உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து


"7 பகைவரின் குதிரைப்படையினர் பெருந்திரளாய் இருந்ததால் அவர் தம் படையைப் பிரித்துக் குதிரைப் படையினரைக் காலாட்படையினருக்கு நடுவில் இருக்கச் செய்தார்." - 1 மக்கபேயர் 16:7

1 மக்கபேயர் (The First Book of Maccabees)

[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15

[தொகு]

ஏழாம் அந்தியோக்கும் சீமோனும்

[தொகு]


1 தெமேத்திரி மன்னனின் மகன் அந்தியோக்கு
யூதர்களின் தலைமைக் குருவும் ஆட்சியாளருமான சீமோனுக்கும்
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீவுகளிலிருந்து மடல் எழுதினான்.
2 அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:
"தலைமைக் குருவும் ஆட்சியாளருமான சீமோனுக்கும்
யூத இனத்தாருக்கும் அந்தியோக்கு மன்னன் வாழ்த்துக் கூறி எழுதுவது:
3 எங்கள் மூதாதையரின் நாட்டைச் சில கயவர்கள் கைப்பற்றிக்கொண்டபடியால்
அதைச் சீர்படுத்திப் பழைய நிலைக்குக் கொணர முடிவுசெய்துள்ளேன்;
அதற்காகவே பெரும் கூலிப்படையையும் போர்க் கப்பல்களையும் திரட்டியிருக்கிறேன்;
4 எங்களது நாட்டை அழித்து என் ஆட்சிக்கு உட்பட்ட பல நகரங்களைப்
பாழாக்கியவர்களைத் தண்டிப்பதற்காக
அவர்களது நாட்டின்மீது படையெடுக்க எண்ணம் கொண்டுள்ளேன்.
5 ஆதலால் எனக்குமுன் இருந்த மன்னர்கள் அனைவரும்
உமக்கு விலக்கியிருந்த எல்லா வரிகளையும்
வழங்கியிருந்த எல்லாச் சலுகைகளையும் இப்போது உறுதிப்படுத்துகிறேன்;
6 நாட்டுக்குத் தேவையான நாணயங்களை
நீரே அடித்துக்கொள்ள உமக்கு அனுமதி அளிக்கிறேன்.
7 எருசலேம் நகரும் அதன் திருஉறைவிடமும்
தன்னாட்சி பெற்றவையாய் இருக்கும்.
நீர் செய்துள்ள எல்லாப் படைக்கலங்களும்,
நீர் கட்டி முடித்து இப்போதும் உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கோட்டைகளும்
உமக்கே சொந்தமாய் இருக்கும்.
8 அரச கருவூலத்துக்கு நீர் இப்போது செலுத்தவேண்டிய எல்லாக் கடனையும்,
இனிச் செலுத்தவேண்டிய கடனையும்
இன்றுமுதல் என்றென்றும் தள்ளுபடி செய்கின்றேன்.
9 எமது நாட்டை நாம் மீண்டும் அடைந்தபிறகு,
உங்களது பெருமை உலகெங்கும் விளங்கும்படி
உம்மையும் உம் இனத்தாரையும் கோவிலையும் பெரிதும் மாட்சியுறச் செய்வோம்."


10 நூற்று எழுபத்து நான்காம் ஆண்டு [1]
அந்தியோக்கு தன் மூதாதையரின் நாட்டினுள் புகுந்தான்.
எல்லாப் படைகளும் அவனோடு சேர்ந்து கொண்டன.
ஆதலால் திரிபோவுடன் சிலர் மட்டுமே இருந்தனர்.
11 அந்தியோக்கு அவனைத் துரத்தியதால்,
அவன் கடலோரமாய் இருந்த தோர் நகருக்குத் தப்பியோடினான்;
12 ஏனென்றால் தன் படைகள் தன்னைக் கைவிட்டதால்
தனக்குப் பல தொல்லைகள் நேர்ந்தன என்பதை உணர்ந்திருந்தான்.
13 அந்தியோக்கு ஓர் இலட்சத்து இருபதாயிரம் படைவீரர்களோடும்
எண்ணாயிரம் குதிரைவீரர்களோடும் தோருக்கு எதிராகப் பாசறை அமைத்தான்;
14 அந்த நகரைச் சுற்றி வளைத்துக்கொண்டான்.
கப்பல்களும் கடலில் இருந்தவண்ணம் போரில் கலந்து கொண்டன.
கடல்பக்கமும் தரைப்பக்கமும் நகரை நெருக்கி யாரும் வெளியே போகாமலும்
உள்ளே நுழையாமலும் தடுத்தான்.

யூதர்களுக்கு உரோமையின் ஆதரவு

[தொகு]


15 இதற்கிடையில் பல்வேறு மன்னர்களுக்கும் நாடுகளுக்கும்
எழுதப்பட்ட மடல்களோடு
நூமேனியும் அவனுடன் இருந்தவர்களும்
உரோமையினின்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
அவற்றில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: [2]
16 "தாலமி மன்னருக்கு உரோமையர்களின் பேராளர் லூசியு
வாழ்த்துக் கூறி எழுதுவது:
17 தலைமைக் குருவான சீமோனும்
எங்களின் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூத மக்களும் அனுப்பிய தூதர்கள்
பழைய நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கும்படி எங்களிடம் வந்தார்கள்.
18 அவர்கள் அறுநூற்று எண்பத்து ஐந்து கிலோ [3] எடையுள்ள
பொற் கேடயம் ஒன்று கொண்டுவந்தார்கள்.
19 ஆதலால் அவர்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்றும்,
அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் நாட்டையும்
எதிர்த்துப் போரிடக்கூடாது என்றும்,
அவர்களை எதிர்த்துப் போர் செய்கிறவர்களோடு கூட்டுச் சேரக்கூடாது என்றும்
பல்வேறு மன்னர்களுக்கும் நாடுகளுக்கும் எழுத முடிவுசெய்தோம்.
20 அவர்கள் கொண்டு வந்த கேடயத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடிவுசெய்தோம்.
21 ஆதலால் கயவர்கள் யாரேனும் யூதேயாவிலிருந்து
உங்களிடம் தப்பியோடி வந்திருந்தால்,
யூதச் சட்டப்படி அவர்களைத் தண்டிக்குமாறு
தலைமைக் குருவான சீமோனிடம் அவர்களை ஒப்புவித்துவிடுங்கள்."


22 இவ்வாறே தெமேத்திரி மன்னனுக்கும் அத்தால், அரியாரது,
அர்சாகு ஆகியோருக்கும் லூசியு எழுதினான்;
23 சம்சாம், ஸ்பார்த்தா, தேல், மிந்து, சிகியோன்,
காரியா, சாமு, பம்பிலியா, லீக்கியா, அலிக்கார்னசு,
உரோது, பசேல், கோசு, சீது, அராது கோர்த்தினா,
கினிது, சைப்பிரசு, சீரேன் ஆகிய எல்லா நாடுகளுக்கும் எழுதினான்.
24 இம்மடலின் நகல் தலைமைக் குரு சீமோனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஏழாம் அந்தியோக்கு சீமோனின் பகைவனாதல்

[தொகு]


25 அந்தியோக்கு மன்னன் மீண்டும் தோருக்கு எதிராய்ப் பாசறை அமைத்தான்;
அதைத் தன் படையால் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தான்;
படைப்பொறிகள் செய்தான்;
திரிபோவை அடைத்துவைத்து
அவன் வெளியே போகவோ உள்ளே வரவோ முடியாதவாறு செய்தான்.
26 சீமோன் அந்தியோக்குக்கு உதவியாக,
தேர்ந்தெடுத்த இரண்டாயிரம் வீரர்களை பொன், வெள்ளி
திரளான படைக்கலங்களோடு அனுப்பிவைத்தார்.
27 ஆனால் அந்தியோக்கு அவர்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல்
சீமோனுடன் தான் செய்திருந்த ஒப்பந்தங்களை மீறி நட்புறவை முறித்துக் கொண்டான்.
28 அதன்பிறகு சீமோனைச் சந்தித்துப் பேசத்
தன் நண்பர்களுள் ஒருவரான அத்தநோபியை அவன் அனுப்பி,
"நீங்கள் எனது நாட்டின் நகரங்களாகிய யாப்பா, கசாரா,
எருசலேம் கோட்டை ஆகியவற்றைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்;
29 அப்பகுதிகளைப் பாழாக்கி நாட்டில் பெரும் தீமைகள் புரிந்து
எனது அரசில் பல இடங்களைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்.
30 எனவே இப்போது நீங்கள் கைப்பற்றியுள்ள நகரங்களையும்
யூதேயாவின் எல்லைகளுக்கு அப்பால் நீங்கள் பிடித்து வைத்துள்ள நாடுகளில்
திரட்டியுள்ள திறையையும் ஒப்படைத்துவிடுங்கள்;
31 அல்லது அவற்றுக்குப் பதிலாக
இருபது டன் [4] வெள்ளியை எனக்குச் செலுத்துங்கள்;
நீங்கள் உண்டாக்கிய அழிவுக்கும்
நகரங்களுக்காகக் கட்ட வேண்டிய திறைக்கும் ஈடாக
வேறு இருபது டன் வெள்ளியைக் கட்டிவிடுங்கள்.
இல்லையேல் நாங்கள் வந்து உங்கள்மீது போர்தொடுப்போம்"
என்று சொல்லச் சொன்னான்.


32 மன்னனின் நண்பன் அத்தநோபி எருசலேம் வந்து,
சீமோனுடைய மாட்சியையும்
பொன், வெள்ளிக் கலன்கள் நிறைந்த நிலையடுக்கையும்
மற்றச் செல்வப் பகட்டையும் கண்டு வாயடைத்து நின்றான்;
மன்னனுடைய சொற்களை அவருக்கு அறிவித்தான்.
33 ஆனால் சீமோன் அவனுக்கு மறுமொழியாக,
"நாங்கள் அயல்நாட்டைப் பிடித்துக்கொள்ளவில்லை;
பிறருடைய சொத்துகளைக் கைப்பற்றிக்கொள்ளவுமில்லை.
ஆனால் எங்கள் பகைவர்கள் நேர்மையின்றிக் கவர்ந்து,
சிறிது காலம் வைத்திருந்த எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்துகளையே
திரும்பப் பெற்றுள்ளோம்.
34 தகுந்த வாய்ப்பு ஏற்பட்டதால் எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்துகளை
எங்களோடு தக்க வைத்துக் கொண்டுள்ளோம்.
35 ஆனால் நீர் கோரும் யாப்பா, கசாராவைப் பொறுத்தமட்டில்,
அந்நகரங்கள் மக்கள் நடுவிலும் எங்கள் நாட்டிலும்
பெரும் தீமைகள் விளைவித்து வந்துள்ளன.
ஆயினும் அவற்றுக்காக நான்கு டன் [5] வெள்ளி கொடுப்போம்" என்றார்.
36 அதற்கு அத்தநோபி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை;
மாறாக, சினத்துடன் மன்னனிடம் திரும்பிச் சென்று,
சீமோன் தன்னிடம் கூறியவற்றையும்
அவரது மாட்சியையும் தான் கண்ட யாவற்றையும் அறிவித்தான்.
அப்போது மன்னன் கடுஞ் சீற்றம் கொண்டான்.

யோவானின் வெற்றி

[தொகு]


37 இதற்கிடையே திரிபோ கப்பலேறி ஒர்த்தோசியாவுக்கு ஓடிப்போனான்.
38 அந்தியோக்கு மன்னன் கெந்தபாயைக் கடற்கரைப் பகுதிக்குப்
படைத் தலைவனாக ஏற்படுத்தி,
காலாட்படையையும் குதிரைப்படையையும் அவனுக்கு அளித்தான்;
39 யூதர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்பொருட்டு
யூதேயாவுக்கு எதிரில் பாசறை அமைக்கவும்,
கிதரோனை மீண்டும் கட்டியெழுப்பி,
அதன் வாயில்களை வலுப்படுத்தவும்
கெந்தபாய்க்குக் கட்டளையிட்டபின்
திரிபோவைத் துரத்திச் சென்றான்.
40 யாம்னியா சேர்ந்த கெந்தபாய் மக்களைத் துன்புறுத்தி,
யூதேயாமீது போர் தொடுத்தான்;
அவர்களைச் சிறைப்பிடித்துக் கொல்லத் தொடங்கினான்.
41 மன்னனின் கட்டளைப்படி அவன் கிதரோனைக் கட்டியெழுப்பினான்;
யூதேயா நாட்டில் புகுந்து சுற்றுக்காவல் புரியுமாறு
அவ்விடத்தில் குதிரைப்படையையும் காலாட்படையையும் நிறுவினான்.


குறிப்புகள்

[1] 15:10 - கி.மு. 138.
[2] 15:15 = 1 மக் 12:16.
[3] 15:18 - ஆயிரம் மினா என்பது கிரேக்க பாடம்.
[4] 15:31 - ஐந்நூறு தாலந்து என்பது கிரேக்க பாடம்.
[5] 15:35 - நூறு தாலந்து என்பது கிரேக்க பாடம்.

அதிகாரம் 16

[தொகு]

யூதா, யோவானின் வெற்றி

[தொகு]


1 யோவான் கசாராவினின்று ஏறிச்சென்று
கெந்தபாய் செய்தவற்றைத் தன் தந்தையாகிய சீமோனிடம் அறிவித்தார்.
2 அப்போது சீமோன் தம் மூத்த மைந்தர்களாகிய யூதா, யோவான்
ஆகிய இருவரையும் அழைத்து அவர்களை நோக்கி,
"நானும் என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பமும்
எங்கள் இளமைமுதல் இந்நாள்வரை
இஸ்ரயேலில் போர்களை நடத்திவந்துள்ளோம்;
இஸ்ரயேலைக் காப்பாற்றுவதில் பல முறை வெற்றி பெற்றோம்.
3 இப்போது நான் முதியவனாகிவிட்டேன்.
நீங்கள் விண்ணக இறைவனின் இரக்கத்தால் வளர்ச்சி அடைந்திருக்கிறீர்கள்.
ஆதலால் நீங்கள் என் சகோதரதரான யோனத்தானுக்கும் எனக்கும்
பதிலாய் இருந்து நம் மக்களுக்காகப் போரிடுங்கள்.
விண்ணக இறைவனின் உதவி உங்களோடு இருப்பதாக" என்று கூறினார்.


4 பின்னர் நாட்டிலிருந்து இருபதாயிரம் காலாள்களையும்
குதிரைவீரர்களையும் யோவான் தேர்ந்து கொண்டார்.
அவர்கள் கெந்தபாயை எதிர்த்துச் சென்று,
அன்று இரவு மோதயினில் தங்கினார்கள்;
5 மறுநாள் காலையில் எழுந்து சமவெளியை அடைந்தார்கள்.
காலாட்படையினரும் குதிரைப்படையினரும் கொண்ட பெரும் படை ஒன்று
அவர்களை எதிர்த்து வந்து கொண்டிருந்தது.
இரு படைகளுக்கும் நடுவே காட்டாறு ஒன்று ஓடிற்று.
6 யோவானும் அவருடைய படைவீரர்களும்
பகைவர்களுக்கு எதிரே அணிவகுத்து நின்றார்கள்.
தம் வீரர்கள் ஆற்றைக் கடக்க அஞ்சியதைக் கண்டு தாமே முதலில் கடந்தார்.
அதைக் கண்ட அவருடைய வீரர்களும்
அவரைத் தொடர்ந்து ஆற்றைக் கடந்தார்கள்.
7 பகைவரின் குதிரைப்படையினர் பெருந்திரளாய் இருந்ததால்
அவர் தம் படையைப் பிரித்துக் குதிரைப் படையினரைக்
காலாட்படையினருக்கு நடுவில் இருக்கச் செய்தார்.
8 அவர்கள் எக்காளங்களை முழக்கவே
கெந்தபாயும் அவனுடைய படைவீரர்களும் தப்பியோடினார்கள்;
அவர்களுள் பலர் காயப்பட்டு மடிந்தார்கள்;
எஞ்சியவர்கள் கிதரோனில் இருந்த கோட்டையை நோக்கி ஓடினார்கள்.
9 அப்போது யோவானின் சகோதரரான யூதா காயமடைந்தார்.
ஆனால் யோவான் கெந்தபாய் கட்டிய கிதரோன்வரை சென்று
பகைவர்களைத் துரத்தியடித்தார்.
10 அவர்கள் அசோத்தின் வயல்களில் இருந்த
காவல்மாடங்களுக்குள் தப்பியோடினார்கள்.
அசோத்து நகரை யோவான் தீக்கிரையாக்கினார்.
அவர்களுள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் மடிந்தனர்.
பின் அவர் பாதுகாப்புடன் யூதேயா திரும்பினார்.

சீமோனும் அவருடைய மைந்தர்களும் கொலைசெய்யப்படுதல்

[தொகு]


11 எரிகோ சமவெளிக்கு அபூபு மகன் தாலமி
ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தான்.
அவனிடம் திரளான வெள்ளியும் பொன்னும் இருந்தன;
12 ஏனெனில் அவன் தலைமைக் குருவின் மருமகன்.
13 ஆனால் அவன் பேராசை கொண்டு,
நாட்டைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான்;
சீமோனையும் அவருடைய மைந்தர்களையும்
வஞ்சகமாகக் கொன்றுவிட எண்ணினான்.
14 யூதேயா நாட்டின் நகரங்களைச் சீமோன் பார்வையிட்டு
அவற்றின் தேவைகளை நிறைவேற்றிவந்தார்;
நூற்று எழுபத்தேழாம் ஆண்டு [*] சபாத்து என்னும் பதினொராம் மாதம்
தம் மைந்தர்களாகிய மத்தத்தியா, யூதா ஆகியோரோடு
எரிகோவுக்கு இறங்கிச் சென்றார்.
15 அபூபு மகன் தான் கட்டியிருந்த தோக்கு என்னும் சிறு கோட்டைக்குள்
அவர்களை வஞ்சகமாய் வரவேற்று அவர்களுக்குப் பெரிய விருந்து ஏற்பாடு செய்தான்;
ஆனால் அவ்விடத்தில் தன் ஆள்களுள் சிலரை ஒளித்துவைத்திருந்தான்.


16 சீமோனும் அவருடைய மைந்தர்களும் குடிமயக்கத்தில் இருந்தபோது
தாலமியும் அவனைச் சேர்ந்தவர்களும் எழுந்து வந்து
தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு
விருந்து நடைபெற்ற மன்றத்துக்குள் புகுந்து
சீமோனையும் அவருடைய மைந்தர் இருவரையும்
பணியாளர் சிலரையும் கொன்றார்கள்.
17 இவ்வாறு தாலமி இஸ்ரயேலுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து,
நன்மைக்குப் பதிலாகத் தீமை புரிந்தான்.


18 தாலமி இச்செய்திகளை அந்தியோக்கு மன்னனுக்கு எழுதியனுப்பி,
தனக்கு உதவியாகப் படைகளை அனுப்பவும்
அவர்களின் நாட்டையும் நகரங்களையும்
தனக்குக் கொடுத்து விடவும் கேட்டுக்கொண்டான்.
19 யோவானைக் கொல்வதற்காக வேறு சிலலைரக் கசாராவுக்கு அனுப்பினான்;
தான் வெள்ளியும் பொன்னும் அன்பளிப்புகளும் வழங்கப்
படைத்தலைவர்கள் தன்னிடம் வந்துசேருமாறு அவர்களுக்கு எழுதியனுப்பினான்.
20 எருசலேமையும் கோவில் அமைந்திருந்த மலையையும் கைப்பற்ற
வேறு சிலரை அனுப்பினான்.
21 ஆனால் ஒருவர் கசாராவில் இருந்த யோவானிடம் முன்னதாகவே ஓடிச்சென்று,
அவருடைய தந்தையும் சகோதரர்களும் அழிந்ததை அறிவித்து,
அவரையும் கொலைசெய்யத் தாலமி ஆள்களை அனுப்பியிருக்கிறான் என்று எச்சரித்தார்.
22 யோவான் இதைக் கேள்வியுற்றுப் பெரிதும் திகிலடைந்தார்;
தம்மைக் கொலைசெய்ய வந்தவர்களைப் பிடித்துக் கொன்றார்;
ஏனெனில் அவர்கள் தம்மைக் கொல்லத் தேடினவர்கள் என்று அறிந்திருந்தார்.
23 யோவான் தம் தந்தைக்குப் பிறகு தலைமைக் குருவான நாள்முதல் புரிந்த
மற்றச் செயல்களும் போர்களும் தீரச் செயல்களும் கட்டியெழுப்பிய மதில்களும்
24 மற்றச் சாதனைகளும் தலைமைக் குருவின் குறிப்பேட்டில் வரையப்பட்டுள்ளன.


குறிப்பு

[*] 16:14 - கி.மு. 134.


(மக்கபேயர் - முதல் நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை