திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"யூதர்களுக்கு எதிராக அந்தியோக்கின் சீற்றக் கனல் பற்றியெரிந்தது. எனவே இன்னும் விரைவாகத் தேரை ஓட்டுமாறு கட்டளையிட்டான். ஆனால் மிக விரைவாகப் பாய்ந்து சென்றுகொண்டிருந்த தேரிலிருந்து கீழே வீழ்ந்தான்; அந்தப் படுவீழ்ச்சியால் அவனது உடலின் ஒவ்வோர் உறுப்பும் துன்பத்துக்கு உள்ளாயிற்று.." - 2 மக்கபேயர் 9:9


2 மக்கபேயர் (The Second Book of Maccabees)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

அந்தியோக்கின் முடிவு[தொகு]


1 அக்காலத்தில் அந்தியோக்கு
பாரசீகப் பகுதிகளிலிருந்து இழிவுற்ற நிலையில் பின்வாங்கினான்;
2 ஏனெனில் பெர்சப்பொலி என்னும் நகரில் புகுந்து
கோவில்களைக் கொள்ளையடிக்கவும்
நகரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முயன்றிருந்தான்.
உடனே மக்கள் படைக்கலங்களோடு தங்களைக் காத்துகொள்ள விரைந்தார்கள்;
அவனையும் அவனுடைய ஆள்களையும் தோற்கடித்தார்கள்.
இதனால் அந்தியோக்கு அப்பகுதி மக்களால் துரத்தியடிக்கப்பட்டு,
வெட்கத்தோடு பின்வாங்க நேரிட்டது.
3 அவன் எக்பத்தானாவுக்குச் சென்றபோது
நிக்கானோருக்கும் திமொத்தேயுவின் படைக்கும் நிகழ்ந்தவை பற்றி அறியவந்தான்;
4 உடனே சீற்றங் கொண்டான்;
தன்னைத் துரத்தியடித்தவர்களால் தனக்கு நேர்ந்த தீங்குகளை
யூதர்கள்மேல் திருப்பிவிட எண்ணினான்;
ஆகவே, தன் பயணம் முடியும்வரை
எந்த இடத்திலும் நிறுத்தாமல் ஓட்டும்படி
தன் தேரோட்டிக்குக் கட்டளையிட்டான்.
ஆனால் விண்ணக இறைவனின் தீர்ப்பு அவனைத் தொடர்ந்தது.
ஏனெனில், "நான் எருசலேம் சென்றவுடன் அதனை
யூதர்களின் கல்லறையாக மாற்றுவேன்" என்று அவன் இறுமாப்புடன் கூறியிருந்தான்.
5 அனைத்தையும் காணும் ஆண்டவரும் இஸ்ரயேலின் கடவுளுமானவர்
கண்ணுக்குப் புலப்படாத, தீராத நோயால் அவனை வதைத்தார்.
அவன் மேற்சொன்னவாறு பேசி முடித்தவுடனே,
அவனது குடலில் தாங்க முடியாத வலியும்
உள்ளுறுப்புகளில் பொறுக்க முடியாத நோவும் ஏற்பட்டன.
6 கேட்டிராத பற்பல கொடுமைகளால்
பிறருடைய குடல்களை வதைத்திருந்த அவனுக்கு
இவ்வாறு நேர்ந்தது முறையே.
7 இருப்பினும் அவனுடைய திமிர் எவ்வகையிலும் அடங்கவேயில்லை.
அவன் மேலும் இறமாப்புற்றான்.
யூதர்களுக்கு எதிராக அவனது சீற்றக் கனல் பற்றியெரிந்தது.
எனவே இன்னும் விரைவாகத் தேரை ஓட்டுமாறு கட்டளையிட்டான்.
ஆனால் மிக விரைவாகப் பாய்ந்து சென்றுகொண்டிருந்த தேரிலிருந்து கீழே வீழ்ந்தான்;
அந்தப் படுவீழ்ச்சியால் அவனது உடலின் ஒவ்வோர் உறுப்பும் துன்பத்துக்கு உள்ளாயிற்று.
8 இவ்வாறு இயல்புக்கு மீறிய இறுமாப்பால் தூண்டப்பட்டு,
கடல் அலைகளுக்குத் தன்னால் கட்டளையிட முடியும் என்று நினைத்தவன்,
உயர்ந்த மலைகளைத் துலாக்கோலில் வைத்துத்
தன்னால் நிறுக்கமுடியும் என்று கற்பனை செய்தவன்,
அந்தோ தரையில் வீழ்த்தப்பட்டான்!
கடவுளின் ஆற்றல் அனைவருக்கும் வெளிப்படும் வகையில்
ஒரு தூக்குக் கட்டிலில் வைத்துத் தூக்கிச் செல்லப்பட்டான். [1]
9 அக்கொடியவனின் உடலிலிருந்து புழுக்கள் ஒன்றாய்த் திரண்டு எழுந்தன.
அவன் கடுந்துன்ப துயரோடு வாட,
குற்றுயிராய்க் கிடந்தபடியே அவனது சதை அழுகி விழுந்தது;
அதனின்று எழுந்த கொடிய நாற்றத்தால்
அவனுடைய படை முழுவதும் அருவருப்பு அடைந்தது.
10 விண்மீன்களைத் தன்னால் தொடமுடியும் என்று
சற்றுமுன் எண்ணிக்கொண்டிருந்த அவனை,
பொறுக்க முடியாத நாற்றத்தின் பொருட்டு
அப்போது எவனும் தூக்கிச் செல்ல இயலவில்லை. [2]


11 இறுதியில் மனமுடைந்தவனாய்த்
தனது இறுமாப்பைக் கைவிடத்தொடங்கினான்;
கடவுளால் தண்டிக்கப்பட்ட நிலையில் அறிவு தெளிந்தான்;
ஏனெனில் தொடர்ந்து பெருந்துன்பத்திற்கு உள்ளானான்.
12 தன் நாற்றத்தைத் தானே தாங்கமுடியாதபோது அவன்,
"கடவுளுக்கு அடங்கியிருப்பதே முறை;
அழிவுக்குரிய மனிதன் தன்னைக் கடவுளுக்கு இணையாக
எண்ணுவது தவறு" என்று கூறினான்.
13 அக்கயவன் ஆண்டவருக்கு ஒரு பொருத்தனை செய்தான்;
ஆனால் அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவதாக இல்லை.
14 அப்பொருத்தனைப்படி, திருநகரைத் தரை மட்டமாக்கி,
அதைக் கல்லறையாக்க விரைந்து வந்தவன்
இப்போது அதற்கு விடுதலை கொடுக்க முடிவுசெய்தான்;
15 யூதர்கள் அடக்கம் செய்யப்படுவதற்குக் கூடத்
தகுதியற்றவர்கள் என்று கருதி,
அவர்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும்
காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்
இரையாக எறிந்துவிடத் திட்டமிட்டிருந்தவன்,
அவர்கள் எல்லாரையும் ஏதன்சு நகரத்தாருக்கு
இணையாக நடத்தவும் எண்ணினான்.
16 தான் முன்பு கொள்ளையடித்திருந்த திருக்கோவிலை
அழகுமிக்க நேர்ச்சைப் படையல்களால் அணிசெய்வதாகவும்,
தூய கலன்கள் அனைத்தையும் பன்மடங்காகத் திருப்பிக் கொடுப்பதாகவும்,
பலிகளுக்கான செலவுகளைத் தன் சொந்த வருவாயிலிருந்து
கொடுப்பதாகவும் முடிவு செய்தான்;
17 எல்லாவற்றுக்கும் மேலாக,
தானே ஒரு யூதனாக மாறுவதாகவும்,
மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று
கடவுளுடைய ஆற்றலை அறிக்கையிடுவதாகவும் உறுதி கூறினான். [3]


18 ஆயினும், கடவுளின் முறையான தண்டனைத் தீர்ப்புக்கு அவன் உள்ளானதால்,
அவனுடைய துன்பங்கள் எவ்வகையிலும் குறையவில்லை.
நம்பிக்கை முழுவதும் இழந்தவனாய்,
கெஞ்சும் மொழியில் ஒரு மடலை யூதர்களுக்கு வரைந்தான்.
அது வருமாறு:
19 "மதிப்புக்குரிய யூத மக்களுக்கு,
அவர்களுடைய மன்னரும் படைத்தலைவருமாகிய அந்தியோக்கு,
எல்லா நலமும் பெற வாழ்த்தி எழுதுவது:
20 நீங்களும் உங்கள் மக்களும் நலமுடன் இருப்பின்,
உங்கள் விருப்படியே அனைத்தும் சிறப்பாக நடக்குமாயின், எனக்கு மகிழ்ச்சியே.
என் நம்பிக்கை விண்ணக இறைவனில் உள்ளதால்,
21 நீங்கள் என்மீது கொண்டுள்ள மதிப்பையும் நல்லெண்ணத்தையும்
அன்புடன் நினைவு கூர்கிறேன்;
பாரசீகத்திலிருந்து நான் திரும்புகையில்,
ஒரு கொடிய நோயால் பீடிக்கப்பட்டேன்;
அதனால் உங்கள் அனைவருடைய பொது நலனுக்கும்
ஆவன செய்வது இன்றியமையாதது என்று கண்டேன்.
22 என் நிலையைக் குறித்து நான் மனமுடையவில்லை;
ஏனெனில் நோயினின்று நலம் பெறுவேன்
என்னும் நம்பிக்கை எனக்குப் பெரிதும் உண்டு.
23 என் தந்தை மலை நாடுகளில் தம் படையை
நடத்திச் சென்ற வேளைகளில்
தமக்கு ஒரு பதிலாளை ஏற்படுத்தியதை நான் அறிவேன்.
24 இதனால் யாதேனும் எதிர்பாராதது நடப்பினும்
அல்லது விரும்பாத செய்திகள் வந்தாலும்,
அவருடைய ஆட்சிக்குட்பட்ட மக்களுக்குத் தொல்லைகள் நேரா;
ஏனெனில் ஆட்சி யாருக்கு உரியது என்பதை அவர்கள் அறிவார்கள்.
25 இதுதவிர, அண்டை நாட்டு மன்னர்கள்,
குறிப்பாக என் அரசின் எல்லை நாட்டு மன்னர்கள்
தக்கவாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும்
என்ன நடக்கப்போகிறது என கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும்
எனக்குத் தெரியும்.
ஆகவே நான் என் மகன் அந்தியோக்கை மன்னராக ஏற்படுத்தியிருக்கிறேன்.
நான் மலைநாடுகளுக்கு விரைந்தபோதெல்லாம்
அவரை உங்களுள் பலருடைய பொறுப்பில் ஒப்படைத்துப்
பரிந்துரைத்ததும் உண்டு.
இங்கு நான் எழுதியள்ளதை அவருக்கும் எழுதியுள்ளேன்.
26 ஆகவே பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும்
நான் உங்களுக்குச் செய்துள்ள நன்மைகளை நினைவுகூர்ந்து
என்மீதும் என் மகன்மீதும் இப்போது கொண்டுள்ள நல்லெண்ணத்தை
நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்
எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
27 அவர் என் கொள்கைகளைப் பின்பற்றி,
உங்களைப் பண்போடும் மனிதநேயத்தோடும் நடத்துவார்
என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு."


28 இவ்வாறு, கொலைகாரனும் இறைபழிப்போனுமான அந்தியோக்கு
மற்றவர்களுக்குக் கொடுத்திருந்தவற்றைப் போன்ற
கொடிய துன்பங்களைத் தானும் அனுபவித்தபின்
அயல்நாட்டின் மலைகளில் மிகவும் இரங்கத்தக்க நிலையில் சாவைச் சந்தித்தான்.
29 அந்தியோக்கின் நெருங்கிய நண்பனான பிலிப்பு
அவனது உடலை வீட்டுக்கு எடுத்துச்சென்றான்;
பின்பு அவனுடைய மகனுக்கு அஞ்சி,
எகிப்தில் இருந்த தாலமி பிலமேத்தோரிடம் அடைக்கலம் புகுந்தான்.


குறிப்புகள்

[1] 9:8 = 2 மக் 5:21.
[2] 9:1-10 = 1 மக் 6:1-7; 2 மக் 1:11-17.
[3] 9:11-17 = 1 மக் 6:8-17.


அதிகாரம் 10[தொகு]

மீண்டும் யூதர்களின் துன்பம்[தொகு]

கோவில் தூய்மைப்பாடு[தொகு]


1 மக்கபேயையும் அவருடைய ஆள்களையும் ஆண்டவர் வழி நடத்திச் செல்லவே
அவர்கள் எருசலேம் கோவிலையும் நகரையும் மீட்டுக் கொண்டார்கள்;
2 அயல்நாட்டார் பொது இடங்களில் அமைத்திருந்த
சிலைவழிபாட்டுக்குரிய பலிபீடங்களையும்
கோவில்களையும் இடித்துத் தள்ளினார்கள்;
3 எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தியபின்
புதியதொரு பலிபீடம் எழுப்பினார்கள்;
கற்களிலிருந்து நெருப்பு உண்டாக்கி,
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் பலிகள் ஒப்புக் கொடுத்தார்கள்;
நறுமணப்புகை எழுப்பி விளக்கு ஏற்றி
காணிக்கை அப்பங்களைப் படைத்தார்கள்.
4 இவை யாவும் செய்தபின் அவர்கள் குப்புற விழுந்து,
இனி ஒருபோதும் இத்தகைய கேடுகள் தங்களுக்கு நேராதவாறு
ஆண்டவரை வேண்டினார்கள்;
இனிமேல் எப்போதாவது அவர்கள் பாவம் செய்ய நேரிட்டால்,
அவரால் பரிவோடு தண்டிக்கப்படவும்,
கடவுளைப் பழிக்கின்ற, பண்பாடு குன்றிய பிற இனத்தாரிடம்
கையளிக்கப்படாதிருக்கவும் மன்றாடினார்கள்.
5 அயல்நாட்டார் கோவிலைத் தீட்டுப்படுத்தியதன் ஆண்டு நிறைவு நாளிலேயே,
அதாவது, கிஸ்லேவ் மாதம் இருபத்தைந்தாம் நாளிலேயே
கோவில் தூய்மைப்பாட்டு விழா நடைபெற்றது.
6 சில நாள்களுக்கு முன் அவர்கள் மலைகளிலும்
குகைகளிலும் காட்டு விலங்குகளைப்போல்
அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது கொண்டாடிய
கூடாரத் திருவிழாவை நினைவு கூர்ந்து,
இவ்விழாவையும் அதைப்போன்றே
எட்டு நாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்;
7 எனவே தழைகளால் அழகுசெய்யப்பட்ட கழிகளையும்
பசுங்கிளைகளையும் குருத்தோலைகளையும் ஏந்தியவர்களாய்,
தமது திருவிடத்தை வெற்றிகரமாகத் தூய்மைப்படுத்தும்படி செய்த
கடவுளுக்குப் புகழ்ப்பாக்கள்பாடி நன்றி செலுத்தினார்கள்;
8 யூத இனத்தார் அனைவரும்
ஆண்டுதோறும் இவ்விழாவைக் கொண்டாடவேண்டும் என்று
பொதுவில் சட்டம் இயற்றி முடிவு செய்தார்கள். [1]

ஐந்தாம் அந்தியோக்கின் ஆட்சித் தொடக்கம்[தொகு]


9 எப்பிபான் என்று பெயர்பெற்றிருந்த அந்தியோக்கின் முடிவு இவ்வாறு அமைந்தது.
10 அந்தக் கயவனுடைய மகன் அந்தியோக்கு
யூப்பாத்தோரின் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றையும்
போர்களின்போது ஏற்பட்ட பேரிடர்களையும் இப்போது சுருக்கமாகக் காண்போம்.
11 யூப்பாத்தோர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது
லீசியாவை ஆட்சியாளனாகவும்,
கூலேசீரியா, பெனிசியா ஆகிய நாடுகளின்
தலைமை ஆளுநராகவும், ஏற்படுத்தினான்.
12 முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதியை முன்னிட்டு
அவர்களுக்கு நீதி வழங்குவதில் மக்ரோன் என்று அழைக்கப்பெற்ற தாலமி
முன்னோடியாகத் திகழ்ந்தான்;
அவர்களோடு நல்லுறவை ஏற்படுத்த முயன்றான்;
13 இதன் விளைவாக, மன்னனின் நண்பர்களால்
யூப்பாத்தோர்முன் அவன் குற்றம்சாட்டப்பட்டான்;
பிலமேத்தோர் தன்னிடம் ஒப்படைத்திருந்த
சைப்பிரசு நாட்டைக் கைவிட்டதாலும்
அந்தியோக்கு எப்பிபானோடு சேர்ந்துகொண்டதாலும்
'துரோகி' என்று எல்லாரும் தன்னை அழைப்பதைத்
தன் காதால் கேட்டான்;
தன் பதவிக்கு ஏற்ற மரியாதையைப் பெற முடியாததால்
நஞ்சு உண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.

இதுமேயரின் வீழ்ச்சி[தொகு]


14 கோர்கியா அப்பகுதிக்கு ஆளுநனானபோது,
கூலிப்படையை அமர்த்தி,
வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் யூதர்களைத் தாக்கி வந்தான்.
15 மேலும் முக்கிய கோட்டைகளைத்
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இதுமேயரும்
யூதர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்தனர்;
எருசலேமிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்களையும் ஏற்றுக்கொண்டு
போரைத் தொடர்ந்து நடத்த முயன்றனர்.
16 ஆனால் மக்கபேயும் அவருடைய ஆள்களும்
பொதுவில் வேண்டுதல் செய்து,
கடவுள் தங்கள் சார்பாகப் போரிடுமாறு மன்றாடியபின்
இதுமேயருடைய கோட்டைகளை நோக்கி விரைந்தார்கள்;
17 விறுவிறுப்போடு அந்த இடங்களைத் தாக்கிக் கைப்பற்றினார்கள்;
மதில்மேல் நின்று போராடிய அனைவரையும் துரத்தியடித்தார்கள்;
தங்களை எதிர்த்து வந்தவர்களுள்
இருபதாயிரம் பேரையாவது வெட்டிக் கொன்றார்கள்.
18 முற்றுகையைச் சமாளிப்பதற்குத் தேவையானவையெல்லாம் கொண்ட
வலிமைவாய்ந்த இரு கோட்டைகளில்
குறைந்தது ஒன்பதாயிரம்பேர் அடைக்கலம் புகுந்தார்கள்.
19 அப்போது மக்கபே, அவற்றை முற்றகையிடப் போதுமான ஒருபடையை,
அதாவது சீமோன், யோசேப்பு ஆகியோருடன்
சக்கேயுவையும் அவருடைய ஆள்களையும் விட்டுவிட்டு,
தமது உதவி மிகவும் தேவைப்பட்ட இடங்களுக்குச் சென்றார்.
20 ஆனால் சீமோனுடைய ஆள்களுள் பணத்தாசை கொண்டவர்கள்
கோட்டைகளில் இருந்த சிலரிடமிருந்து
இருநூற்றுப் பத்து கிலோ [2] வெள்ளியைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு
அவர்களுள் சிலரைத் தப்பியோட விட்டுவிட்டார்கள்.
21 நடந்தது பற்றி மக்கபேயுக்குத் தெரிவிக்கப்பட்டபோது,
அவர் மக்களின் தலைவர்களைக் கூட்டினார்;
தங்களுக்கு எதிராக மீண்டும் போரிடும்பொருட்டுப்
பகைவர்களை விட்டுவிட்டதன் மூலம்
பணத்திற்காகத் தங்கள் உறவின்முறையினையே விற்றுவிட்டார்கள் என்று
அவர்கள்மேல் குற்றம் சாட்டினார்;
22 இவ்வாறு காட்டிக்கொடுத்த அந்த ஆள்களைக் கொன்றார்;
இரு கோட்டைகளையும் உடனடியாகக் கைப்பற்றினார்.
23 தம் படைவலியால் தம் முயற்சிகளிலெல்லம் வெற்றி கண்ட அவர்
அந்த இரண்டு கோட்டைகளிலும் இருந்தவர்களுள்
இருபதாயிரத்திற்கும் மிகுதியானவர்களைக் கொன்றார். [3]

திமொத்தேயுவின் வீழ்ச்சி[தொகு]


24 முன்பு யூதர்களால் தோற்கடிக்கப்பட்ட திமொத்தேயு
எண்ணற்ற அயல் நாட்டவரைக் கொண்ட கூலிப்படையைத் திரட்டினான்;
ஆசியாவிலிருந்து மாபெரும் குதிரைப்படையையும் சேர்த்துக்கொண்டு
யூதேயா நாட்டைப் படைவலியால் கைப்பற்றும் எண்ணத்தோடு வந்தான்.
25 அவன் நெருங்கி வந்தபோது மக்கபேயும்
அவருடைய ஆள்களும் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக்கொண்டும்
தங்கள் இடையில் சாக்கு உடை உடுத்திக் கொண்டும்
கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்;
26 பலிப்பீடத்தின்முன் இருந்த படி மீது குப்புற விழுந்து
தங்கள் மீது இரக்கம் காட்டவும்
திருச்சட்டம் கூறுவது போலத்
தங்கள் எதிரிகளுக்கு எதிரிகளாகவும் பகைவர்களாகவும் இருக்கவும்
அவரை வேண்டினார்கள். [4]


27 வேண்டலுக்குப்பின் தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு
அவர்கள் நகரிலிருந்து நெடுந்தொலை சென்றார்கள்;
எதிரிகள் இருந்த இடத்திற்கு அருகில் வந்ததும் அங்குத் தங்கினார்கள்.
28 பொழுது புலர்ந்ததும் இரு படையினரும் போர்தொடுத்தனர்.
யூதர்கள் தங்கள் வெற்றிக்கும் புகழுக்கும் தங்கள் வலிமையை மட்டும் நம்பவில்லை;
ஆண்டவர்மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
மற்றவர்களுக்கு அவர்களது சீற்றமே படைத்தலைவனாய் அமைந்தது.
29 போர் கடுமையானபோது ஒளி பொருந்திய ஐந்து மனிதர்கள்
பொற் கடிவாளம் பூட்டிய குதிரைகள் மேல் அமர்ந்து
யூதர்களை நடத்துவது போன்று
பகைவர்களுக்கு விண்ணிலிருந்து தோன்றினார்கள்.
30 அந்த ஐவரும் மக்கபேயைச் சூழந்துகொண்டு
தங்கள் படைக்கலங்களால் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்து,
காயப்படாதவாறு அவரைக் காப்பாற்றினார்;
பகைவர்கள்மீது அம்புகளையும் தீக்கணைகளையும் வீசினர்.
அதனால் பகைவர்கள் பார்வை இழந்து குழப்பம் அடைந்து சிதறண்டு ஓட,
யூதர்கள் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
31 இருபதாயிரத்து ஐந்நூறு காலாட்படை வீரர்களும்
அறுநூறு குதிரை வீரர்களும் கொல்லப்பட்டார்கள்.


32 கைரயா என்ற படைத்தலைவனுடைய
நன்கு அரண் செய்யப்பட்ட கசாரா என்ற கோட்டைக்குத்
திமொத்தேயு தப்பியோடினான்.
33 அப்போது மக்கபேயும் அவருடைய ஆள்களும் எழுச்சியுற்றுக்
கோட்டையை நான்கு நாளாய் முற்றுகையிட்டார்கள்.
34 கோட்டைக்கு உள்ளே இருந்தவர்கள்
அதன் வலிமையில் நம்பிக்கை கொண்டு,
இழி சொற்களால் இறைவனைப் பழித்துக்கொண்டிருந்தார்கள்.
35 ஐந்தாம் நாள் விடிந்தபோது
மக்கபேயின் படையைச் சேர்ந்த இருபது இளைஞர்கள்
இத்தகைய இறைப்பழிப்பைக் கேட்டுச் சீற்றங்கொண்டு,
துணிவுடன் மதிலைத் தாக்கிக்
காட்டு விலங்கு போலச் சீறிப் பாய்ந்து
தாங்கள் எதிர்கொண்டவர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினார்கள்.
36 மற்றவர்கள் மேலே ஏறிச்சென்று
எதிரிகளைச் சுற்றி வளைத்துக்கொண்டு,
கோட்டைகளுக்குத் தீ வைத்தார்கள்;
அத்தீயைக் கிளறி விட்டு இறைவனைப் பழித்தவர்களை உயிருடன் எரித்தார்கள்.
மற்றும் சிலர் கதவுகளை உடைத்து
எஞ்சியிருந்த படைவீரர்களை உள்ளே நுழையவிட,
அவர்கள் நகரைக் கைப்பற்றினார்கள்.
37 ஒரு கிணற்றில் ஒளிந்துகொண்டிருந்த திமொத்தேயுவையும்
அவனுடைய சகோதரனான கைரயாவையும்
அப்பொல்லோபானையும் அவர்கள் கொன்றார்கள்.
38 இவற்றையெல்லாம் அவர்கள் செய்து முடித்தபின்,
இஸ்ரயேல் மீது பேரிரக்கம் காட்டுபவரும்
அதற்கு வெற்றியை வழங்குபவருமாகிய ஆண்டவரைப்
புகழ்ப்பாக்களாலும் நன்றிப் பாடல்களாலும் போற்றினார்கள்.


குறிப்புகள்

[1] 10:1-8 = 1 மக் 4:36-61.
[2] 10:20 - "எழுபதாயிரம் திராக்மா" என்பது கிரேக்க பாடம்.
[3] 10:14-23 = 1 மக் 5:1-8.
[4] 10:26 = விப 23:22.


(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை