திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"ஞானம் நிறை சாலமோன் கோவில் வேலை நிறைவுற்றபோது அர்ப்பணிப்புப் பலி ஒப்புக்கொடுத்தார்;" - 2 மக்கபேயர் 2:9

2 மக்கபேயர் (The Second Book of Maccabees) [1][தொகு]

முன்னுரை

இந்நூல் மக்கபேயர் முதல் நூலின் தொடர்ச்சியன்று; ஒரு வகையில் அதற்கு இணையானது. அந்தியோக்கு எப்பிபானின் தந்தை நான்காம் செலூக்குவின் ஆட்சி தொடங்கி நிக்கானோரை யூதா மக்கபே வெற்றி பெற்றது வரையிலான காலக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180-161) நடந்த நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறுகின்றன. இவை ஏற்கெனவே மக்கபேயர் முதல் நூலின் முதல் ஏழு அதிகாரங்களில் காணப்படுகின்றன.

சீரேனைச் சேர்ந்த யாசோன் கிரேக்க மொழியில் ஐந்து தொகுதிகளில் விரிவாக எழுதிய வரலாற்றின் இரத்தினச் சுருக்கம் இந்நூல் (2:19-32). எருசலேம் யூதர்கள் எகிப்துவாழ் யூதர்களுக்கு விடுத்த இரண்டு மடல்கள் இதற்கு முன்னுரையாக (1:1 - 2:18) அமைகின்றன. "படிக்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிக்கவும், மனப்பாடம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக அமையவும், அனைவருக்கும் பயன் தரவும்" (2:25) ஏறத்தாழ கி.மு. 124இல் இது எழுதப்பெற்றதால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைவிடத் திருவுரைப் பாணியில் அமைந்த இறையியல் கண்ணோட்டமே இதில் முன்னிடம் பெறுகிறது. இறைத் தலையீட்டை விளக்கும்பொருட்டு வெளிப்பாட்டு இலக்கிய நடைக்குரிய காட்சிகள் ஆங்காங்கே (2:21; 3:24-34; 5:2-4; 10:29-30; 15:11-16) புகுத்தப்பட்டுள்ளன.

திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போர்க்குக் கடவுள் கைம்மாறு அளிப்பார் என்னும் மையக் கருத்தை இந்நூல் விளக்குகிறது. நீதிமான்களின் உயிர்ப்பு (7:9,11,14,23; 14:46), இறந்தோருக்காக வேண்டுதல் (12:39-46), மறைசாட்சி இறப்பின் சிறப்பு (6:18-7:42; 14:37-46), மண்ணக மனிதருக்காக விண்ணகப் புனிதர்களின் மன்றாட்டு (15:12-16) போன்ற பழைய ஏற்பாட்டின் பிற நூல்களில் இடம்பெற்றிராத புதிய கருத்துகள் இதில் காணக்கிடக்கின்றன.


2 மக்கபேயர்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. எகிப்திய யூதர்களுக்கு விடுத்த மடல்கள் 1:1 - 2:18 268 - 271
2. நூலாசிரியரின் முன்னுரை 2:19-32 271 - 272
3. கோவிலைத் தீட்டுப்படுத்த எலியதோரின் முயற்சி 3:1-40 272 - 274
4. அந்தியோக்கு எப்பிபானும் யூதர்களின் துன்பமும் 4:1 - 7:42 274 - 285
5. யூதாவின் வெற்றிகள் 8:1 - 10:8 285 - 290
6. மீண்டும் யூதர்களின் துன்பம் 10:9 - 15:36 290 - 305
7. முடிவுரை 15:37-39 305

2 மக்கபேயர் (The Second Book of Maccabees)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. எகிப்திய யூதர்களுக்கு விடுத்த மடல்கள்[தொகு]

முதல் மடல்[தொகு]


1 "எகிப்து நாட்டில் உள்ள தங்கள் யூத உறவின் முறையினருக்கு
எருசலேமிலும் யூதேயா நாட்டிலும் உள்ள யூத உறவின்முறையினர்
நலனும் அமைதியும் பெருக வாழ்த்தி எழுதுவது:
2 கடவுள் உங்களுக்கு நன்மை செய்து,
நம்பிக்கைக்குரிய தம் அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு ஆகியோருடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவு கூர்வாராக!
3 தம்மை வழிபடவும்
தமது திருவுளத்தைப் பரந்த உள்ளத்தோடும் தாராள மனத்தோடும் நிறைவேற்றவும் வேண்டிய
இதயத்தை உங்கள் அனைவருக்கும் அளிப்பாராக!
4 தம்முடைய திருச்சட்டம், கட்டளைகளைப் பொறுத்தவரை
உங்களுக்குத் திறந்த உள்ளத்தையும் அமைதியையும் அருள்வாராக!
5 உங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பாராக;
உங்களோடு ஒப்புரவுசெய்து, இடுக்கண் வேளையில் உங்களைக் கைவிடாதிருப்பாராக!
6 இப்போது நாங்கள் இங்கு உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டு வருகிறோம்."


7-8 "தெமேத்திரி மன்னரது ஆட்சியில், நூற்று அறுபத்தொன்பதாம் ஆண்டில் [1]
யாசோனும் அவனுடைய தோழர்களும்
தூய நாட்டுக்கும் அதன் ஆட்சிக்கும் எதிராகத் துரோகம் செய்து,
கோவில் வாயிலைத் தீக்கிரையாக்கி
மாசற்ற குருதியைச் சிந்திய காலத்துக்குப்பின்
எங்களுக்கு ஏற்பட்ட இன்னல் இடையூறுகளின்போது
நாங்கள் உங்களுக்கு எழுதினோம்;
ஆண்டவரிடம் மன்றாடினோம். எங்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது.
நாங்கள் பலியும் உணவுப் படையலும் ஒப்புக்கொடுத்தோம்;
விளக்கேற்றினோம்; அப்பம் படைத்தோம். [2]
9 எனவே நீங்கள் கிஸ்லேவ் மாதம் கூடாரத் திருவிழாவைக்
கொண்டாடக் கருத்தாயிருங்கள்.
நூற்று எண்பத்தெட்டாம் ஆண்டு [3] இது எழுதப்பெற்றது."

இரண்டாம் மடல்[தொகு]


10 "தாலமி மன்னரின் ஆசிரியரும்
திருப்பொழிவு பெற்ற குருக்கள் வழிமரபில் தோன்றியவருமான அரிஸ்தோபுலுக்கும்
எகிப்தில் உள்ள யூதர்களுக்கும்
எருசலேம் மக்களும் யூதேயாவின் குடிகளும் ஆட்சிக் குழுவினரும் யூதாவும்
நலம்பெற வாழ்த்தி எழுதுவது:
11 மன்னருக்கு எதிராக எம் பக்கம் நின்று,
பேரிடர்களிலிருந்து எங்களைக் காப்பாற்றிய கடவுளுக்குப் பெரிதும் நன்றி நவில்கிறோம்;
12 ஏனெனில் அவர் திருநகருக்கு எதிராகப் போரிட்டவர்களை விரட்டியடித்தார்.
13 வெல்லற்கரியதாய்த் தோன்றிய தம் படையோடு
அந்தியோக்கு பாரசீகத்தில் நுழைந்தபோது,
நானயா என்னும் தேவதையின் அர்ச்சகர்கள் சூழ்ச்சிசெய்து
கோவிலிலேயே அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
14 அந்தியோக்கு அத்தேவதையை மணமுடிக்கும் பாவனையில்
கோவிலின் திரளான செல்வத்தைச் சீர்வரிசையாகப் பெறுவதற்காகத்
தம் நண்பர்களோடு அங்குச் சென்றார்.
15 நானயாவின் அர்ச்சர்கள் செல்வத்தை வெளியே எடுத்துவைத்தபொழுது,
அந்தியோக்கு தம் நண்பர்கள் சிலரோடு கோவில் முற்றத்தினுள் நுழைந்தார்.
அவர் நுழைந்ததும் அர்ச்சகர்கள் கோவிலை அடைத்தார்கள்.
16 மேல்தட்டில் மறைவாக இருந்த கதவைத் திறந்து
கற்களை எறிந்து மன்னரைத் தாக்கினார்கள்;
அவரையும் அவருடைய ஆள்களையும் துண்டு துண்டாக்கித்
தலைகளையும் வெட்டி
வெளியே நின்றுகொண்டிருந்தவர்கள்முன் வீசியெறிந்தார்கள். [4]
17 இறைப்பற்றில்லாதவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கிய நம் கடவுள்
எல்லாவற்றிலும் போற்றப்படுவாராக."


18 "கிஸ்லேவ் மாதம் இருபத்தைந்தாம் நாள்
கோவிலின் தூய்மைப் பாட்டு விழாவை நாங்கள் கொண்டாடவிருக்கிறோம்;
நெகேமியா கோவிலையும் பலிபீடத்தையும் மீண்டும் கட்டி எழுப்பிப்
பலிசெலுத்திய வேளையில் தோன்றிய நெருப்பை நினைவுகூரும்
கூடாரத் திருவிழாவை நீங்களும் கொண்டாடுமாறு
உங்களுக்கு இதை அறிவிப்பது முறை என்று எண்ணினோம்.
19 ஏனெனில் நம் மூதாதையர் பாரசீகத்திற்கு நாடு கடத்தப்பட்டபொழுது
இறைப்பற்று உடையவர்களாய் அன்று விளங்கிய குருக்கள்
பலிபீடத்தினின்று யாரும் அறியாதவாறு நெருப்பை எடுத்து,
ஒரு பாழ்கிணற்றில் இருந்த பொந்து ஒன்றில் மறைத்துவைத்தார்கள்;
அந்த இடம் எவருக்கும் தெரியாதவாறு பார்த்துக் கொண்டார்கள்.
20 பல ஆண்டுகள் கடந்தபின் கடவுள் விரும்பியபொழுது,
பாரசீக மன்னரின் ஆணையோடு நெகேமியா,
நெருப்பை ஒளித்துவைத்திருந்த குருக்களின் வழிமரபினரை
அதைக் கொணரும்படி அனுப்பினார்.
அவர்கள் நெருப்புக்குப் பதிலாக ஒரு கெட்டியான நீர்மத்தையே கண்டதாக
எங்களுக்கு அறிவித்தார்கள்.
அப்பொழுது அதை எடுத்துவருமாறு அவர் கட்டளையிட்டார்.
21 விறகின் மேல் பலிப்பொருகள்கள் வைக்கப்படவே,
அவற்றின்மீது அந்நீர்மத்தைத் தெளிக்கும்படி நெகேமியா குருக்களுக்குக் கட்டளையிட்டார்.
22 அவ்வாறே செய்யப்பட்டது.
முன்னர் முகில்களால் மூடப்பட்டிருந்த கதிரவன்
சிறிது நேரத்திற்குப்பின் ஒளிரத் தொடங்கினான்.
உடனே பெரும் நெருப்பு பற்றியெரிந்தது.
அதனால் அனைவரும் வியப்படைந்தனர்!
23 பலிப்பொருள்கள் எரிந்து கொண்டிருந்த வேளையில்
குருக்களும் மற்ற அனைவரும் வேண்டுதல் செய்தார்கள்;
யோனத்தான் வழிநடத்த,
நெகேமியாவைப்போல மற்றவர்களும் அதற்குப் பதிலுரைத்தார்கள்.


24 "அவ்வேண்டல் பின்வருமாறு:
'ஆண்டவரே, கடவுளாகிய ஆண்டவரே, அனைத்தையும் படைத்தவரே,
நீர் அச்சத்துக்குரியவர், வல்லவர், நீதியுள்ளவர், இரக்கமுடையவர்;
நீர் ஒருவரே அரசர், அருள்கூர்பவர்.
25 நீர் ஒருவரே வாரி வழங்குபவர், நீதியுள்ளவர்,
எல்லாம் வல்லவர், என்றும் உள்ளவர்.
நீரே இஸ்ரயேலை எல்லாத் தீமைகளினின்றும் விடுவிப்பவர்.
எங்கள் மூதாதையரைத் தெரிந்தெடுத்து உமக்கென்று உரித்தாக்கிக் கொண்டவரும் நீரே.
26 உம் மக்களான இஸ்ரயேலர் அனைவரின் பெயராலும்
இப்பலியை ஏற்றுக்கொள்ளும்;
உமது பங்கைப் பாதுகாத்து உமக்கென்று உரித்தாக்கிக் கொள்ளும்.
27 சிதறிக்கிடக்கும் எங்கள் மக்களை ஒன்றுசேரும்;
பிற இனத்தார் நடுவே அடிமைகளாய் இருப்பவர்களுக்கு விடுதலை வழங்கும்;
புறக்கணிக்கப்பட்டவர்களையும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களையும்
கனிவுடன் கண்ணோக்கும்.
நீரே எங்கள் கடவுள் எனப் பிற இனத்தார் அறிந்து கொள்ளட்டும்.
28 எங்களை ஒடுக்கிறவர்களையும்
இறுமாப்புக் கொண்டு கொடுமைப்படுத்துகிறவர்களையும் தண்டியும்.
29 மோசே வாக்களித்ததுபோல் உமது தூய இடத்தில் உம் மக்களை உறுதிப்படுத்தும்." [5]


30 "பின்பு குருக்கள் புகழ்ப்பா இசைத்தார்கள்.
31 பலிப் பொருள்கள் முற்றிலும் எரிந்தபின்
எஞ்சியிருந்த நீர்மத்தைப் பெரிய கற்களின்மேல் ஊற்றும்படி நெகேமியா பணித்தார்.
32 அவ்வாறு செய்தபோது தீப்பிழம்பு கொழுந்துவிட்டெரிந்தது;
ஆனால் பலி பீடத்திலிருந்து எழுந்து வந்த பேரொளியின்முன் அது மங்கிவிட்டது."


33 "இதுபற்றிய செய்தி எங்கும் பரவியது.
நாடு கடத்தப்பட்ட குருக்கள் தீயை மறைத்துவைத்த இடத்தில் நீர்மம் காணப்பட்டதும்,
அதைக் கொண்டு நெகேமியாவும் அவரோடு இருந்தவர்களும்
பலிப்பொருள்களை எரித்துத் தூய்மைப்படுத்தியதும்
பாரசீக மன்னருக்கு அறிவிக்கப்பட்டது.
34 மன்னர் இதுபற்றிக் கேட்டறிந்தார்;
அந்த இடத்தைச் சுற்றி அடைத்து அதைத் தூய இடமாக அமைத்தார்.
35 அங்கிருந்து கிடைத்த திரளான வருவாயிலிருந்து
மன்னர் தாம் விரும்பியவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவார்.
36 நெகேமியாவும் அவரோடு இருந்தவர்களும்
அந்த நீர்மத்தை "நெப்தார்" என்று அழைத்தார்கள். அதற்குத் "தூய்மைப்பாடு" என்பது பொருள். ஆனால் "நெப்தாய்" என்றே பலரும் அதை அழைக்கின்றனர்."


குறிப்புகள்

[1] 1:7 - கி.மு. 143.
[2] 1:7 = 2 மக் 4:7-22.
[3] 1:9 - கி.மு. 124.
[4] 1:13-16 = 2 மக் 9:1-29; 1 மக் 6:1-16.
[5] 1:29 = இச 30:3-8.


அதிகாரம் 2[தொகு]


1 "முன்னர் விளக்கியபடி,
சிறிதளவு நெருப்பை நாடு கடத்தப்பட்டோர் எடுத்துச்செல்ல
இறைவாக்கினர் எரேமியாவே ஆணையிட்டார் என்பது
ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது.
2 அவர்களுக்கு இறைவாக்கினர் இவ்வாணையைக் கொடுத்தபின்,
ஆண்டவருடைய கட்டளைகளை மறவாதிருக்க அவர்களை எச்சரித்தார்;
பொன், வெள்ளிச் சிலைகளையும் அவற்றின் அணிகலன்களையும் காணும்பொழுது
மனம் குழம்பி சிதைந்துவிடாதபடி இருக்க அறிவுறுத்தினார்;
3 திருச்சட்டம் அவர்களின் உள்ளத்தினின்று நீங்கா வண்ணம்
இவை போன்ற வேறு பல சொல்லி அவர்களுக்கு அறிவூட்டினார். [1]
4 இறை வெளிப்பாட்டால் ஏவப்பெற்று,
கூடாரத்தையும் பேழையையும் தம்மோடு கொண்டுவரும்படி
இறைவாக்கினர் பணித்தார்;
முன்பு மோசே ஏறிச்சென்று கடவுளின் உரிமைச் சொத்தைக் கண்ட
மலைக்கு இவரும் சென்றார் -
இவையெல்லாம் அதே ஆவணங்களில் காணக்கிடக்கின்றன. [2]
5 எரேமியா அங்குச்சென்று ஒரு குகையைக் கண்டார்;
கூடாரத்தையும் பேழையையும் தூபபீடத்தையும் கொண்டுசென்று
அதில் வைத்து வாயிலை மூடி முத்திரையிட்டார்."


6 "அவரைப் பின்தொடர்ந்தவர்களுள் சிலர்
அக்குகைக்குச் செல்லும் வழியை அடையாளம் கண்டு கொள்ள முயன்றனர்;
ஆனால் அவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியவில்லை.
7 எரேமியா இதை அறிந்தபோது அவர்களைக் கடிந்து,
'கடவுள் தம் மக்களுக்கு இரக்கம் காட்டி,
மீண்டும் அவர்களை ஒன்றுசேர்க்கும் வரை
அந்த இடம் எவருக்கும் தெரியாதிருக்கட்டும்.
8 அப்போது ஆண்டவர் இதையெல்லாம் வெளிப்படுத்துவார்.
மோசே காலத்திலும், சிறப்பான முறையில் கோவிலில் அர்ப்பணிக்கப்படுமாறு
சாலமோன் வேண்டிக்கொண்ட வேளையிலும் நிகழ்ந்தது போல்
ஆண்டவருடைய மாட்சியும் முகிலும் தோன்றும்' என்று கூறினார்." [3]


9 "மேலும், ஞானம் நிறை சாலமோன்
கோவில் வேலை நிறைவுற்றபோது அர்ப்பணிப்புப் பலி ஒப்புக்கொடுத்தார்;
10 மோசே ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டபோது
விண்ணகத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து பலிப்பொருள்களை எரித்தது போல,
சாலமோனும் வேண்டிக் கொண்டபோது நெருப்பு இறங்கி வந்து
எரிபலிகளை எரித்தது என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. [4]
11 (பாவம் போக்கும் பலியை உண்ணாத காரணத்தால் அது எரிக்கப்பட்டது
என்று மோசே கூறியிருந்தார்.) [5]
12 இவ்வாறு சாலமோன் எட்டு நாள் விழா கொண்டாடினார்."


13 "இந்நிகழ்ச்சிகளெல்லாம் அரசு ஆவணங்களிலும்
நெகமியாவுடைய வாழ்க்கைக் குறிப்புகளிலும் எழுதப்பட்டுள்ளன.
மேலும் நெகேமியா ஒரு நூல்நிலையம் நிறுவி
மன்னர்கள், இறைவாக்கினர்கள்பற்றிய நூல்களையும்
தாவீது எழுதியவற்றையும் நேர்ச்சைப் படையல்கள் தொடர்பான
மன்னர்களின் மடல்களையும் அதில் சேகரித்து வைத்தார்.
14 அதுபோன்று யூதாவும் எங்களிடையே ஏற்பட்ட போரினால் சிதறிப்போன
நூல்களையெல்லாம் சேகரித்து வைத்தார்.
அவை இன்றும் எங்களிடம் உள்ளன. [6]
15 உங்களுக்குத் தேவைப்படுமாயின்,
அவற்றை எடுத்துச்செல்ல ஆளனுப்புங்கள்."


16 "நாங்கள் கோவில் தூய்மைப்பாட்டு விழாவைக் கொண்டாடவிருப்பதால்
நீங்களும் அவ்விழாவைக் கொண்டாடும்படி
கேட்டுக்கொள்ளவே உங்களுக்கு எழுதுகிறோம். [7]
17 திருச்சட்டம் வழியாகக் கடவுள் உறுதி மொழிந்ததுபோல்,
அவரே தம் மக்களாகிய நம் அனைவரையும் மீட்டார்;
உரிமைச்சொத்து, ஆட்சி, குருத்துவம், கோவில்,
தூய்மைப்பாடு ஆகியவற்றை நம் எல்லாருக்கும் மீண்டும் அளித்தார்.
18 அவர் விரைவில் நம்மீது இரக்கம் கொள்வார் என்றும்,
வானத்தின்கீழ் உள்ள எல்லா இடங்களினின்றும்
தமது தூய இடத்தில் நம்மை ஒன்று சேர்ப்பார் என்றும்,
அவரிடம் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்;
ஏனெனில் அவர் பெரும் தீங்குகளினின்று நம்மை விடுவித்துள்ளார்;
தம் இடத்தையும் தூய்மைப்படுத்தியுள்ளார்." [8]

2. நூலாசிரியரின் முன்னுரை[தொகு]


19 யூதா மக்கபே, அவருடைய சகோதரர்கள் ஆகியோரின் வரலாறு,
திருப்பெருங் கோவிலின் தூய்மைப்பாடு, பலிபீட அர்ப்பணிப்பு,
20 அந்தியோக்கு எப்பிபானுக்கும் அவனுடைய மகன் யூப்பாத்தோருக்கும்
எதிராக நடைபெற்ற போர்கள்,
21 யூத நெறிக்காகத் துணிவுடன் போராடியவர்களுக்கு
விண்ணகத்தினின்று வழங்கப்பட்ட காட்சிகள்,
யூதர்கள் சிலராய் இருந்தபோதிலும் அவர்கள் நாடு முழுவதையும் கைப்பற்றி
அங்கு இருந்த அயல்நாட்டார் [9] கூட்டத்தைத் துரத்தியடித்து,
22 அனைத்துலகப் புகழ் பெற்ற கோவிலைத் திரும்பப் பெற்று,
எருசலேம் நகரை விடுவித்து,
அழிந்து போகும் நிலையில் இருந்த சட்டங்களை மீண்டும் நிலைநாட்டியது,
ஆண்டவரும் அவர்கள்மீது இரக்கம் காட்டிப் பேரருள் புரிந்தது
23 ஆகிய அனைத்தையும்
சீரேனைச் சேர்ந்த யாசோன் ஐந்து தொகுதிகளில் விளக்கியுள்ளார்.
இவற்றை ஒரே நூலில் சுருக்கித் தர முயல்வோம்.
24 இவற்றில் எண்ணற்ற புள்ளிவிவரங்கள் காணப்படுகின்றன.
வரலாற்று நிகழ்ச்சிகள் மிகுதியாக இருப்பதால்
அந்நிகழ்ச்சித் தொகுப்புகளில் ஆய்வு செய்ய விழைவோர்
பெரும் இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேரிடும்.
இவற்றை மனத்தில் கொண்டு,
25 படிக்க விரும்புவோருக்கு இந்நூல் மகிழ்ச்சி அளிக்கவும்,
மனப்பாடம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக அமையவும்,
அனைவருக்கும் பயன் தரவும் நாங்கள் கருத்தாய் இருந்தோம்.
26 சுருக்கி எழுதும் இக்கடினமான உழைப்பை மேற்கொண்ட எங்களுக்கு
இது வியர்வை சிந்தி உறக்கம் இழக்கச் செய்யும் வேலையே அன்றி எளிதானது அல்ல.
27 விருந்தினர்களை நிறைவு செய்யும்படி
விருந்து ஏற்பாடு செய்வதைப்போன்றே இதுவும் கடினமானது.
ஆயினும் பலரின் நன்றியுணர்வைப் பெறுவதற்காக
நாங்கள் இக்கடினமான உழைப்பை மகிழ்வுடன் மேற்கொள்வோம். [10]
28 சரியான விவரங்களைச் சேகரிக்கும் பொறுப்பை
வரலாற்று ஆசிரியருக்கு விட்டுவிட்டு,
அவற்றின் சுருக்கத்தைத் தருவதில் மட்டும் எங்கள் மனத்தைச் செலுத்துவோம்.
29 புது வீடு கட்டும் கட்டடக் கலைஞர்
முழு அமைப்பிலும் கருத்தாய் இருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு வண்ணம் பூசி அழகுபடுத்துபவர்
அதன் அழகுக்குத் தேவையானதில் மட்டும் கவனம் செலுத்துவார்.
இதைப் போன்றதே எங்கள் பணியும் என்பது என் கருத்து.
30 தாம் எழுதும் பொருளைத் தம்வயமாக்கி,
அதன் நிகழ்ச்சிகளை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆய்வு செய்து
விவரங்களின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்துவது வரலாற்று ஆசிரியரின் கடமை.
31 ஆனால் வரலாற்றைச் சுருக்கி எழுதுபவருக்கு,
நிகழ்ச்சிகளைக் குறுக்கவும் விரிவான விளக்கங்களை விட்டுவிடவும் உரிமை உண்டு.
32 ஆகவே மேலும் விரித்துரைக்காமல் வரலாற்றை எழுதத் தொடங்குகிறோம்.
முன்னுரையை நீளமாக்கி வரலாற்றையே சுருக்குவது அறிவின்மையாகும்.


குறிப்புகள்

[1] 2:2-3 = பாரூ 6:4-5.
[2] 2:4 = இச 32:49; 34:1.
[3] 2:8 = விப 24:16; 40:34; 1 அர 8:10-11.
[4] 2:10 = லேவி 9:23-24; 2 குறி 7:1.
[5] 2:11 = லேவி 10:16-20.
[6] 2:14 = 1 மக் 1:57.
[7] 2:16 = 1 மக் 4:59.
[8] 2:18 = இச 30:3-4; எசே 39:27-28.
[9] 2:21 - "காட்டுமிராண்டிகள்" என்பது மூலபாடம்.
கிரேக்கர் அல்லாதவரை இவ்வாறு அழைப்பது கிரேக்கரின் வழக்கம்.
இங்குக் கிரேக்கர்களையே குறிக்க இச்சொல் பயன்படுகிறது.
[10] 2:27 = சீஞா 32:1-2.


(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை