திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"பயிற்றுவிக்கப்படாத குதிரை முரட்டுத்தனம் காட்டுகிறது; கட்டுப்பாடில்லாத மகன் அடக்கமற்றவன் ஆகிறான்." - சீராக்கின் ஞானம் 30:8

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

அதிகாரம் 29[தொகு]

கடன்[தொகு]


1 இரக்கம் காட்டுவோர் தமக்கு அடுத்திருப்பவருக்குக் கடன் கொடுக்கின்றனர்;
பிறருக்கு உதவி செய்வோர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.


2 அடுத்திருப்பவருக்கு அவருடைய தேவைகளில் கடன் கொடு;
உரிய காலத்தில் பிறருடைய கடனைத் திருப்பிக்கொடு.


3 சொல் தவறாதே; அடுத்தவர் மீது நம்பிக்கை வை;
உனக்குத் தேவையானதை எப்போதும் நீ கண்டடைவாய்.


4 வாங்கின கடனைக் கண்டெடுத்த பொருள்போலப் பலர் கருதுகின்றனர்;
தங்களுக்கு உதவியோருக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.


5 கடன் வாங்கும்வரை கடன் கொடுப்பவரின் கையை முத்தமிடுவர்;
அடுத்திருப்பவரின் செல்வத்தைப் பற்றித் தாழ்ந்த குரலில் பேசுவர்;
திருப்பிக் கொடுக்கவேண்டிய போது காலம் தாழ்த்துவர்;
பொறுப்பற்ற சொற்களைக் கூறுவர்; காலத்தின்மேல் குறை காண்பர்.


6 அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடிந்தாலும்
பாதியைக் கொடுப்பதே அரிது.
அதையும் கண்டெடுத்த பொருள் என்றே எண்ணிக்கொள்வர்;
இல்லையேல், கடனைத் திருப்பித் தராமல் எமாற்றிவிடுவர்;
இவ்வாறு தாமாகவே எதிரியை உண்டாக்கிக் கொள்வர்;
சாபத்தையும் வசைமொழியையும் திருப்பிக் கொடுப்பர்;
மாண்புக்குப் பதிலாக இகழ்ச்சியைத் தருவர்.


7 பலர் கடன் கொடாமலிருந்தது தீய எண்ணத்தினால் அன்று;
காரணமின்றி ஏமாற்றப்படலாமோ என்னும் அச்சத்தினால்தான். [1]

தருமம்[தொகு]


8 தாழ்நிலையில் இருப்போர் குறித்துப் பொறுமையாய் இரு;
நீ இடும் பிச்சைக்காக அவர்கள் காத்திருக்கும்படி செய்யாதே.


9 கட்டளையைமுன்னிட்டு ஏழைகளுக்கு உதவிசெய்;
தேவையின்போது அவர்களை வெறுங்கையராய்த் திருப்பி அனுப்பாதே.


10 பணத்தை உன் சகோதரர்களுக்காகவோ நண்பர்களுக்காகவோ செலவிடு;
அழிந்து போகும்படி அதைக் கல்லுக்கு அடியில் மறைத்துவைக்காதே.


11 உன்னத இறைவனின் கட்டளைப்படி உன் செல்வத்தைப் பயன்படுத்து;
அது பொன்னிலும் மேலாக உனக்குப் பயனளிக்கும். [2]


12 உன் களஞ்சியத்தில் தருமங்களைச் சேர்த்துவை;
அவை எல்லாத் தீமையினின்றும் உன்னை விடுவிக்கும்.


13 வலிமையான கேடயத்தையும் உறுதியான ஈட்டியையும்விட
அவை உன் பகைவரை எதிர்த்து உனக்காகப் போராடும். [3]

பிணை[தொகு]


14 நல்ல மனிதர் தமக்கு அடுத்திருப்பவருக்குப் பிணையாய் நிற்பர்;
வெட்கம் கெட்டோர் அவர்களைக் கைவிட்டுவிடுவர்.


15 பிணையாளர் செய்த நன்மைகளை மறவாதே;
அவர்கள் தங்கள் வாழ்வையே உனக்காகத் தந்துள்ளார்கள்.


16 பாவிகள் பிணையாளர் செய்த நன்மைகளை அழிக்கிறார்கள்;
நன்றி கெட்டவர்கள் தங்களை விடுவித்தவர்களையே கைவிட்டு விடுவார்கள்.


17 பிணையாய் நின்றதால் செல்வர் பலர் சீரழிந்தனர்;
திரை கடல் போல் அலைக்கழிக்கப்பட்டனர்.


18 அது வலிய மனிதரை வெளியே துரத்தியது;
அயல்நாடுகளில் அலையச் செய்தது.


19 பயன் கருதித் தங்களையே பிணையாளர் ஆக்கிக் கொண்ட பாவிகள்
தங்களையே தீர்ப்புக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.


20 உன்னால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவு;
நீயே விழுந்துவிடாமல் எச்சரிக்கையாய் இரு.

விருந்தோம்பல்[தொகு]


21 வாழ்வின் அடிப்படைத் தேவைகளாவன:
தண்ணீர், உணவு, உடை, மானம் காக்க வீடு.


22 அடுத்தவர் வீட்டில் உண்ணும் அறுசுவை உணவைவிடத்
தன் கூரைக்கு அடியில் வாழும் ஏழையின் வாழ்வே மேல்.


23 குறைவோ நிறைவோ எதுவாயினும்,
இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்;
அப்போது உன் வீட்டாரின் பழிச்சொற்களை நீ கேட்கமாட்டாய். [4]


24 வீடு வீடாய்ச் செல்வது இரங்கத்தக்க வாழ்க்கை;
இத்தகையோர் போய்த் தங்கும் இடத்தில் பேசவும் துணியமாட்டார்கள்.


25 நீ விருந்தோம்பிப் பருகக் கொடுத்தாலும் செய்நன்றி பெறமாட்டாய்;
மேலும், பின்வரும் கடுஞ் சொற்களையே கேட்பாய்:


26 "அன்னியனே, வா இங்கே; உணவுக்கு ஏற்பாடு செய்;
ஏதாவது உன் கையில் இருந்தால் எனக்கு உண்ணக் கொடு.


27 அன்னியனே, மாண்புடையோர் முன்னிலையிலிருந்து வெளியே போ;
என் சகோதரன் என்னுடன் தங்குகிறான்; எனக்கு வீடு தேவை."


28 வீட்டாரின் கடுஞ்சொல்லும் கடன் கொடுத்தோரின் பழிச்சொல்லும்
அறிவுள்ள மனிதரால் தாங்க முடியாதவை.


குறிப்புகள்

[1] 29:1-7 = லேவி 25:35-38; விப 22:25; இச 15:8.
[2] 29:11 = மத் 19:21.
[3] 29:9-13 = நீமொ 19:27.
[4] 29:23 = 1 திமொ 6:6-8.

அதிகாரம் 30[தொகு]

பிள்ளை வளர்ப்பு[தொகு]


1 தம் மகனிடம் அன்பு கொண்டிருக்கும் தந்தை
அவனை இடைவிடாது கண்டிப்பார்; [1]
அப்போது அவர் தம் இறுதி நாள்களில் மகிழ்வோடு இருப்பார்.


2 தம் மகனை நன்னெறியில் பயிற்றுவிப்பவர்
அவனால் நன்மை அடைவார்;
தமக்கு அறிமுகமானவர்களிடையே அவனைப் பற்றிப் பெருமைப்படுவார்.


3 தம் மகனுக்குக் கல்வி புகட்டும் தந்தை
எதிரியைப் பொறாமை அடையச் செய்கிறார்;
தம் நண்பர்கள்முன் அவன்பொருட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைவார்.


4 அவனுடைய தந்தை இறந்தும் இறவாதவோர்போல் ஆவார்;
ஏனெனில் தம் போன்றவனைத் தமக்குப்பின் விட்டுச்சென்றுள்ளார்.


5 தாம் வாழ்ந்தபோது தந்தை மகனைப் பார்த்தார், மகிழ்ந்தார்;
தம் இறப்பிலும் அவர் வருத்தப்படவில்லை.


6 தம் எதிரிகளைப் பழிவாங்குபவனை,
தம் நண்பர்களுக்குக் கைம்மாறு செய்பவனை அவர் விட்டுச்சென்றுள்ளார்.


7 தம் மகனுக்கு மிகுதியாகச் செல்வம் கொடுப்பவர்
அவன் சிணுங்குவதற்கெல்லாம் உள்ளம் உளைவார்;
அவன் சிறு கூச்சலிடும் போதெல்லாம் அவர் கலக்கம் அடைவார்.


8 பயிற்றுவிக்கப்படாத குதிரை முரட்டுத்தனம் காட்டுகிறது;
கட்டுப்பாடில்லாத மகன் அடக்கமற்றவன் ஆகிறான்.


9 உன் குழந்தைக்குச் செல்லம் கொடு; அது உன்னை அச்சுறுத்தும்.
அதனுடன் விளையாடு; அது உன்னை வருத்தும்.


10 அதனுடன் சேர்ந்து சிரிக்காதே;
இல்லையேல் நீயும் சேர்ந்து துன்புறுவாய்;
இறுதியில் அல்லற்படுவாய்.


11 இளைஞனாய் இருக்கும்போதே அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே;
[2] [அவனுடைய தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இராதே.


12 இளைஞனாய் இருக்கும்போதே அவனை அடக்கி வளர்.]
சிறுவனாய் இருக்கும்போதே அவனை அடித்து வளர்;
இல்லையேல் அவன் அடங்காதவனும் கீழ்ப்படியாதவனுமாக மாறுவான்.
[3] [அவனால் உனக்கு மனவருத்தமே உண்டாகும்.]


13 உன் மகனுக்கு நற்பயிற்சி அளி;
அவனைப் பயன்படுத்த முயற்சி செய்.
அப்போது அவனது வெட்கங்கெட்ட நடத்தையால் நீ வருந்தமாட்டாய்.

உடல்நலம்[தொகு]


14 உடல்நலமும் வலிமையும் கொண்ட ஏழையர்
நோயுற்ற செல்வரினும் மேலானோர்.


15 உடல்நலமும் உறுதியும் பொன்னைவிடச் சிறந்தவை;
கட்டமைந்த உடல் அளவற்ற செல்வத்தினும் சிறந்தது.


16 உடல்நலத்தைவிட உயர்ந்த செல்வமில்லை;
உள்ள மகிழ்ச்சியைவிட மேலான இன்பமில்லை.


17 கசப்பான வாழ்க்கையைவிடச் சாவே சிறந்தது;
தீராத நோயைவிட நிலைத்த ஓய்வே உயர்ந்தது.


18 மூடிய வாய்மீது பொழிந்த நல்ல பொருள்கள்
கல்லறையில் வைத்த உணவுப்படையல் போன்றவை.


19 காணிக்கையால் சிலைக்கு வரும் பயன் என்ன?
அது உண்பதுமில்லை, நுகர்வதுமில்லை.
ஆண்டவரால் தண்டிக்கப்படுவோரும் இதைப் போன்றோரே.


20 கன்னிப்பெண்ணை அண்ணகன் அணைத்துப் பெருமூச்சு விடுதல்போல்
அவர்கள் கண்ணால் காண்கிறார்கள்; பெருமூச்சு விடுகிறார்கள்.

மகிழ்ச்சி[தொகு]


21 உன் உள்ளத்திற்கு வருத்தம் விளைவிக்காதே;
உன் திட்டங்களால் உன்னையே துன்பத்துக்கு உட்படுத்தாதே.


22 உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழ வைக்கிறது;
அகமகிழ்வே மானிடரின் வாழ்நாளை வளரச் செய்கிறது.


23 உன் உள்ளத்திற்கு உவகையூட்டு;
உன்னையே தேற்றிக்கொள்;
வருத்தத்தை உன்னிடமிருந்து தொலைவில் விரட்டி விடு.
வருத்தம் பலரை அழித்திருக்கிறது;
அதனால் எவ்வகைப் பயனுமில்லை.


24 பொறாமையும் சீற்றமும் உன் வாழ்நாளைக் குறைக்கும்;
கவலை, உரிய காலத்திற்கு முன்பே முதுமையை வருவிக்கும்.


25 மகிழ்ச்சியான நல்ல உள்ளம்
உணவுப் பொருள்களைச் சுவைத்து இன்புறுகிறது. [4]


குறிப்புகள்

[1] 30:1 = நீமொ 13:24.
[2] 30:11ஆ-12அ - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[3] 30:12 - [ ] என்னும் பாடம் சில சுவடிகளில் காணப்படுகிறது.
[4] 30:21-25 = சஉ 11:9-10; நீமொ 17:22.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 31 முதல் 32 வரை