீயது என நினைத்துக்கொள்.
படைக்கப்பட்டவற்றுள் கண்ணைவிடக் கெட்டது எது?
அதனால்தான் எல்லாக் கண்களினின்றும் நீர் வடிகிறது.


14 காண்பவைமீதெல்லாம் கையை நீட்டாதே;
பொது ஏனத்திலிருந்து உணவை எடுக்கும்போது அடுத்தவரை நெருக்காதே.


15 உனக்கு அடுத்திருப்பவரின் தேவைகளை
உன்னுடையவற்றைக் கொண்டே அறிந்துகொள்;
எல்லாவற்றிலும் அடுத்திருப்பவர்களைப்பற்றிக் கருத்தாய் இரு.


16 உனக்குமுன் வைக்கப்பட்டவற்றைப் பண்புள்ள மனிதர்போன்று சாப்பிடு;
பேராசையோடு விழுங்காதே;
இல்லையேல் நீ வெறுக்கப்படுவாய்.


17 நற்பயிற்சியை முன்னிட்டு உண்டு முடிப்பதில் முதல்வனாய் இரு;
அளவு மீறி உண்ணாதே; இல்லையேல் அடுத்தவரைப் புண்படுத்துவாய்.


18 பலர் நடுவே நீ பந்தியில் அமர்ந்திருக்கும்போது
மற்றவருக்குமுன் நீ உண்ணத்தொடங்காதே.


19 நற்பயிற்சி பெற்றோருக்கு சிறிது உணவே போதுமானது;
படுத்திருக்கும்போது அவர்கள் அரும்பாடுபட்டு மூச்சுவிடமாட்டார்கள்.


20 அளவோடு உண்பதால் ஆழ்ந்த உறக்கம் வருகிறது;
அவர்கள் வைகறையில் துயில் எழுகிறார்கள்;
உயிரோட்டம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
தூக்கமின்மை, குமட்டல், கடும் வயிற்றுவலி ஆகியவை
அளவின்றி உண்பவருக்கு உண்டாகும்.


21 மிகுதியாக உண்ணுமாறு நீ கட்டாயப்படுத்தப்பட்டால்,
இடையில் எழுந்துபோய் வாந்தியெடு; [2]
அது உனக்கு நலம் பயக்கும்.


22 குழந்தாய், நான் சொல்வதைக் கேள்;
என்னைப் புறக்கணியாதே.
கடைசியில் நான் சொல்வதன் பொருளைக் கண்டுணர்வாய்.
உன் செயல்கள் எல்லாவற்றிலும் சுறுசுறுப்பாய் இரு;
அப்பொழுது எந்த நோயும் உன்னை அணுகாது.


23 தாராளமாக விருந்தோம்புவோரை மனிதர் புகழ்வர்;
அவர்களுடைய ஈகைக்கு மானிடர் பகரும் சான்று நம்பத்தக்கது.


24 கஞ்சத்தனமாக உணவு படைப்போரைப்பற்றி நகரே குறைகூறும்;
அவர்களுடைய கஞ்சத்தனத்திற்கு மனிதர் பகரும் சான்று முறையானது.

திராட்சை இரசம்[தொகு]


25 திராட்சை இரசம் அருந்துவதால் உன் ஆற்றலைக் காட்டமுயலாதே;
திராட்சை இரசம் பலரை அழித்திருக்கிறது.


26 இரும்பின் உறுதியைச் சூளை பரிசோதிக்கின்றது;
செருக்குற்றோரின் பூசல்களில் அவர்களின் உள்ளத்தைத்
திராட்சை இரசம் பரிசோதிக்கின்றது.


27 திராட்சை இரசத்தை அளவோடு குடிக்கின்றபோது
அது மனிதருக்கு வாழ்வை அளிக்கின்றது.
திராட்சை இரசம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!
மானிடரின் மகிழ்வுக்காக அது படைக்கப்பட்டது.


28 உரிய நேரத்தில் அளவோடு அருந்தப்படும் திராட்சை இரசம்
உள்ளத்திற்கு இன்பத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் அளிக்கிறது.


29 அளவுக்குமீறி அருந்தப்படும் திராட்சை இரசம்
சினத்தையும் பூசலையும் தூண்டிவிடுகிறது;
மனக் கசப்பையும் விளைவிக்கிறது.


30 அறிவிலிகள் தங்களுக்கே கேடுவிளைக்கும்படி
குடிவெறி அவர்களின் சீற்றத்தைத் தூண்டிவிடுகிறது;
அவர்களின் வலிமையைக் குறைக்கிறது;
அவர்கள் காயம்பட நேரிடுகிறது.


31 திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில்
உனக்கு அடுத்திருப்பவரைக் கடிந்துகொள்ளாதே;
அவர்கள் மகிழ்ந்திருக்கும்போது அவர்களை இகழாதே;
அவர்களைப் பழித்துப் பேசாதே;
கடனைத் திருப்பிக்கேட்டு அவர்களைத் தொல்லைப்படுத்தாதே.


குறிப்புகள்

[1] 31:5 - "அழிவைத் தேடுவோர் அதனாலேயே நிரப்பப்படுவர்"
என்னும் பாடமும் சில சுவடிகளில் காணப்படுகிறது.
[2] 31:21 - சில கிரேக்க சுவடிகளில் "இடையிலே எழுந்து போய் ஓய்வுகொள்" என உள்ளது.


அதிகாரம் 32[தொகு]

விருந்தில் நடந்துகொள்ளும் முறை[தொகு]


1 நீ விருந்துக்குத் தலைவனாக ஏற்படுத்தப்பட்டுள்ளாயா?
இறுமாப்புக் கொள்ளாதே; விருந்தினர்களுள் நீயும் ஒருவனாக நடந்துகொள்;
முதலில் மற்றவர்களைக் கவனி; பிறகு நீ பந்தியில் அமர்ந்துகொள்.


2 உன் கடமைகளையெல்லாம் நீ செய்தபின் பந்தியில் அமர்ந்துகொள்;
அப்போது அவர்கள்மூலம் நீ மகிழ்வாய்;
விருந்தை நன்முறையில் நடத்தித்தந்தமைக்காக நீ மணிமுடி பெறுவாய்.


3 மூப்பரே, பேசும்; அது உமக்குத் தகும்.
ஆனால் நுண்ணிய அறிவாற்றலோடு பேசும்;
இன்னிசையைத் தடை செய்யாதிரும்.


4 இசை ஒலிக்கும் இடத்தில் மிகுதியாகப் பேசாதீர்;
பொருந்தா வேளையில் உம் ஞானத்தை வெளிப்படுத்தாதீர்.


5 திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் அமையும் இன்னிசை நிகழ்ச்சி
பொன் அணிகளில் இருக்கும் மாணிக்க முத்திரை போன்றது.


6 சிறப்புமிகு திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் அமையும் பண்ணொழுகும் இன்னிசை
பொன் அணிகலன்களில் இருக்கும் இரத்தின முத்திரை போன்றது.


7 இளைஞனே, தேவைப்பட்டால் பேசு;
அரிதாக, அதுவும் இரு முறை வினவப்பெற்றால் மட்டும் பேசு.


8 சுருக்கமாய்ப் பேசு; குறைவான சொற்களில் நிறைய சொல்;
அறிந்திருந்தும் அமைதியாக இரு. [1]


9 பெரியார்கள் நடுவில் உன்னை அவர்களுக்கு இணையாக்கிக் கொள்ளாதே;
அடுத்தவர் பேசும்போது உளறிக் கொண்டிராதே.


10 இடி முழக்கத்திற்குமுன் மின்னல் வெட்டுகிறது;
அடக்கமான மனிதருக்குமுன் அவர்களது நற்பெயர் செல்கிறது.


11 விருந்தைவிட்டு நேரத்தோடு எழுந்திரு; கடைசி ஆளாய் இராதே;
அலைந்து திரியாது வீட்டுக்கு விரைந்து செல்.


12 அங்குக் களித்திரு; உன் விருப்பப்படி செய்;
செருக்கான பேச்சுகளால் பாவம் செய்யாதே.


13 மேலும் உன்னைப் படைத்தவரைப் போற்று;
அவரே தம் நலன்களால் உன்னை நிரப்பியவர்.

இறையச்சம்[தொகு]


14 ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வர்;
வைகறையில் அவரைத் தேடுவோர் அவரது பரிவைப் பெற்றுக் கொள்வர்.


15 திருச்சட்டத்தை ஆய்ந்தறிவோர் அதனால் நிறைவுபெறுவர்;
வெளிவேடக்காரர் அதனால் தடுக்கி விழுவர்.


16 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் நீதித் தீர்ப்பைக் காண்பர்;
தங்களின் நேர்மையான செயல்களை ஒளிபோலத் தூண்டிவிடுவர்.


17 பாவியர் கண்டனத்தைத் தட்டிக் கழிப்பர்;
தங்கள் விருப்பத்திற்கு ஏற்பச் சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிப்பர்.


18 அறிவுள்ளோர் பிறருடைய கருத்துகளைப் புறக்கணியார்;
பெருமையும் இறுமாப்பும் கொண்டோர் அச்சத்தால் பின்னடையார். [2]


19 எண்ணிப் பாராது எதையும் செய்யாதே;
செய்தபின் மனம் வருந்தாதே.


20 சிக்கலான வழிதனிலே போகாதே;
ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே.


21 தடங்கலற்ற வழியை நம்பாதே.


22 உன் பிள்ளைகளிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றிக்கொள்.


23 உன் செயல்கள் அனைத்திலும் உன்னையே நம்பு;
இவ்வாறு கட்டளைகளைக் கடைப்பிடிப்பாய்.


24 திருச்சட்டத்தை நம்புவோர் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பர்;
ஆண்டவரை நம்புவோர்க்கு இழப்பு என்பதே இல்லை.


குறிப்புகள்

[1] 32:8 = நீமொ 17:28.
[2] 32:18 - இது எபிரேய பாடம்.
"அன்னியரும் இறுமாப்புக் கொண்டோரும் அச்சத்தால் பின்னடைவர்"
எனக் கிரேக்க பாடத்தில் உள்ளது.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 33 முதல் 34 வரை