திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"யூதித்து, 'என் தலைவரே! நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்; ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும்" என்றார். தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து அவன் முன்னிலையில் உண்டு பருகினார். ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை."- யூதித்து 12:19-20


யூதித்து (The Book of Judith)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]


1 ஒலோபெரின் யூதித்தை நோக்கி,
"பெண்ணே, துணிவுகொள்; அஞ்சாதே.
அனைத்துலகுக்கும் மன்னராகிய நெபுகத்னேசருக்குப்
பணிபுரிய முன்வரும் எவருக்கும் நான் ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை.
2 இப்பொழுதும், மலைப்பகுதியில் வாழும் உன் இனத்தார்
என்னைப் புறக்கணியாதிருந்தால்
நான் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்திருக்கமாட்டேன்.
ஆனால், இதற்கெல்லாம் அவர்களே காரணம்.
3 இப்பொழுது சொல்:
நீ ஏன் அவர்களிடமிருந்து தப்பியோடி எங்களிடம் வந்திருக்கிறாய்?
பாதுகாப்புத் தேடித்தானே வந்துள்ளாய்? துணிவு கொள்.
இன்று இரவும் இனியும் உனக்கு ஆபத்து எதுவும் நேராது.
4 எவரும் உனக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள்.
மாறாக, என் தலைவர் நெபுகத்னேசர் மன்னரின் பணியாளரை நடத்துவது போல,
யாவரும் உன்னையும் நல்ல முறையில் நடத்துவார்கள்" என்றான்.


5 இதற்கு யூதித்து அவனிடம் பின்வருமாறு கூறினார்:
"உம் அடியவளின் சொற்களைத் தயை கூர்ந்து கேளும்.
உம் பணிப்பெண்ணாகிய என்னைப் பேசவிடும்.
இன்று இரவு என் தலைவரிடம் நான் பொய் சொல்லமாட்டேன்.
6 உம் பணிப்பெண்ணான என் சொற்படி நீர் நடந்தால்,
கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்;
என் தலைவராகிய நீர் மேற்கொள்ளும் முயற்சிகளில் தோல்வியே காணமாட்டீர்.
7 அனைத்துலகின் மன்னரான நெபுகத்னேசரின் உயிர்மேல் ஆணை!
எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள
அவருடைய ஆற்றல் மேல் ஆணை!
மனிதர்கள் மட்டும் உம் வழியாக நெபுகத்னேசருக்குப் பணிவிடை செய்வதில்லை;
காட்டு விலங்குகள், கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஆகியவையும்
அவருக்கும் அவருடைய வீட்டார் அனைவருக்கும்
பணிந்து உமது ஆற்றலால் உயிர் வாழ்கின்றன.
8 உம்முடைய ஞானம் பற்றியும் திறமைகள் பற்றியும்
நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்.
நாடு முழுவதிலும் நீரே தலைசிறந்தவர் என்றும்,
அறிவாற்றலில் வல்லவர் என்றும்,
போர்த் திறனில் வியப்புக்குரியவர் என்றும் உலகம் முழவதும் அறியும்.


9 "அக்கியோர் உமது ஆட்சிமன்றத்தில் அறிவித்தவற்றை நாங்களும் கேள்வியுற்றோம்;
ஏனெனில், பெத்தூலியாவின் ஆள்கள் அவரை உயிரோடு விட்டுவைத்ததால்,
அவர் உம்மிடம் சொல்லியிருந்த அனைத்தையும் அவர்களுக்கும் அறிவித்தார்.
10 ஆதலால், தலைவர் பெருமானே,
அவருடைய சொற்களைப் புறக்கணியாமல் உமது உள்ளத்தில் இருத்தும்.
எம் இனத்தார் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலொழிய
அவர்களை யாரும் தண்டிக்க முடியாது;
வாள்கூட அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இது உண்மை. [*]


11 "இப்போது என் தலைவருக்குத் தோல்வியும் ஏமாற்றமும்
ஏற்படாதவாறு சாவு அவர்களுக்கு நேரிடும்.
ஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டதால்
அவர்கள் தீமை செய்யும்போதெல்லாம் தங்கள் கடவுளுக்குச் சினமூட்டுகிறார்கள்.
12 தங்கள் உணவுப்பொருள்கள் தீர்ந்துபோனதாலும்
தண்ணீரெல்லாம் வற்றிப்போனதாலும்
அவர்கள் தங்கள் கால்நடைகளைக் கொல்ல முடிவு செய்தார்கள்;
மேலும், உண்ணக் கூடாது என்று கடவுள் தம் சட்டத்தால்
விலக்கிவைத்திருந்தவற்றை உண்ணவும் உறுதிபூண்டார்கள்.
13 எருசலேமில் உள்ள எங்களின் கடவுள் திருமுன்
பணியாற்றும் குருக்களுக்கென்று
தூய்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட தானியங்களின் முதற் பலன்,
திராட்சை இரசம், எண்ணெய் இவற்றில்
பத்திலொரு பங்கு ஆகியவற்றைப்
பொது மக்களுள் யாரும் தங்கள் கையால் தொடவும் கூடாது என்று
திருச்சட்டம் விலக்கியிருந்தும்,
அவர்கள் அவற்றைத் தங்களுக்கே
பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்கள்.
14 எருசலேமில் வாழ்ந்த மக்களும் இவ்வாறு செய்து வந்தபடியால்,
ஆட்சி மன்றத்தின் இசைவு பெற்றுவர எருசலேமுக்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.
15 இசைவு பெற்று, அதைச் செயல்படுத்த அவர்கள் முற்படும் பொழுது,
அழிவுறுமாறு அவர்கள் அன்றே உம்மிடம் கையளிக்கப்படுவார்கள்.
16 ஆகவே, உம் அடியவளாகிய நான் இவற்றையெல்லாம் அறிந்து,
அவர்களிடமிருந்து தப்பியோடி வந்துள்ளேன்.
உம்மிடம் சேர்ந்து அரும்பெரும் செயலாற்றக்
கடவுள் என்னை அனுப்பியுள்ளார்.
இவைபற்றிக் கேள்வியுறும் மாந்தர் எல்லாரும்,
ஏன் உலகம் முழுவதுமே மலைப்புறுவர்!
17 உம் அடியாளாகிய நான் இறைப்பற்று உள்ளவள்.
இரவும் பகலும் விண்ணகக் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வருகிறேன்.
என் தலைவரே, இப்பொழுது உம்மிடம் தங்குவேன்.
ஆனால், இரவுதோறும் பள்ளத்தாக்குக்குச் சென்று கடவுளை மன்றாடுவேன்.
இஸ்ரயேலர் பாவம் செய்யும்போது அவர் எனக்கு அறிவிப்பார்.
18 நான் வந்து அதை உமக்கு அறிவிப்பேன்.
பின் உம் படை அனைத்தோடும் நீர் புறப்பட்டுச் செல்லலாம்.
உம்மை எதிர்ப்பதற்கு அவர்களுள் ஒருவராலும் முடியாது.
19 நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சேரும்வரை
உம்மை வழி நடத்திச் செல்வேன்.
அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன்.
ஆயன் இல்லா ஆடுகள்போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர்.
ஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது.
முன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்பட்ட இவற்றை
உமக்குத் தெரிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்."


20 யூதித்து சொன்னதைக் கேட்ட ஒலோபெரினும்
அவனுடைய பணியாளர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.
அவரது ஞானத்தைக் கண்டு வியந்து,
21 "உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை
உன்னைப் போல அழகும் ஞானம் நிறைந்த பேச்சும் கொண்ட
ஒரு பெண் இல்லவே இல்லை" என்றார்கள்.


22 பின் ஒலோபெரின் அவரிடம்,
"எங்கள் கைகளை வலிமைப்படுத்தவும்,
என் தலைவரை ஏளனம் செய்த மக்களை அழித்தொழிக்கவும்
கடவுள் உன்னை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்தும் நல்லதே!
23 நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல,
பேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய்.
நீ சொன்னபடி செய்வாயானால் உன் கடவுள் எனக்கும் கடவுளாவார்.
நெபுகத்னேசர் மன்னரின் அரண்மனையில் நீ வாழ்வாய்.
உலகமெங்கும் உனது புகழ் விளங்கும்" என்றான்.


குறிப்பு

[*] 11:9-10 = யூதி 5:5-21.


அதிகாரம் 12[தொகு]

யூதித்தின் விழுமிய ஒழுக்கம்[தொகு]


1 ஒலோபெரின் தன் வெள்ளிக் கலன்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு
யூதித்தை அழைத்துவரக் கட்டளையிட்டான்.
தான் உண்டுவந்த அறுசுவை உணவையே அவள் உண்ணவும்,
தன் திராட்சை மதுவையே அவள் பருகவும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டான்.
2 அதற்கு யூதித்து, "இவற்றை நான் உண்ணமாட்டேன்.
அது குற்றமாகும்.
நான் கொண்டுவந்துள்ள உணவுப் பொருளே எனக்குப் போதும்" என்றார். [1]
3 ஒலோபெரின் அவரிடம்,
"நீ கொண்டு வந்துள்ள உணவுப்பொருள்கள் தீர்ந்து போகுமானால்
அவை போன்ற உணவை உனக்குக் கொடுக்க எவ்வாறு எங்களால் முடியும்?
உன் இனத்தாருள் ஒருவரும் எங்கள் நடுவே இல்லையே!" என்றான்.


4 "என் தலைவரே, உம் உயிர்மேல் ஆணை!
உம் அடியவள் என்னிடம் உள்ள உணவுப் பொருள்கள்
தீர்ந்து போவதற்கு முன்னரே
ஆண்டவர் தாம் திட்டமிட்டுள்ளதை என் வழியாய்ச் செயல்படுத்துவார்"
என்றார் யூதித்து.


5 பிறகு ஒலோபெரினின் பணியாளாகள் யூதித்தைக்
கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்.
அவர் நள்ளிரவுவரை உறங்கினார்;
வைகறை வேளையில் துயிலெழுந்தார்.
6 "உம் அடியவள் வெளியே சென்று இறைவனிடம் மன்றாடும்படி
என் தலைவர் கட்டளையிடட்டும்"
என்று யூதித்து ஒலோபெரினுக்குச் சொல்லியனுப்பினார்.
7 அவரைத் தடைசெய்யாமலிருக்க
ஒலோபெரின் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
யூதித்து மூன்று நாள் பாளையத்தில் தங்கியிருந்தார்;
இரவுதோறும் பெத்தூலியாவின் பள்ளத்தாக்குக்குச் சென்று,
பாளையத்தின் அருகில் இருந்த நீரூற்றில் குளிப்பார்.
8 குளித்து முடித்தபின் தம் இனத்து மக்களுக்கு வெற்றி அளிக்கும் வழியைத்
தமக்குக் காட்டுமாறு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவார்.
9 அவர் தூய்மை அடைந்தவராய்த் திரும்பிவந்து,
மாலையில் உணவு அருந்தும்வரை
கூடாரத்துக்குள்ளேயே தங்கியிருப்பார்.

ஒலோபெரின் அளித்த விருந்து[தொகு]


10 நான்காம் நாள் ஒலோபெரின் தனக்கு நெருக்கமான
பணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான்;
படைத் தலைவர்களுள் ஒருவரையும் அழைக்கவில்லை.
11 தன் உடைமைகள் அனைத்துக்கும் பொறுப்பாய் இருந்த
பகோவா என்ற உயர் அலுவலரிடம், [2]
"நீர் உடனே சென்று, உம் பொறுப்பில் உள்ள
அந்த எபிரேயப் பெண் வந்து நம்மோடு உண்டு பருக இணங்கச் செய்யும்.
12 இத்தகைய பெண்ணுடன் நாம் உறவுகொள்ளாமல்
விட்டுவிடுவது நமக்கு இழிவாகும்.
அவளை நாம் கவர்ந்திழுக்கத் தவறினால்
அவள் நம்மை எள்ளி நகையாடுவாள்" என்றான்.


13 ஒலோபெரினிடமிருந்து பகோவா வெளியேறி யூதித்திடம் சென்று,
"என் தலைவர் முன்னிலையில் பெருமை அடையவும்,
எங்களோடு திராட்சை மது அருந்தி மகிழ்ந்திருக்கவும்,
நெபுகத்னேசரின் அரண்மனையில் பணியாற்றும்
அசீரியப் பெண்களுள் ஒருத்தி போல மாறவும்
இத்துணை அழகு வாய்ந்த பெண்மணியாகிய தாங்கள்
தயங்காமல் வரவேண்டும்" என்றான்.


14 யூதித்து அவனிடம், "என் தலைவர் சொன்னதைச் செய்ய
மறுக்க நான் யார்?
அவருக்கு விருப்பமானதை நான் உடனே செய்வேன்.
நான் இறக்கும் வரை அது எனக்கு மகிழ்ச்சி தரும்" என்றார்.


15 ஆகவே யூதித்து எழுந்து சிறப்பாடை அணிந்து,
பெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தம்மை அழகுபடுத்திக்கொண்டார்.
அவருடைய பணிப்பெண் அவருக்குமுன்னே சென்றாள்;
யூதித்து நாள்தோறும் உணவு அருந்துகையில்
விரித்து அமர்வதற்காகப் பகோவா கொடுத்திருந்த கம்பளத்தை
ஒலோபெரினுக்கு முன்னிலையில் பணிப்பெண் தரையில் விரித்தாள்.
16 பின் யூதித்து உள்ளே சென்று அதன்மேல் அமர்ந்தார்.
ஒலோபெரினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது;
அவனது மனம் கிளர்ந்தெழுந்தது;
அவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள
வாய்ப்புத் தேடியிருந்ததால்
இப்பொழுது அவரை அடைய அவன் ஏக்கம் கொண்டான்.
17 எனவே ஒலோபெரின் அவரிடம்,
"மது அருந்தி எங்களுடன் களிப்புற்றிரு" என்றான்.


18 அதற்கு யூதித்து, "என் தலைவரே!
நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்;
ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும்" என்றார்.
19 தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து
அவன் முன்னிலையில் உண்டு பருகினார்.
20 ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து,
மட்டுமீறிக் குடித்தான்.
பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.


குறிப்புகள்

[1] 12:2 = தோபி 1:11; தானி 1:8; யூதி 10:5.
[2] 12:11 - "அலி" என்றும் மொழிபெயர்க்கலாம்.


(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை