திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
ஒரு போர்வீரனுடன் யூதாவின் அரசி அத்தலியா. 15-16ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பிரான்சு.

2 அரசர்கள் (The Second Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

யூதாவின் அரசி அத்தலியா[தொகு]

(2 குறி 22:10-23:15)


1 அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரசு குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள்.
2 அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா [1] மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான்.
3 அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலைமறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள்.


4 ஏழாம் ஆண்டில், அரச மெய்க்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் நூற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார்.
5 அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: "நீங்கள் செய்யவேண்டியது இதுவே: நீங்கள் ஓய்வு நாளில் பணியேற்கும் பொழுது, உங்களில் மூன்றில் ஒரு பங்கினர் அரண்மனைக்குக் காவல் இருக்கவேண்டும்.
6 அடுத்த பங்கினர் 'சூர்' வாயிலில் காவல் காத்து நிற்க வேண்டும். மூன்றாவது பங்கினர் மற்றைய காவலர்களுக்குப் பின்னால் வாயிலில் காவலிருக்க வேண்டும்.
7 ஓய்வு நாளில் விடுப்பில் செல்லும் இரு குழுக்களும் அரசனை ஆண்டவரின் இல்லத்தில் பாதுகாத்து நிற்கவேண்டும்.
8 யோவாசு அரசனை ஒவ்வொருவனும் படைக்கலன்களுடன் பாதுகாத்து உங்களை நெருங்குபவன் எவனாயினும் அவனைக் கொல்லவேண்டும். அரசன் வந்து போகுமிடம் எல்லாம் நீங்களும் அவனோடிருக்க வேண்டும்."


9 குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்ததையும் நூற்றுவர் தலைவர்கள் செய்தனர். ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர்.
10 அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
11 காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர்.
12 பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி "அரசர் நீடுழி வாழ்க!" என்று முழங்கினர்.


13 மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள்.
14 மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "சதி! சதி!" என்று கூக்குரலிட்டாள். [2]
15 அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்களை நோக்கி, "படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்" என்று கட்டளையிட்டார். "அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது" என்றும் கூறியிருந்தார்.
16 எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.

யோயாதாவின் சீர்திருத்தங்கள்[தொகு]

(2 குறி 23:16-21)


17 பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்குமிடையே உடன்படிக்கை செய்து வைத்தார்.
18 பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார்.
19 மேலும் அவர், நூற்றுவர் தலைவர்கள், அரச மெய்க்காப்பாளர், காவலர், நாட்டு மக்கள் எல்லாரையும் ஒன்று திரட்டினார். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தினின்று காவலர் வாயில் வழியாக அரசனை அழைத்துக் கொண்டு வந்தடைந்தனர். அரசன் அரியணையில் ஏறி அமர்ந்தான்.
20 நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.
21 ஏழாம் வயதிலேயே யோவாசு அரசனானான்.

குறிப்புகள்

[1] 11:2 'அவர்கள்' என்பது எபிரேய பாடம்.
[2] 11:14 = 2 அர 23:3.

அதிகாரம் 12[தொகு]

யூதா அரசன் யோவாசு[தொகு]

(2 குறி 24:1-16)


1 ஏகூ ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யோவாசு அரசனாகி எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவன் தாய்.
2 யோவாசு, குரு யோயாதா அவனுக்குக் கற்றுத் தந்தபடியே, ஆண்டவரின் திருமுன் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாய் நடந்து வந்தான்.
3 ஆயினும் தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. அத்தொழுகை மேடுகளில் மக்கள் இன்னும் பலியிட்டுக் கொண்டும் தூபம் காட்டிக்கொண்டும் வந்தனர்.


4 யோவாசு குருக்களை நோக்கி, "ஆண்டவரின் இல்லத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் பணத்தையெல்லாம் - கணக்கெடுப்பு வரிப்பணத்தையும் ஒவ்வொருவரும் நேர்ச்சையாக அளிக்கும் பணத்தையும் ஆண்டவரின் இல்லத்திற்கு ஒவ்வொருவரும் அளிக்கும் தன்னார்வக் காணிக்கையையும் சேகரியுங்கள். [1]
5 ஒவ்வொரு குருவும் பணத்தைத் தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பெற்று கோவிலில் சிதைந்த பகுதிகளைப் பழுதுபார்க்க வேண்டும்" என்றான்.
6 ஆயினும், யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டுவரை, குருக்கள் கோவிலைப் பழுதுபார்க்கவே இல்லை.
7 எனவே, அரசன் யோவாசு குரு யோயாதாவையும் ஏனைய குருக்களையும் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நீங்கள் ஏன் கோவிலைப் பழுது பார்க்கவில்லை? உங்களுக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளாதீர்கள். அதைக் கோவிலைப் பழுதுபார்க்கக் கொடுத்து விடுங்கள்" என்றான்.


8 அவ்வாறே குருக்கள் மக்களிடமிருந்து பணத்தை இனி பெற்றுக் கொள்வதில்லை என்றும், கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பேற்பதில்லை என்றும் ஏற்றுக் கொண்டனர்.
9 குரு யோயாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, கோவிலின் நுழைவாயிலின் வலப்பக்கமாக பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.
10 அப்பணப் பெட்டியில் அதிகப் பணம் சேர்ந்தபோது, அரசனுடைய கணக்கனும், தலைமைக் குருவும் வந்து ஆண்டவரின் இல்லத்தில் சேர்ந்த பணத்தை எண்ணிப் பைகளில் கட்டி வைத்தனர்.
11 இவ்வாறு கணக்கிடப்பட்ட பணத்தை, ஆண்டவரின் இல்லத்தில் பணியைக் கண்காணிக்குமாறு நியமிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தனர். அவர்களும் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றிய தச்சர்களுக்கும், கொத்தர்களுக்கும்,
12 சிற்பிகளுக்கும், கல்வெட்டுவோர்க்கும் ஊதியம் அளித்தனர். மேலும் அதிலிருந்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்குத் தேவையான மரங்கள், பொழிந்த கற்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், அக்கோவிலைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான மற்றச் செலவுகளுக்கும் பயன்படுத்தினர்.
13 ஆயினும் ஆண்டவரின் இல்லத்திற்குத் தேவையான வெள்ளிக் கோப்பைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஆண்டவரின் இல்லத்தில் செலுத்தப்பட்ட வெள்ளிப் பணம் பயன்படுத்தப்படவில்லை.
14 ஏனெனில் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்த்த வேலையாள்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது.
15 வேலையாள்களுக்குப் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள்.[2]
16 குற்ற நீக்கப்பலிக்கான பணமும் பாவம் போக்கும் பலிக்கான பணமும் ஆண்டவரின் இல்லத்திற்குப் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில் அவை குருக்களுக்கு உரியவை. [3]


17 அப்பொழுது, சிரியா மன்னன் அசாவேல் காத்து நகரோடு போரிடச் சென்று அதைக் கைப்பற்றினான். பின்பு அசாவேல் எருசலேமைத் தாக்கும் நோக்கில் புறப்பட்டு வந்தான்.
18 எனவே யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும், தான் நேர்ந்தளித்திருந்த காணிக்கைகளையும் ஆண்டவர் இல்லம், அரச மாளிகை இவற்றின் கருவ+லங்களில் காணப்பட்ட தங்கம் அனைத்தையும் எடுத்து சிரியா மன்னன் அசாவேலுக்கு அனுப்பினான். எனவே அசாவேல் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றான்.
19 யோவாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
20 யோவாசின் அலுவலர் அவனுக்கு எதிராகக் கிளம்பிச் சதித் திட்டம் செய்து சில்லாவுக்கு இறங்கிச் செல்லும் வழியில் மில்லோபேத்தில் அவனைக் கொன்றனர்.
21 அவனைக் கொன்ற அலுவலர் சிமயாத்தின் மகன் யோசக்காரும் சோமேரின் மகன் யோசபாத்தும் ஆவர். அவன் இறந்து தாவீதின் நகரில் தன் மூதாதையருடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் அமட்சியா அரசன் ஆனான்.

குறிப்புகள்

[1] 12:4 = விப 30:11-16.
[2] 12:15 = 2 அர 22:7.
[3] 12:16 = லேவி 7:7.


(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை