திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை
2 அரசர்கள் (The Second Book of Kings)
[தொகு]அதிகாரங்கள் 5 முதல் 6 வரை
அதிகாரம் 5
[தொகு]நாமான் நலம் பெறுதல்
[தொகு]
1 சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி.
2 சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
3 அவள் தன் தலைவியை நோக்கி, "என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்" என்றாள்.
4 எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, "இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்" என்று அவனுக்குத் தெரிவித்தார்.
5 அப்பொழுது சிரியா மன்னர், "சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்" என்றார். எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார்.
6 அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், "இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழு நோயை நீர் குணமாக்க வேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது.
7 இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!" என்று கூறினான்.
8 கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆளனுப்பி, "நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்" என்று சொன்னார்.
9 அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார்.
10 எலிசா, "நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்" என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார்.
11 எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், "அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று நான் எண்ணியிருந்தேன்.
12 அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?" என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.
13 அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம், "எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, 'மூழ்கி எழும்; நலமடைவீர்' என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன? "என்றனர்.
14 எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது. [*]
15 பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, "இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்" என்றார்.
16 அதற்கு எலிசா, "நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்" என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
17 அப்பொழுது நாமான் அவரை நோக்கி, "சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.
18 ஆயினும, ஒரு காரியத்திற்காக உம் அடியானாகிய என்னை ஆண்டவர் மன்னிப்பாராக! என் தலைவன் வழிபடுவதற்காக ரிம்மோன் கோவிலுக்குச் சென்று என் கையில் சாய்ந்து கொண்டு அதனை வணங்குகையில் நானும் அங்குத் தலை வணங்க நேரிட்டால், உம் அடியானாகிய என்னை அச்செயலுக்காக ஆண்டவர் மன்னிப்பாராக!" என்றார்.
19 அதற்கு எலிசா, "அமைதியுடன் சென்று வாரும்" என்றார். நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சற்றுத் தூரம் போனபின்,
20 கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, "என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன்" என்று சொல்லிக் கொண்டான்.
21 எனவே கேகசி நாமான் பின்னே ஓடிவந்தான். அவன் ஓடிவருவதை நாமான் கண்டு தம் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், "என்ன, எல்லாம் நலமா?" என்று வினவினார்.
22 அவன் மறுமொழியாக, "ஆம், எல்லாம் நலமே! என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, 'இறைவாக்கினர் குழுவினரான இரண்டு இளைஞர் எப்ராயிம் மலைநாட்டிலிருந்து இப்பொழுது தான் வந்துள்ளனர். அவர்களுக்கு நாற்பது கிலோ வெள்ளியும் இரண்டு பட்டாடைகளும் கொடுத்து அனுப்பும்' என்று சொல்லச் சொன்னார்" என்றான்.
23 அதற்கு நாமான், "எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம் வையும்" என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.
24 கேகசி மலையை வந்தடைந்ததும் அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் அவர்களை அனுப்பி வைக்க, அவர்களும் திரும்பிச் சென்றனர்.
25 அவன் தன் தலைவரிடம் வந்து அவர்முன் நின்றான். எலிசா அவனை நோக்கி, "கேகசி! நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். அவன், "அடியேன் எங்கும் செல்லவில்லை" என்றான்.
26 அதற்கு அவர், "அந்த ஆள் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்ததை நான் ஞானத்தால் அறிந்தேன். வெள்ளி, ஆடைகள், ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் - இவைகளைப் பெற்றுக் கொள்ள இதுவா சமயம்?
27 எனவே, நாமானின் தொழுநோய் உன்னையும் உன் வழிவந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்!" என்றார். அவ்வாறே அவனுக்குத் தொழுநோய் பிடிக்க, அவன் உடம்பெல்லாம் வெண்பனி போலாயிற்று. அவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றான்.
- குறிப்பு
[*] 5:1-14 = லூக் 4:27.
அதிகாரம் 6
[தொகு]கோடரியை மீட்டல்
[தொகு]1 ஒரு நாள் இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை நோக்கி, "உம்மோடு நாங்கள் வாழும் இந்த இடம் மிகக் குறுகியதாய் உள்ளது.
எனவே நாங்கள் யோர்தானுக்குச் சென்று ஆளுக்கொரு உத்திரம் கொண்டு வந்து வீடொன்று கட்டி அதில் குடிபுகுவோம்" என்றனர். அதற்கு அவர், "போய் வாருங்கள்" என்றார்.
3 அவர்களில் ஒருவன், "நீரும் உம் அடியாராகிய எம்மோடு வாரும்" என்று அழைத்தான். "நானும் வருகிறேன்" என்று அவர் கூறினார்.
4 எனவே அவரும் அவர்களுடம் யோர்தானுக்குச் சென்றார்.
5 அவர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வாறு ஒருவன் உத்திரம் வெட்டிக்கொண்டிருந்தபோது அவனது கோடரி கழன்று தண்ணீரில் விழுந்தது. உடனே அவன் "ஐயோ! என் தலைவரே, இது இரவல் பொருளாயிற்றே!" என்று கத்தினான்.
6 அப்போது கடவுளின் அடியவர், "அது எங்கு வீழ்ந்தது" என்று கேட்டார். அவனும் அந்த இடத்தைக் காட்டினான். உடனே எலிசா ஒரு கம்பை வெட்டி அங்கு எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கியது.
7 அவர் "அதை எடுத்துக் கொள்" என்று அவனிடம் கூற, அவனும் கை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
சிரியாவின் படை தோல்வியுறல்
[தொகு]
8 சிரியாவின் மன்னன் இஸ்ரயேல் நாட்டின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, "இந்த இடத்தில் பாளையம் இறங்குவோம்" என்றான்.
9 அப்பொழுது கடவுளின் அடியவர் இஸ்ரயேல் அரசனிடம் ஆளனுப்பி, "அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும், ஏனெனில் அங்கே சிரியர் பதுங்கி இருக்கின்றனர்" என்று சொல்லச் சொன்னார்.
10 இஸ்ரயேல் அரசன் கடவுளின் அடியவர் எச்சரித்துக் குறிப்பிட்ட ஒவ்வோர் இடத்திற்கும் ஆளனுப்பினான். இவ்வாறு அவன் தன்னைக் காத்துக் கொண்டது ஒருமுறை, இருமுறை அல்ல.
11 இதன் பொருட்டுச் சிரியாவின் அரசன், நெஞ்சம் கொதித்துத் தன் பணியாளர்களைக் கூப்பிட்டு, "இஸ்ரயேல் அரசனுக்கு ஒற்றனாக நம்மிடையே ஒருவன் இருக்கின்றான். அவன் யாரென்று தெரிய வேண்டும்" என்றான்.
12 பணியாளருள் ஒருவன் அவனை நோக்கி, "என் தலைவரான அரசே! அப்படி ஒருவனும் இங்கில்லை. ஆனால், இஸ்ரயேலில் இருக்கும் எலிசா என்ற இறைவாக்கினர் தாங்கள் பள்ளியறையில் பேசுவதைக்கூடத் தம் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகிறார்" என்றான்.
13 அதற்கு அரசன், "நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். நான் ஆள்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்" என்றான். 'அவர் தோத்தானில் இருக்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டது.
14 ஆதலால் அரசன் அங்குக் குதிரைகளையும், தேர்களையும் பெரிய படையையும் அனுப்பினான். அவர்கள் இரவோடு இரவாக வந்து நகரைச் சூழ்ந்து கொண்டனர்.
15 கடவுளுடைய அடியவரின் வேலைக்காரன் வைகறையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும், குதிரைகளும், தேர்களும் நகரைச் சூழ்ந்திருக்கக் கண்டு, "ஐயோ! என் தலைவரே, என்ன செய்வோம்?" என்று கதறினான்.
16 அதற்கு அவர், "அஞ்ச வேண்டாம். அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்" என்றார்.
17 பின்பு எலிசா, "ஆண்டவரே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்!" என்று வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ! மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான்.
18 சிரியா நாட்டினர் அவரை நெருங்கி வந்த பொழுது, எலிசா ஆண்டவரை நோக்கி, "இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார்.
19 அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி, "இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன்" என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார்.
20 அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, "ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்!" என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதை அவர்கள் கண்டனர்.
21 இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டவுடன் எலிசாவை நோக்கி, "என் தந்தையே! இவர்களை நான் வெட்டி வீழ்த்தட்டுமா?" என்றான்.
22 அதற்கு அவர், "கொல்லாதே! நீ சிறைப்படுத்தியவர்களை நீயே உன் வாளினாலோ அம்பினாலோ கொல்வாயா? எனவே அவர்கள் பசிதாகம் தீர அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்கள் தங்கள் தலைவனிடம் திரும்பிச் செல்லட்டும்" என்றார்.
23 அவ்வாறே அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்தளித்தான். அவர்களும் உண்டு குடித்தனர். பின்னர் அவன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் தங்கள் தலைவனிடம் திரும்பிச் சென்றனர். அதன்பின் சிரியாக் கொள்ளைக் கூட்டத்தினர் இஸ்ரயேல் நாட்டுக்குள் காலெடுத்து வைக்கவில்லை.
சமாரியா முற்றுகையிடப்படுதல்
[தொகு]
24 பின்னர் சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான்.
25 எனவே சமாரியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஒரு கழுதைத் தலை, எண்பது வெள்ளிக் காசுக்கும், புறாவின் எச்சம் கால்படி ஐந்து வெள்ளிக் காசுக்கும் விற்கும் அளவுக்கு முற்றுகை கடுமையாய் இருந்தது.
26 இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண்," அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்!" என்று கூக்குரலிட்டாள்.
27 அதற்கு அவன், "ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா?" என்றான்.
28 பின்னும் அரசன் அவளிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு அவள், "இதோ! ஒரு நாள் இந்தப் பெண் என்னை நோக்கி, 'இன்று நாம் உண்பதற்கு உன் மகனைக் கொடு; நாளை என் மகனைத் தின்போம்' என்றாள்,
29 அவ்வாறே நாங்கள் என் மகனைச் சமைத்துத் தின்றோம். மறுநாள் நான் அவளிடம், 'நாம் உண்ணும்படி உன் மகனைக் கொடு!' என்றேன். ஆனால் அவளோ தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள்" என்று சொன்னாள். [1]
30 அரசன் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அவன், நகர மதில் வழியாக நடந்து செல்கையில், தன் உடலின்மேல் கோணியாடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.
31 அரசன், "இன்றைக்குள் நான் சாபாற்றின் மகன் எலிசாவின் தலையை வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாராக!" என்றான்.
32 அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்தூதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி, "இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்தூதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா?" என்றார்.
33 இவ்வாறு அவர் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், அரசன் [2] அவரிடம் வந்து சேர்ந்தான். அப்பொழுது அவன், "இந்தத் தீமை ஆண்டவரிடமிருந்தே வருகிறது! அப்படியிருக்க ஆண்டவருக்காக நான் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்?" என்றான்.
- குறிப்புகள்
[1] 6:29 = இச 18:57; புல 4:10.
[2] 6:33 'தூதுவன்' என்பது எபிரேய பாடம் (காண். 2 அர 7:2).
(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை