திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"சீமோன் தம் சகோதரரான யோனத்தானின் எலும்புகளை எடுத்துவரச் செய்து, தம் மூதாதையரின் நகரமாகிய மோதயினில் அவற்றை அடக்கம் செய்தார். இஸ்ரயேலர் எல்லாரும் பெரிதும் துயரம் கொண்டாடினர்; அவருக்காகப் பல நாள் அழுது புலம்பினர்.." - 1 மக்கபேயர் 13:25-26

1 மக்கபேயர் (The First Book of Maccabees)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

5. சீமோனின் தலைமை[தொகு]

சீமோன் தலைவராதல்[தொகு]


1 யூதேயா நாட்டின்மீது படையெடுத்து அதை அழித்தொழிக்கும்படி
திரிபோ பெரும் படை திரட்டியிருந்தான் என்று சீமோன் கேள்விப்பட்டார்;
2 மக்கள் அஞ்சி நடுங்கியிருப்பதைக் கண்டு
அவர் எருசலேம் சென்று மக்களை ஒன்றுசேர்த்தார்.
3 அவர்களுக்கு அவர் ஊக்கமளித்து,
"நானும் என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பமும்
திருச்சட்டத்துக்காகவும் திருஉறைவிடத்துக்காகவும்
செய்துள்ள அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்;
நாங்கள் புரிந்துள்ள போர்களையும் எதிர்கொண்ட இடுக்கண்களையும் அறிவீர்கள்.
4 இதைமுன்னிட்டே என் சகோதரர்கள் அனைவரும்
இஸ்ரயேலுக்காக மடிந்தார்கள்.
இப்போது நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன்.
5 எந்தத் துன்பம் நேர்ந்தாலும்
என் உயிரை நான் காப்பாற்றிக்கொள்ள முனைவேன் எனச்
சிறிதும் எண்ண வேண்டாம்;
ஏனென்றால் என் சகோதரர்களைவிட நான் சிறந்தவன் அல்லேன்.
6 ஆதலால் என் இனத்தார், திருஉறைவிடம்,
உங்கள் மனைவி மக்கள் ஆகியோருக்காக
வேற்றினத்தார் எல்லாரையும் பழிவாங்குவேன்;
ஏனெனில் அவர்கள் நம்மீது கொண்ட பகைமையினால்
நம்மை அழித்தொழிக்கக் கூடியிருக்கிறார்கள்" என்றார்.


7 இச்சொற்களைக் கேட்டதும் மக்கள் புத்துணர்வு பெற்றார்கள்;
8 எல்லோரும் உரத்த குரலில்,
"உம் சகோதரர்களாகிய யூதாவுக்கும் யோனத்தானுக்கும் பதிலாக நீரே எங்கள் தலைவர்.
9 நீர் எங்கள் போர்களை நடத்தும்;
நீர் சொல்வதெல்லாம் நாங்கள் செய்வோம்" என்றார்கள்.
10 ஆகவே சீமோன் எல்லாப் போர்வீரர்களையும் ஒன்றுசேர்த்து
எருசலேமின் மதில்களைக் கட்டி முடிக்க விரைந்தார்;
சுற்றிலும் அதை வலுப்படுத்தினார்;
11 அப்சலோமின் மகன் யோனத்தானையும்
அவருடன் திரளான படையையும் யாப்பாவுக்கு அனுப்பினார்.
யோனத்தான் அங்கு இருந்தவர்களை வெளியே துரத்திவிட்டு
அவ்விடத்தில் தங்கியிருந்தார்.


12 திரிபோ தாலமாயை விட்டுப் புறப்பட்டுத்
திரளான படையோடு யூதேயா நாட்டின்மீது படையெடுத்தான்;
சிறைப்பட்டிருந்த யோனத்தானைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
13 சமவெளிக்கு எதிரில் அதிதாவில் சீமோன் பாசறை அமைத்தார்.
14 அவர்தம் சகோதரரான யோனத்தானுக்குப் பதிலாகத் தலைவரானார் என்றும்
தன்னுடன் போர்செய்யவிருக்கிறார் என்றும் திரிபோ அறிந்தான்;
ஆகவே அவரிடம் தூதர்களை அனுப்பி,
15 "உம் சகோதரரான யோனத்தான் வகித்திருந்த பொறுப்புகள் தொடர்பாக
அரசு கருவூலத்துக்கு அவர் செலுத்தவேண்டிய பணத்தை முன்னிட்டு,
அவரை நாங்கள் சிறைப்படுத்தியிருக்கிறோம்.
16 அவர் விடுதலை பெற்றபின்
எங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யமாட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக,
நீர் நான்கு டன் [1] வெள்ளியோடு அவருடைய மைந்தர்களுள் இருவரைப்
பிணையாக இப்போது அனுப்பும்; நாங்கள் அவரை விடுவிக்கிறோம்"
என்று சொல்லச் சொன்னான்.


17 அவர்கள் வஞ்சகமாய்ப் பேசுகிறார்கள் என்று சீமோன் அறிந்திருந்தும்
இஸ்ரயேல் மக்களின் கடும் பகைக்குத் தாம் ஆளாகாதபடி
பணத்தையும் பிள்ளைகளையும் கொண்டுவரக் கட்டளையிட்டார்.
18 ஏனெனில், "சீமோன் பணத்தையும் பிள்ளைகளையும்
திரிபோவுக்கு அனுப்பாததால்தானே யோனத்தான் மடிந்தார்" என
மக்கள் சொல்லக்கூடும் என்று அஞ்சினார்.
19 எனவே பிள்ளைகளையும் நான்கு டன் வெள்ளியையும்
சீமோன் அனுப்பிவைத்தார்.
ஆனால் திரிபோ தான் சொன்ன சொல்லை மீறி
யோனத்தானை விடுதலை செய்யவில்லை.


20 பிறகு நாட்டின்மீது திரிபோ படையெடுத்து அழிப்பதற்கு அதனுள் புகுந்தான்;
அதோராவுக்குப் போகும் வழியாகச் சுற்றிச் சென்றான்.
அவன் சென்ற இடமெல்லாம் சீமோனும் தம் படையோடு
அவனுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார்.
21 எருசலேம் கோட்டைக்குள் இருந்த பகைவர்கள்,
பாலைநிலம் வழியாய்த் தங்களிடம் வருவதற்கும்
உணவுப்பொருள்களைக் கொடுத்தனுப்புவதற்கும்
திரிபோவிடம் தூதர்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
22 ஆகவே திரிபோ தன் குதிரைவீர்களை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தான்;
ஆனால் அன்று இரவு பனிமிகுதியாய்ப் பெய்ததால் அவனால் போகமுடியவில்லை;
எனவே அவன் புறப்பட்டுக் கிலயாதுக்குச் சென்றான்.
23 பாஸ்காமா அருகே வந்தபோது அவன் யோனத்தானைக் கொன்றான்.
அவ்விடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
24 பிறகு திரிபோ தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்.


25 சீமோன் தம் சகோதரரான யோனத்தானின் எலும்புகளை எடுத்துவரச் செய்து,
தம் மூதாதையரின் நகரமாகிய மோதயினில் அவற்றை அடக்கம் செய்தார்.
26 இஸ்ரயேலர் எல்லாரும் பெரிதும் துயரம் கொண்டாடினர்;
அவருக்காகப் பல நாள் அழுது புலம்பினர்.
27 சீமோன் தம் தந்தையினுடையவும் சகோதரர்களுடையவும் கல்லறைக்குமேல்
முன்னும் பின்னும் பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்ட நினைவுமண்டபம் ஒன்றை எழுப்பினார்.
தொலையிலிருந்து பார்க்கக்கூடிய அளவு அது உயர்ந்திருந்தது.
28 தம் தாய் தந்தைக்கும் நான்கு சகோதரர்களுக்கும்
எதிர் எதிராக ஏழு கூர்ங்கோபுரங்களை அவர் எழுப்பினார்;
29 இந்தக் கூர்ங்கோபுரங்களுக்கு வேலைப்பாடுகள் கொண்ட
பின்னணி அமைப்பு ஒன்றை நிறுவினார்;
உயர்ந்த தூண்களை எழுப்பி அவற்றின்மேல்
நிலையான நினைவுச் சின்னமாக இருக்கும்படி
படைக்கலங்களைப் பொறித்தார்;
கடற்பயணம் செய்யும் யாவரும் காணும்படி
படைக்கலங்களுக்கு அருகே கப்பல்களைச் செதுக்கிவைத்தார்.
30 அவர் மோதயின் நகரில் கட்டிய இந்தக் கல்லறை இந்நாள்வரை இருக்கிறது.


31 இளைஞனான அந்தியோக்கு மன்னனுக்கு எதிராய்த்
திரிபோ சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றான்;
32 அவனுக்குப் பதிலாக ஆசியாவின் அரசனாகி
முடி புனைந்து நாட்டுக்குப் பேரிடர் விளைவித்தான்.
33 சீமோன் யூதேயாவின் கோட்டைகளைக் கட்டி,
சுற்றிலும் உயர்ந்த காவல்மாடங்கள், பெரிய மதில்கள்,
கதவுகள், தாழ்ப்பாள்கள் ஆகியவற்றை அமைத்துக்
கோட்டைகளை வலுப்படுத்தினார்;
கோட்டைகளுக்குள் உணவுப் பொருள்களைச் சேர்த்துவைத்தார்.
34 பின்பு சிலரைத் தேர்ந்தெடுத்து நாட்டுக்கு வரிவிலக்குக் கோரும்படி
அவர்களைத் தெமேத்திரியு மன்னனிடம் அனுப்பினார்;
ஏனென்றால் திரிபோ கொள்ளையடிப்பது ஒன்றையே
தன் தொழிலாகக் கொண்டிருந்தான்.


35 தெமேத்திரி மன்னன் அதற்கு இணக்கம் தெரிவித்துப்
பின்வரும் மடலைச் சீமோனுக்கு எழுதி அனுப்பினான்:
36 "தலைமைக் குருவும் மன்னர்களின் நண்பருமான சீமோனுக்கும்
மூப்பர்களுக்கும் யூத இனத்தாருக்கும்
தெமேத்திரி மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:
37 நீங்கள் அனுப்பிவைத்த பொன்முடியையும்
பொன் குருத்தோலையையும் பெற்றுக்கொண்டோம்;
உங்களுடன் நிலைத்த சமாதானம் செய்துகொள்ளவும்
உங்களுக்கு வரிவிலக்கு அளிக்குமாறு எம் அலுவலர்களுக்கு எழுதவும்
ஆயத்தமாய் இருக்கிறோம்.[2]
38 நாம் உங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துகிறோம்.
நீங்கள் கட்டிய கோட்டைகள் உங்களுக்கே சொந்தமாகும்.
39 இந்நாள்வரை நீங்கள் செய்துள்ள தவறுகளையும் குறைகளையும் மன்னிக்கிறோம்;
நீங்கள் அரசருக்குச் செலுத்தவேண்டிய சிறப்பு வரியிலிருந்து விலக்கு வழங்குகிறோம்.
எருசலேமில் வேறு வரிகள் இதுவரை விதிக்கப்பட்டிருந்தால்
அவையும் இனிமேல் தண்டப்படமாட்டா.
40 உங்களிடையே தகுதியுள்ளவர்கள் அரசுப் பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
நம்மிடையே அமைதி நிலவட்டும்."


41 நூற்று எழுபதாம் ஆண்டு [3]
பிற இனத்தாரின் அடிமை நுகத்திலிருந்து
இஸ்ரயேல் மக்கள் விடுதலை அடைந்தார்கள்.
42 "பெரும் தலைமைக் குருவும்,
படைத்தளபதியும் யூதர்களின் தலைவருமான சீமோன்
ஆட்சிசெலுத்தும் முதல் ஆண்டு" என்று
இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆவணங்களிலும் ஒப்பந்தங்களிலும்
எழுதத் தொடங்கினார்கள்.


43 அக்காலத்தில் சீமோன் கசாரா நகரை முற்றுகையிட்டுப்
படைகளால் அதைச் சூழ்ந்துகொண்டார்;
நகரக்கூடிய மரக்கோபுரம் ஒன்று செய்து அதை நகருக்குக் கொண்டுவந்து,
காவல்மாடம் ஒன்றைத் தாக்கிக் கைப்பற்றினார். [4]
44 அந்த மரக்கோபுரத்துக்குள் இருந்தவர்கள் நகரினுள் நுழைந்ததும்
அங்குப் பெருங் குழப்பம் உண்டாயிற்று.
45 நகரில் இருந்தவர்கள் துயரின் அடையாளமாகத்
தங்களின் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
தங்களை மனைவி மக்களோடு மதில் மேல் ஏறினார்கள்;
உரத்த குரல் எழுப்பித் தங்களோடு சமாதானம் செய்து கொள்ளுமாறு
சீமோனை வேண்டிக் கொண்டார்கள்;
46 "நாங்கள் செய்த தீமைகளுக்கு ஏற்ப எங்களைத் தண்டியாது
எங்கள்மீது மனமிரங்கும்" என்று கெஞ்சினார்கள்.


47 சீமோனும் அவர்களோடு ஒப்பந்தம் செய்து போர்புரிவதை நிறுத்தினார்;
ஆனால் அவர்களை நகருக்கு வெளியே துரத்திவிட்டுச்
சிலைகள் இருந்த வீடுகளைத் தூய்மைப்படுத்திய பின்பு
புகழ்ப்பாக்களைப் பாடி இறைவனைப் போற்றியவண்ணம் நகருக்குள் நுழைந்தார்;
48 அதனின்று எல்லாத் தீட்டுகளையும் நீக்கி,
திருச்சட்டப்படி ஒழுகிவந்தோரை அவ்விடம் குடியேற்றினார்;
அதை மேலும் வலுப்படுத்தி அதில் தமக்கென
ஓர் இல்லத்தையும் அமைத்துக்கொண்டார்.


49 ஆனால் எருசலேம் கோட்டைக்குள் இருந்தவர்கள்
வெளியே நாட்டுப்புறம் போகவும் நகருக்குள் வரவும்,
வாங்கவும் விற்கவும் தடைசெய்யப்பட்டிருந்தார்கள்;
ஆதலால் அவர்கள் பசியால் வருந்தினார்கள்;
பலர் பட்டினியால் மடிந்தனர்.
50 இறுதியில் அவர்கள் சீமோனிடம் கதறியழுது
தங்களுக்கு அமைதி அளிக்குமாறு அவரை வேண்டிக்கொண்டார்கள்.
அவரும் அவ்வாறே செய்தார்;
ஆனால் அவர்களை அவ்விடத்தினின்று துரத்திவிட்டுக்
கோட்டையைத் தீட்டுகளினின்று தூய்மைப்படுத்தினார்.
51 இஸ்ரயேலின் பெரும் பகைவன் அழிக்கப்பட்டதால்,
நூற்று எழுபத்தோராம் ஆண்டு [5]
இரண்டாம் மாதம் இருபத்துமூன்றாம் நாள்
புகழ்ப்பாக்களையும் நன்றிப்பாக்களையும் பாடிக்கொண்டும்
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டும்,
யாழ், கைத்தாளம், சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகளை மீட்டிக்கொண்டும்
கோட்டைக்குள் யூதர்கள் நுழைந்தார்கள்.
52 அந்த நாளை ஆண்டுதோறும் அவர்கள்
மகிழ்ச்சியாய்க் கொண்டாட வேண்டும் என்று சீமோன் கட்டளையிட்டார்.
கோட்டைக்கு அருகில் இருந்த கோவில் மலையை மேலும் வலுப்படுத்தி,
அதில் அவரும் அவருடன் இருந்தவர்களும் வாழ்ந்தார்கள்.
53 தம் மகன் யோவான் ஆண்மை கொண்டவராய் இருக்கக் கண்ட சீமோன்
அவரைப் படைகளுக்கெல்லாம் தலைவராக ஏற்படுத்தினார்.
யோவான் கசாராவில் வாழ்ந்துவந்தார்.


குறிப்புகள்

[1] 13:16 - "நூறு தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
[2] 13:37 = 2 மக் 14:4.
[3] 13:41 - கி.மு. 142.
[4] 13:43 = 2 மக் 10:32-38.
[5] 13:51 - கி.மு. 141.


அதிகாரம் 14[தொகு]


1 திரிபோவை எதிர்த்துப் போரிட உதவி கேட்கும்படி
நூற்று எழுபத்திரண்டாம் ஆண்டு [1]
தெமேத்திரி மன்னன் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு
மேதியாவுக்குச் சென்றான்;
2 தெமேத்திரி தன் எல்லைக்குள் நுழைந்துவிட்டான் என்று
பாரசீகம், மேதியா நாடுகளின் மன்னனான அர்சாகு கேள்விப்பட்டு
அவனை உயிரோடு பிடித்துத் தன்னிடம் கொண்டு வருவதற்காகத்
தன் படைத்தலைவர்களுள் ஒருவனை அனுப்பினான்.
3 அவன் சென்று தெமேத்திரியின் படையை முறியடித்து
அவனைப் பிடித்து அர்சாகு அரசனிடம் கூட்டிச் சென்றான்.
அரசன் அவனைச் சிறையில் அடைத்தான்.

சீமோனின் புகழ்ச்சி[தொகு]

4 சீமோனுடைய காலம் முழுவதும் யூதா நாடு அமைதியாய் இருந்தது.


அவர் தம் இனத்தாரின் நலனையே நாடினார்.
அவருடைய அதிகாரமும் மாட்சியும் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும்
அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தன.
5 யாப்பா நகர்த் துறைமுகத்தைக் கைப்பற்றினார்;
தீவுகளுக்குச் செல்லும் வாயிலாக அதை அமைத்தார்;
இச்செயல் அவரது மாட்சிக்கே மணிமுடி ஆயிற்று.
6 தம் அரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்;
நாட்டைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
7 மிகப் பல போர்க் கைதிகளை ஒன்றுசேர்த்தார்;
கசாராவையும் பெத்சூரையும் எருசலேம் கோட்டையையும் அடிபணியச்செய்தார்;
கோட்டையிலிருந்து தீட்டுகளை நீக்கித் தூய்மைப்படுத்தினார்.
அவரை எதிர்த்தெழ யாரும் இல்லை.
8 மக்கள் தங்கள் நிலத்தை அமைதியாகப் பயிரிட்டு வந்தார்கள்;
நிலம் நல்ல விளைச்சலைத் தந்தது;
சமவெளி மரங்கள் கனி கொடுத்தன.
9 மூப்பர்கள் அனைவரும் தெருக்களில் அமர்ந்தார்கள்;
நடந்த நல்லவைபற்றிக் கூடிப் பேசினார்கள்;
இளைஞர்கள் பகட்டான போருடைகளை அணிந்தார்கள்.
10 சீமோன் உணவுப்பொருள்களைச் சேகரித்து நகரங்களுக்கு வழங்கினார்;
பாதுகாப்புக்கான வழிவகைகளை அமைத்துக் கொடுத்தார்.
அவரது மாட்சியின் புகழ் உலகின் கடை எல்லைவரை பரவியது.
11 அவரது நாட்டில் அமைதி நிலவியது;
இஸ்ரயேலில் மகிழ்ச்சி பொங்கிவழிந்தது.
12 அனைவரும் அவரவர்தம் திராட்சைக்கொடிக்கு அடியிலும்
அத்தி மரத்துக்கு அடியிலும் அமைதியாக அமர்ந்திருந்தனர்;
அவர்களை அச்சுறுத்துவார் எவரும் இல்லை.
13 நாட்டில் இஸ்ரயேலரை எதிர்க்க எவரும் இல்லை;
அக்காலத்தில் எதிரி நாட்டு மன்னர்களும் முறியடிக்கப்பட்டார்கள்.
14 அவர் தம் மக்களுள் நலிந்தோர் அனைவருக்கும் வலுவூட்டினார்.
திருச்சட்டத்தின் மீது பற்றார்வம் கொண்டிருந்தார்;
நெறிகெட்டவர்களையும் தீயவர்களையும் அழித்தொழித்தார்.
15 அவர் திருஉறைவிடத்தை மாட்சிமைப்படுத்தினார்;


திரளான கலன்களால் அதை அணிசெய்தார்.

உரோமை, ஸ்பார்த்தாவோடு ஒப்பந்தம்[தொகு]


16 யோனத்தான் இறந்ததுபற்றி உரோமையர்கள் கேள்விப்பட்டார்கள்;
ஸ்பார்த்தர்களுக்கும் அச்செய்தி எட்டியது.
அவர்கள் எல்லாரும் பெரிதும் வருந்தினார்கள்.
17 அவருக்குப் பதிலாக
அவருடைய சகோதரரான சீமோன் தலைமைக் குருவானார் என்றும்
நாட்டையும் அதன் நகரங்களையும் ஆண்டுவந்தார் என்றும்
ஸ்பார்த்தர்கள் கேள்வியுற்றார்கள்.
18 அவருடைய சகோதரர்களான யூதாவோடும் யோனத்தானோடும்
தாங்கள் முன்பு செய்திருந்த நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கும்படி
வெண்கலத் தகடுகளில் அவருக்கு எழுதியனுப்பினார்கள். [2]
19 அவை எருசலேமில் சபை முன்னிலையில் படிக்கப்பட்டன.


20 ஸ்பார்த்தர்கள் அனுப்பியிருந்த மடலின் நகல் பின்வருமாறு:
"தலைமைக் குருவாகிய சீமோனுக்கும் மூப்பர்களுக்கும்
குருக்களுக்கும் மற்ற யூத மக்களாகிய எங்கள் சகோதரர்களுக்கும்
ஸ்பார்த்தாவின் ஆளுநர்களும் நகரத்தாரும் வாழ்த்துக் கூறி எழுதுவது:
21 எங்கள் மக்களிடம் நீங்கள் அனுப்பிய தூதர்கள்
உங்கள் பெருமை, புகழ் பற்றி எங்களுக்கு அறிவித்தார்கள்.
நாங்களும் அவர்களது வருகையினால் மகிழ்ச்சி அடைந்தோம்.
22 அவர்கள் சொன்ன யாவற்றையும்
நாங்கள் பொதுப் பதிவேடுகளில் பின்வருமாறு எழுதிக் கொண்டோம்:
'யூதர்களுடைய தூதர்களான அந்தியோக்கின் மகன் நூமேனியும்,
யாசோன் மகன் அந்திப்பாத்தரும்
எங்களோடு தங்களுக்குள்ள நட்புறவைப் புதுப்பித்துக் கொள்ள எங்களிடம் வந்தார்கள்.
23 அவர்களைச் சிறப்புடன் வரவேற்கவும்,
அவர்கள் கூறிய சொற்களை ஸ்பார்த்தர்கள் தங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு
பொது ஆவணங்களில் அவற்றை எழுதி வைக்கவும்
மக்கள் விருப்பம் கொண்டார்கள்.
இவற்றின் நகல் ஒன்றைத் தலைமைக் குருவாகிய சீமோனுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.'"


24 இதன் பிறகு, உரோமையர்களோடு செய்திருந்த ஒப்பந்தத்தை உறுதிசெய்ய
ஆயிரம் மினா [3] எடையுள்ள ஒரு பெரிய பொற் கேடயத்தோடு
நூமேனியைச் சீமோன் உரோமைக்கு அனுப்பினார்.
25 இஸ்ரயேல் மக்கள் இவற்றைப்பற்றிக் கேள்விப்பட்டபோது,
"சீமோனுக்கும் அவருடைய மைந்தர்களுக்கும்
நாங்கள் எவ்வாறு நன்றி செலுத்துவோம்?
26 ஏனெனில் அவரும் அவருடைய சகோதரர்களும்
அவருடைய தந்தை வீட்டாரும் உறுதியாக இருந்தார்கள்;
இஸ்ரயேலின் பகைவர்களோடு போரிட்டு அவர்களைத் துரத்தியடித்தார்கள்;
இவ்வாறு அதன் விடுதலையை நிலை நாட்டினார்கள்"
என்று சொல்லி வியந்தார்கள்.
எனவே இச்சொற்களை வெண்கலத் தகடுகளில் பொறித்துச்
சீயோன் மலையில் இருந்த தூண்கள்மீது வைத்தார்கள்.
27 இதுதான் அவர்கள் எழுதியதன் நகல்:
"சீமோன் பெரிய தலைமைக் குருபீடப் பொறுப்பு ஏற்ற
மூன்றாம் ஆண்டாகிய நூற்று எழுபத்திரண்டாம் ஆண்டு [4]
எலூல் மாதம் பதினெட்டாம் நாள் அசராமேலில் [5]
28 குருக்கள், மக்கள், மக்களின் தலைவர்கள்,
நாட்டின் மூப்பர்கள் ஆகியோர் கூடியிருந்த பேரவையில்
பின்வருமாறு எங்களுக்கு அறிவிக்கப்பட்டது:
29 'நாட்டில் அடிக்கடிபோர் மூண்டதால்,
யோவாரிபின் வழிமரபில் வந்த குருவான மத்தத்தியாசின் மகன் சீமோனும்
அவருடைய சகோதரர்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள்;
தங்கள் திருஉறைவிடத்தையும் திருச்சட்டத்தையும் காப்பதற்குத்
தங்கள் நாட்டின் பகைவர்களை எதிர்த்தார்கள்;
இவ்வாறு தங்கள் நாட்டுக்குச் சீரிய பெருமை சேர்த்தார்கள்.
30 யோனத்தான் தம் இனத்தாரை ஒன்றுகூட்டினார்;
அவர்களின் தலைமைக் குருவானார்;
தம் நாட்டு மக்களோடு துயில்கொண்டார்.


31 பகைவர்கள் அவர்களின் நாட்டின்மீது படையெடுக்கவும்
அவர்களது திருஉறைவிடத்தைக் கைப்பற்றவும் திட்டமிட்டார்கள்.
32 அப்போது சீமோன் ஆர்த்தெழுந்து தம் இனத்தாருக்காகப் போர் செய்தார்;
தம் நாட்டின் படைவீரர்களுக்குப் படைக்கலங்களும் ஊதியமும் வழங்குவதில்
திரளான சொந்தப் பணத்தைச் செலவழித்தார்;
33 யூதேயாவின் நகர்களையும்,
குறிப்பாக யூதேயாவின் எல்லையில் இருந்த பெத்சூரையும் வலுப்படுத்தினார்;
முன்பு பகைவர்கள் தங்கள் படைக்கலங்களைச் சேமித்து வைத்திருந்த அந்நகரில்
யூதக் காவற்படையை நிறுவினார்;
34 கடலோரத்தில் இருக்கும் யாப்பாவையும்
முன்பு பகைவர்கள் கைப்பற்றியிருந்த
அசோத்து எல்லையில் உள்ள கசாராவையும் வலுப்படுத்தி
அவ்விடங்களிலும் யூதர்களைக் குடியேற்றினார்;
அங்கு அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையானவையெல்லாம் கொடுத்தார்.


35 'மக்கள் சீமோனின் பற்றுறுதியையும்
தம் இனத்தாருக்கு அவர் பெற்றுத்தர எண்ணியிருந்த பெருமையையும் கண்டு
அவரைத் தங்கள் தலைவராகவும் தலைமைக் குருவாகவும் ஏற்படுத்தினார்கள்;
ஏனென்றால் அவர் தம் இனத்தார்பால் நீதியுணர்வும் பற்றுறுதியும் கொண்டு
எல்லா வகையிலும் தம் மக்களைப் பெருமைப்படுத்த விரும்பிப்
பணிகள் பல செய்திருந்தார்.
36 அவரது காலத்தில் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது.
நாட்டினின்று பிற இனத்தார் துரத்தப்பட்டனர்;
தாவீதின் நகராகிய எருசலேமில் கோட்டை ஒன்று அமைத்து
அதிலிருந்து புறப்பட்டுத் திருஉறைவிடத்தின் சுற்றுப்புறத்தைத் தீட்டுப்படுத்தி,
அதன் தூய்மைக்குப் பெரும் களங்கம் உண்டாக்கியிருந்தோரும் துரத்தப்பட்டனர்.
37 சீமோன் எருசலேம் கோட்டையில் யூதர்களைக் குடியேற்றி
நாட்டினுடையவும் நகரினுடையவும் பாதுகாப்புக்காக அதை வலுப்படுத்தி
நகர மதில்களை உயர்த்தினார்.


38 இவற்றின்பொருட்டு தெமேத்திரி மன்னன் சீமோனைத்
தலைமைக் குருவாகத் தொடர்ந்து இருக்கச் செய்தான்;
39 தன் நண்பர்களுள் ஒருவராக உயர்த்திப் பெரிதும் பெருமைப்படுத்தினான்.
40 ஏனென்றால் உரோமையர்கள் யூதர்களைத் தங்களின் நண்பாகள்,
தோழர்கள், சகோதரர்கள் என்று அழைத்ததைப்பற்றியும்,
சீமோனுடைய தூதர்களைச் சிறப்புடன் வரவேற்றதைப்பற்றியும் கேள்விப்பட்டிருந்தான்.


41 'எனவே யூதர்களும் அவர்களின் குருக்களும் கீழ்க்கண்டவாறு முடிவு செய்தார்கள்:
நம்பிக்கையுள்ள இறைவாக்கினர் ஒருவர் தோன்றும் வரை
காலமெல்லாம் சீமோனே தங்கள் தலைவரும்
தலைமைக் குருவுமாய் இருக்க வேண்டும்;
42 அவரே தங்களுக்கு ஆளுநராக இருக்கவேண்டும்;
தங்கள் திருஉறைவிடத்தின் பொறுப்பை அவர் ஏற்று
அதன் பணிகளுக்கும் நாட்டுக்கும் படைக்கலங்களுக்கும்
கோட்டைகளுக்கும் பொறுப்பாளிகளை ஏற்படுத்தவேண்டும்.
திருஉறைவிடத்தின் பொறுப்பு அவருக்கே உரியது.
43 அனைவரும் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்;
அவர் பெயராலேயே நாட்டின் எல்லா ஒப்பந்தங்களையும் எழுதவேண்டும்;
அவர் கருஞ்சிவப்பு ஆடையும் பொன் அணிகலன்களும் அணிந்துகொள்ளவேண்டும்.


44 'இம்முடிவுகளுள் எதையும் செயலற்றதாக்கவோ
அவருடைய கட்டளைகளை எதிர்க்கவோ
அவரது இசைவின்றி மக்களவையைக் கூட்டவோ,
அரசருக்குரிய கருஞ்சிவப்பு ஆடை உடுத்திக்கொள்ளவோ,
பொன் அணியூக்கு அணிந்து கொள்ளவோ
மக்கள், குருக்கள் ஆகியோருள் யாருக்கும் உரிமை இல்லை.
45 உம்முடிவுகளுக்கு எதிராகச் செயல்புரிவோர்
அல்லது இவற்றுள் எதையும் மீறுவோர் தண்டனைக்கு ஆளாவார்.


46 'இவற்றின்படி செயல்புரியும் உரிமையைச் சீமோனுக்கு அளிக்க
மக்கள் அனைவரும் உடன்பட்டார்கள்.
47 சீமோனும் இதற்கு இசைந்து
தலைமைக்குருவாகவும் படைத்தளபதியாகவும்
யூதர்களுக்கும் குருக்களுக்கும் ஆட்சியாளராகவும்
அனைவருக்கும் காப்பாளராகவும் இருக்க ஒப்புக்கொண்டார்.'"


48 இம்முடிவுகளை வெண்கலத்தகடுகளில் பொறித்துத்
திருஉறைவிடத்தின் வளாகத்திற்குள்
எல்லாரும் காணக்கூடிய இடத்தில்
அவற்றை வைக்க அவர்கள் கட்டளையிட்டார்கள்.
49 சீமோனுக்கும் அவருடைய மைந்தர்களுக்கும் பயன்படுமாறு
அவற்றின் நகல்களைக் கருவூலத்தில் வைக்கவும் ஆணையிட்டார்கள்.


குறிப்புகள்

[1] 14:1 - கி.மு. 140.
[2] 14:18 = 1 மக் 8:22.
[3] 14:24 - ஒரு "மினா" என்பது 1300 திராக்மாவுக்குச் சமம்.
ஒரு "திராக்மா" என்பது தொழிலாளியின் ஒரு நாள் கூலிக்கு
இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.
[4] 14:27 - கி.மு. 140.
[5] 14:27 - இச்சொல்லின் பொருள் தெரியவில்லை;
"இறைமக்களின் முற்றம்" என்பதற்கான
எபிரேயச் சொல்லின் கிரேக்க ஒலிபெயர்ப்பாக இருக்கலாம்.


(தொடர்ச்சி): மக்கபேயர் - முதல் நூல்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை