திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அபக்கூக்கு/அதிகாரம் 1

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும் தலைமை இல்லா ஊர்வனபோலும் நடத்துகின்றீர்." - அபக்கூக்கு 1:14.

அபக்கூக்கு (The Book of Habakkuk) [1][தொகு]

முன்னுரை

இறைவாக்கினர் அபக்கூக்கு கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில், கல்தேயர் இனத்தாரான பாபிலோனியரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்திருக்கலாம்.

பாபிலோனியர் கொடுமை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் கண்டு மனம் வெதும்பி ஆண்டவரை நோக்கி, "பொல்லாதவர்கள் நேர்மையானவர்களை விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கிறீர்?" என்று வினவிய அபக்கூக்கிற்கு, தாம் குறித்த காலத்தில் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதாகவும், அதுவரை நேர்மையுடையோர் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையினால் வாழ்வார்கள் என்றும் ஆண்டவர் மறுமொழி கூறினார்.

இந்நூலின் பிற்பகுதி நேர்மையற்றோர், கொடியோர் ஆகியவர்களுக்கு ஆண்டவர் வழங்கும் தண்டனைத் தீர்ப்பைப் பற்றிக் கூறுகிறது. இறுதியில் அமைந்துள்ள பாடல் இறைவனின் மாட்சியையும் புகழையும் எடுத்துரைக்கிறது.

அபக்கூக்கு[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. அபக்கூக்கின் குற்றச்சாட்டுகளும் ஆண்டவரின் மறுமொழியும் 1:1 - 2:4 1378 - 1379
2. நேர்மையற்றோர் மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு 2:5-20 1379 - 1381
3. அபக்கூக்கின் மன்றாட்டு 3:1-19 1381 - 1382


அபக்கூக்கு (The Book of Habakkuk)[தொகு]

அதிகாரம் 1


அதிகாரம் 1[தொகு]


1 இறைவாக்கினர் அபக்கூக்கு கண்ட காட்சியில் அருளப்பட்ட இறைவாக்கு:

அநீதி குறித்து அபக்கூக்கின் முறையீடு[தொகு]


2 ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான்
துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்;
நீரும் செவிசாய்க்காதிருப்பீர்?
இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு
உம்மிடம் அழுது புலம்பவேன்;
நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?
3 நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர்,
கேட்டினைக் காணச் செய்கின்றீர்?
கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன;
வழக்கும் வாதும் எழும்புகின்றன.
4 ஆதலால் திருச்சட்டம் வலுவற்று பயனற்றுப் போகின்றது.
நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை.
கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக் கொள்கின்றனர்.
ஆகவே நீதி தடம்புரண்டு காணப்படுகின்றது.

ஆண்டவரின் பதிலுரை[தொகு]


5 நீங்கள் உங்களைச் சூழந்துள்ள வேற்றினத்தாரைக் கூர்ந்து கவனியுங்கள்;
கவனித்து வியப்பும் திகைப்பும் அடையுங்கள்;
ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன்;
விளக்கிச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள். [1]


6 நான் கல்தேயர் இனத்தை எழுப்பவிருக்கிறேன்;
அது பரபரப்பும் கொடுமையும் உடைய இனம்;
தங்களுக்குச் சொந்தமில்லாத இருப்பிடங்களைக் கவர,
உலகின் ஒரு முனை முதல் மறுமுனைவரை சுற்றித் திரியும் இனம். [2]


7 அவர்கள் அச்சமும் திகிலும் உண்டாக்குகின்றவர்கள்;
தங்களுடைய நீதியையும் பெருமையையும் தாங்களே உருவாக்குகின்றவர்கள்.


8 வேங்கையைவிட அவர்களின் குதிரைகள் விரைவாய் ஒடுகின்றன;
அவை மாலை வேளையில் திரியும் ஓநாய்களைவிடக் கொடியவை;
அவர்களுடைய குதிரை வீரர்கள் பாய்ந்து வருகின்றார்கள்.
இரைமேல் பாயும் கழுகைப்போல் பறந்து வருகின்றார்கள்.


9 அவர்கள் யாவரும் வன்முறை செய்யவே முன்னேறி வருகின்றார்கள்;
அவர்கள் முன்னேறும்போது எல்லாரும் கலங்கித் திகைக்கின்றார்கள்.
மணல்போல எண்ணற்ற மக்களைச் சிறைப்படுத்துகின்றார்கள்.


10 அரசர்களை அவர்கள் ஏளனம் செய்கின்றார்கள்;
அதிகாரிகளை எள்ளி நகையாடுகின்றார்கள்;
அரண்களை எல்லாம் பார்த்து நகைக்கினன்றார்கள்;
மண்மேடுகளை எழுப்பி அவற்றைப் பிடிக்கின்றார்கள்.


11 அவர்கள் காற்றைப் போல் விரைவாகக் கடந்து போகின்றார்கள்;
மறைந்து விடுகின்றார்கள்.
தங்கள் வலிமையைக் கடவுளாகக் கருதியதே அவர்கள் செய்த குற்றம்.

அபக்கூக்கு மீண்டும் முறையிடுகிறார்[தொகு]


12 ஆண்டவரே, என் கடவுளே, என் தூயவரே
தொன்று தொட்டே இருப்பவர் நீர் அல்லவா?
நீர் [3] சாவைக் காண்பதில்லை;
ஆண்டவரே, அவர்களை எங்கள் தண்டனைத் தீர்ப்பாய் ஏற்படுத்தியவர் நீரே;
புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் அவர்களை ஆக்கியவரும் நீரே.


13 தீமையைக் காண நாணும் தூய கண்களை உடையவரே,
கொடுமையைப் பார்க்கத் தாங்காதவரே,
கயவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்?
பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை
விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?


14 நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும்
தலைமை இல்லா ஊர்வனபோலும் நடத்துகின்றீர்.


15 கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும் தூண்டிலால் பிடிக்கின்றார்கள்;
வலையால் வாரி இழுக்கின்றார்கள்;
தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள்.


16 ஆதலால், தங்கள் வலைக்குப் பலி செலுத்துகின்றார்கள்;
பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்;
ஏனெனில் அவற்றாலேயே இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்;
அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள்.


17 அப்படியானால் அவர்கள் தங்கள் வலையில் இருப்பவற்றை
ஓயாமல் வெளியே கொட்டி
மக்களினங்களை இரக்கமின்றி இடைவிடாமல்
கொன்று குவிக்கவும் வேண்டுமோ?


குறிப்புகள்

[1] 1:5 = திப 13:41.
[2] 1:6 = 2 அர 24:2.
[3] 1:12 - "நாங்கள்" என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி): அபக்கூக்கு:அதிகாரங்கள் 2 முதல் 3 வரை