திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை
2 அரசர்கள் (The Second Book of Kings)
[தொகு]அதிகாரங்கள் 3 முதல் 4 வரை
அதிகாரம் 3
[தொகு]இஸ்ரயேலுக்கும் மோவாபுக்கும் இடையே போர்
[தொகு]
1 யூதாவின் அரசன் யோசபாத்தினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் சமாரியாவில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான்.
2 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்த போதிலும், தன் தாய் தந்தையைப் போல் அவ்வளவு தீயவனாய் இல்லை. ஏனெனில், அவன் தன் தந்தை செய்து வைத்திருந்த பாகால் சிலைத்தூணை அகற்றி விட்டான்.
3 எனினும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் தீயவழியில் அவனும் நிலையாய் நின்றான். அதை விட்டு அவன் விலகவில்லை.
4 இது நிற்க, மோவாபிய மன்னன் மேசா ஏராளமான ஆட்டு மந்தைகளை வளர்த்து வந்தான். அவன் இஸ்ரயேல் அரசனுக்கு ஆண்டுக்கு ஒர் இலட்சம் செம்மறிகளையும் ஓர் இலட்சம் ஆட்டுக்கிடாய்களின் கம்பளி உரோமத்தையும் கப்பமாகக் கொடுத்து வந்தான்.
5 ஆனால் ஆகாபு இறந்தபின், மோவாபிய மன்னன் இஸ்ரயேல் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
6 எனவே அரசன் யோராம் உடனே இஸ்ரயேலர் அனைவரையும் சமாரியாவில் ஒன்று திரட்டினான்.
7 அவ்வாறு அவன் செல்கையில், "மோவாபிய மன்னன் எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்கிறான். எனவே, மோவாபுக்கு எதிராய்ப் போரிட என்னோடு வருவீரா?" என்று கேட்குமாறு யூதாவின் அரசன் யோசபாத்திடம் ஆளனுப்பினான். அவன் மறுமொழியாக, "வருகிறேன். உம்மைப்போலவே நானும் தயார்! உம் மக்களைப் போலவே என் மக்களும்; உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும்" என்றான்.
8 பின்பு அவன், "எவ்வழியே சென்று நாம் தாக்கலாம்?" என்று கேட்டான். அதற்கு அவன், "ஏதோம் பாலைநில வழியாகப் போவோம்" என்று பதிலளித்தான்.
9 அவ்வாறே இஸ்ரயேல் அரசன் யூதாவின் அரசனோடும், ஏதோமின் மன்னனோடும் புறப்பட்டான். அவர்கள் ஏழு நாள் சுற்று வழியில் சென்றபின், படை வீரர்களுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த விலங்கினங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
10 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன், "அந்தோ! அரசர்களாகிய நம் மூவரையும் ஆண்டவர் இங்கே கூட்டி வந்தது மோவாபியர் கையில் ஒப்புவிக்கவா?" என்றான்.
11 அப்பொழுது, யோசபாத்து, "ஆண்டவரின் விருப்பத்தைத் தெரிவிக்கக் கூடிய இறைவாக்கினர் யாரும் இங்கு இல்லையா?" என்று கேட்டான். இஸ்ரயேல் அரசனின் பணியாளன் ஒருவன், "சாபாற்றின் மகன் எலிசா இங்கே இருக்கிறார். இவர் எலியா கைகளைக் கழுவும்போது தண்ணீர் ஊற்றி வந்தவர்" என்றான்.
12 யோசபாத்து, "ஆம், ஆண்டவரின் வாக்கு அவரிடம் உள்ளது" என்றான். எனவே இஸ்ரயேலின் அரசன், யோசபாத்து, ஏதோமின் மன்னன் ஆகிய மூவரும் எலிசாவிடம் சென்றனர்.
13 எலிசா இஸ்ரயேல் அரசனிடம், "உனக்கும் எனக்கும் என்ன உறவு? உன் தந்தையின் இறைவாக்கினரையும், உன் தாயின் இறைவாக்கினரையும் நாடிச் செல்!" என்றார். ஆனால், இஸ்ரயேலின் அரசன், "இல்லை, ஆண்டவர்தாம் அரசர்களாகிய எங்கள் மூவரையும், மோவாபியர் கையில் ஒப்புவிக்கும்படி இங்கே கூட்டி வந்துள்ளார்" என்றான்.
14 எலிசா அவனை நோக்கி, "நான் பணியும் படைகளின் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! யூதாவின் அரசன் யோசபாத்தின் மீது நான் பெருமதிப்புக் கொண்டுள்ளேன். இல்லையேல், உன் முகத்தில் விழித்திருக்கவே மாட்டேன். ஒரு பாணனை அழைத்து வாருங்கள்" என்றார்.
15 அவ்வாறே பாணன் ஒருவன் வந்து யாழிசைக்கவே ஆண்டவரது ஆற்றல் எலிசாவின் மேல் இறங்கியது.
16 அப்பொழுது அவர், "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்தப் பள்ளத்தாக்கு எங்கும் குழிகளை வெட்டுங்கள்.
17 ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் காற்றையோ மழையையோ காணப்போவதில்லை. ஆயினும் இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். நீங்களும், உங்கள் கால்நடைகளும், விலங்கினங்களும் நீர் அருந்துவீர்கள்.
18 இது ஆண்டவரது பார்வையில் எளிதான ஒன்று. அவர் மோவாபியரை உங்கள் கையில் ஒப்புவிப்பார்.
19 நீங்கள் எல்லா அரண்சூழ் நகர்களையும் எல்லா மாநகர்களையும் முறியடிப்பீர்கள். நீங்கள் எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்துவீர்கள். எல்லா நீருற்றுகளையும் தூர்த்துவிடுவீர்கள். எல்லா நல்ல வயல்களையும் கல்லால் நிரப்பி விடுவீர்கள்" என்றார்.
20 மறுநாள் காலை, பலி செலுத்தும் நேரத்தில் இதோ! தண்ணீர் ஏதோம் திக்கிலிருந்து ஓடி வந்தது! நாடு தண்ணீரால் நிரம்பியது.
21 'தங்களோடு போர் புரிய அரசர்கள் வருகிறார்கள்' என்று மோவாபியர் அனைவரும் கேள்வியுற்று, படைக்கலம் தாங்கக் கூடிய இளையோர், முதியோர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லையில் அணிவகுத்து நின்றனர்.
22 மோவாபியர் காலையில் எழுந்த பொழுது, கதிரவனின் ஒளி தண்ணீர்மீது ஒளிர்ந்தது. மறுபக்கம் இருந்த அவர்களுக்குத் தண்ணீர் இரத்த வெள்ளமாயத் தோன்றியது.
23 உடனே அவர்கள், "அது இரத்தம்! அந்த அரசர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் மற்றவரை வெட்டி வீழ்த்திவிட்டனர். மோவாபியரே! வாருங்கள்! கொள்ளையடிப்போம்!" என்றனர்.
24 ஆனால் அவர்கள் இஸ்ரயேலின் பாசறைக்குள் நுழைந்தவுடன், இஸ்ரயேலர் எழுந்து மோவாபியரைத் தாக்கினர். இவர்கள் அவர்கள் முன்னிலையிலிருந்து பாய்ந்து தப்பி ஓடினர். ஆயினும், இஸ்ரயேலர் துரத்திச் சென்று மோவாபியரை வெட்டி வீழ்த்தினர்.
25 பின்னர் அவர்கள் நகர்களைத் தகர்த்து, எல்லா நல்ல நிலங்கள் மீதும் ஆளுக்கு ஒரு கல் வீசி நிரப்பினர். எல்லா நீருற்றுக்களையும் தூர்த்து, எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். அரண் சூழ்ந்த கீர்அரசேத்து மட்டும் எஞ்சி நின்றது. அந்நகரையும் கவண் வீசுவோர் வளைத்து அழித்தனர்.
26 தனக்கு எதிராகப் போரின் முடிவு இருந்ததை அறிந்த மோவாபிய மன்னன், வாளேந்திய எழுநூறு வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, ஏதோம் மன்னனை எதிர்க்கச் சென்றான். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
27 பின்னர், அவன் தனக்குப்பின் அரசாளும் உரிமையுள்ள தன் தலைமகனை இட்டுச் சென்று, மதிலின்மேல் அவனை எரிபலியாக ஒப்புக் கொடுத்தான். இஸ்ரயேலர் தங்களுக்கு எதிராகக் கடுஞ்சினம் மூள்வதைக் கண்டு, அவனை விட்டு அகன்று தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.
அதிகாரம் 4
[தொகு]ஏழைக் கைம்பெண்ணுக்கு உதவி செய்தல்
[தொகு]
1 அப்பொழுது இறைவாக்கினர் குழுவினரைச் சார்ந்த ஒருவரின் மனைவி எலிசாவிடம் வந்து கதறி அழுது, "உம் அடியவனாகிய என் கணவர் இறந்து விட்டார். அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர் என்பது உமக்குத் தெரியும். அவருடைய கடன்காரன் என் இரு பிள்ளைகளையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக் கொள்ள வந்திருக்கிறான்" என்றார்.
2 எலிசா அவரை நோக்கி, "நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல்" என்றார். அதற்கு அவர் "உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை" என்றார்.
3 எலிசா, "நீ சுற்றிலும் சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டுக் வாங்கிக் கொள்.
4 நீ உன் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்துவை" என்றார்.
5 அவ்வாறே, அவரும் தம் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக் கொண்டார். அவர்கள் எடுத்துத் தந்த கிண்ணங்களில் அவர் எண்ணெய் ஊற்றினார்.
6 எல்லாப் பாத்திரங்களும் நிறைந்தபின் அவர் தம் மகன் ஒருவனை நோக்கி, "இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா" என்றார். அதற்கு அவன், "வேறு பாத்திரம் இல்லை" என்றான். அத்தோடு எண்ணெய் வருவதும் நின்றுவிட்டது.
7 கடவுளின் அடியவரிடம் அவர் வந்து அதை அறிவித்தார். அதற்கு அவர், "நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் புதல்வரும் பிழைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
எலிசாவும் சூனேமியப் பெண்ணும்
[தொகு]
8 ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார்.
9 அவர் தம் கணவனை நோக்கி, "நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன்.
10 ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும்" என்றார்.
11 ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார்.
12 பின்பு அவர் தம் பணியாளன் கேகசியை நோக்கி, "அந்தச் சூனேம் பெண்ணைக் கூப்பிடு" என்றார்.
13 அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, "நீ அவளிடம் 'அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?' என்று கேள்" என்றார். அதற்கு அவர், "என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன்" என்று பதிலளித்தார்.
14 மீண்டும் எலிசா, "வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்?" என்று கேட்டார். அதற்குக் கேகசி, "அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது" என்றான்.
15 எலிசா, "அவளை இங்கு வரச் சொல்" என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார்.
16 எலிசா அவரை நோக்கி, "அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார். அதற்கு அவர், "என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம்" என்றார். [1]
17 எலிசா, அப்பெண்ணுக்கு முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
18 குழந்தையும் வளர்ந்தான். ஒரு நாள் அவன் அறுவடை செய்வோருடன் இருந்த தன் தந்தையிடம் சென்றான்.
19 அவன் தன் தந்தையிடம், "ஐயோ! தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது" என்று சொன்னான். தந்தையும் தம் வேலையாள் ஒருவனிடம், "நீ இவனை இவன் தாயிடம் தூக்கிக் கொண்டு போ" என்றார்.
20 அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.
21 அவரோ கடவுளுடைய அடியவரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினார். பின்னர் கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தார்.
22 தம் கணவனை அழைத்து அவரிடம், "வேலைக்காரன் ஒருவனை ஒரு கழுதையுடன் என்னோடு அனுப்பி வைக்கவும். கடவுளின் அடியவரிடம் நான் உடனே போக வேண்டும். விரைவில் திரும்பி வருகிறேன்" என்றார்.
23 அதற்கு அவருடைய கணவர், "நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை; ஓய்வு நாளும் இல்லையே!" என்றார். அதற்கு அப்பெண், "நல்லதற்குத் தான்" என்றார்.
24 கழுதைக்குச் சேணமிடச் செய்தபின், அவர் தம் வேலையாளை நோக்கி, "கழுதையை வேகமாக ஓட்டிச் செல். நான் சொன்னால் ஒழிய, அதன் வேகத்தைக் குறைக்காதே!" என்றார்.
25 அவ்வாறே அவர் புறப்பட்டு, கர்மேல் மலையிலிருந்து அடியவரிடம் வந்து சேர்ந்தார். அவர் தம்மை நோக்கி வருவதைத் தொலையிலிருந்து பார்த்த எலிசா தம் வேலையாள் கேகசியை நோக்கி,
26 "இதோ! சூனேம் பெண் வருகிறாள். அவளைச் சந்திக்க உடனே விரைந்து செல். அவளிடம், 'நீ நலமா? உன் கணவர் நலமா? உன் குழந்தை நலமா?' என்று கேள்" என்றார்.
27 அப்பெண் மறுமொழியாக, "ஆம், நலமே" என்றார், பிறகு அவர் மலையில் இருந்த கடவுளின் அடியவரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அவரை அப்புறப்படுத்த கேகசி அருகில் வந்தபோது, கடவுளின் அடியவர், "அவளை விட்டுவிடு, ஏனெனில் அவளது உள்ளம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ஆண்டவர் அதை எனக்கு அறிவிக்காமல் மறைத்து விட்டார்" என்றார்.
28 அப்பொழுது அப்பெண் "ஐயா! உம்மிடம் நான் மகப்பேறு கேட்டதுண்டா? 'என்னை ஏமாற்ற வேண்டாம்' என்று உமக்கு நான் முன்பே சொல்லவில்லையா?" என்றார்.
29 அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, "நீ இடுப்பை வரிந்து கட்டிக் கொண்டு, எனது ஊன்று கோலை உன் கையில் எடுத்துக் கொண்டு போ. வழியில் யாரையாவது கண்டால் வணக்கம் செய்யாதே. உனக்கு யாராவது வணக்கம் செய்தாலும் பதில் வணக்கம் செய்யாதே. என் ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வை" என்றார்.
30 ஆனால், பிள்ளையின் தாய் "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர்மேலும் ஆணை! உம்மை நான் விடமாட்டேன்" என்றார்.
31 எனவே எலிசா எழுந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார். கேகசி இவர்களுக்கு முன்பே புறப்பட்டுச் சென்று, ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான். ஆயினும் பிள்ளைக்குப் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. எனவே அவன் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, "பிள்ளை கண் திறக்கவில்லை" என்று அறிவித்தான்.
32 எலிசா வீட்டினுள் நுழைந்தபோது, இறந்த பிள்ளை தம் படுக்கையில் கிடப்பதைக் கண்டார்.
33 உடனே அவர் உள்ளே சென்று, அவர்கள் இருவரும் வெளியே இருக்க, கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
34 பின்பு படுக்கையின் மேல் ஏறி வாயோடு வாயும் கண்களோடு கண்களும், கைகளோடு கைகளும் வைத்து பிள்ளையின்மேல் படுத்தார். உடனே பிள்ளையின் உடம்பில் சூடு ஏறியது.
35 பின்பு கீழிறங்கி, அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின்மேல் ஏறி அவன் மீது படுத்துக் கொண்டார். அப்பொழுது பிள்ளை ஏழுமுறை தும்மிய பின் கண் திறந்தது. [2]
36 எனவே எலிசா கேகசியைக் கூப்பிட்டு, "அந்த சூனேம் பெண்ணை அழைத்து வா" என்றார். அவ்வாறே அவன் அழைக்க, அவர் எலிசாவிடம் வந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, "உன் மகனைத் தூக்கிக்கொள்" என்றார்.
37 அப்பெண் உள்ளே வந்து அவர் காலடியில் தரை மட்டும் வீழ்ந்து வணங்கியபின், தன் மகனைத் தூக்கிக்கொண்டு போனார்.
இரு வேறு அருஞ்செயல்கள்
[தொகு]
38 எலிசா கில்காலுக்குத் திரும்பினார். அப்பொழுது நாட்டில் பஞ்சம் நிலவியது. இறைவாக்கினர் குழுவினர் அவர் முன் அமர்ந்திருக்கையில், எலிசா தம் பணியாளன் ஒருவனை நோக்கி, "நீ ஒரு பெரிய பானையை எடுத்து அதில் இறைவாக்கினர் குழுவினர்க்குக் கூழ் காய்ச்சு" என்றார்.
39 அப்பொழுது அவர்களுள் ஒருவன் காட்டுக் கீரை பறிப்பதற்காக வயலுக்குச் சென்றான். அங்கே அவன் பேய்க்குமட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களைத் தன் போர்வை நிறையப் பறித்துக் கொண்டு வந்தான். அவை என்னவென்று தெரியாமல், அவற்றை நறுக்கிப் பானையில் போட்டு அவன் வேக வைத்தான்.
40 பின்பு அவன் அவர்கள் உண்ணுமாறு அதைப் பரிமாறினான். அவர்கள் அந்தக் கூழை உண்ணத் தொடங்கியதும், "கடவுளின் அடியவரே! பானையிலே நஞ்சு!" என்று அலறினர். அவர்களால் அதை மேலும் உண்ண முடியவில்லை.
41 அப்பொழுது அவர், "கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள்" என்றார். அவர் அதை பானையில் போட்டு, "இவர்கள் உண்ணும்படி இதைப் பரிமாறுங்கள்" என்று சொன்னார். பானையில் இருந்தது அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.
42 பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, "மக்களுக்கு உண்ணக் கொடு" என்றார்.
43 அவருடைய பணியாளன், "இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்றான். அவரோ, "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் 'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றார்.
44 அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.
- குறிப்புகள்
[1] 4:16 = தொநூ 18:14.
[2] 4:34-35 = 1 அர 17:21.
(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை