திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
குழந்தைக்குத் தாய் யார் என்று முடிவுசெய்த சாலமோன் அரசரின் ஞானமிகு தீர்ப்பு (1 அர 3:16-28). 17ஆம் நூற்றாண்டு (?) ஓவியம். ஆசுத்திரிய நாடு.

1 அரசர்கள் (The First Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

சாலமோன் ஞானத்திற்காக மன்றாடல்[தொகு]

(2 குறி 1:3-12)


1 பின்னர் சாலமோன் எகிப்து மன்னனான பார்வோனின் மகளை மணந்து, பார்வோனுடன் உடன்பாடு செய்துகொண்டார். மேலும் தம் அரண்மனை, ஆண்டவர் இல்லம், எருசலேமின் சுற்றுமதில் ஆகியவற்றைக் கட்டி முடிக்கும் வரை அவளைத் தாவீதின் நகரில் தங்கியிருக்கச் செய்தார்.
2 அந்நாள் வரை ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்பப்படவில்லை. எனவே, மக்கள் தொழுகை மேடுகளில் பலியிட்டு வந்தார்கள்.


3 ஆண்டவர்மீது சாலமோன் அன்பு கொண்டு, தம் தந்தையான தாவீது விதித்த நியமங்களின்படி நடந்து வந்தார். ஆனால், அவரும் தொழுகை மேடுகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தார்.
4 ஒருநாள் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார்.
5 அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்று கடவுள் கேட்டார்.
6 அதற்குச் சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர்.
7 என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை.
8 இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர்.
9 எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று கேட்டார்.


10 சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது.
11 கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.
12 இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை.
13 அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.
14 மேலும், உன் தந்தை தாவீதைப் போல் நீயும் என் வழிகளில் நடந்து, என் நியமங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன்" என்றார்.
15 சாலமோன் கனவினின்று விழித்தெழுந்தார். பின்னர், எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்று ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் நின்று எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். பின் தம் அலுவலர் அனைவருக்கும் பெரும் விருந்து அளித்தார்.

சாலமோனின் ஞானமிகு தீர்ப்பு[தொகு]


16 ஒரு நாள், இரு விலைமாதர் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர்.
17 அவர்களுள் ஒருத்தி, "என் தலைவரே! இந்தப் பெண்ணும் நானும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். அந்த வீட்டில் அவள் என்னுடன் இருந்தபோது நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.
18 என் குழந்தை பிறந்து மூன்று நாள் ஆன பின், அவளும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த வீட்டில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.
19 இவள் இரவில் தூங்கும்போது தன் மகன் மீது புரண்டுவிட்டதால் அவன் இறந்துபோனான்.
20 அவள் நள்ளிரவில் எழுந்து, உம் பணிப்பெண்ணாகிய நான் தூங்கிக் கொண்டிருக்கையில், என்னருகில் கிடந்த என் மகனை எடுத்துத் தன் நெஞ்சருகில் வைத்துக்கொண்டு, இறந்துவிட்ட தன் மகனை என் நெஞ்சருகில் கிடத்திவிட்டாள்.
21 விடியற்காலையில் பிள்ளைக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, ஐயோ! அது செத்துக் கிடந்தது. சற்று விடிந்தபின் பிள்ளையை உற்று பார்த்தபோது, அது நான் பெற்ற பிள்ளை அல்ல என்று கண்டேன்" என்றாள்.
22 இதைக் கேட்ட மற்றவளோ, "இல்லை! உயிரோடிருப்பதே என் பிள்ளை. செத்துப் போனது உன் பிள்ளை" என்றாள். முதல் பெண்ணோ, "இல்லை! செத்த பிள்ளைதான் உன்னுடையது. உயிரோடிருக்கும் பிள்ளை என்னுடையது" என்றாள். இவ்வாறு அரசர்முன் அவர்கள் வாதாடினர்.


23 அப்பொழுது அரசர், "என்ன இது? ஒருத்தி, 'உயிரோடு இருக்கிற இவன் என் மகன்; செத்துவிட்டவன் உன் மகன்' என்கிறாள். மற்றவளோ 'இல்லை! செத்துவிட்டவன் உன் மகன்; உயிரோடு இருக்கிறவன் என் மகன்' என்கிறாள்" என்றார்.
24 பின்னர் அரசர், "ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்" என்றார்.
25 அவ்வாறே அவர்கள் அரசரிடம் ஒரு வாள் கொண்டு வந்தனர். பிறகு அரசர், "உயிரோடிருக்கும் குழந்தையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்தியிடமும் மறு பாதியை மற்றொருத்தியிடமும் கொடுங்கள்" என்றார்.


26 உடனே, உயிரோடிருந்த பிள்ளையின் தாய் தன் மகனுக்காக நெஞ்சம் பதறி அரசரிடம், "வேண்டாம் என் தலைவரே! கொல்ல வேண்டாம். உயிரோடிருக்கும் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள்" என்று வேண்டினாள். மற்றவளோ, "அது எனக்கும் வேண்டாம்; உனக்கும் வேண்டாம்; அதை இரண்டாக வெட்டுங்கள்" என்றாள்.
27 உடனே அரசர், "உயிரோடிருக்கும் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டாம். முதல் பெண்ணிடமே கொடுங்கள். அவள்தான் அதன் தாய்" என்று முடிவு கூறினார்.
28 அரசர் அளித்த தீர்ப்பைப் பற்றி இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டனர். நீதித் தீர்ப்பு வழங்குவதற்கெனக் கடவுள் அருளிய ஞானம் அவரிடம் உள்ளது என்று கண்டு, அவருக்கு அஞ்சி நடந்தனர்.

அதிகாரம் 4[தொகு]

சாலமோனின் அலுவலர்[தொகு]


1 சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் ஆட்சி செலுத்தி வந்தார்.
2 அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே:
3 குரு: சாதோக்கின் மகன் அசரியா. தலைமைச் செயலர்: சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்: அகிலூதின் மகன் யோசபாத்து.
4 படைத் தலைவன்: யோயாதாவின் மகன் பெனாயா. குருக்கள்: சாதோக்கு, அபியத்தார்.
5 தலைமைக் கண்காணிப்பாளன்: நாத்தானின் மகன் அசரியா. அரசரின் ஆலோசகன்: நாத்தானின் மகன் குரு சாபூது.
6 அரண்மனை மேற்பார்வையாளன்: அகிசார். கட்டாய வேலைக்காரர் மேற்பார்வையாளன்: அப்தாவின் மகன் அதோனிராம்.
7 இஸ்ரயேல் நாடெங்கும் சாலமோனின் கீழ் பன்னிரு ஆளுநர் இருந்தனர். அவர்கள் அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் மாதத்திற்கு ஒருவராக ஆண்டு முழுவதும் தேவையான பொருள்களைச் சேகரித்துத் தந்தார்கள்.
8 அவர்களின் பெயர்கள்: பென்கூர் - மலை நாடான எப்ராயிம் இவனுக்கு உரியது.
9 பென்தெக்கர் - மாக்காசு, சாயல்பிம், பேத்சமேசு, ஏலோன் பெத்கானான் ஆகிய நகர்கள் இவனுக்கு உரியவை.
10 பென்கெசது - அருபோத்து, சோக்கோவும் ஏபேர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியவை.
11 சாலமோனின் மகள் தாப்பாத்தின் கணவன் பென் அபினதாபு - நாபத்தோர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியது.


12 அகிலூதின் மகன் பாகனா - தானாக்கு, மெகிதோ, பெத்சான் நகர்ப் பகுதிகளும் சாரத்தானை அடுத்து, இஸ்ரயேலுக்குத் தெற்கே, பெத்சானிலிருந்து ஆபேல் மெகோலா வரை, யோக்மயாமின் மறுபக்கம் உள்ள பகுதியும் இவனுக்குரியவை.
13 பென்கெபர் - ராமோத்து கிலயாதும் மனாசேயின் மகன் யாயிர்க்குச் சொந்தமான கிலயாது நாட்டுச் சிற்றூர்களும், பாசானிலுள்ள அர்கோபு நாட்டின் மதிற்சுவர்களும் வெண்கலக் குறுக்குக் கம்பிகளும் கொண்ட அறுபது நகர்களும் இவனுக்கு உரியவை.
14 இத்தோவின் மகன் அகினதாபு - மகனயிம் இவனுக்கு உரியது.
15 சாலமோனின் மகள் பாஸ்மத்தின் கணவன் அகிமாசு - நப்தலி இவனுக்கு உயரியது.
16 ஊசாயின் மகன் பாகனா - ஆசேர், பெயலோத்து இவனுக்கு உரியவை.
17 பாருவாகின் மகன் யோசபாத்து - இசக்கார் இவனுக்கு உரியது.
18 ஏலாவின் மகன் சிமயி - பென்யமின் இவனுக்கு உரியது.
19 ஊரியின் மகன் கெபேர் - எமேரியரின் மகன் சீகோனுக்கும் பாசானின் மன்னன் ஓகுக்கும் உரியதாய் இருந்த கிலயாது நாடு இவனுக்குரியது.

சாலமோனின் சீரும் சிறப்பும்[தொகு]


20 இவர்களைத் தவிர யூதாப் பகுதிக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். யூதா, இஸ்ரயேல் மக்கள் கடற்கரை மணலைப் போல் திரளாய் இருந்தனர்; உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர்.


21 சாலமோன், யூப்பிரத்தீசு, தொடங்கிப் பெலிஸ்தியரின் நாடு வரையிலும், எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த நாடுகளின் மேலும் ஆட்சி செலுத்தி வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அந்நாடுகளின் மக்கள் சாலமோனுக்குக் கப்பம் கட்டி அடிபணிந்திருந்தனர். [1]
22 சாலமோன் வீட்டில் நாள்தோறும் உணவுக்காகத் தேவைப்பட்டவை: முப்பது 'கலம்' 2] மிருதுவான மாவு; அறுபது கலம் [3] நொய்;
23 கொழுத்த மாடுகள் பத்து; மேய்ச்சலிலிருந்து வந்த மாடுகள் இருபது; ஆடுகள் நூறு; கலைமான்கள், சிறுமான்கள், வரையாடுகள், கொழுத்த கோழிகள் ஆகியவை.
24 திப்சாவிலிருந்து காசா வரையிலும் யூப்பரத்தீசின் மேற்குப் புறத்தில் உள்ள நாடுகள் அனைத்தின் மீதும், அந்த ஆற்றுக்கு மேற்கே இருந்த அரசுகள் அனைத்தின் மீதும் அவர் ஆட்சி செலுத்தி வந்தார். எல்லைப் புறப் பகுதிகள் அனைத்திலும் அமைதி நிலவியது.
25 சாலமோனின் வாழ்நாளெல்லாம் தாண் முதல் பெயேர்செபா வரையிலும் பரவியிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் உடைமையாகக் கொண்டிருந்தனர்;
26 சாலமோனுக்கு இருந்த தேர்க் குதிரைஇலாயங்கள் நாற்பதினாயிரம்; குதிரை வீரர்கள் பன்னீராயிரம். [4]
27 ஆளுநர்கள் அவரவர் முறைப்படி மாதந்தோறும் அரசர் சாலமோனுக்கும் அவரோடு உணவு அருந்தி வந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்து வந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை.
28 மேலும், அவர்கள் தேர்க் குதிரைகளுக்கும் கோவேறு கழுதைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமையையும் வைக்கோலையும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட முறையின்படி, அவை இருந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்கள்.
29 கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார்.
30 கீழை நாட்டினர் அனைவரின் ஞானத்தையும், எகிப்தியரின் எல்லாவகை ஞானத்தையும்விடச் சாலமோனின் ஞானம் சிறந்ததாய் விளங்கிற்று.
31 எசுராகியனான ஏத்தானைவிட, ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட, அவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார். [5]
32 சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று. அவர் மூவாயிரம் நீதிமொழிகளை உரைத்தார். அவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஐந்து. [6]
33 லெபனோனின் கேதுரு முதல் சுவரில் முளைக்கும் ஈசோப்பு வரை உள்ள எல்லா மரவகைகளைக் குறித்தும், நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகியவற்றைக் குறித்தும் கருத்துரை வழங்கினார்.
34 சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.

குறிப்புகள்

[1] 4:21 = தொநூ 15:18;2 குறி 9:26.
[2] 4:22 'கோர்' என்பது எபிரேய பாடம்.
[3] 4:22 'கோர்' என்பது எபிரேய பாடம்.
[4] 4:26 = 1 அர 10:26; 2 குறி 1:14; 9:25.
[5] 4:31 = திபா 89 தலைப்பு.
[6] 4:32 = நீமொ 1:1; 10:1; 25:1; இபா 1:1.


(தொடர்ச்சி): அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை