திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
யூதா அரசர் எசேக்கியா நோயிலிருந்து நலம் பெறுகிறார் (நடு ஓவியம்). ஓவியர்: யாக்கோப் டெ பாக்கர் (16ஆம் நூற்றாண்டு). காப்பிடம்: கெண்ட், பெல்சியம்.

2 அரசர்கள் (The Second Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

எசேக்கியா எசாயாவிடம் திருவுளம் கேட்டல்[தொகு]

(எசா 37:1-7)

1 அரசர் எசேக்கியா இதைக் கேட்டு தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு ஆண்டவரின் இல்லத்தினுள் நுழைந்தார்.
2 அரண்மனையின் மேலதிகாரியான எலியாக்கிமையும், எழுத்தன் செபுனாவையும், குருக்களில் முதியோரையும் சாக்கு உடை உடுக்கச் செய்து ஆமோசின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பினார்.
3 அவர்கள் அவரிடம், "எசேக்கியா கூறுவது இதுவே: இன்று துன்பமும் கண்டனமும் அவமானமும் மிக்க நாள். பிள்ளைகளைப் பெற்றெடுக்க நேரம் வந்துவிட்டது; ஆனால் பெற்றெடுக்கவோ வலிமையில்லை.
4 வாழும் கடவுளைப் பழித்து இகழும்படி அசீரிய மன்னனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே சொன்னவற்றையெல்லாம் உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருப்பார்! அச்சொற்களை முன்னிட்டு உம் கடவுளாகிய ஆண்டவர் அவனைத் தண்டிக்க வேண்டும். நீரோ இன்னும் இங்கு எஞ்சியிருப்போர்க்காக மன்றாடும்" என்றனர்.
5 அரசர் எசேக்கியாவின் அலுவலர் எசாயாவிடம் வந்தபொழுது,
6 எசாயா அவர்களை நோக்கி, "உங்கள் தலைவனிடம் இவ்வாறு சொல்லுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னனின் கைக்கூலிகள் என்னை இகழ்ந்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அஞ்சவேண்டாம்.
7 இதோ, நான் அவனிடம் ஓர் ஆவியை அனுப்புவேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பி போய்விடுவான். அவனது நாட்டில் வாளால் வெட்டுண்டு அவன் இறக்கும்படி செய்வேன்" என்றார்.

அசீரியர் மீண்டும் அச்சுறுத்தல்[தொகு]

(எசா 37:8-20)


8 அவ்வாறே, 'அசீரிய மன்னன் இலாக்கிசை விட்டு வெளியேறிவிட்டான்' என்று கேள்விப்பட்டு அங்கிருந்து கிளம்பிய இராப்சாக்கே தன் மன்னன் லிப்னாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.
9 அப்பொழுது, அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படைதிரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று எசேக்கியாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி,
10 "யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: 'எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது' என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்துவிடாதே.
11 இதோ! அசீரியா மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?
12 என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசான், ஆரான், இரட்சேபு, ஏதேனியர் வாழ்ந்த தெலாசர் ஆகியவற்றை அந்நாடுகளின் தெய்வங்களால் விடுவிக்க முடிந்ததா?
13 ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம் நகர், ஏனா, இவ்வா இவற்றின் மன்னர்கள் எங்கே?" என்று கூறியிருந்தான்.


14 எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.
15 மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: "கெருபுகள்மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! [*]
16 ஆண்டவரே! நீர் செவி சாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக!
17 ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்!
18 அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே அவற்றை அழிக்க முடிந்தது.
19 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்."

எசாயா எசேக்கியாவுக்கு விடுத்த செய்தி[தொகு]

(எசா 37:21-38)


20 அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன்.


21 அவனக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னி மகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள்.


22 யாரை நீ பழித்து இகழ்ந்தாய்? யாருக்கு எதிராய்க் குரல் எழுப்பினாய்? யாரை நீ இறுமாப்புடன் நோக்கினாய்? இஸ்ரயேலின் புனிதமானவரை அன்றோ!


23 நீ உன் தூதர்மூலம் என் தலைவரைப் பழித்துரைத்து, 'எண்ணற்ற என் தேர்களோடு நான் மலையுச்சிகளுக்கு லெபனோனின் சிகரங்களுக்கு ஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும் அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன். அதன் காடுகளின் மிக அடர்ந்த பகுதியான கடையெல்லைவரை சென்றேன்.


24 நான் அயல்நாடுகளில் கிணறு வெட்டி நீர் பருகினேன். எகிப்தின் நதிகளையெல்லாம் என் உள்ளங்கால்களினால் வற்றச் செய்தேன்' என்றாய்!


25 நீ கேட்டதில்லையோ? நான் தான் பல நாள்களுக்கு முன்பே இதை முடிவு செய்தேன். நான்தான் தொன்று தொட்டே இதைத் திட்டமிட்டேன். அரண்சூழ் நகர்களைப் பாழடைந்த கற்குவியலாக நீ ஆக்க வேண்டுமென்பதை இப்பொழுது நான்தான் நிறைவேறச் செய்தேன்.


26 அவற்றின் குடிமக்கள் வலிமை இழந்து கலக்கமுற்று அவமானமடைந்தனர்; வயல்வெளிப் புல் போலவும், கூரைகளில் முளைத்து வளருமுன்னே பட்டுப்போகும் பச்சைப் பூண்டு போலவும் ஆயினர்.


27 நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும் எனக்கு எதிராக நீ பொங்கி எழுவதையும் நான் அறிவேன்.


28 நீ எனக்கு எதிராகப் பொங்கி எழுந்தாலும் உன் ஆணவம் என் செவிகளுக்கு எட்டி உள்ளதாலும், உன் மூக்கில் வளையத்தையும் உன் வாயில் கடிவாளத்தையும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விரட்டுவேன்!


29 எசேக்கியா! இதோ உனக்கு ஓர் அடையாளம் தருகிறேன்; இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்; அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்; ஆனால் மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்; திராட்சைச் செடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பாய்.
30 யூதா வீட்டில் எஞ்சியவை எல்லாம் கீழே வேரூன்றி மேலே பயன் அளிக்கும்.
31 ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!
32 ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழையமாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத்தளம் எழுப்ப மாட்டான்.
33 அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர்.
34 இந்நகரை நான் பாதுகாப்பேன்; என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்."


35 அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர்.
36 எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.
37 தன் தெய்வமாகிய நிஸ்ரோக்கின் கோவிலில் அவன் வழிபாடு செய்துகொண்டிருந்த பொழுது, அவன் புதல்வர்களாகிய அதிரம் மெலக்கும், சரேத்சரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அரராத்து நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டனர். அவனுடைய மகன் ஏசகத்தோன் அவனுக்குப்பின் அரசன் ஆனான்.

குறிப்பு

[*] 19:15 = விப 25:22.

அதிகாரம் 20[தொகு]

அரசன் எசேக்கியாவின் நோய் குணமாதல்[தொகு]

(எசா 38:1-8,21-22; 2 குறி 32:24-26)

1 அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்" என்றார்.
2 எசேக்கியா சுவர்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு
3 ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே! நான் எப்படி உம் திருமுன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொண்டேன் என்பதையும், உமது பார்வையில் நேர்மையானதையே செய்தேன் என்பதையும் நினைத்தருளும்" என்று வேண்டுதல் செய்து கதறி அழுதார்.
4 எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று:
5 "நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, 'உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய்.
6 உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும் உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்' என்று சொல்."
7 அப்பொழுது எசாயா, "ஓர் அத்திப் பழ அடை கொண்டு வாருங்கள்" என்றார். அவர்களும் அவ்வாறு கொண்டுவந்து அவர் குணமடையும்படி அதைக் கட்டியின்மேல் வைத்தனர்.
8 எசேக்கியா எசாயாவை நோக்கி, "ஆண்டவர் எனக்கு நலம் அளிப்பார் என்பதற்கும், மூன்றாம் நாள் நான் கோவிலுக்குச் செல்வேன் என்பதற்கும் அவர் எனக்கு என்ன அடையாளம் கொடுப்பார்?" என்று கேட்டார்.
9 அதற்கு எசாயா, "ஆண்டவர் தாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது: இப்பொழுது நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போகவேண்டுமா? பின்னோக்கி வர வேண்டுமா?" என்று கேட்டார்.
10 அதற்கு எசேக்கியா, "நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போவது எளிது. எனவே நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வர வேண்டும்" என்றார்.
11 அப்பொழுது இறைவாக்கினர் எசாயா ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் ஆகாசின் நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வரச் செய்தார்.

பாபிலோனிலிருந்து தூதர் வருதல்[தொகு]

(எசா 39:1-8)


12 அக்காலத்தில் பாபிலோனியரின் மன்னன் பலதானின் மகன் மெரோதாக்கு, எசேக்கியா நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு, அவனுக்கு மடலும் அன்பளிப்பும் அனுப்பி வைத்தான்.
13 எசேக்கியா அவர்களை வரவேற்று,[1] தம் கருவூலம் அனைத்தையும் வெள்ளியையும், பொன்னையும், நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் படைக்கலக் கூடத்தையும் சேமிப்புக் கிடங்கில் காணப்பட்ட எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் காட்டினார். தம் அரசு முழுவதிலும், தம் அரண்மனையிலும் இருந்தவற்றில் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை.
14 இறைவாக்கினர் எசாயா அரசர் எசேக்கியாவிடம் வந்து, "அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?" என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, "வெகுதூரத்திலிருக்கும் நாடான பாபிலோனிலிருந்து வந்தார்கள்" என்று மறுமொழி கூறினார்.
15 அவர், "உம் அரண்மனையில் எதைப் பார்த்தானர்?" என்று கேட்டார். அதற்கு எசேக்கியா "என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தனர். என் சேமிப்புக் கிடங்கில் நான் அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை" என்றார்.
16 அப்பொழுது எசாயா எசேக்கியாவை நோக்கி, "ஆண்டவர் கூறுவதைக் கேளும்:
17 இதோ! நாள்கள் வரும்! அப்போது உன் அரண்மனைப் பொருள்கள் அனைத்தும், உன் மூதாதையர் இன்றுவரை சேகரித்து வைத்துள்ள யாவும் ஒன்று விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும். [2]
18 மேலும் நீ பெற்றெடுத்துள்ள உன் சொந்தப் புதல்வர் சிலர் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பர்" என்று சொன்னார். [3]
19 அப்பொழுது எசேக்கியா எசாயாவை நோக்கி, 'ஆண்டவரின் வார்த்தையாக நீர் கூறியது நல்வாக்கே!' என்றார். ஏனெனில் அவர் தம் வாழ்நாள்களில் அமைதியும் பாதுகாப்பும் இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

எசேக்கியா ஆட்சியின் முடிவு[தொகு]

(2 குறி 33:1-20)


20 எசேக்கியாவின் பிற செயல்களும், அவரது பேராற்றலும், அவர் குளமொன்று வெட்டி கால்வாய் அமைத்துத் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
21 எசேக்கியா தம் மூதாதையருடன் துயில் கொண்ட பின், அவருக்குப் பதிலாக அவர் மகன் மனாசே அரசன் ஆனான்.

குறிப்புகள்

[1] 20:13 'அவர்களைப் பற்றி கேள்வியுற்ற போது' என்பது எபிரேய பாடம்.
[2] 20:17 = 2 அர 24:13; 2 குறி 36:10.
[3] 20:18 = 2 அர 24:14-15; தானி 1:1-7.


(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை