உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து


"மத்தத்தியாவுக்குப்பின் அவருடைய மகன் மக்கபே என்று அழைக்கப்பெற்ற யூதா தலைமை ஏற்றார். அவருடைய சகோதரர்களும் அவருடைய தந்தையோடு சேர்ந்திருந்த எல்லாரும் அவருக்குத் துணை நின்று இஸ்ரயேலுக்காக மகிழ்ச்சியோடு போர் புரிந்தார்கள்." - 1 மக்கபேயர் 3:1-2

1 மக்கபேயர் (The First Book of Maccabees)

[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3

[தொகு]

யூதா மக்கபேயின் தலைமை

[தொகு]

யூதாவின் புகழ்ச்சி

[தொகு]


1 மத்தத்தியாவுக்குப்பின்
அவருடைய மகன் மக்கபே என்று அழைக்கப்பெற்ற யூதா
தலைமை ஏற்றார்.
2 அவருடைய சகோதரர்களும்
அவருடைய தந்தையோடு சேர்ந்திருந்த எல்லாரும்
அவருக்குத் துணை நின்று
இஸ்ரயேலுக்காக மகிழ்ச்சியோடு போர் புரிந்தார்கள்.


3 அவர் தம் மக்களின் பெருமையைப் பரவச் செய்தார்;
அரக்கனைப்போல மார்புக்கவசம் அணிந்தார்;
படைக்கலங்கள் தாங்கிப் போர்கள் புரிந்தார்;
தம் வாளால் பாசறையைப் பாதுகாத்தார்.


4 அவர் தம் செயல்களில் சிங்கத்திற்கு ஒப்பானார்;
இரைக்காக முழங்கும் சிங்கக்குட்டி போலானார்;


5 அவர் நெறிகெட்டவர்களைத் தேடித் துரத்தினார்;
தம் மக்களை வதைத்தவர்களைத் தீக்கிரையாக்கினார்.


6 நெறிகெட்டோர் அவருக்கு அஞ்சிப் பின்வாங்கினர்;
தீவினை புரிவோர் அனைவரும் குழப்பம் அடைந்தனர்;
அவரது கைவன்மையால் மக்களுக்கு விடுதலை கிட்டியது.


7 அவர் பல மன்னர்களுக்கு இன்னல் வருவித்தார்;
யாக்கோபுக்கு இன்பம் அளித்தார்;
அவரது நினைவு என்றும் வாழ்த்தப்பெறும்.


8 யூதேயாவின் நகரங்களுக்குச் சென்று
இறைப்பற்றில்லாதோரை அழித்தொழித்தார்;
இஸ்ரயேல்மீது வந்துற்ற பேரிடரை அகற்றினார்.


9 நிலத்தின் கடையெல்லைவரை அவருடைய பெயர் விளங்கிற்று;
அழிந்துகொண்டிருந்தவர்களை ஒன்றுசேர்த்தார்.

யூதாவின் தொடக்க வெற்றிகள்

[தொகு]


10 அப்போது அப்பொல்லோன் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிடுவதற்காக
வேற்றினத்தாரையும் சமாரியாவிலிருந்து பெரும் படையையும் ஒன்று திரட்டினான்.


11 அதை அறிந்த யூதா போர்முனையில் அவனைச் சந்திக்கச் சென்றார்;
அவனை முறியடித்துக் கொன்றார்;
பலர் வெட்டுண்டு வீழ்ந்தனர்; எஞ்சியோர் தப்பியோடினர்.
12 யூதாவும் அவருடைய ஆள்களும்
கொள்ளைப்பொருள்களைக் கைப்பற்றினார்கள்.
அப்பொல்லோனின் வாளை யூதா எடுத்துக்கொண்டார்;
அதைக்கொண்டே தம் வாழ் நாளெல்லாம் போர் புரிந்தார்.


13 யூதா தம்மோடு ஒரு பெரும் கூட்டத்தைத் திரட்டியிருந்தார் என்றும்,
அவரோடு சேர்ந்து போர்புரிந்து வந்த பற்றுறுதியாளர் கூட்டம் ஒன்று
அவரோடு இருந்தது என்றும்
சிரியாவின் படைத்தலைவனான சேரோன் கேள்வியுற்றான்.
14 அவன், "மன்னரின் கட்டளையை இகழ்ந்த யூதாவையும்
அவனுடைய ஆள்களையும் எதிர்த்துப் போரிடுவதன்மூலம்
எனக்கென்று பெயர் தேடிக்கொள்வேன்;
பேரரசில் பெருமை பெறுவேன்" என்று சொல்லிக் கொண்டான்;
15 இஸ்ரயேல் மக்களைப் பழிவாங்குவதற்குத்
தனக்குத் துணை செய்யும்பொருட்டு
வலிமையுள்ள இறைப்பற்றில்லாதோர் படையைத் திரட்டிச்சென்றான்.
16 அவன் பெத்கோரோனுக்கு ஏறிச்செல்லும் வழியை நெருங்கியபொழுது
யூதா சிறு கூட்டத்தோடு அவனைப் போர்முனையில் சந்திக்கச் சென்றார்.
17 படை ஒன்று தங்களை எதிர்த்து வருவதைக் கண்டபோது யூதாவின் ஆள்கள்,
"சிலராய் இருக்கும் நாம் இவ்வளவு வலிமைமிக்க,
திரளான கூட்டத்தை எவ்வாறு எதிர்த்துப் போரிடக்கூடும்?
மேலும், இன்று நாம் ஒன்றும் உண்ணாததால் சோர்ந்திருக்கிறோமே!"
என்று அவரிடம் கூறினர்.


18 அதற்கு யூதா, "சிலர் கையில் பலர் அகப்பட்டுக்கொள்வது எளிது.
பலரால் காப்பாற்றப்படுவதற்கும் சிலரால் காப்பாற்றப்படுவதற்கும்
விண்ணக இறைவன் முன்னிலையில் எத்தகைய வேறுபாடும் இல்லை;
19 ஏனெனில் போரில் வெற்றி என்பது படையின் எண்ணிக்கையைச் சார்ந்தது அல்ல;
விண்ணக இறைவனிடமிருந்து வரும் வலிமையைச் சார்ந்ததே. [1]
20 இறுமாப்பையும் நெறிகேட்டையும் கொண்டே
நம் எதிரிகள் நம்மையும் நம் மனைவி மக்களையும் அழிக்கவும்
நம்மைக் கொள்ளையடிக்கவும் வருகிறார்கள்.
21 நாமோ நம் உயிருக்காகவும் சட்டங்களுக்காகவும் போராடுகிறோம்.
22 நம் கண்முன்னால் கடவுளே அவர்களை நசுக்குவார்.
எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்" என்று சொல்லி ஊக்கமளித்தார்.


23 யூதா பேசி முடித்ததும் சேரோன் மீதும் அவனுடைய படைகள்மீதும்
திடீரெனப் பாய்ந்து தாக்கி அவர்களை அழித்தார்.
24 பெத்கோரோனிலிருந்து இறங்கிச் செல்லும் வழியில்
சமவெளி வரை யூதா அவர்களைத் துரத்திச் செல்ல,
அவர்களுள் எண்ணூறு பேர் மடிந்தனர்;
எஞ்சியோர் பெலிஸ்தியரின் நாட்டுக்குத் தப்பியோடினர்.
25 யூதாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் பகைவர் அஞ்சினர்;
சுற்றிலும் இருந்த பிற இனத்தார் நடுநடுங்கினர்.
26 யூதாவின் புகழ் மன்னனுக்கு எட்டியது.
பிற இனத்தார் அனைவரும் அவருடைய போர்களைப்பற்றிப் பேசிவந்தனர். [2]

லீசியா ஆளுநனாதல்

[தொகு]


27 அந்தியோக்கு மன்னன் இவற்றைக் கேள்வியுற்றபோது
கடுஞ் சீற்றமுற்றான்;
ஆளனுப்பித் தன் பேரரசில் இருந்த வீரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து
வலிமைமிக்க படை ஒன்றைத் திரட்டினான்;
28 தன் கருவூலத்தைத் திறந்து
தன் படைவீரர்களுக்கு ஓராண்டு ஊதியத்தை அளித்து,
எதற்கும் ஆயத்தமாக இருக்கும்படி கட்டளையிட்டான்.
29 இதனால் தன் கருவூலத்தில் இருந்த நிதியெல்லாம் செலவழிந்துவிடக் கண்டான்.
மேலும் நாட்டிலிருந்து வரவேண்டிய வருமானம் குறைந்து போயிற்று;
ஏனெனில் பண்டு தொட்டு நிலவிவந்த பழக்கவழக்கங்களை மாற்றியிருந்ததால்,
நாட்டில் பிளவும் பெருந்துயரமும் நிலவின.
30 முன்பு சிலவேளைகளில் நடந்ததுபோலத்
தன் சொந்தச் செலவுகளுக்கும்,
தனக்கு முன்பு இருந்த மன்னர்களைவிடத்
தாராளமாகத் தான் கொடுத்துவந்த நன்கொடைகளுக்கும்
போதுமான நிதி இல்லாமல் போகலாம் என்று அவன் அஞ்சினான்.
31 அவன் பெரிதும் கலக்கமுற்றான்;
ஆகவே பாரசீக நாட்டிற்குச் சென்று
மாநிலங்கள் செலுத்த வேண்டிய வரியைத் தண்டவும்
திரளான பணம் திரட்டவும் திட்டமிட்டான்;


32 யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி எகிப்து எல்லைவரையுள்ள பகுதியில்
அரச அலுவல்களை மேற்பார்வையிடும் பொறுப்பினை
உயர்குடி மகனும் அரச குலத்தோன்றலுமான லீசியாவுக்கு வழங்கினான்;
33 தான் திரும்பும் வரை தன் மகன் அந்தியோக்கைப் பேணி வளர்க்க
அவனுக்குக் கட்டளையிட்டான்;
34 தன் படைகளுள் பாதியையும் யானைகளையும் அவனிடம் ஒப்படைத்தான்;
தான் திட்டமிட்டிருந்த அனைத்தையும்,
குறிப்பாக யூதேயா, எருசலேம் குடிகள்பற்றிய
தனது திட்டத்தையும் செயல்படுத்த அவனுக்கு ஆணையிட்டான்.
35 இஸ்ரயேலின் வலிமையையும்
எருசலேமில் எஞ்சியிருந்தவர்களையும் அழித்தொழிக்கவும்,
அவர்களது நினைவை அவ்விடத்திலிருந்து துடைத்துவிடவும்,
படைகளை அவர்களுக்கு எதிராய் அனுப்புமாறு அவனைப் பணித்தான்;
36 அவர்களுடைய நாடெங்கும் அயல்நாட்டாரைக் குடியேற்றி,
அவர்களுக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவும்
அவனுக்கு ஆணை பிறப்பித்தான்.
37 எஞ்சியிருந்த பாதிப் படையை மன்னன் நடத்திக் கொண்டு
தன் தலைநகரான அந்தியோக்கியைவிட்டு
நூற்று நாற்பத்தேழாம் ஆண்டு [3] புறப்பட்டான்;
யூப்பிரத்தீசு பேராற்றைக் கடந்து மலைப்பகுதிகள் வழியாகச் சென்றான்.

யூதாவின் வெற்றிகள்

[தொகு]


38 மன்னனுடைய நண்பர்களுள் வலிமை வாய்ந்தவர்களான
தொரிமேனின் மகன் தாலமியையும்
நிக்கானோரையும் கோர்கியாவையும் லீசியா தேர்ந்துகொண்டான்.
39 நாற்பதாயிரம் காலாட்படையினரையும்
ஏழாயிரம் குதிரைப்படையினரையும்
அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தான்.
யூதேயா நாட்டிற்குள் சென்று,
மன்னனின் கட்டளைப்படி அதை அழித்தொழிக்குமாறு
அவர்களை அனுப்பி வைத்தான்.
40 அவ்வாறே அவர்களும் தங்கள் முழுப் படையோடும் புறப்பட்டுச் சென்று
எம்மாவுக்கு அருகே இருந்த சமவெளியை அடைந்து
அங்குப் பாசறை அமைத்தார்கள்.
41 சிரியா, பெலிஸ்தியா நாட்டுப் படைகளும் அவர்களோடு சேர்ந்துகொண்டனர்.
அப்பகுதி வியாபாரிகள் அவர்களது புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு,
இஸ்ரயேல் மக்களை அடிமைகளாய் வாங்குவதற்குத்
திரளான வெள்ளியையும் பொன்னையும்
சங்கிலிகளையும் எடுத்துக் கொண்டு
பாசறைக்கு வந்தார்கள்.


42 இடர்ப்பாடுகள் பெருகுவதையும்
எதிரிப் படைகள் தங்கள் நாட்டின் எல்லையில் பாசறை அமைத்திருப்பதையும்
யூதாவும் அவருடைய சகோதரர்களும் கண்டார்கள்.
மக்களை அடியோடு அழித்தொழிக்க
மன்னன் கொடுத்திருந்த கட்டளையை அறிய வந்தார்கள்.
43 அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி,
"நம் மக்களின் அழிவு நிலையை நீக்கி
முன்னைய நிலைக்கு அவர்களை உயர்த்துவோம்;
நம் மக்களுக்காகவும் திருஉறைவிடத்துக்காகவும் போர்புரிவோம்"
என்று சொல்லிக் கொண்டார்கள்.


44 அப்போது போருக்கான ஏற்பாடுகளைச் செய்யவும்
கடவுளை வேண்டவும்
அவருடைய இரக்கத்தையும் பரிவையும் காட்டுமாறு மன்றாடவும்
அவர்கள் கூட்டமாய் ஒன்றுசேர்ந்தார்கள்.


45 எருசலேம் குடியிருப்பாரற்றுப் பாலைநிலம்போல மாறினது;
அதன் பிள்ளைகளுள் ஒருவரும் உள்ளே போகவோ,
வெளியே வரவோ இல்லை;
திருஉறைவிடம் காலால் மிதிக்கப்பட்டது.
அயல்நாட்டார் கோட்டையைக் கைப்பற்றியிருந்தனர்.
அது வேற்றினத்தாரின் உறைவிடமானது;
யாக்கோபின் மகிழ்ச்சி பறிக்கப்பட்டது;
அங்குக் குழலும் யாழும் ஒலிக்கவில்லை.


46 இஸ்ரயேலர் எல்லாரும் சேர்ந்து
எருசலேமுக்கு எதிரில் இருந்த மிஸ்பாவுக்குச் சென்றார்கள்;
ஏனெனில், அவர்களுக்கு முற்காலத்தில்
வேண்டுதல் செய்யும் இடம் ஒன்று அங்கு இருந்தது.
47 அன்று அவர்கள் நோன்பிலிருந்து சாக்கு உடை உடுத்தித்
தலைமீது சாம்பலைத் தூவி,
தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்கள்.
48 வேற்றினத்தார் தங்கள் தெய்வச் சிலைகளிடமிருந்து
இறைத் திட்டத்தை அறிந்து கொள்ள முயல்வர்;
ஆனால் இஸ்ரயேலர் திருச்சட்ட நூலிலிருந்து அதை அறிந்து கொள்வர்.
49 குருக்களின் உடைகள், முதற் பலன்கள்,
பத்திலொரு பங்கு ஆகியவற்றை இஸ்ரயேலர் கொண்டுவந்தனர்;
தங்கள் நேர்ச்சைக் காலத்தை முடித்து விட்ட நாசீர்களை அழைத்து வந்தனர். [4]


50 விண்ணக இறைவனை நோக்கி உரத்த குரல் எழுப்பி,
"இவர்களை வைத்து என்ன செய்வோம்?
இவர்களை எவ்விடம் கூட்டிச் செல்வோம்?


51 உமது திருஉறைவிடம் மிதிக்கப்பட்டுத் தீட்டுப்பட்டது.
உம் குருக்கள் துயரத்தில் மூழ்கிச் சிறுமை அடைந்துள்ளார்கள்.


52 பிற இனத்தார் எங்களை அழித்தொழிக்க
எங்களுக்கு எதிராக இப்போது கூடிவந்துள்ளனர்.
அவர்கள் எங்களுக்கு எதிராகச் செய்துள்ள சூழ்ச்சிகளை நீர் அறிவீர்.


53 நீர் எங்களுக்கு உதவிபுரியாவிடில்
நாங்கள் அவர்களை எவ்வாறு எதிர்த்து நிற்கமுடியும்?"
என்று மன்றாடினர்;
54 பின்னர் எக்காளம் முழங்கி உரத்த குரல் எழுப்பினர்.


55 அதன்பின் மக்களை வழிநடத்த தலைவர்கள்,
நூற்றுவர் தலைவர்கள், ஐம்பதின்மர் தலைவர்கள்,
பதின்மர் தலைவர்கள் ஆகியோரை யூதா ஏற்படுத்தினார்;
56 வீடு கட்டுவோர், மணம்புரிவோர்,
திராட்சை பயிரிடுவோர், கோழைகள் ஆகியோர்
திருச்சட்டத்தின்படி அவரவர்தம் வீடுகளுக்குத் திரும்பவேண்டும்
என்று கட்டளையிட்டார். [5]


57 பிறகு அவர்கள் இடம் பெயர்ந்து
எம்மாவுக்குத் தென்புறத்தில் பாசறை அமைத்தார்கள்.
58 அப்போது யூதா,
"படைக்கலம் ஏந்துங்கள்;
துணிவு கொள்ளுங்கள்;
நம்மையும் நமது திருஉறைவிடத்தையும் அழிப்பதற்காக
நம்மை எதிர்க்கத் திரண்டுவந்துள்ள
இந்தப் பிற இனத்தாரோடு போர்புரிய
நாளை காலையில் ஆயத்தமாய் இருங்கள்.
59 ஏனெனில் நம் மக்களுக்கும்
நமது திரு உறைவிடத்துக்கும் நேர்ந்துள்ள
கேடுகளைக் காண்பதைவிட நாம் போரில் மடிவதே நலம்.
60 ஆனால் விண்ணக இறைவனின் திருவுளம் எதுவோ
அதுவே நிறைவேறட்டும்" என்றார். [6]


குறிப்புகள்

[1] 3:19 = 1 சாமு 14:6.
[2] 3:1-26 = 2 மக் 8:1-7.
[3] 3:37 - கி.மு. 165.
[4] 3:49 = எண் 6:2-5.
[5] 3:56 = இச 20:5-8; நீத 7:3; லூக் 14:18-20.
[6] 3:38-60 = 2 மக் 8:8-29,34-36.

அதிகாரம் 4

[தொகு]

கோர்கியாவின் தோல்வி

[தொகு]


1 கோர்கியா ஐயாயிரம் காலாட்படையினரையும்
தேர்ந்தெடுத்த ஆயிரம் குதிரைப்படையினரையும் கூட்டிச்சேர்த்தான்.
அப்படை இரவில் புறப்பட்டு,
2 யூதர்களுடைய பாசறை மீது பாய்ந்து
திடீரென்று அதைத் தாக்கச் சென்றது.
கோட்டையில் இருந்தவர்கள் கோர்கியாவுக்கு வழிகாட்டினார்கள்.
3 இதைக் கேள்வியுற்ற யூதா, தம் படைவீரர்களோடு
எம்மாவுவில் இருந்த மன்னனின் படையைத் தாக்கச் சென்றார்.
4 அப்போது அப்படை பாசறைக்கு வெளியே சிதறியிருந்தது.
5 கோர்கியா இரவில் யூதாவின் பாசறைக்கு
வந்து ஒருவரையும் காணாமல் அவர்களை மலையில் தேடினான்;
"இவர்கள் நம்மைக் கண்டு ஓடிவிட்டார்கள்" என்று சொன்னான்.


6 பொழுது விடிந்தபோது மூவாயிரம் ஆள்களோடு
யூதா சமவெளியில் காணப்பட்டார்.
அவர்கள் விரும்பிய போர்க்கவசமும் இல்லை, வாளும் இல்லை.
7 பிற இனத்தார் தங்களது பாசறையை அரண்செய்து
வலிமைப்படுத்தியிருந்தனர் என்றும்,
போருக்குப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள்
அதைச் சுற்றிக் காவல் புரிந்தார்கள் என்றும் யூதா கண்டார்.
8 யூதா தம்மோடு இருந்தவர்களை நோக்கி,
"அவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அஞ்சாதீர்கள்;
அவர்கள் தாக்குவதைக் கண்டு கலங்காதீர்கள். [1]
9 பார்வோன் தன் படையோடு நம் மூதாதையரைத் துரத்திவந்த போது,
அவர்கள் எவ்வாறு செங்கடலில் காப்பாற்றப்பட்டார்கள்
என்பதை எண்ணிப் பாருங்கள். [2]
10 இப்போது விண்ணக இறைவனைத் துணைக்கு அழைப்போம்;
ஆண்டவர் நம்மீது அன்பு செலுத்தி,
நம் மூதாதையரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து,
இந்தப் படையை நம் கண்முன் இன்று முறியடிப்பாரா எனப் பார்ப்போம்.
11 இஸ்ரயேலை மீட்டுக் காப்பாற்றுகிறவர் ஒருவர் இருக்கிறார் எனப்
பிற இனத்தார் அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்" என்றார்.


12 அயல்நாட்டார் தலை நிமிர்ந்து பார்த்தபோது
யூதர்கள் தங்களை எதிர்த்துவரக் கண்டனர்.
13 உடனே போர்தொடுக்கத் தங்கள் பாசறையினின்று புறப்பட்டனர்.
யூதாவோடு இருந்தவர்களும் எக்காளம் முழக்கி,
14 போர் தொடுத்தார்கள்.
பிற இனத்தார் முறியடிக்கப்பட்டுச் சமவெளிக்குத் தப்பியோடினர்.
15 பின்னணிப் படையினர் எல்லாரும் வாளுக்கு இரையாயினர்.
மற்றவர்களைக் கசாரோ வரையிலும்,
இதுமேயாவின் சமவெளிகள் வரையிலும்
ஆசோத்து யாம்னியா வரையிலும் துரத்திச் சென்றார்கள்.
அவர்களுள் மூவாயிரம் பேர் மடிந்தனர்.


16 அவர்களைத் துரத்துவதை நிறுத்திவிட்டு
யூதாவும் அவருடைய படைவீரர்களும் திரும்பிவந்தார்கள்.
17 அவர் மக்களைநோக்கி,
"கொள்ளைப் பொருள்கள்மீது பேராவல் கொள்ள வேண்டாம்.
போர் இன்னும் முடியவில்லை.
18 கோர்கியாவும் அவனுடைய படைகளும்
நமக்கு அருகிலேயே மலையில் இருக்கிறார்கள்.
இப்போது நம் பகைவர்களை எதிர்த்து நின்று போர்செய்யுங்கள்;
பிறகு துணிவோடு கொள்ளைப் பொருள்களை எடுத்துச் செல்லலாம்" என்றார்.


19 யூதா பேசிக்கொண்டிருந்தபோதே
பிற இனத்தாரின் படையில் ஒரு பகுதியினர்
கீழ் நோக்கிப் பார்த்த வண்ணம் மலைமீது காணப்பட்டனர்.
20 அவர்கள் தங்களின் படைகள் துரத்தியடிக்கப்பட்டதையும்
தங்களின் பாசறை தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதையும் கண்டார்கள்;
அங்குக் காணப்பட்ட புகையால் நடந்ததை உணர்ந்து கொண்டார்கள்.
21 அவர்கள் இதைப் பார்த்தபொழுது பெரிதும் அஞ்சினார்கள்;
சமவெளியில் யூதாவின் படை போருக்கு அணிவகுத்து நின்றதையும் கண்டபோது,
22 அவர்கள் எல்லாரும் பெலிஸ்தியரின் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.


23 யூதா அவர்களின் பாசறையைக் கொள்ளையிடுவதற்குத் திரும்பி வந்தார்.
அவருடைய வீரர்கள் மிகுதியான பொன், வெள்ளி,
நீல, கருஞ் சிவப்பு நிறமுடைய ஆடைகள்,
பெரும் செல்வம் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள்;
24 "ஆண்டவர் நல்லவர்; அவரது இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது" என்று பாடி
விண்ணக இறைவனைப் போற்றிய வண்ணம்
தங்களது பாசறைக்குத் திரும்பினார்கள். [3]
25 இவ்வாறு அன்று இஸ்ரயேலுக்குப் பெரும் மீட்புக் கிடைத்தது.

லீசியாவின் தோல்வி

[தொகு]


26 அயல்நாட்டவருள் தப்பியவர்கள் வந்து,
நடந்த யாவற்றையும் லீசியாவிடம் அறிவித்தார்கள்.
27 அவன் அவற்றைக் கேள்வியுற்று மனம் குழம்பி ஊக்கம் இழந்தான்;
ஏனெனில் தான் எண்ணியவாறு இஸ்ரயேலுக்கு நடவாமலும்,
மன்னன் தனக்குக் கட்டளையிட்டவாறு நிறைவேறாமலும் போயிற்று.


28 அடுத்த ஆண்டு லீசியா அவர்களை முறியடிக்க
அறுபதாயிரம் தேர்ந்தெடுத்த காலாட்படையினரையும்
ஐயாயிரம் குதிரைப்படையினரையும் திரட்டினான்.
29 அவர்கள் இதுமெயா நாட்டுக்கு வந்து
பெத்சூரில் பாசறை அமைக்கவே,
யூதாவும் பத்தாயிரம் வீரர்களோடு அவர்களை எதிர்த்துவந்தார்.
30 பகைவருடைய படை வலிமைமிக்கதாய் இருக்கக் கண்ட யூதா
கடவுளை நோக்கி, "இஸ்ரயேலின் மீட்பரே, போற்றி!
உம் அடியாராகிய தாவீதின் கைவன்மையால்
வலியோனுடைய தாக்குதலை நீர் அடக்கினீர்;
சவுலின் மகன் யோனத்தானும்
அவருடைய படைக்கலம் சுமப்போரும்
பெலிஸ்தியருடைய படைகளை முறியடிக்கச் செய்தீர். [4]
31 அதேபோல் இந்தப் பகைவரின் படையை
உம் மக்களாகிய இஸ்ரயேலின் கையில் சிக்கவைத்திடும்;
தங்கள் படை, குதிரைவீரர்கள் பொருட்டு
அவர்கள் நாணம் அடையச்செய்திடும்.
32 அவர்களிடத்தில் கோழைத்தனத்தை ஊட்டி,
அவர்களின் வலிமைத் திமிரை அடக்கிடும்;
தங்களது அழிவு கண்டு அவர்களை அஞ்சி நடுங்கச் செய்திடும்.
33 உம்மீது அன்பு செலுத்துகிறவர்களுடைய வாளால் அவர்களை அழித்திடும்;
உமது பெயரை அறியும் யாவரும் புகழ்ப்பாக்களால்
உம்மைப் போற்றச் செய்திடும்" என்று மன்றாடினார்.


34 இரு படைகளும் போரிட்டுக் கொண்டன.
நேருக்கு நேர் போரிட்டதில் லீசியாவின் படையில்
ஐயாயிரம் பேர் மடிந்தனர்.
35 தன் படையினர் நிலைகுலைந்து ஓடினதையும்,
யூதாவோடு இருந்தவர்கள் துணிவு கொண்டிருந்ததையும்,
அவர்கள் வாழவோ புகழோடு மாளவோ
ஆயத்தமாய் இருந்ததையும் கண்ட லீசியா,
அந்தியோக்கி நகரக்குச் சென்று,
முன்னிலும் திரளான படையோடு யூதேயாவை மீண்டும் தாக்கக்
கூலிப்படையினரைச் சேர்த்தான். [5]

கோவில் தூய்மைப்பாடு

[தொகு]


36 யூதாவும் அவருடைய சகோதரர்களும்,
"நம் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்.
இப்போது நாம் புறப்பட்டுப் போய்த்
திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி
மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்" என்றார்கள்.
37 எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து
சீயோன் மலைக்கு ஏறிச்சென்றார்கள்.
38 திருஉறைவிடம் பாழடைந்திருந்ததையும்,
பலிபீடம் தீட்டுப்பட்டுக் கிடந்ததையும்,
கதவுகள் தீக்கிரையானதையும்,
காட்டிலும் மலையிலும் இருப்பதுபோல
முற்றங்களில் முட்செடிகள் அடர்ந்திருந்ததையும்,
குருக்களுடைய அறைகள் இடிபட்டுக் கிடந்ததையும் அவர்கள் கண்டார்கள்;
39 தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் அழுது புலம்பி,
தங்கள்மீது சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்;
40 நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள்;
எக்காளத்தால் அடையாள ஒலி எழும்பியதும்
விண்ணக இறைவனை நோக்கி மன்றாடினார்கள்.


41 தாம் தூய இடத்தைத் தூய்மைப்படுத்தும்வரை
கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி
யூதா சிலரை ஒதுக்கிவைத்தார்;
42 திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த
குற்றமற்ற குருக்களைத் தேடிக்கொண்டார்.
43 அவர்கள் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி,
தீட்டுப்பட்ட கற்களை அழுக்கடைந்த இடத்தில் எறிந்துவிட்டார்கள்;
44 தீட்டுப்பட்ட எரிபலிப் பீடத்தை என்ன செய்வது என்று
அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்;
45 அதை வேற்றினத்தார் தீட்டுப்படுத்தியிருந்ததால்,
தங்களுக்குத் தொடர்ந்து இகழ்ச்சியாய் இராதவாறு
அதை இடித்துவிட வேண்டும் என்ற நல்ல முடிவுக்கு வந்தார்கள்;
அவ்வாறே அதனை இடித்துவிட்டார்கள்.
46 அக்கற்களை என்ன செய்வது என்று அறிவிக்க
ஓர் இறைவாக்கினர் தோன்றும்வரை,
அவற்றைக் கோவில் மலையில் தகுந்ததோர் இடத்தில் குவித்து வைத்தார்கள்;
47 திருச்சட்டப்படி முழுக்கற்களைக்கொண்டு [6]
முன்பு இருந்த வண்ணம் புதிய பலிபீடத்தைக் கட்டினார்கள்;
48 தூயகத்தையும் கோவிலின் உட்பகுதிகளையும் பழுதுபார்த்தார்கள்;
முற்றங்களையும் தூய்மைப்படுத்தினார்கள்;
49 தூய கலன்களைப் புதிதாகச் செய்தார்கள்;
விளக்குத் தண்டையும் தூபபீடத்தையும்
காணிக்கை அப்ப மேசையையும் கோவிலுக்குள் கொண்டுவந்தார்கள்;
50 பீடத்தின் மீது சாம்பிராணியைப் புகைத்துத்
தண்டின்மீது இருந்த விளக்குகளை ஏற்றியதும் கோவில் ஒளிர்ந்தது; [7]
51 மேசைமீது அப்பங்களை வைத்துத்
திரைகளைத் தொங்கவிட்டார்கள்;
இவ்வாறு தாங்கள் மேற்கொண்ட வேலைகளையெல்லாம் செய்து முடித்தார்கள்.


52 நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு [8]
கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம்
இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து,
53 தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது
திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
54 வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த
அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது.
அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும்
யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின.
55 எல்லா மக்களும் குப்புற விழுந்து
தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை
வழிபட்டு வாழ்த்தினார்கள்;
56 பலிபீட அர்ப்பணிப்பு விழாவை
எட்டு நாள் கொண்டாடி
மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்;
நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்; [9]
57 பொன் முடிகளாலும் குமிழ்களாலும்
கோவிலின் முகப்பை அணிசெய்து,
வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக்
கதவுகளை மாட்டினார்கள்.
58 மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது;
வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது.
59 ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில்,
அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள்வரை
அக்களிப்போடும் அகமகிழ்வோடும்
பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட
யூதாவும் அவருடைய சகோதரர்களும்
இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.


60 முன்புபோல வேற்றினத்தார் உள்ளே சென்று தீட்டுப்படுத்தாதவாறு
அவர்கள் சீயோன் மலையைச் சுற்றிலும்
உயர்ந்த மதில்களையும் உறுதியான காவல்மாடங்களையும் அப்போது எழுப்பினார்கள்.
61 மேலும் காவற்படை ஒன்றை யூதா அங்கு நிறுத்தினார்;
இதுமேயாவுக்கு எதிரே இஸ்ரயேல் மக்களுக்குக் கோட்டையாக விளங்கும்படி
பெத்சூரையும் வலுப்படுத்தினார். [10]


குறிப்புகள்

[1] 4:8 = 2 மக் 8:16.
[2] 4:9 = விப 14:10-31
[3] 4:24 = திபா 118:1-29; 136:1.
[4] 4:30 = 1 சாமு 17:41-54; 14:1-23.
[5] 4:26-35 = 2 மக் 11:1-12.
[6] 4:47 - "உளி படாத கற்களைக் கொண்டு" என்பது மூல பாடம்
(காண். விப 20:25; இச 27:5-6).
[7] 4:50 = 2 மக் 10:3.
[8] 4:52 - கி.மு. 164.
[9] 4:56 = 2 குறி 7:8-9.
[10] 4:36-61 = 2 மக் 10:1-8.


(தொடர்ச்சி): மக்கபேயர் - முதல் நூல்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை