திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஈசபேல் அரசி. ஓவியர்: ஜாண் லிஸ்டன் பையம் ஷா. 19ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: இங்கிலாந்து.

2 அரசர்கள் (The Second Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

ஏகூ அரசனாதல்[தொகு]

1 அப்பொழுது இறைவாக்கினர் எலிசா இறைவாக்கினரின் குழுவைச் சார்ந்த ஒருவனை அழைத்து, "உன் இடையை வரிந்துகட்டி உன் கையில் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இராமோத்து கிலயாதுக்குச் செல்.
2 அங்குச் சென்றதும் நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூவைத் தேடிக் கண்டுபிடி. அவனை அணுகி, அவனுடைய தோழர்களினின்று அவனைத் தனியே கூப்பிட்டு ஓர் உள்ளறைக்கு அழைத்துச் செல்.
3 அங்கே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து அவனை நோக்கி, 'ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்' என்று சொல்லி, அவன் மேல் எண்ணெய் வார்ப்பாய். அங்கே நில்லாது கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்துவிடு" என்றார்.


4 அவ்வாறே இறைவாக்கினனான அவ்விளைஞன் இராமோத்து கிலயாதுக்குச் சென்றான்.


5 அவன் அங்கு வந்ததும் படைத்தலைவர்கள் அமர்ந்திருந்ததைக் கண்டான். அவன் "தளபதியே! உம்மிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்" என்றான். அதற்கு ஏகூ, "எங்களுள் யாரிடம்?" என்று கேட்டான். அதற்கு அவன், "தளபதியே! உம்மிடம்தான்" என்றான்.
6 எனவே ஏகூ எழுந்து மாளிகைக்குள் சென்றான். இளைஞனோ அவனது தலையின்மேல் எண்ணெய் வார்த்து, "இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: 'ஆண்டவராகிய நான் என் மக்களாகிய இஸ்ரயேலுக்கு அரசனாக உன்னைத் திருப்பொழிவு செய்கிறேன். [1]
7 உன் தலைவன் ஆகாபின் குடும்பத்தை நீ அழிக்க வேண்டும். இங்ஙனம் ஈசபேலால் சிந்தப்பட்ட என் ஊழியரான இறைவாக்கினரின் இரத்தத்திற்கும் ஆண்டவராகிய என் எல்லா அடியவர்களின் இரத்ததிற்கும் நான் பழிவாங்குவேன்
8 இவ்வாறு ஆகாபின் குடும்பம் முழுவதும் அழியும். இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் அனைவரையும், அடிமைகளாயினும் உரிமை மக்களாயினும், வெட்டி வீழ்த்துவேன்.
9 இந்த ஆகாபின் குடும்பத்தை நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்தைப் போலும், அகியாவின் மகன் பாசாவின் குடும்பத்தைப் போலும் ஒழித்துக் கட்டுவேன்.
10 இஸ்ரியேல் நிலப்பகுதியில் ஈசபேலை நாய்கள் தின்னும். அவளைப் புதைக்க யாரும் வரமாட்டாக்கள்'"என்று கூறி கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டான். [2]


11 பின்பு ஏகூ தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனை நோக்கி, "நல்ல செய்திதானா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தது ஏன்?" என்று கேட்டனர். அதற்கு அவன், "அவன் யாரென்றும் அவன் சொன்னது என்னவென்றும் உங்களுக்குத் தெரியுமே!" என்றான்.
12 அதற்கு அவர்கள், "அது பொய்! உண்மையை எங்களுக்குத் தெரிவி" என்றனர். அப்போது ஏகூ, "அவன் என்னிடம் 'ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்' என்றான்" என்று பதிலளித்தான்.
13 இதைக் கேட்டவுடன் அவர்கள் அனைவரும் விரைந்து தம் போர்வையைக் கழற்றி அவற்றை வெறுமையாய் இருந்த படிகளில் விரித்து எக்காளம் ஊதி, "ஏகூவே அரசர்!" என்று முழங்கினர்.

இஸ்ரயேல் அரசன் யோராம் கொலை செய்யப்படல்[தொகு]


14 நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். அப்பொழுது யோராம் சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராக இஸ்ரயேலின் எல்லாப் படைகளோடும் இராமோத்து கிலயாதை முற்றுகையிட்டிருந்தான்.
15 அனால் சிரியாவின் மன்னன் அசாவேலோடு போரிடுகையில், சிரியரால் பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக அரசன் யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்திருந்தான். ஏகூ, "இதை நீங்கள் மனமார விரும்பினால், இஸ்ரயேலுக்குப் போய் யாரும் செய்தியைப் பரப்பாதபடி, இந்நகரினின்று எவரையும் தப்பி வெளியேற விடாதீர்" என்றான்.
16 பிறகு அவன் தேரின்மீது ஏறி இஸ்ரியேலுக்குச் சென்றான். ஏனெனில் அங்கே யோராம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். இச்சமயம் யூதாவின் அரசன் அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.


17 இஸ்ரியேலின் காவல்மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன், ஏகூ படையோடு வருவதைக் கண்டு, "படையொன்றைக் காண்கிறேன்" என்றான். அதற்கு யோராம், "ஒரு குதிரை வீரனைத் தயார் செய். அவனை அவர்களைச் சந்திக்குமாறு அனுப்பு. 'அமைதிக்காவா?' என்று அவன் கேட்கட்டும்" என்றான்.
18 அவ்வாறு குதிரை வீரன் ஒருவன் ஏகூவைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்று, "'அமைதிக்காகவா?' என்று அரசர் கேட்கச் சொன்னார்" என்றான். அதற்கு ஏகூ, "சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா" என்றான். அப்பொழுது காவலன், "தூதன் அவர்களைச் சென்றடைந்தான். ஆனால் இன்னும் திரும்பி வரவில்லை" என்று அறிவித்தான்.
19 அரசன் மற்றொரு குதிரை வீரனை அனுப்ப, அவன் அவர்கள் முன்பாக வந்து, "'அமைதிக்காகவா?' என்று அரசர் கேட்கச் சொன்னார்" என்றான். அதற்கு ஏகூ, "சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா" என்றான்.
20 காவலன் மீண்டும் "அவன் அவர்களைச் சென்றடைந்துவிட்டான். ஆனால் அவனும் இன்னும் திரும்பி வரவில்லை. வேறெவனோ தேரோட்டிக் கொண்டு வருகிறான். அது நிம்சியின் மகன் ஏகூவைப்போன்று உள்ளது. அவன்தான் பைத்தியக்காரன் போல் ஓட்டுவான்!" என்றான்.


21 உடனே யோராம், "தேரைப் பூட்டுங்கள்" என்று கூற, அவர்கள் அவனது தேரில் குதிரைகளைப் பூட்டினார்கள். இஸ்ரயேலின் அரசன் யோராமும் யூதாவின் அரசன் அகசியாவும் தம் தேரில் ஏறி ஏகூவைச் சந்திக்கச் சென்றனர்; அவனை இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் சந்தித்தனர்.
22 யோராம் ஏகூவைக் கண்டு, "ஏகூ! அமைதிக்காகவா வருகிறீர்?" என்று கேட்டான். அதற்கு அவன், "உன் தாய் ஈசபேலின் வேசித்தனமும் மாய வித்தைகளும் மிகுந்திருக்கும் வரை அமைதி எப்படி இருக்க முடியும்?" என்று மறுமொழி கூறினான்.


23 உடனே யோராம் கைகளால் கடிவாளத்தை இழுத்து, அகசியாவை நோக்கி, "அகசியா! சதி!" என்று சொல்லிக்கொண்டு தப்பி ஓட முயன்றான்.
24 உடனே ஏகூ தன் வலிமையோடு வில்லை வளைத்து யோராமின் புயங்கள் நடுவே அம்பினை எய்தான். அந்த அம்பு அவன் இதயத்தை ஊடுருவிச் செல்ல, அவன் தேரிலேயே சரிந்து விழுந்தான்.
25 ஏகூ குதிரைப்படைத் தலைவன் பித்காரை நோக்கி, "அவனைத் தூக்கி இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் எறிந்துவிடு. ஏனெனில் நாம் இருவரும் சேர்ந்து அவனுடைய தந்தை ஆகாபைத் தொடர்ந்து சென்றபோது அவனுக்கு எதிராக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:
26 'நேற்று நாபோத்தின் இரத்தத்தையும் அவன் பிள்ளைகளின் இரத்தத்தையும் கண்டேன். நான் கண்டதற்காக நாபோத்தின் இந்த நிலத்திலேயே உன்னைப் பழிவாங்குவது உறுதி' என்கிறார் ஆண்டவர். எனவே இப்பொழுது அவனைத் தூக்கி ஆண்டவரின் வாக்கிற்கிணங்க அந்த நிலப்பகுதியில் எறிந்துவிடு" என்றான். [3]

யூதா அரசன் அகசியா கொலை செய்யப்படல்[தொகு]


27 யூதாவின் அரசன் அகசியா இதைக் கண்டு பெத்தகான் சாலையில் தப்பி ஓடலானான். ஏகூ அவனைப் பின்தொடர்ந்து சென்று தன் ஆள்களிடம், "இவனையும் வெட்டி வீழ்த்துங்கள்" என்றான். அவர்களும் இபிலயாம் அருகே இருந்த கூர் மலைச்சரிவில் தேரிலிருந்த அவனைக் காயப்படுத்தினார்கள். அவனோ மெகிதோ வரை சென்று அங்கு இறந்தான்.
28 அவனுடைய அலுவலர் அவனது சடலத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று, தாவீதின் நகரில் அவனுடைய மூதாதையருடன் அவனது கல்லறையில் அடக்கம் செய்தனர்.
29 இதற்கிடையில் ஆகாபின் மகனான யோராம் ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டில் அகசியா யூதாவின் அரசனானான்.

ஈசபேல் கொலை செய்யப்படல்[தொகு]


30 ஏகூ இஸ்ரயேலுக்கு வந்து சேர்ந்ததைக் கேள்வியுற்ற ஈசபேல் தன் கண்களுக்கு மையிட்டு தன் தலைமுடியை அழகுபடுத்திக் கொண்டு பலகணி வழியாக எட்டிப் பார்த்தாள்.
31 ஏகூ நகர வாயிலில் நுழைந்த போது அவள், "உன் தலைவனைக் கொலை செய்து, சிம்ரிக்கு நிகர் ஆனவனே! சமாதான நோக்கோடுதான் வருகிறாயா?" என்று கேட்டாள்.
32 அவன் முகத்தை உயர்த்தி பலகணியைப் பார்த்து, "என் சார்பாக இருப்பது யார்? யார்?" என்றான். உடனே இரண்டு, மூன்று அண்ணகர் குனிந்து அவனைப் பார்த்தனர்.
33 ஏகூ, "அவளைக் கீழே தள்ளிவிடுங்கள்" என்றான். அவ்வாறே அவர்களும் அவளைத் தள்ளிவிட்டனர். அவளது இரத்தம் மதிற்சுவரிலும் குதிரைகள் மீதும் சிதறியது. மேலும் அக்குதிரைகள் அவளைக் காலால் மிதித்துக் கொன்றன.
34 அவன் உள்ளே சென்று உண்டு குடித்தபின், "நீங்கள் போய் அந்தச் சபிக்கப்பட்டவளைத் தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவள் ஓர் அரசன் மகள்" என்றான்.
35 அவர்கள் அவளை அடக்கம் செய்யச் சென்றபோது அவளுடைய மண்டைஓடு, கால்கள், உள்ளங்கைகள் தவிர வேறொன்றையும் அவர்கள் காணவில்லை.
36 எனவே அவர்கள் திரும்பி வந்து அதை அவனுக்கு அறிவித்தனர். அப்பொழுது அவன், "திஸ்பேயைச் சார்ந்தவரும் தம் ஊழியருமான எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே: [4]
37 இஸ்ரியேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும். ஈசபேலின் பிணம் இஸ்ரியேல் நிலப்பகுதியில் சாணத்தை பேன்று கிடப்பதைப் பார்த்த எவருமே 'இதுதான் ஈசபேல்' என்று கூற முடியாது" என்றான்.

குறிப்புகள்

[1] 9:6 = 1 அர 19:16.
[2] 9:10 = 1 அர 21:23.
[2] 9:26 = 1 அர 21:19.
[4] 9:36 = 1 அர 21:23.

அதிகாரம் 10[தொகு]

ஆகாபின் வழிமரபினர் கொல்லப்படல்[தொகு]

1 ஆகாபிற்குச் சமாரியாவில் எழுபது மைந்தர்கள் இருந்தனர். ஆதலால் ஏகூ சமாரியாவின் தலைவர்களுக்கும் இஸ்ரியேலின் பெரியோர்களுக்கும் ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் இதுவே:
2 "இம்மடல் உங்களை வந்தடைந்தவுடன் உங்கள் தலைவரின் மைந்தர்கள் உங்களோடு இருப்பதாலும், தேர்களும், குதிரைகளும் அரண்சூழ் நகரும் படைக்கலங்களும் உங்களிடமிருப்பதாலும்,
3 உங்கள் தலைவரின் மைந்தர்களுள் சிறந்தவனும் தகுதி உடையவனுமான ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுடைய தந்தையின் அரியணையில் அமர்த்தி, உங்கள் தலைவரின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடுங்கள்."
4 ஆனால் அவர்கள் மிகமிக அச்சமுற்று, "அவனை எதிர்த்து நிற்க, இரண்டு அரசர்களால் முடியவில்லையே! அப்படியிருக்க, நாம் எங்ஙனம் எதிர்த்து நிற்க கூடும்?" என்றனர்.
5 எனவே அரண்மனை மேற்பார்வையாளனும், நகரின் ஆளுநனும், பெரியோர்களும், ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களும், ஏகூவிடம் தூதனுப்பித் தெரிவித்ததாவது: "நாங்கள் உம் அடிமைகள். நீர் கட்டளையிடுவதை எல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கிறோம். நாங்கள் யாரையும் அரசனாக்கப் போவதில்லை. உமக்கு நல்லதென்று படுவதையே செய்தருளும்" என்று தெரிவித்தனர்.
6 அவன் மீண்டும் அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு மற்றொரு மடல் அனுப்பினான்: "நீங்கள் எனக்குக் கட்டுப்பட்டு எனக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தால், உங்கள் தலைவருடைய மைந்தர்களின் தலைகளைக் கொய்து, நாளை இதே நேரத்தில் என்னிடம் இஸ்ரியேலுக்குக் கொண்டு வாருங்கள்." அச்சமயம் அரசனின் மைந்தர் எழுபது பேரும் தங்களை வளர்த்து வந்த நகரப் பெரியோரோடுதான் இருந்தனர்.
7 அம்மடலை அவர்கள் பெற்றுக்கொண்டவுடன், அரசனின் மைந்தர்களைப் பிடித்து அந்த எழுபது பேரையும் கொன்று, அவர்களின் தலைகளைக் கூடைகளில் வைத்து ஏகூவிடம் இஸ்ரயேலுக்கு அனுப்பி வைத்தனர்.
8 தூதன் ஒருவன் அவனிடம் வந்து "அரச மைந்தர்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கின்றனர்" என்றான். அதற்கு அவன், "நாளைக் காலைவரை அவற்றை நகரின் நுழைவாயிலில் இரு குவியலாக வையுங்கள்" என்று சொன்னான்.
9 மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவன் வெளியே வந்து மக்கள் அனைவரின் முன்னிலையில் நின்றுகொண்டு கூறியது: "நீங்கள் குற்றமற்றவர்கள். என் தலைவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றவன் நான்தான். இவர்கள் எல்லாரையும் கொன்றது யார் தெரியுமா?
10 ஆகாபின் குடும்பத்திற்கு எதிராகக் கடவுள் உரைத்த வாக்கில் எதுவும் பொய்க்கவில்லையென்று இப்பொழுது அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஆண்டவர் தம் அடியான் எலிசாவின் மூலம் உரைத்ததை அவரே நிறைவேற்றினார்."
11 பின்னர் ஏகூ இஸ்ரியேலில் ஆகாபின் குடும்பத்தில் எஞ்சியிருந்த அனைவரையும் - அவனைச் சார்ந்த பெரியோர்கள், உற்ற நண்பர்கள் அர்ச்சகர்கள் அனைவரையும் - வெட்டி வீழ்த்தினான்; அவனைச் சார்ந்த எவனையும் விட்டு வைக்கவில்லை. [1]

யூதா அரசன் அகசியாவின் உறவினர் அழிதல்[தொகு]


12 பின்பு ஏகூ புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான். செல்லும் வழியில் அவன் இடையர்களின் பெத் ஏக்கதை அடைந்தான்.
13 அங்கு ஏகூ யூதாவின் அரசனான அகசியாவின் உறவினரைச் சந்தித்து, "நீங்கள் யார்?" என்று கேட்டான். அவர்கள், "நாங்கள் அகசியாவின் உறவினர். அரசரின் மைந்தர்களையும் பட்டத்தரசியின் மைந்தர்களையும் நலம் விசாரிக்க வந்துள்ளோம்" என்று மறுமொழி கூறினர்.
14 அவன், "இவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்று கட்டளையிட, அவன் ஆள்கள் அவர்களைப் பிடித்துப் பெத்ஏக்கதில் இருந்த குழியருகே வெட்டி வீழ்த்தினர். அவர்கள் நாற்பத்திரண்டு பேர்; அவர்களுள் எவனையும் விட்டுவைக்கவில்லை.

ஆகாபின் ஏனைய உறவினர் அழிதல்[தொகு]


15 அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போகும்போது தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருந்த இரேக்காபின் மகன் யோனதாபைக் கண்டு அவனுக்கு வாழ்த்துரைத்துக் கூறியது: "என் இதயம் உன் இதயத்தோடு இருப்பது போல், உன் இதயமும் நட்புறவு கொண்டுள்ளதா?" என்று கேட்டான். அதற்கு யோனதாபு "ஆம்" என்று பதிலுரைத்தான். அப்படியானால் "கை கொடு" என்றான். அவன் கை கொடுக்க ஏகூ அவனைத் தன்னோடு தேரில் ஏற்றிக் கொண்டான்.
16 மேலும் அவன் அவனை நோக்கி, "நீ என்னோடு வந்து ஆண்டவர்மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பார்!" என்றான். இவ்வாறு அவன் [2] அவனைத் தன்னோடு தேரில் பயணம் செய்யச் செய்தான்.
17 அவன் சமாரியாவுக்கு வந்தவுடன், எலிசாவுக்கு உரைத்த ஆண்டவர் வாக்கின்படி ஆகாபின் குடும்பத்தவருள் அங்கு எஞ்சியிருந்த அனைவரையும் அழித்தொழித்தான்.

பாகாலை வழிபட்டோர் அழிதல்[தொகு]


18 பிறகு ஏகூ மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை நோக்கி, "பாகாலுக்கு ஆகாபு சிறிதளவு ஊழியமே செய்தான். ஏகூவாகிய நானோ பேரளவு ஊழியம் செய்யப் போகிறேன்.
19 எனவே பாகாலின் வாக்குரைப்போர் அனைவரையும் அதற்கு ஊழியம் செய்யும் எல்லாரையும் அதன் அர்ச்சகர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களில் ஒருவரும் வரத் தவறக்கூடாது. ஏனெனில் நான் பாகாலுக்கு ஒரு மாபெரும் பலி செலுத்த வேண்டியிருக்கிறது. வராதவர் அனைவரும் உயிரிழப்பர்" என்றான். பாகாலுக்கு ஊழியம் செய்வோரை ஒழித்துக்கட்டும் நோக்கிலேதான் இவ்வாறு ஏகூ சூழ்ச்சி செய்தான்.
20 மேலும் ஏகூ, "பாகாலுக்கென்று ஒரு திருவிழா கொண்டாடுங்கள்" என்று ஆணையிட்டு, இஸ்ரயேல் நாடெங்கும் ஆள்களை அனுப்பி, பாகாலுக்கு ஊழியம் செய்தோர் அனைவரையும் வரவழைத்தான்.
21 அவர்களுள் எவனும் வரத்தவறவில்லை. அவர்கள் பாகாலின் கோவிலினுள் நுழைந்தனர். பாகாலின் கோவில் ஒருமுனை முதல் மறுமுனை வரை நிறைந்திருந்தது.
22 அப்பொழுது ஏகூ ஆடைப் பொறுப்பாளனிடம், "பாகாலின் ஊழியர்கள் அனைவருக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடு" என்றான். அவ்வாறே அவன் அவர்களுக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.
23 பிறகு ஏகூ இரேக்காபின் மகன் யோனதாபுடன் பாகாலின் கோவிலினுள் நுழைந்தான். அவன் பாகால் ஊழியர்களை நோக்கி, "உங்களிடையே ஆண்டவரின் அடியார்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பாருங்கள்! இங்கே பாகாலின் அடியார்கள் மட்டுமே இருக்கவேண்டும்" என்றான்.
24 பிறகு அவர்கள் பலிப்பொருள்களையும், எலிபலிகளையும் செலுத்த உள்ளே நுழைந்தார்கள். ஆனால் ஏகூ எண்பது காவலரை வெளியே நிறுத்தி வைத்து, "உங்கள் கையில் அளிக்கப்போகிற ஆள்களில் எவனையாவது நீங்கள் தப்பியோட விட்டால், அவனுக்குப் பதிலாக உங்கள் உயிரை இழப்பீர்கள்" என்று கூறியிருந்தான்.


25 எரிபலி முடிந்தவுடன் ஏகூ காவலர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி, "நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பி ஓடிவிடாமல், எல்லாரையும் வெட்டி வீழ்த்துங்கள்" என்றான். அதன்படியே காவலர்களும், படைத்தலைவர்களும் அவர்களை வாளுக்கு இரையாக்கி, அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்த பின், பாகால் கோவிலின் உள்ளறைக்குச் சென்றனர்.
26 அவர்கள் அங்கிருந்த பாகாலின் சிலைத் தூண்களை வெளியே கொண்டுவந்து எரித்துப்போட்டனர்.
27 இவ்வாறு பாகாலின் சிலைத் தூண்களை எரித்து, பாகாலின் கோவிலையும் இடித்து, அவ்விடத்தைக் கழிவறை ஆக்கினர்; இன்றுவரை அப்படியேதான் பயன்பட்டு வருகிறது.


28 இவ்வாறு ஏகூ இஸ்ரயேல் நாட்டினின்று பாகால் வழிபாட்டை அறவே ஒழித்தான்.
29 ஆயினும் இஸ்ரயேலரைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியினின்று ஏகூ விலகவுமில்லை; பெத்தேலிலும் தாணிலும் இருந்த பொற்கன்றுகளைக் கைவிடவுமில்லை. [3]
30 பின்பு ஆண்டவர் ஏகூவை நோக்கி, "என் பார்வையில் செம்மையானதை நீ நன்கு செய்து முடித்ததாலும், ஆகாபின் குடும்பத்தினர்க்கு எதிராக நான் விரும்பியவற்றையெல்லாம் நிறைவேற்றினதாலும், உன் புதல்வர்கள் இஸ்ரயேலின் அரியணையில் நான்காம் தலைமுறைவரை வீற்றிருப்பர்" என்றார்.
31 ஆனால் ஏகூ இஸ்ரயேலின் கடவுளாகிய தன் ஆண்டவரின் சட்டத்தைத் தன் முழு இதயத்தோடு பின்பற்றவில்லை. அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய எரோபவாமின் பாவ வழியினின்று விலகவில்லை.

ஏகூவின் இறப்பு[தொகு]


32 அக்காலத்தில், ஆண்டவர் இஸ்ரயேல் நாட்டின் அளவைக் குறைக்கத் தொடங்கினர். அசாவேல் அதன் எல்லைப் பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றலானான்.
33 காத்து, ரூபன், மனாசே ஆகிய குலங்களுக்குரிய, யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கிலயாது நாடு முழுவதிலும், அர்னோன் பள்ளத்தாக்கிலுள்ள அரோயேர் முதல் கிலயாது, பாசான் நாடுகள் வரையிலும் அவன் வெற்றி பெற்றான்.


34 ஏகூவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் வீரச் செயல்கள் யாவும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
35 ஏகூ தன் மூதாதையருடன் துயில் கொண்டான். சமாரியா நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோவகாசு அரசனானான்.
36 ஏகூ சமாரியாவிலிருந்து கொண்டு இருபத்தெட்டு ஆண்டுகள் இஸ்ரயேலை ஆட்சி செய்தான்.

குறிப்புகள்

[1] 10:11 = ஓசே 1:4.
[2] 10:16 'அவர்கள்' என்பது எபிரேய பாடம்.
[3] 10:29 = 1 அர 12:28-30.


(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை