திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/தோபித்து (தொபியாசு ஆக‌ம‌ம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"தோபித்தின் புகழ்ப்பா வருமாறு: 'என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை." - தோபித்து 13:1-2


தோபித்து (The Book of Tobit)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

தோபித்தின் புகழ்ப்பா[தொகு]


1 தோபித்தின் புகழ்ப்பா வருமாறு:


2 "என்றும் வாழும் கடவுள் போற்றி!
ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும்.
அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார்.
பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்;
பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார்.
அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை.


3 இஸ்ரயேல் மக்களே,
வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள்.
ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார்.


4 அவர் தமது பெருமையை உங்களுக்குக் காட்டியுள்ளார்.
எல்லா உயிர்கள்முன்னும் அவரை ஏத்துங்கள்.
ஏனெனில் அவர் நம் ஆண்டவர்; நம் கடவுள்; நம் தந்தை;
எக்காலத்துக்கும் அவர் கடவுள்.


5 உங்களுடைய நெறிகெட்ட செயல்களுக்காக அவர் உங்களைத் தண்டிப்பார்;
நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள எல்லா நாடுகளிலிருந்தும்
உங்களை ஒன்றுகூட்டி உங்கள் அனைவர்மீதும் இரக்கத்தைப் பொழிவார்.


6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும்
அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால்
அவர் உங்கள்பால் திரும்புவார்;
தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார்.


7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை
இப்பொழுது எண்ணிப்பாருங்கள்;
நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்;
வாயார அவரை அறிக்கையிடுங்கள்.
என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள்.


8 [*] நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்;
அவருடைய ஆற்றலையும் மேன்மையையும்
பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன்.
பாவிகளே, மனந்திரும்புங்கள்;
அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள்.
ஒருவேளை அவர் உங்கள் மீது அருள்கூர்வார்;
உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.


9 நான் என் கடவுளைப் புகழ்ந்தேத்துவேன்;
என் உள்ளம் விண்ணக வேந்தரைப் போற்றுகின்றது;
அவரது மேன்மையை நினைந்து பேருவகை கொள்கிறது.


10 அனைவரும் புகழ் பாடுங்கள்;
எருசலேமில் அவரைப் போற்றுங்கள்.
திரு நகரான எருசலேமே,
உன் மக்களுடைய செயல்களின் பொருட்டே
அவர் உன்னைத் தண்டிப்பார்;
நீதிமான்களின் பிள்ளைகள்மீது மீண்டும் இரக்கங்காட்டுவார்.


11 உமது கூடாரம் உமக்காக மீண்டும் மகிழ்ச்சியுடன் அமைக்கப்படும்.


12 நாடுகடத்தப்பட்ட உங்கள் அனைவரையும் இன்புறுத்தி,
நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும் தலைமுறைதோறும் அன்பு செலுத்துவாராக.


13 உலகின் எல்லைகள்வரை பேரொளி சுடர்க.
தொலையிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும்.
உலகின் எல்லா எல்லைகளிலிருந்தும்
மக்கள் உமது திருப் பெயர் விளங்கும் இடத்திற்கு வருவார்கள்;
விண்ணக வேந்தருக்குத் தம் கைகளில் காணிக்கை ஏந்தி வருவார்கள்.
எல்லாத் தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும்;
தெரிந்துகொள்ளப்பெற்ற நகரின் பெயர்
தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.


14 உனக்கு எதிராக வன்சொல் கூறுவோரும்
உன்னை அழிப்போரும் சபிக்கப்படுவர்;
உன் மதில்களைத் தகர்ப்போரும்
உன் காவல்மாடங்களைத் தரைமட்டமாக்குவோரும்
உன் வீடுகளைத் தீக்கிரையாக்குவோரும் சபிக்கப்படுவர்.
ஆனால் உனக்கு என்றென்றும் அஞ்சுவோர் அனைவரும் ஆசி பெறுவர்.


15 வாரீர், நீதிமான்களின் மக்களைக்குறித்து மகிழ்வீர்.
ஏனெனில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடுவர்;
என்றுமுள ஆண்டவரைப் போற்றுவர்.
உன்னிடம் அன்புகொண்டோர் பேறுபெற்றோர்;
உன் நிறை வாழ்வு கண்டு மகிழ்வோர் பேறுபெற்றோர்.


16 உன் தண்டனைகள் எல்லாவற்றையும் குறித்து வருந்துவோர் பேறுபெற்றோர்;
அவர்கள் அனைவரும் உன்பொருட்டு அகமகிழ்வார்கள்;
உனது முழு மகிழ்ச்சியையும் என்றென்றும் காண்பார்கள்.
என் உயிரே, மாவேந்தராம் ஆண்டவரைப் போற்று.


17 எருசலேம் நகர் எக்காலத்துக்கும் அவரது இல்லமாக எழுப்பப்படும்.
என் வழிமரபினருள் எஞ்சியோர்
உனது மாட்சியைக் கண்டு விண்ணக வேந்தரைப் புகழ்வாராயின்,
நான் எத்துணைப் பேறு பெற்றவன்!
எருசலேமின் வாயில்கள் நீலமணியாலும் மரகதத்தாலும் உருவாகும்;
உன் மதில்கள் விலையுயர்ந்த கற்களால் கட்டப்படும்.
எருசலேமின் காவல்மாடங்கள் பொன்னாலும்
கொத்தளங்கள் பசும் பொன்னாலும் அமைக்கப்படும்;
எருசலேமின் வீதிகளில் மாணிக்கமும்
ஓபீர் நாட்டுக் கற்களும் பதிக்கப்படும்;


18 எருசலேமின் வாயில்கள் மகிழ்ச்சிப் பாக்கள் இசைக்கும்;
அதன் இல்லங்கள்தோறும்
'அல்லேலூயா, இஸ்ரயேலின் கடவுள் போற்றி' என முழங்கும்.
கடவுளின் ஆசிபெற்றோர் அவரது திருப்பெயரை என்றென்றும் வாழ்த்துவர்."


குறிப்பு

[*] 13:8-10 - சீனாய்ச் சுவடியில் 13:8-10 விடப்பட்டுள்ளது.
இதனால் வத்திக்கான், அலக்சாந்திரியச் சுவடிகளிலிருந்து
இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.


அதிகாரம் 14[தொகு]


1 தோபித்தின் புகழ்ப்பா நிறைவு பெற்றது.

தோபித்தின் இறுதி அறிவுரை[தொகு]


2 தோபித்து தம் நூற்றுப் பன்னிரண்டாம் வயதில் அமைதியாக இறந்தார்;
நினிவேயில் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் பார்வை இழந்தபோது அவருக்கு வயது அறுபத்திரண்டு.
அவருக்குப் பார்வை திரும்பியபின் வளமாக வாழ்ந்து,
தருமங்கள் புரிந்து வந்தார்;
கடவுளைப் போற்றுவதிலும் அவரது பெருமையை அறிக்கையிடுவதிலும்
ஓயாது ஈடுபட்டிருந்தார்.
3 அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபொழுது
தம் மகன் தோபியாவை அழைத்துப்
பின்வருவாறு அறிவுறுத்தினார்:
"மகனே, உன் மக்களை அழைத்துக்கொண்டு,
4 மேதியாவுக்குத் தப்பிச் செல்;
ஏனெனில் நினிவேக்கு எதிராக இறைவாக்கினர் நாகூம் வழியாகக்
கடவுள் கூறிய வாக்கு நிறைவேறும் என நம்புகிறேன்.
கடவுள் அனுப்பிய இஸ்ரயேலின் இறைவாக்கும்
அசீரியாவுக்கும் நினிவேக்கும் எதிராகக் கூறிய அனைத்தும் தவறாது நிகழும்.
உரிய வேளையில் அவை அனைத்தும் நடந்தே தீரும்.
பாபிலோன், அசீரியா ஆகியவற்றைவிட
மேதியா நாடு பாதுகாப்பாக இருக்கும்;
ஏனெனில் கடவுள் கூறிய அனைத்தும் நிறைவேறும் என நான் நம்புகிறேன்.
அவையெல்லாம் தவறாது நடந்தே தீரும்.
இஸ்ரயேல் நாட்டில் வாழும் நம் உறவினர் அனைவரும் சிதறடிக்கப்பட்டு,
அந்த நல்ல நாட்டிலிருந்து கடத்தப்படுவர்.
சமாரியாவும் எருசலேமும் உட்பட
இஸ்ரயேல் நாடு முழுவதும் பாலைநிலமாகும்.
கடவுளின் இல்லம் தீக்கிரையாகிச்
சிறிதுகாலத்திற்குப் பாழடைந்து கிடக்கும். [*]
5 கடவுள் மீண்டும் அவர்கள்மீது இரக்கங்காட்டுவார்.
மீண்டும் அவர்களை இஸ்ரயேல் நாட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவார்.
மீண்டும் அவர்கள் கடவுளின் இல்லத்தைக் கட்டி எழுப்புவார்கள்.
ஆனால் குறிப்பிட்ட காலம் நிறைவேறும்வரை
அது முதலில் கட்டப்பட்ட இல்லம்போன்று இராது.
அதன்பின் இஸ்ரயேலர் அனைவரும்
சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து திரும்பி வருவர்;
எருசலேமைச் சிறப்புடன் கட்டி எழுப்புவர்.
இஸ்ரயேலரின் இறைவாக்கினர்கள் கூறியபடி
அந்நகரில் கடவுளின் இல்லம் கட்டப்படும்.
6 உலகம் முழுவதிலும் உள்ள மக்களினத்தார்
அனைவரும் மனம் மாறுவர்.
உண்மையாகவே கடவுளுக்கு அஞ்சுவர்;
தங்களை ஏமாற்றி, தவறான வழியில் நடக்கத் தூண்டிய
சிலைகளையெல்லாம் விட்டொழிப்பர்;
என்றுமுள கடவுளை நேர்மையுடன் போற்றுவர்.
7 அக்காலத்தில் எஞ்சியிருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும்
உண்மையில் கடவுளை நினைப்பர்;
ஒன்றுகூடி எருசலேமுக்குத் திரும்பி வந்து
தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆபிரகாமின் நாட்டில்
எக்காலத்துக்கும் பாதுகாப்பாகக் குடியிருப்பர்.
உண்மையில் கடவுள்மீது அன்புகூர்வோர் மகிழ்வர்;
பாவமும் அநீதியும் புரிவோர் உலகம் எங்கிலுமிருந்தும் மறைவர்.


8-9 "இப்பொழுது, என் மக்களே,
உங்களுக்கு நான் இடும் கட்டளை:
கடவுளுக்கு உண்மையாகப் பணிபுரியுங்கள்;
அவர் திருமுன் அவருக்கு உகந்ததைச் செய்யுங்கள்;
நேர்மையாய் ஒழுகவும் தருமங்கள் செய்யவும்
உங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சி அளியுங்கள்.
அதனால் அவர்கள் கடவுளை நினைத்து,
எக்காலத்திலும் முழு ஆற்றலுடன்
உண்மையோடு அவரது பெயரைப் போற்றுவார்கள்.
9 இப்பொழுது, மகனே, நினிவேயிலிருந்து புறப்படு;
இங்குத் தங்காதே.
என் அருகில் உன் தாயை அடக்கம்செய்தபின்
இந்நாட்டின் எல்லைக்குள் தங்காதே;
ஏனெனில் இங்கு அநீதி மலிந்துள்ளது;
வஞ்சகம் நிரம்பியுள்ளது.
மக்களோ அதைப்பற்றி வெட்கப்படுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
10 மகனே, தன்னை வளர்த்து ஆளாக்கிய அகிக்காருக்கு
நாதாபு செய்ததை எண்ணிப்பார்.
நாதாபு அகிக்காரை உயிரோடு மண்ணில் புதைக்கவில்லையா?
அதனால் கடவுள் நேரடியாக அவனைத் தண்டித்தார்.
அகிக்கார் ஒளியைக் கண்டான்;
நாதாபோ முடிவில்லா இருளில் மறைந்தான்;
ஏனெனில் அவன் அகிக்காரைக் கொல்ல முயன்றான்.
அகிக்கார் தருமம் செய்ததனால்,
நாதாபின் சூழ்ச்சியிலிருந்து தப்பினான்;
ஆனால் நாதாபு தன் சூழ்ச்சியிலேயே சிக்கி மடிந்தான்.
11 இப்பொழுது, என் மக்களே,
தருமத்தினால் வரும் நன்மையையும்,
அநீதியினால் வரும் தீமையையும்,
அதாவது சாவையும் எண்ணிப் பாருங்கள்.
என் உயிர் பிரியப்போகின்றது."
பின் தோபித்தைப் படுக்கையில் கிடத்தினர்.
அவர் இறந்தபின் சிறப்புடன் அடக்கம் செய்தனர்.

முடிவுரை[தொகு]


12 தம் தாய் இறந்ததும்,
தோபியா அவரைத் தம் தந்தையின் அருகில் அடக்கம்செய்தார்.
பின் அவரும் அவருடைய மனைவியும் மேதியாவுக்குச் சென்றனர்.
அவர் தம் மாமனார் இரகுவேலுடன் எக்பத்தானாவில் வாழ்ந்தார்.
13 தம் மனைவியின் வயது முதிர்ந்த பெற்றோரை
மரியாதையுடன் பேணி வந்தார்;
அவர்களை மேதியா நாட்டு எக்பத்தானாவில் அடக்கம் செய்தார்;
இரகுவேலின் சொத்துக்கும்
தம் தந்தை தோபித்தின் சொத்துக்கும் உரிமையாளரானார்.
14 மக்களின் மதிப்புக்குரியவராய்த்
தம் நூற்றுப்பதினேழாம் வயதில் இறந்தார்.
15 இறக்குமுன் நினிவேயின் அழிவைப்பற்றிக் கேள்விப்பட்டு,
அதைக் கண்ணாலும் கண்டார்;
நினிவே கைப்பற்றப்பட்டதையும்,
மேதியாவின் மன்னர் அகிக்கார்
நினிவே மக்களை மேதியாவுக்கு நாடுகடத்தியதையும் கண்டார்;
நினிவே மக்களுக்கும் அசீரியாவின் மக்களுக்கும்
கடவுள் செய்த அனைத்தையும் குறித்து அவரைப் புகழ்ந்தார்.
நினிவேக்கு நிகழ்ந்ததை முன்னிட்டுத்
தாம் இறக்குமுன் மகிழ்ந்தார்;
கடவுளாகிய ஆண்டவரை என்றென்றும் புகழ்ந்தார்.

குறிப்பு

[*] 14:4 = நாகூ 1:1-3:19

(தோபித்து நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை