திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/தோபித்து (தொபியாசு ஆக‌ம‌ம்)/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"தோபித்து எழுந்து, தடுமாறியவாறு முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார். தோபியா அவரிடம் சென்றார். அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது. தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி, 'கலங்காதீர்கள், அப்பா' என்றார். பிறகு கண்களில் மருந்திட்டு, தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து படலத்தை உரித்தெடுத்தார். தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே, 'என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்' என்றார்." - தோபித்து 11:10-13

தோபித்து (The Book of Tobit)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]


1 அவர்கள் நினிவேக்கு எதிரே இருந்த
காசெரின் நகரை நெருங்கியபொழுது இரபேல்,
2 "உம் தந்தையை எந்நிலையில் விட்டுவந்தோம் என்பது உமக்குத் தெரியும்.
3 எனவே உம் மனைவிக்கு முன்னரே நாம் விரைந்து சென்று,
மற்றவர்கள் வந்து சேர்வதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்துவோம்" என்றார்.
4 இரபேல் தோபியாவிடம், மீனின் பித்தப்பையைக்
கையில் எடுத்துக்கொள்ளும்" என்றார்.
இருவரும் ஒன்றாகச் சென்றனர்.
நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது.


5 இதற்கிடையில் அன்னா
தம் மகன் வரும் வழியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்.
6 மகன் வருவதைக் கண்டு தம் கணவரிடம்,
"உம் மகன் வருகிறான்; அவனுடன் சென்றவரும் வருகிறார்" என்றார்.

தோபித்துக்குப் பார்வை திரும்புதல்[தொகு]


7 தோபியா தம் தந்தையை அணுகுமுன் இரபேல் அவரிடம்,
"உன் தந்தை பார்வை பெறுவது உறுதி.
8 அவருடைய கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்த்துவிடும்.
அது அவருடைய கண்களில் உள்ள வெண்புள்ளிகள்
சுருங்கி உரிந்து விழச் செய்யும்.
உம் தந்தை பார்வை பெற்று ஒளியைக் காண்பார்" என்றார்.
9 அன்னா ஓடி வந்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு,
"மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம்"
என்று கூறி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.


10 தோபித்து எழுந்து, தடுமாறியவாறு
முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார்.
11 தோபியா அவரிடம் சென்றார்.
அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது.
தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி,
"கலங்காதீர்கள், அப்பா" என்றார்.
பிறகு கண்களில் மருந்திட்டு,
12 தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து
படலத்தை உரித்தெடுத்தார்.
13 தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு
மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே,
"என் மகனே, என் கண்ணின் ஒளியே,
உன்னைப் பார்த்துவிட்டேன்" என்றார்.


14 "கடவுள் போற்றி.
அவரது மாபெரும் பெயர் போற்றி!
அவருடைய தூய வானதூதர் அனைவரும் போற்றி!
அவரது மாபெரும் பெயர் நம்மைப் பாதுகாப்பதாக!
எல்லா வானதூதரும் என்றென்றும் போற்றி!
கடவுள் என்னைத் தண்டித்தார்.
இப்போதோ என் மகன் தோபியாவை நான் காண்கிறேன்"
என்று கடவுளைப் போற்றினார்.


15 தோபியா அக்களிப்புடன்
கடவுளை வாயாரப் புகழ்ந்துகொண்டே
வீட்டிற்குள் நுழைந்தார்;
தம் பயணத்தை வெற்றியாக முடித்துவிட்டதாகவும்,
பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும்,
இரகுவேலின் மகள் சாராவை மணம் புரிந்துகொண்டதாகவும்,
அவள் நினிவேயின் வாயில் அருகில்
வந்து கொண்டிருப்பதாகவும் தம் தந்தையிடம் கூறினார்.


16 தோபித்து அக்களிப்புடன் ஆண்டவரைப் புகழ்ந்து கொண்டே
தம் மருமகளைச் சந்திக்க நினிவேயின் வாயிலுக்குச் சென்றார்.
நினிவே மக்கள் அவர் செல்வதையும்,
யாருடைய உதவியுமின்றித் திடமாக நடப்பதையும் கண்டு வியந்தார்கள்.
தம் கண்களைத் திறந்ததன் வழியாகக்
கடவுள் தம்மீது எத்துணை இரக்கம் காட்டியுள்ளார் என்று
தோபித்து அவர்கள் முன் அறிக்கையிட்டார்.
17 தம் மகன் தோபியாவின் மனைவி சாராவைச் சந்தித்து வாழ்த்தினார்.
"மருமகளே, உன்னை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த
உன் கடவுள் போற்றி!
மருமகளே, உன் தந்தை வாழ்க!
என் மகன் தோபியாவுக்கு என் வாழ்த்துகள்.
உனக்கும் என் வாழ்த்துகள்.
மருமகளே, உன் வீட்டிற்குள் வா.
நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும்
உன்னோடு வருக!" என்று வரவேற்றார்.
18 நினிவேயில் இருந்த யூதர்கள் அனைவருக்கும் அது ஓர் இனிய நாள்.
19 தோபித்தின் நெருங்கிய உறவினர் அகிக்காரும் நாதாபும்
அவரது மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.


அதிகாரம் 12[தொகு]

தோபித்தின் புகழ்ப்பாவும் அறிவுரையும்[தொகு]

இரபேல் தம்மை வெளிப்படுத்தல்[தொகு]


1 திருமண விழா முடிந்ததும்,
தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து,
"மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு
இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு;
உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு" என்றார்.
2 அதற்கு அவர், "அப்பா, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கட்டும்?
நாங்கள் கொண்டு வந்த தொகையில் பாதியை அவருக்குக் கொடுத்தாலும் தகும்;
3 ஏனெனில் அவர் என்னை நலமே திரும்ப அழைத்து வந்து சேர்த்தார்;
என் மனைவியை நலம் பெறச் செய்தார்;
பணத்தை என்னுடன் கொண்டுவந்தார்;
உங்களுக்கு நலம் அளித்தார்.
இவற்றுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கொடுக்கலாம்?" என்று கேட்டார்.
4 தோபித்து அவரிடம், "மகனே அவர் கொண்டுவந்த அனைத்திலும்
பாதியைப் பெறுவதற்கு அவருக்குத் தகுதி உள்ளது" என்றார்.
5 பின்னர் இரபேலை அழைத்து,
"நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச்
சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக" என்று கூறினார்.


6 அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும்
தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்:
"கடவுளைப் புகழுங்கள்;
அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை
எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள்.
அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.
மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப்
போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள்.
7 மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது;
கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும்
அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது.
நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது.
8 அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட
உண்மையான மன்றாட்டு சிறந்தது.
ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது.
அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த
சிறிதளவு செல்வம் சிறந்தது. [1]
9 தருமம் சாவினின்று காப்பாற்றும்;
எல்லாப் பாவத்தினின்றும் தூய்மையாக்கும்.
தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும். [2]
10 பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.


11 "முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்;
எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன்.
மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது;
கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது" என்று
முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
12 நீரும் சாராவும் மன்றாடியபோது
நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று
ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்;
இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.
13 நீர் உணவு அருந்துவதைவிட்டு எழுந்து வெளியே சென்று,
இறந்தோரை அடக்கம்செய்யத் தயங்காதபோது
நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்.
14 அதேபோல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும்
நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார்.
15 நான் இரபேல்.
ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும்
ஏழு வானதூதர்களுள் ஒருவர்" என்றார்.
16 அதிர்ச்சி மேலிட இருவரும் அச்சத்துடன் குப்புற விழுந்தனர்.
17 இரபேல், அவர்களிடம்,
"அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதி பெருகட்டும்.
கடவுளை என்றென்றும் புகழுங்கள்.
18 என் விருப்பப்படியன்று, கடவுளின் திருவுளப்படியே
நான் உங்களோடு இருந்தேன்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
19 நான் ஒன்றும் உண்ணவில்லை;
நீங்கள் கண்டதெல்லாம் வெறும் காட்சியே என அறிந்துகொள்ளுங்கள்.
20 இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே
ஆண்டவரைப் போற்றுங்கள்;
கடவுளது புகழை அறிக்கையிடுங்கள்.
இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன்.
உங்களுக்கு நிகழ்ந்த இவற்றையெல்லாம் எழுதிவையுங்கள்" என்றார்.
பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றார்.
21 அவர்கள் தரையிலிருந்து எழுந்தபோது
இரபேலைக் காணமுடியவில்லை.
22 அவர்கள் கடவுளைப் பாடிப் புகழ்ந்தார்கள்;
கடவுளின் தூதர் அவர்களுக்குத் தோன்றி ஆற்றிய
மாபெரும் செயல்களுக்காகக் கடவுளின் புகழை அறிக்கையிட்டார்கள்.


குறிப்புகள்

[1] 12:8 = சீஞா 29:8-13.
[2] 12:9 நீமொ 11:4; சீஞா 3:30.


(தொடர்ச்சி): தோபித்து: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை