திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"ஆகையால் அந்த நாடுகளின் மக்கள் அமைதி வேண்டி ஒலோபெரினிடம் தூதர்களை அனுப்பிப் பின்வருமாறு கூறினார்கள்: 'இதோ, நெபுகத்னேசர் மாமன்னரின் பணியாளர்களாகிய நாங்கள் உமக்கு அடிபணிகிறோம். எங்களை உமது விருப்பப்படியே நடத்தும். மேலும் எங்களுடைய வீடுகள், நாடுகள், கோதுமை வயல்கள், ஆடுமாடுகள், எங்களுடைய குடியிருப்புகளிலுள்ள ஆட்டுக்கொட்டில்கள் அனைத்தும் உமக்கே சொந்தம்.'" - யூதித்து 3:1-3

யூதித்து (The Book of Judith)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

ஒலோபெரினின் வெற்றி[தொகு]


1 ஆகையால் அந்த நாடுகளின் மக்கள் அமைதி வேண்டி
ஒலோபெரினிடம் தூதர்களை அனுப்பிப் பின்வருமாறு கூறினார்கள்:
2 "இதோ, நெபுகத்னேசர் மாமன்னரின் பணியாளர்களாகிய நாங்கள்
உமக்கு அடிபணிகிறோம்.
எங்களை உமது விருப்பப்படியே நடத்தும்.
3 மேலும் எங்களுடைய வீடுகள், நாடுகள், கோதுமை வயல்கள்,
ஆடுமாடுகள், எங்களுடைய குடியிருப்புகளிலுள்ள ஆட்டுக்கொட்டில்கள்
அனைத்தும் உமக்கே சொந்தம்.
உமது விருப்பப்படியே அவற்றைப் பயன்படுத்தும்.
4 எங்கள் நகர்களும் உம்முடையவை;
அவற்றின் குடிகள் உமக்கே அடிமைகள்.
எனவே நீர் வந்து, உம் விருப்பப்படியே நடத்தும்."


5 அத்தூதர்கள் ஒலோபெரினிடம் வந்து,
மேற்கண்ட செய்தியை அறிவித்தார்கள்.
6 இதை அறிந்ததும் அவன் தன் படையுடன்
கடற்கரைப் பகுதிக்கு இறங்கிச் சென்று,
அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் காவற்படைகளை அமர்த்தினான்;
அவற்றினின்று தேர்ந்தெடுத்த வீரர்களைத்
தன் துணைப்படையாக வைத்துக்கொண்டான்.
7 அந்நகர்களின் மக்களும் அவற்றின்
சுற்றுப் புறங்களில் வாழ்ந்தோர் அனைவரும்
அவனுக்கு மாலை அணிவித்து, முரசறைந்து,
நடனமாடி வரவேற்பு அளித்தனர்.
8 ஆயினும், அவர்களுடைய திருவிடங்களை [*] யெல்லாம்
அவன் தகர்த்தெறிந்தான்;
தூய தோப்புகளை வெட்டி அழித்தான்;
ஏனெனில், எல்லா இனத்தாரும்
நெபுகத்னேசரை மட்டுமே வழிபடவேண்டும்;
எல்லா மொழியினரும் குலத்தினரும் அவனை மட்டுமே
தெய்வமாகப் போற்றவேண்டும்
என்னும் நோக்கத்தோடு அந்நாடுகளின் தெய்வங்கள் அனைத்தையும்
அழித்தொழிக்குமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.


9 பின்பு ஒலோபெரின் யூதேயாவின் மலைத்தொடருக்கு எதிரிலும்
தோத்தானுக்கு அருகிலும் அமைந்திருந்த எஸ்திரலோனை நோக்கிச் சென்றான்.
10 கேபாய், சித்தோப்பொலி நகர்களுக்கு இடையே பாசறை அமைத்து,
தன் படைக்குத் தேவையானவற்றையெல்லாம் திரட்ட
ஒரு மாதம் முழுவதும் அங்குத் தங்கியிருந்தான்.


குறிப்பு

[*] 3:8 - "எல்லைகள்" என்பது கிரேக்க பாடம்.


அதிகாரம் 4[தொகு]

இஸ்ரயேலின் எதிர்ப்பு[தொகு]


1 அசீரிய மன்னன் நெபுகத்னேசருடைய படைத்தலைவன் ஒலோபெரின்
வேற்றினத்தாருக்குச் செய்திருந்த அனைத்தையும்,
அவன் எவ்வாறு அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும்
சூறையாடித் தகர்த்தெறிந்தான் என்பதையும்
யூதேயாவில் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர்.
2 எனவே, அவன் வருவதை அறிந்து பெரிதும் அஞ்சினார்கள்;
எருசலேமைக் குறித்தும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின்
கோவிலைக் குறித்தும் கலங்கினார்கள்.
3 ஏனெனில், சற்று முன்னரே அவர்கள்
தங்கள் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள்;
யூதேயா நாட்டு மக்கள் யாவரும்
அண்மையில்தான் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தார்கள்;
தீட்டுப்பட்டிருந்த தூய கலன்களும் பலிபீடமும்
கோவிலும் மீண்டும் தூய்மைப்படுத்தப்பட்டிருந்தன.
4 அவர்கள் சமாரியா நாடு முழுவதற்கும்,
கோனா, பெத்கோரோன், பெல் மாயிம், எரிகோ, கோபா,
ஐசொரா, சாலேம் பள்ளத்தாக்கு
ஆகிய நகர்களுக்கும் செய்தி அனுப்பினார்கள்.
5 உடனே அவர்கள் உயர்ந்த மலையுச்சிகளைக் கைப்பற்றி,
அங்கு இருந்த ஊர்களைக் காவலரண் செய்து வலுப்படுத்தினார்கள்;
அவர்களின் வயல்கள் அண்மையிலேயே அறுவடையாகியிருந்ததால்
போருக்கு முன்னேற்பாடாக உணவுப்பொருள்களைச் சேகரித்தார்கள்.


6 அக்காலத்தில் எருசலேமில் இருந்த
தலைமைக்குரு யோவாக்கிம் என்பவர்
எஸ்திரலோனுக்கு எதிரிலும் தோத்தான் சமவெளிக்கு அருகிலும் அமைந்திருந்த
பெத்தூலியா, பெத்தமஸ்தாயிம் ஆகிய நகரங்களின்
மக்களுக்கு மடல் எழுதி அனுப்பினார்;
7 யூதேயாவுக்குள் நுழைவதற்குரிய
மலைப்பாதைகளைக் கைப்பற்றுமாறு
அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு
அவை குறுகியனவாய் இருந்ததால்,
தாக்குவதற்காக மேலே ஏறிவரும் எவரையும்
தடுப்பதற்கு எளிதாய் இருந்தது.
8 தலைமைக் குரு யோவாக்கிமும்
எருசலேமில் குழுமியிருந்த இஸ்ரயேல் மக்களின்
ஆட்சி மன்ற உறுப்பினர்களும் ஆணையிட்டபடி
இஸ்ரயேலர் செய்து முடித்தனர்.

பொது மன்றாட்டும் நோன்பும்[தொகு]


9 இஸ்ரயேலின் ஆண்கள் யாவரும் கடவுளை நோக்கி
மிகுந்த ஆர்வத்துடன் கூக்குரலிட்டார்கள்;
நோன்பிருந்து தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள். [1]
10 அவர்களும் அவர்களுடைய மனைவியர், மக்கள்,
கால்நடைகள், உடன்வாழ் அன்னியர்கள்,
கூலியாள்கள், அடிமைகள் ஆகிய அனைவரும்
இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டனர்.
11 எருசலேமில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலிய ஆண்கள், பெண்கள்,
குழந்தைகள் ஆகிய அனைவரும்
தலையில் சாம்பலைத் தூவிக் கொண்டனர்;
சாக்கை விரித்துக் கோவிலின் முகப்பில்
ஆண்டவர் திருமுன் குப்புற விழுந்தனர்.
12 பிறகு அவர்கள் பலிபீடத்தையும் சாக்கினால் மூடினார்கள்;
இஸ்ரயேலின் கடவுளை நோக்கி,
தங்கள் குழந்தைகள் அடிமைவாழ்வுக்குக் கையளிக்கப்படாதவாறும்,
மனைவியர் கவர்ந்து செல்லப்படாதவாறும்,
உரிமைச் சொத்தாகிய நகர்கள் அழிவுறாதவாறும்,
வேற்றினத்தார் ஏளனம் செய்யும் அளவுக்குத்
திருவிடம் தீட்டுப்பட்டு இழிவுறாதவாறும் காத்திடும்படி
ஒரே குரலில் மனமுருகி மன்றாடினார்கள். [2]


13 ஆண்டவர் அவர்களது குரலுக்குச் செவிசாய்த்தார்;
அவர்களது கடுந்துன்பத்தைக் கண்ணுற்றார்;
ஏனெனில், யூதேயா முழுவதிலும்
எருசலேமில் எல்லாம் வல்ல ஆண்டவரது
கோவில் முன்னிலையிலும் மக்கள் பல நாள் நோன்பிருந்தார்கள்.
14 தலைமைக்குரு யோவாக்கிமும்
ஆண்டவர் திருமுன் பணிபுரிந்த குருக்கள் அனைவரும்
திருவழிபாட்டுப் பணியாளர்களும்
இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டு
அன்றாட எரிபலிகளையும் மக்களின் நேர்ச்சைகளையும்
தன்னார்வக் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்;
15 தங்கள் தலைப்பாகைமேல் சாம்பலைத் தூவிக் கொண்டு,
இஸ்ரயேல் இனம் அனைத்தின்மீதும் ஆண்டவர் இன்முகம் காட்டுமாறு,
முழுவலிமையோடும் அவரை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.


குறிப்புகள்

[1] 4:9 - "மிகுந்த ஆர்வத்துடன் தங்களையே தாழ்த்திக் கொண்டார்கள்" என்பது கிரேக்க பாடம்.
[2] 4:10-12 = யோனா 3:7-8; எஸ் (கி) 4:1-3.


(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை