திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சாலமோன் அரசர் எருசலேமில் கட்டிய கோவிலின் மாதிரி. பதி படிமம் ஆக்குநர்: யாக்கோபு யூதா லியோன். ஆண்டு: 1665.

1 அரசர்கள் (The First Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

திருக்கோவில் கட்டுவதற்கான சாலமோனின் முன்னேற்பாடுகள்[தொகு]

(2 குறி 2:1-18)


1 தீரின் மன்னர் ஈராம் தாவீதுக்கு அவரது வாழ்நாளெல்லாம் நண்பராயிருந்தார். சாலமோன் தம் தந்தையாகிய தாவீதுக்குப் பின் அரசாரகத் திருப்பொழிவு பெற்றுள்ளார் எனறு அவர் கேள்விப்பட்டுத் தம் தூதரை அவரிடம் அனுப்பினார்.
2 சாலமோனும் ஈராமிடம் தூதனுப்பி, "ஆண்டவர் என் தந்தை தாவீதின் எதிரிகளை அவருக்கு அடிபணியச் செய்யும் வரை, எப்பக்கமும் இடையறாது போர் நடந்து வந்தது என்பது உமக்குத் தெரியும்.
3 இதனால் தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்குக் கோவில் எழுப்ப அவரால் முடியாமல் போயிற்று என்பதும் உமக்குத் தெரியும்.
4 இப்பொழுதோ, என் கடவுளாகிய ஆண்டவர் என் எல்லைகள் எங்கும் அமைதி நிலவும்படி செய்திருக்கிறார். எனக்கு எதிரியுமில்லை; இடையூறுமில்லை.
5 ஆகையால், ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, 'உனக்குப் பின் உன் அரியணையில் நான் அமர்த்தும் உன் மகனே என் பெயருக்குக் கோவில் கட்டுவான்' என்று சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்ப எண்ணியுள்ளேன். [1]
6 எனக்குத் தேவையாயிருக்கும் கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து வெட்டித்தருமாறு உம் பணியாளருக்குக் கட்டளையிடும். மரம் வெட்டுவதில் சீதோனியரைப் போல் திறமையுள்ளவர் என் குடிமக்களுள் ஒருவரும் இல்லை என்பது உமக்குத் தெரியும். என் பணியானர் உம் பணியாளரோடு சேர்ந்து வேலை செய்வார்கள். உம் பணியாளருக்கு நீர் குறிப்பிடும் கூலியை நான் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லக் சொன்னார்.


7 ஈராம் சாலமோனின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து, "அந்த எராளமான மக்களை ஆளும்படி தாவீதுக்கு ஞானமுள்ள ஒரு மகனைக் கொடுத்த ஆண்டவர் இன்று வாழ்த்தப் பெறுவாராக!" என்றார்.
8 மேலும் ஈராம் சாலமோனிடம் ஆளனுப்பி "நீர் எனக்குச் சொல்லி அனுப்பியதைக் கேட்டேன். உமது விருப்பபடியே, கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அனுப்பி வைக்கிறேன்.
9 என் பணியாளர் லெபனோனிலிருந்து அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டு வருவார்கள். தெப்பம் தெப்பமாகக் கட்டி, கடல் வழியாக நீர் குறிக்கும் இடத்திற்கு அனுப்பி, அங்கே அவற்றை அவிழ்த்து உம்மிடம் சேர்ப்பிப்பேன். அவற்றை நீர் பெற்றுக் கொள்ளும். என் வீட்டாருக்கு உணவுப் பொருள் கொடுத்தால் போதும். இதுவே என் விருப்பம்" என்று தெரிவித்தார்.
10 அப்படியே ஈராம் சாலமோனுக்குக் கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அவர் விரும்பியபடி அனுப்பிக் கொண்டிருந்தார்.
11 சாலமோன் ஈராம் வீட்டாரின் உணவுக்காக, இருபதாயிரம் கலம் [2] கோதுமையும் இருநூறு குடம் [3] பிழிந்து வடிகட்டிய ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு ஈராமுக்குச் சாலமோன் ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.
12 ஆண்டவர் தாம் சாலமோனுக்கு வாக்களித்திருந்தபடியே அவருக்கு ஞானத்தைத் தந்தருளினார். ஈராமும் சாலமோனும் நல்லுறவு கொண்டிருந்தனர். இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர்


13 அரசர் சாலமோன் இஸ்ரயேல் முழுவதிலிருந்தும் முப்பதாயிரம் பேரைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்.
14 ஒவ்வொரு மாதமும் அவர்களுள் பத்தாயிரம் பேரை லெபனோனுக்கு மாற்றி மாற்றி அனுப்பி வைத்தார். அவர்கள் ஒரு மாதம் லெபலோனில் வேலை செய்வார்கள்; இரண்டு மாதம் வீட்டிலிருப்பார்கள். அதோனிராம் கட்டாய வேலையைக் கண்காணித்து வந்தான். [4]
15 சுமைதூக்க எழுபதானாயிரம் பேரையும், மலை நாட்டில் கல்வெட்ட எண்பதாயிரம் பேரையும் சாலமோன் அமர்த்தியிருந்தார்.
16 வேலையைக் கவனிக்கச் சாலமோனால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளைத் தவிர, வேலையாட்களை மேற்பார்வையிட மூவாயிரத்து முந்நூறு கண்காணிகளும் இருந்தார்கள்.
17 அரசரின் கட்டளைப்படி, அவருடைய ஆட்கள் கோவிலுக்கு அடித்தளமிடத் தேவையான கற்களைச் செதுக்குவதற்கென மிகப்பெரிய தரமான கற்களை வெட்டினார்கள்.
18 சாலமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும் கெபேல் ஊராரும் சேர்ந்து கோவில் கட்டுவதற்கான மரங்களையும் கற்களையும் செதுக்கித் தயார் செய்தனர்.

குறிப்புகள்

[1] 5:5 = 2 சாமு 7:12-13; 1 குறி 17:11-12.
[2] 5:11 'கோர்' என்பது எபிரேய பாடம்.
[3] 5:11 'இருபது கோர்' என்பது எபிரேய பாடம்.
[4] 5:14 = 1 அர 12:18.

அதிகாரம் 6[தொகு]

சாலமோன் திருக்கோவில் கட்டுதல்[தொகு]


1 இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நான்காம் ஆண்டு, 'சிவு' என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.
2 அரசர் சாலமோன் ஆண்டவருக்கென கட்டின இல்லத்தின் அளவு: நீளம் அறுபது முழம், அகலம் இருபது முழம், உயரம் முப்பது முழம்.
3 கோவிலது தூயகத்தின் முன் மண்டபம், கோவிலின் அகலத்திற்குச் சமமாய் இருபது முழ நீளமும், கோவிலுக்கு முன்னால் பத்து முழு அகலமும், கொண்டிருந்தது.
4 வெளிப்புறம் குறுகி உட்புறம் விரிந்த பலகணிகளை அவர் கோவிலில் அமைத்தார்.
5 கோவிலின் சுவரைச் சுற்றி, - அதாவது தூயகத்தையும் கருவறையையும் சுற்றி இருந்த - சுவரை ஒட்டி மேடை எழுப்பி அதன் மேல் அடுக்கடுக்காகச் சிற்றறைகளைக் கட்டினார். < br>6 கீழிருந்த அறைகள் ஐந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அந்த அறைகளின் விட்டங்கள் கோவிலின் சுவருக்குள் போகாதபடி அவற்றைத் தாங்குவதற்கென, சுற்றிலும் வெளிப்புறத்தில் ஒட்டுச்சுவர் அமைத்தார்.


7 செதுக்கி முடித்த கற்களாலேயே கோவில் கட்டப்பட்டதால், அது கட்டப்பட்டபோது, சுத்தியல் உளி போன்ற எந்த இரும்புக் கருவியின் ஒலியும் கோவிலில் கேட்கவில்லை.


8 கீழறைகளுக்குப் போகும் வாயில் கோவிலின் தென்புறம் இருந்தது. சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், அங்கிருந்து மேல் அறைகளுக்கும் ஏறிச் செல்வர்.
9 அவர் கேதுரு மர விட்டங்களாலும் பலகைகளாலும் கோவிலுக்கு மச்சுப்பாவி அதைக் கட்டிமுடித்தார்.
10 கோவிலைச் சுற்றிலும் ஐந்து முழ உயரமாகச் சுற்றுக்கட்டு எழுப்பி, அதைக் கேதுரு மரங்களால் கோவிலோடு இணைத்தார்.


11 அப்போது ஆண்டவரின் வாக்கு சாலமோனுக்கு உரைக்கப்பட்டது.
12 அவர், "நீ என் நியமங்களின்படி ஒழுகி, என் நீதிச்சட்டங்களின்படி செயலாற்றி, என் கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோவிலைக் குறித்து நான் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன என் வாக்கை உன்னிடம் நிறைவேற்றுவேன்.
13 இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்; என் மக்களாகிய இஸ்ரயேலரைக் கைவிடமாட்னே" என்றார்.
14 சாலமோன் கோவிலைக் கட்டிமுடித்தார்.

திருக்கோவிலின் உள் வேலைப்பாடுகள்[தொகு]

(2 குறி 3:8-14)


15 பின்னர், கோவில் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுரு பலகைகளால் அவர் மூடினார்; இவ்வாறு உட்புறம் முழுவதையும் மரத்தால் அவர் மூடினார்; மேலும் கோவிலின் கீழ்த்தளத்தை நூக்கு மரப்பலகைகளால் பாவினார்.
16 கோவிலின் பிற்பகுதியில் இருபது முழ இடத்தை, கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் தடுத்து, திருத்தூயகமாகிய கருவறையை அவர் அமைத்தார். [1]
17 அதற்கு முன்னால் நாற்பது முழஇடம் கோவில் தூயகமாய் அமைந்தது.
18 கோவிலின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும் விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை.
19 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் கருவறையை அவர் அமைத்திருந்தார்.
20 கருவறை இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது. அவர் அதனைப் பசும்பொன் தகடுகளால் மூடினார். பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.
21 கோவிலின் உட்புறத்தைச் சாலமோன் பசும் பொன்னால் மூடினார்; கருவறைக்கு முன்னால் பொன்னில் பொதியப்பட்ட பொற்சங்கிலிகளைத் தொங்கவிட்டார்.
22 இவ்வாறு கோவில் முழுவதையும், ஓரிடமும் விடாமல், பொன்னால் அவர் மூடினார்; கருவறைப் பீடம் முழுவதையும் பொன்னால் மூடினார். [2]

br>23 கருவறையில் ஒலிவ மரத்தால் பத்து முழ உயரமான இரு கெருபுகளை அவர் செய்து வைத்தார்.
24 முதல் கெருபின் ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம், கெருபின் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழம். இரு இறக்கை நுனிகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம்.
25 இரண்டாம் கெருபின் அளவும் இருந்தன. இரண்டாம் கெருபின் அளவும் பத்து முழம். இரு கெருபுகளும் ஒரே அளவாயும் ஒரே வடிவமாயும் இருந்தன.
26 ஒரு கெருபு பத்து முழ உயரம் இருந்தது.
27 மற்ற கெருபும் அதே அளவாய் இருந்தது. அவர் அந்தக் கெருபுகளைக் கோவிலின் உட்பகுதியில் வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்தவாறு இருந்தன. ஒரு கெருபின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரையும் மறு கெருபின் இறக்கை மறுபக்கத்துச் சுவரையும் தொட்டுக் கொண்டிருந்தன.
28 அவர் அக்கெருபுகளையும் பொன்னால் மூடினார். [3]
29 கோவிலின் சுவர்களெங்கும், சுற்றிலும் உள்ளும் புறமும், கெருபுகள், ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார்.
30 கோவிலின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் தளத்தைப் பொன்னால் அவர் மூடினார்.


31 கருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவையும் ஐங்கோண வடிவத்தில் கதவு நிலைகளையும் ஒலிவ மரத்தால் அவர் செய்து வைத்தார்.
32 ஒலிவ மரத்தாலான இந்த இரட்டைக் கதவில் கெருபுகள், ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். அவற்றைப் பொன்னால் வேய்ந்தார்.


33 அவர் தூயக நுழைவாயிலுக்கு நாற்கோண வடிவத்தில் கதவு நிலைகளை ஒலிவ மரத்தால் செய்து நிறுத்தினார்.
34 அதன் இரு கதவுகளும் நூக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்தன. மறுகதவும் இரு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது.
35 அவற்றில் கெருபுகள், ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களைச் செதுக்கி, அவற்றின் அளவுக்கேற்ற பொன் தகட்டால் அவர் மூடினார்.
36 உள் முற்றத்தின் சுவர்களை, மூன்று வரிசை செதுக்கிய கற்களாலும், ஒரு வரிசை கேதுருக் கட்டைகளாலும் அவர் அமைத்தார்.


37 நான்காம் ஆண்டு 'சிவு' மாதத்தில் ஆண்டவரின் இல்லத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.
38 பதினோராம் ஆண்டு 'பூல்' என்ற எட்டாம் மாதத்தில் கோவிலின் எல்லாப் பகுதிகளும் திட்டமிட்டபடியே கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாறு கோவிலைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.

குறிப்புகள்

[1] 6:10 = விப 26:33-34.
[2] 6:22 = விப 30:1-3.
[3] 6:23-28 = விப 25:18-20.


(தொடர்ச்சி): அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை