திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 37 முதல் 38 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"வேலையில் அமர்ந்திருக்கும் குயவர்கள் தங்கள் கால்களால் சக்கரத்தைச் சுழற்றுகிறார்கள்; எப்போதும் தங்கள் வேலையின் மீது ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முழு வேலையும் அவர்கள் செய்த கலன்களின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது. அவர்கள் தங்கள் கையால் களிமண்ணைப் பிசைகிறார்கள்; தங்கள் கால்களால் அதனைப் பதப்படுத்துகிறார்கள்; கலன்களை மெருகிட்டு முடிப்பதில் தங்கள் உள்ளத்தைச் செலுத்துகிறார்கள்; சூளையைத் தூய்மைப்படுத்துவதில் விழிப்பாய் இருக்கிறார்கள். " - சீராக்கின் ஞானம் 38:29-30

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 37 முதல் 38 வரை

அதிகாரம் 37[தொகு]

தீய நண்பர்கள்[தொகு]


1 எல்லா நண்பர்களும், "நாங்களும் உம் நண்பர்கள்" என்பார்கள்;
சிலர் பெயரளவில் மட்டுமே நண்பர்கள்.


2 தோழரோ நண்பரோ பகைவராய் மாறுவது
சாவை வருவிக்கும் வருத்தத்திற்கு உரியதன்றோ?


3 ஓ! தீய நாட்டமே, நிலத்தை வஞ்சனையால் நிரப்ப
எங்கிருந்து நீ உருவானாய்?


4 தோழர்கள் சிலர் தங்கள் நண்பர்களின் உவகையில் மகிழ்வார்கள்;
துன்பக் காலத்தில் அவர்களை எதிர்ப்பார்கள்.


5 வேறு சில தோழர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நண்பர்களுக்கு உதவுவார்கள்;
இருப்பினும் போர்க் காலத்தில் எதிரியிடமிருந்து அவர்களைக் காப்பார்கள்.


6 உன் உள்ளத்தில் உன் நண்பர்களை மறவாதே;
உன் செல்வத்தில் அவர்களை நினையாமலிராதே. [*]

அறிவுரையாளர்[தொகு]


7 எல்லா அறிவுரையாளரும் தங்கள் அறிவுரையைப் பாராட்டுவர்;
சிலர் தன்னலத்துக்காகவே அறிவுரை கூறுவர்.


8 அறிவுரையாளரைப்பற்றி எச்சரிக்கையாய் இரு;
முதலில் அவர்களது தேவை என்ன எனக் கண்டுபிடி.
ஏனெனில் அவர்கள் தன்னலத்துக்காகவே அறிவுரை கூறுவார்கள்.
இல்லையேல், உனக்கு எதிராகத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாம்.


9 அவர்கள் உன்னிடம், 'உன் வழி நல்லது' எனச் சொல்வார்கள்.
பின்பு, உனக்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க உனக்கு எதிரே நிற்பார்கள்.


10 உன்னைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறவரிடம் அறிவுரை கேளாதே;
உன்மேல் பொறாமை கொள்வோரிடமிருந்து உன் எண்ணங்களை மறைத்துக்கொள்.


11 பெண்ணிடம் அவளுடைய எதிரியைப் பற்றியோ,
கோழையிடம் போரைப் பற்றியோ,
வணிகரிடம் விலைகளைப் பற்றியோ,
வாங்குபவரிடம் விற்பனையைப் பற்றியோ,
பொறாமை கொள்பவரிடம் நன்றியறிதலைப்பற்றியோ,
கொடியவரிடம் இரக்கத்தைப் பற்றியோ,
சோம்பேறியிடம் வேலையைப்பற்றியோ,
நாள் கூலியாளிடம் வேலையை முடித்தலைப்பற்றியோ,
சோம்பேறி அடிமையிடம் பல வேலைகளைப்பற்றியோ,
அவர்கள் கொடுக்கும் எந்த அறிவுரையையும் பொருட்படுத்தாதே.


12 இறைப்பற்றுள்ளவர்களோடு,
உனக்குத் தெரிந்தவரை கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களோடு,
ஒத்த கருத்து உடையவர்களோடு,
நீ தவறினால் உன்னுடன் சேர்ந்து வருந்துபவர்களோடு, எப்பொழுதும் இணைந்திரு.


13 உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில்;
அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை.


14 காவல்மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட
மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது.


15 இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு.
அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.

ஞானம்[தொகு]


16 எண்ணமே செயலின் தொடக்கம்;
திட்டமிடல் எல்லாச் செயலாக்கத்திற்கும் முன்செல்கிறது.


17 மனமாற்றத்தின் அடையாளம் நான்கு வகைகளில் வெளிப்படும்;


18 அவை நன்மை தீமை, வாழ்வு சாவு;
இவற்றை இடைவிடாது ஆண்டு நடத்துவது நாவே.


19 பலருக்கு நற்பயிற்சி அளிப்பதில் சிலர் திறமையுள்ளோராய் இருக்கின்றனர்;
தமக்கோ பயனற்றவராய் இருக்கின்றனர்;


20 நாவன்மை படைத்த சிலர் வெறுக்கப்படுகின்றனர்;
அவர்களுக்கு எவ்வகை உணவும் இல்லாமற் போகும்.


21 ஏனெனில் பேசும் வரம் அவர்களுக்கு ஆண்டவரால் கொடுக்கப்படவில்லை;
அவர்களிடம் எவ்வகை ஞானமும் இல்லை.


22 சிலர் தங்களுக்கே ஞானியராய் இருக்கின்றனர்;
அவர்களுடைய அறிவுக்கூர்மையின் பயன்கள் அவர்களது பேச்சில் வெளிப்படும்.


23 ஞானி தம் மக்களுக்கு நற்பயிற்சி அளிக்கிறார்;
அவருடைய அறிவுக்கூர்மையின் பயன்கள் நம்பத்தக்கவை.


24 ஞானி புகழால் நிரப்பப்படுவார்;
அவரைக் காண்போர் அனைவரும் அவரைப் பேறுபெற்றவர் என அழைப்பர்.


25 மனித வாழ்க்கை, நாள்களின் எண்ணிக்கையில் அடங்கும்;
இஸ்ரயேலின் நாள்களோ எண்ணிக்கையில் அடங்கா.


26 ஞானி தம் மக்கள் நடுவே நன்மதிப்பை உரிமையாக்கிக் கொள்வார்;
அவரது பெயர் நீடூழி வாழும்.

உணவில் கட்டுப்பாடு[தொகு]


27 குழந்தாய், உன் வாழ்நாளில் உன்னையே சோதித்துப்பார்;
உனக்கு எது தீயது எனக் கவனி; அதற்கு இடம் கொடாதே.


28 எல்லாமே எல்லாருக்கும் நன்மை பயப்பதில்லை;
எல்லாரும் எல்லாவற்றிலும் இன்பம் காண்பதில்லை;


29 எவ்வகை இன்பத்திலும் எல்லை மீறிச் செல்லாதே;
நீ உண்பவற்றின் மீது மிகுந்த ஆவல் கொள்ளாதே.


30 மிகுதியாக உண்பதால் நோய் உண்டாகிறது;
பேருண்டி குமட்டலைக் கொடுக்கிறது.


31 பேருண்டியால் பலர் மாண்டனர்;
அளவோடு உண்போர் நெடுநாள் வாழ்வர்.


குறிப்பு

[*] 37:6 = நீமொ 27:10.

அதிகாரம் 38[தொகு]

மருத்துவர்[தொகு]


1 உன் தேவைக்கு ஏற்ப மருத்துவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கு;
ஆண்டவரே அவர்களைப் படைத்தார்;


2 உன்னத இறைவனே நலம் அருள்கிறார்;
மன்னர் அவர்களுக்குப் பரிசு வழங்குகிறார்.


3 மருத்துவரின் அறிவாற்றல் அவர்களைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்கிறது;
பெரியோர்கள் முன்னிலையில் அவர்கள் வியந்து பாராட்டப் பெறுவார்கள்.


4 ஆண்டவர் நிலத்திலிருந்து மருந்துவகைகளைப் படைத்தார்;
அறிவுத்திறன் கொண்டோர் அவற்றைப் புறக்கணிப்பதில்லை. [1]


5 மரத்துண்டினால் தண்ணீர் இனிமை பெறவில்லையா?
இவ்வாறு ஆண்டவருடைய ஆற்றல் வெளிப்படவில்லையா? [2]


6 அவரே மனிதருக்கு அறிவாற்றலைக் கொடுத்தார்.
இதனால் தம் வியத்தகு செயல்களில் மாட்சி பெற்றார்.


7 இவற்றைக் கொண்டு மருத்துவர் நலம் அளிக்கிறார்;
வலியை நீக்குகிறார்.
மருந்து செய்வோர் இவற்றால் கலவை செய்கின்றனர்.


8 இவ்வாறு ஆண்டவரின் வேலை முடிவு பெறாது;
அவரிடமிருந்தே உடல்நலம் உலகெல்லாம் நிலவுகிறது.


9 குழந்தாய், நீ நோயுற்றிருக்கும்போது கவலையின்றி இராதே;
ஆண்டவரிடம் மன்றாடு. அவர் உனக்கு நலம் அருள்வார்.


10 குற்றங்களை அகற்று; நேர்மையானவற்றைச் செய்;
எல்லாப் பாவங்களினின்றும் உன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்து.


11 நறுமணப் பலியையும்,
நினைவாகச் செலுத்தப்படும் மாவுப் படையலையும் ஒப்புக்கொடு;
உன்னால் முடியும் அளவுக்குப் பலியின்மீது எண்ணெய் ஊற்று.


12 மருத்துவருக்கும் அவருக்குரிய இடத்தைக் கொடு;
ஏனெனில், ஆண்டவரே அவரைப் படைத்தார்.
அவர் உன்னைவிட்டு விலகாதிருக்கட்டும்;
ஏனெனில், அவர் உனக்குத் தேவை.


13 நலம் பெறுதல் சில வேளைகளில் மருத்துவர்கள் கையில் உள்ளது எனக்
கூறக்கூடிய நேரமும் உண்டு.


14 ஏனெனில், வலி நீக்கி, நலமாக்கி,
உயிரைக் காப்பாற்றும் அருளைத் தரவேண்டும் என
அவர்களும் ஆண்டவரை மன்றாடுவார்கள்.


15 தம்மைப் படைத்தவர் முன்னிலையில் பாவம் செய்வோர்
மருத்துவரின் கைகளில் விழட்டும்.

இறந்தோருக்காகத் துயரம் கொண்டாடுதல்[தொகு]


16 குழந்தாய், இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்து;
பெருந் துன்பங்களில் உழல்வோர் போலப் புலம்பத் தொடங்கு.
இறந்தோருடைய உடலைத் தகுந்த முறையில் மூடிவை;
அவர்களுடைய அடக்கத்திற்குச் செல்லத் தவறாதே.


17 மனம் வெதும்பி அழு;
உணர்வு பொங்கப் புலம்பு;
இழிவுப் பேச்சைத் தவிர்க்கும்பொருட்டு
இறந்தவருடைய தகுதிக்கு ஏற்ப
ஒரு நாளோ இரு நாளோ துயரம் கொண்டாடு.
பின்பு துன்பத்தில் ஆறுதல் பெறு.


18 துன்பம் சாவை வருவிக்கிறது;
துயர்மிக்க உள்ளம் வலிமையைக் குலைக்கிறது.


19 பேரிடர் நிகழும் போது துன்பம் நீடிக்கிறது;
ஏழையின் வாழ்க்கை உள்ளத்தை வருத்துகிறது.


20 உன் உள்ளத்தைத் துன்பத்திற்கு ஒப்புவித்து விடாதே;
அதைத் துரத்திவிடு; முடிவை நினைத்துக்கொள்.


21 மறந்துவிடாதே; இறந்தோர் திரும்பி வருவதில்லை.
அவர்களுக்கு நீ நன்மை செய்ய முடியாது.
உனக்கு நீயே தீங்கிழைத்துக்கொள்வாய்.


22 "என்னுடைய நிலையை நினைவில் கொள்;
உன்னுடையதும் இதைப் போன்றதே.
நேற்று எனக்கு, இன்று உனக்கு."


23 இறந்தோரின் அடக்கத்தோடு
அவர்களுடைய நினைவும் அடக்கம் பெறட்டும்;
அவர்களுடைய ஆவி பிரிந்தபின் அவர்களுக்காக ஆறுதல் பெறு. [3]

கைவினை[தொகு]


24 ஓய்வு நேரம் மறைநூல் அறிஞரின் ஞானத்தை வளர்க்க வாய்ப்பு அளிக்கிறது.
குறைவான செயல்பாடு உள்ளோரே ஞானத்தில் வளர்வர்.


25 கலப்பையைப் பிடிக்கிறவர், தாற்றுக்கோலின் பிடியில் பெருமை கொள்கிறவர்,
எருதுகளை ஓட்டி அவற்றின் வேலைகளில் மூழ்கியிருக்கிறவர்,
இளங்காளைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறவர்
எவ்வாறு ஞானத்தில் வளர்வர்?


26 அவர்கள் உழுசால் ஓட்டுவதில் தங்கள் உள்ளத்தைச் செலுத்துகிறார்கள்;
இளம் பசுக்களுக்குத் தீனி வைப்பதில் விழிப்பாய் இருக்கிறார்கள்.


27 இவர்களைப்போலவே, எல்லாத் தொழிலாளரும் கைவினைஞரும்
இரவு பகலாக வேலை செய்கின்றனர்;
செதுக்கிய முத்திரைகளை உருவாக்குவோர்
வகை வகையான மாதிரிகளை உருவாக்குவதில் ஊக்கம் கொண்டிருக்கின்றனர்;
உயிரோட்டமுள்ள உருவங்களைப் படைப்பதில் மனத்தைச் செலுத்துவோர்
தங்கள் வேலையை முடிப்பதில் விழிப்பாய் இருக்கின்றனர்.


28 இவர்களைப்போலவே, பட்டறை அருகில் அமர்ந்திருக்கும் கொல்லர்கள்
இரும்பு வேலையில் குறியாய் இருக்கிறார்கள்.
நெருப்பின் வெப்பம் அவர்களது சதையைச் சுடுகின்றது.
உலையின் வெப்பத்தில் அவர்கள் போராடுகிறார்கள்.
சம்மட்டியின் ஒலி அவர்கள் காதைச் செவிடாக்குகிறது.
செய்யும் கலத்தின் மாதிரிமீது அவர்களின் கண்கள் பதிந்திருக்கின்றன.
வேலைகளை முடிப்பதில் அவர்கள் மனத்தைச் செலுத்துகிறார்கள்;
அவற்றை அழகு செய்வதில் விழிப்பாய் இருக்கிறார்கள்.


29 இவர்களைப்போலவே, வேலையில் அமர்ந்திருக்கும் குயவர்கள்
தங்கள் கால்களால் சக்கரத்தைச் சுழற்றுகிறார்கள்;
எப்போதும் தங்கள் வேலையின் மீது ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் முழு வேலையும் அவர்கள் செய்த கலன்களின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது.


30 அவர்கள் தங்கள் கையால் களிமண்ணைப் பிசைகிறார்கள்;
தங்கள் கால்களால் அதனைப் பதப்படுத்துகிறார்கள்;
கலன்களை மெருகிட்டு முடிப்பதில் தங்கள் உள்ளத்தைச் செலுத்துகிறார்கள்;
சூளையைத் தூய்மைப்படுத்துவதில் விழிப்பாய் இருக்கிறார்கள். [4]


31 இவர்கள் எல்லாரும் தங்கள் கைகளையே நம்பியுள்ளனர்;
ஒவ்வொருவரும் தம் தொழிலில் திறமை கொண்டுள்ளனர்.


32 இவர்களின்றி நகர்கள் குடியிருப்பாரற்றுக் கிடக்கும்;
அவற்றில் எவரும் தங்கி வாழ்வதில்லை; உலாவுவதுமில்லை.


33 ஆயினும் இவர்கள் மக்கள் மன்றத்தில் தேடப்படுவதில்லை;
மக்கள் சபையில் முதலிடம் பெறுவதில்லை.
நடுவரின் இருக்கையில் அமரமாட்டார்கள்;
நீதி மன்றத்தின் தீர்ப்புகளைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்.


34 நற்பயிற்சியையோ தீர்ப்பையோ அவர்களால் விளக்கிக்கூற இயலாது;
உவமைகளைக்கொண்டு பேசுவதைக் காண முடியாது.
ஆனால், படைப்பின் அமைப்பைப் பேணிக் காப்பாற்றுகிறார்கள்;
அவர்களது வேண்டுதல் அவர்களது தொழிலைப்பற்றியே இருக்கும்.


குறிப்புகள்

[1] 38:4 = 2 அர 20:7; எசே 47:12.
[2] 38:5 = விப 15:23-25.
[3] 38:16-23 = சீஞா 22:11-12.
[4] 38:29-30 = சாஞா 15:7; எரே 18:3-4; எசா 45:9.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 39 முதல் 40 வரை