திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அரசர் யோசியா காலத்தில் திருச்சட்ட நூல் கண்டெடுக்கப்படல் (2 அர 22). மர ஓவியம் செதுக்கியவர்: ஜூலியுஸ் ஷ்னோர் (1794-1872). இடம்: செருமனி.

2 அரசர்கள் (The Second Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

யூதா அரசன் மனாசே[தொகு]

(2 குறி 33:1-20)

1 மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். எப்சிபா என்பவரே அவன் தாய்.
2 இஸ்ரயேலர் முன்னிருந்து ஆண்டவர் விரட்டிய வேற்றினத்தாரின் அருவருப்புகளை அவன் பின்பற்றி ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். [1]
3 அவன் அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த தொழுகை மேடுகளை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்; இஸ்ரயேல் அரசன் ஆகாசு செய்தது போல், அசேராக் கம்பங்களை நிறுவினான்; வானத்துப் படைகளையெல்லாம் வணங்கி வழிபட்டான்.
4 'எருசலேமில் என் பெயர் விளங்கச் செய்வேன்' என்று ஆண்டவர் கூறியிருந்த அவரது கோவிலில் அவன் பலிபீடங்களை நிறுவினான். [2]
5 ஆண்டவரின் இல்லத்தின் இரு முற்றங்களிலும் வானத்துப் படைகளுக்கெல்லாம் அவன் பலிபீடங்களைக் கட்டினான்.
6 மேலும் அவன் தன் மகனை நெருப்பில் பலியாக்கினான்; குறி கேட்பதிலும் சகுனம் பார்ப்பதிலும் நம்பிக்கை கொண்டு குறி கூறுபவர்களோடும், சகுனம் பார்ப்பவர்களோடும் தொடர்பு கொண்டு ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து ஆண்டவருக்குச் சினமூட்டினான்.


7 மேலும், அவன் அசேராவின் செதுக்கிய சிலையை ஆண்டவரின் இல்லத்தில் நிறுவினான். இவ்விடத்தைப் பற்றி ஆண்டவர் தாவீதிடமும் அவருடைய மகன் சாலமோனிடமும் பின்வருமாறு கூறினார்: "இக்கோவிலிலும் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேமிலும், எனது பெயரை என்றென்றும் விளங்கச் செய்வேன்.
8 நான் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்கள் பின்பற்றி, என் அடியான் மோசே அவர்களுக்கு அளித்த சட்டம் முழுவதையும் கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களை நான் அவர்கள் மூதாதையருக்கு அளித்த நாட்டிலிருந்து வெளியேறி அலைந்து திரிய விடமாட்டேன்." [3]
9 ஆனால், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் மனாசே அவர்களை வழி தவறி நடக்கச் செய்தான். இஸ்ரயேலர், தம் முன்னிலையில் ஆண்டவர் அழித்த வேற்றினத்தாரைவிட அதிகமாக, தீயன செய்தனர்.


10 ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:
11 "யூதாவின் அரசன் மனாசே அருவருப்பான வழக்கங்களில் ஈடுபட்டு தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்தவற்றை விட மிகவும் தீயன செய்தான். சிலைகளை வழிபடச் செய்து யூதாவைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கினான்.
12 எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ! நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும், கேட்கும் ஒவ்வொருவருடைய இரு காதுகளும் அதிரும் அளவுக்கு, கேடு வரச் செய்வேன்.
13 சமாரியாவுக்கு எதிராக நான் பிடித்த அளவுநூலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராக நான் பிடித்த தூக்குநூலையும் எருசலேமுக்கு எதிராகப் பிடிப்பேன். ஒருவர் உள்ளும் புறமும் தட்டினைத் துடைத்துத் தூய்மையாக்குவதுபோல நானும் எருசலேமைத் துடைத்துத் தூய்மையாக்குவேன்.
14 எனவே எனது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரைக் கைவிட்டு, அவர்களின் பகைவரிடம் ஒப்புவிப்பேன். அப்போது அவர்கள் எதிரிகளுக்கெல்லாம் இரையாகவும் கொள்ளைப் பொருளாகவும் இருப்பர்.
15 ஏனெனில் அவர்களின் மூதாதையர் எகிப்திலிருந்து வெளிவந்த நாள்முதல் எகிப்திலிருந்து வெளிவந்த நாள்முதல் இன்றுவரை இடைவிடாமல் என் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து எனக்குச் சினமூட்டியுள்ளனர்."


16 மனாசே, எருசலேமில் ஒருமுனை முதல் மறு முனைவரை நிரம்பும் படியாக, மிகுதியான மாசற்றவரின் குருதியைச் சிந்தினான். இவ்வாறு அவன் பாவம் செய்ததோடு யூதா மக்களை ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ய வைத்துப் பாவத்துக்கு உள்ளாக்கினான்.
17 மனாசேயின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் அவன் செய்த பாவமும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
18 மனாசே தன் மூதாதையரோடு துயில் கொண்டு, 'ஊசாப் பூங்கா' என்ற அவனது அரண்மனைப் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் ஆமோன் அரசனானான்.

யூதா அரசன் ஆமோன்[தொகு]

(2 குறி 33:21-25)


19 ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு, அவன் ஈராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். யோற்றுபாவைச் சார்ந்த ஆரூசின் மகள் மெசுல்லமேத்து என்பவளே அவன் தாய்.
20 அவன் தன் தந்தை மனாசேயைப் போலவே ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
21 தன் தந்தை நடந்த வழியிலெல்லாம் அவனும் நடந்தான்; தன் தந்தை வணங்கி வழிபட்டு வந்த சிலைகளை அவனும் வழிபட்டான்.
22 அவன் தன் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் பறக்கணித்தான்; ஆண்டவரின் வழியில் நடக்கவே இல்லை.


23 ஆமோனுடைய அலுவலர் அவ்வரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவனை அவன் மாளிகையிலேயே கொலை செய்தனர்.
24 ஆனால் நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தவர்களையெல்லாம் கொன்றுவிட்டு, அவனுடைய மகன் யோசியாவை அவனுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
25 ஆமோனின் பிற செயல்கள், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
26 ஊசாப் பூங்காவிலிருந்த அவனது கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோசியா அவனுக்குப் பதிலாக அரசன் ஆனார்.

குறிப்புகள்

[1] 21:2 = எரே 15:4.
[2] 21:4 = 2 சாமு 7:13.
[3] 21:7-8 = 1 அர 9:3-5; 2 குறி 7:12-18.

அதிகாரம் 22[தொகு]

யூதா அரசர் யோசியா[தொகு]

(2 குறி 34:1-2)


1 யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு. அவர் முப்பத்தொன்று ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார். [1]
2 பொட்சகாதைச் சார்ந்த அதாயாவின் மகள் எதிதா என்பவரே அவருடைய தாய். அவர் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தார். தம் தந்தை தாவீது நடந்த எல்லா வழிகளிலும் வடப்புறமோ இடப்புறமோ பிறழாது அவரும் நடந்தார்.

திருச்சட்டநூல் கண்டெடுக்கப்படல்[தொகு]

(2 குறி 38:8-28)


3 தமது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அரசர் யோசியா, மெசுல்லாமின் புதல்வன் அட்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனை ஆண்டவரின் இல்லத்துக்கு அனுப்பிக் கூறியது:
4 "நீ தலைமைக் குரு இல்க்கியாவிடம் சென்று, ஆண்டவரின் இல்லத்திற்கென மக்களிடமிருந்து வாயிற் காப்போர் பெற்றுக்கொண்ட எல்லாப் பணத்தையும் மொத்தக் கணக்கெடுக்கச் சொல்.
5 அவர்கள் அப்பணத்தை ஆண்டவரின் இல்லத்தில் பழுது பார்க்க நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரின் கையில் ஒப்புவிக்கட்டும். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்க்கும் வேலைக்காரர்களுக்குக் கொடுக்கட்டும்.
6 அதாவது தச்சர்கள், கொத்தர்கள், கட்டடச் சிற்பிகளுக்குக் கொடுக்கட்டும்.
7 பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்." [2]


8 தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, "ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்" என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.
9 பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, "அரசே! உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர்" என்று சொன்னான்.
10 மேலும் அவன் அரசரிடம், "குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார்" என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.


11 அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.
12 பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, "அரசர் இட்ட கட்டளை இதுவே:
13 நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது" என்றார்.


14 குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினளிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சாந்தவர்; அர்கசின் புதல்வனான திக்வாவின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி.
15 அவர் அவர்களை நோக்கி, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியது:
16 ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.
17 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்; அதைத் தணிக்க இயலாது.
18 ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கேட்ட வார்த்தைகளைப் பொறுத்தமட்டில்,
19 'இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிராக, இவர்கள் அழிவிற்கும், சாபத்திற்கும் உரியவர்' என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி, ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தி உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவி கொடுத்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
20 ஆதலால் இவ்விடத்தின் மேல் நான் வருவிக்க இருக்கும் தீமைகளையெல்லாம் உன் கண்ணால் காணாதபடி, உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன். நீ மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய்" என்றார். அவர்கள் திரும்பிச்சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.

குறிப்புகள்

[1] 22:1 = எரே 3:6.
[2] 22:7 = 2 அர 12:15.


(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 23 முதல் 25 வரை