உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
காணிக்கை.

இணைச் சட்டம்

[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15

[தொகு]

ஏழாம் ஆண்டு

[தொகு]

(லேவி 25:1-7)


1 ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய்.
2 விடுதலையின் விவரம் இதுவே: ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.
3 வேற்றினத்தானின் கடனை நீ தண்டலாம். ஆனால், உன் சகோதரன் பட்ட கடனிலிருந்து விடுதலை கொடு.
4 உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்.
5 நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு.
6 அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். நீ பல இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்க மாட்டாய். நீ பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ எவனும் ஆள மாட்டான்.
7 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே.
8 மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு. [1]
9 விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக் குற்றத்திற்கு உள்ளாக்கும்.
10 நீ அவனுக்குத் தாராளமாய்க் கொடு. அவனுக்குக் கொடுக்கும்போது உள்ளத்தில் பொருமாதே. அப்போது, நீ செய்யும் அனைத்துச் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
11 உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே நான் உனக்குக் கட்டளையிட்டுச் சொல்கிறேன்; உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற. [2]

அடிமைகளை நடத்தும் முறை

[தொகு]

(விப 21:1-11)


12 உன் இனத்து ஓர் எபிரேயனோ ஓர் எபிரேயளோ உன்னிடம் அடிமையாய் விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உனக்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பி விடு.
13 உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பும்போது, வெறுங்கையராய் அனுப்பாதே.
14 கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்குக் கொடுத்து அனுப்பு.
15 எகிப்து நாட்டில் நீ அடிமையாக இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை மீட்டார் என்பதையும் நினைவில் கொள். எனவே நான் உனக்கு இதைக் கட்டளையிடுகிறேன்.
16 ஆனால், அவன் உன்மீதும் உன் வீட்டார் மீதும் அன்பு கூர்வதாலும், உன்னிடம் தங்குவது அவனுக்கு நலமென்று தோன்றுவதாலும், 'உம்மைவிட்டுப் போகமாட்டேன்' என்று உன்னிடம் கூறுவானாகில்,
17 நீ ஒரு குத்தூசியால் அவன் காதைக் கதவோடு சேர்த்துக் குத்துவாய். அதன்பின் அவன் என்றென்றும் உன் அடிமையாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய்.
18 நீ அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பிவிடுவது உனக்கு வருத்தம் தரலாகாது. ஏனெனில், அவன் ஒரு வேலையாளின் பாதிக்கூலிக்கு ஆறு ஆண்டுகள் உனக்குப் பணி செய்திருப்பான். மேலும் உன் கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும், உனக்கு ஆசி வழங்குவார். [3]

ஆடு மாடுகளின் தலையீற்று

[தொகு]


19 உன் ஆடு மாடுகளின் ஆண் தலையீற்றுகளை உன் கடவுளாகிய ஆண்டவருக்கென ஒப்புக்கொடு. உன் மாட்டின் தலையீற்றிடம் வேலை வாங்காதே; உன் ஆட்டின் தலையீற்றின் உரோமத்தை கத்தரியாதே. [4]
20 உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும், ஆண்டுதோறும் அவர்தம் திருமுன் அவற்றை உண்பீர்கள்.
21 அவை ஏதாகிலும் குறை உள்ளனவாய் இருப்பின் - முடம், குருடு அல்லது வேறு எந்த ஊனமும் இருப்பின் - அவற்றை உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடாதே.
22 அவற்றை உன் நகர எல்லைக்குள் உண்பாயாக. கலைமானையும் கவரிமானையும் உண்பது போல் உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் உண்ணலாம்.
23 அதன் இரத்தத்தையோ உண்ண வேண்டாம். தண்ணீரைப் போல் அதைத் தரையில் ஊற்றிவிடு. [5]

குறிப்புகள்

[1] 15:7-8 = லேவி 25:35.
[2] 15:11 = மத் 26:11; மாற் 14:7; யோவா 12:8.
[3] 15:12-18 = லேவி 25:39-46.
[4] 15:19 = விப 13:12.
[5] 15:23 = தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; 19:26; இச 12:16-23.


அதிகாரம் 16

[தொகு]

பாஸ்கா திருவிழா

[தொகு]

(விப 12:1-20)


1 ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு. ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார்.
2 தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராகிய கடவுளுக்குப் பாஸ்காப் பலிசெலுத்து.
3 அதனுடன் புளிப்புள்ள அப்பத்தை உண்ணாதே. எகிப்து நாட்டிலிருந்து நீ வெளியேறிய நாளை உன் வாழ்நாளெல்லாம் நினைவுகூரும் வண்ணம், ஏழு நாள்கள் அவற்றைப் புளிப்பற்ற அப்பத்தோடு உண்பாய். அது துயரத்தின் அப்பம். ஏனெனில் நீ எகிப்து நாட்டிலிருந்து அவசரமாய்ப் புறப்பட்டு வந்தாய்.
4 உன் எல்லைக்குள் எங்கும் ஏழு நாள்களுக்குப் புளிப்புள்ள அப்பம் இருத்தலாகாது. நீ முதல் நாள் மாலையில் செலுத்தும் பலியின் இறைச்சி எதுவும் இரவு முழுவதும் காலை வரையிலும் இருத்தலாகாது.


5 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் எந்த நகருக்குள்ளும் நீ பாஸ்காப் பலியைச் செலுத்தவேண்டாம்.
6 ஆனால் அவர்தம் பெயர் அதில் நிலைக்கும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில், நீ பாஸ்காப் பலியைச் செலுத்து. கதிரவன் மறையும் மாலை வேளையில், நீ எகிப்திலிருந்து புறப்பட்ட அந்த நேரத்தில், பலி செலுத்து.
7 கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அதை நெருப்பில் வாட்டி உண்பாய். விடியற் காலையில் உன் கூடாரத்திற்குத் திரும்பிச் செல்வாய்.
8 ஆறு நாள்களுக்கு நீ புளிப்பற்ற அப்பத்தை உண்பாய். ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்காகத் திருப்பேரவை கூடும். அன்று நீ வேலை ஏதும் செய்யாதே. [1]

அறுவடை விழா

[தொகு]

(விப 34:22; லேவி 23:15-21)


9 நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொள். விளைந்து நிற்கும் கதிரில் கதிரரிவாளை முதலில் வைத்தநாள் தொடங்கி ஏழு வாரங்களைக் கணக்கிடு.
10 அதன்பின், உன் கடவுளாகிய ஆண்டவருக்கென வாரங்களின் விழாவைக் கொண்டாடு. அவர் உனக்கு ஆசி வழங்குவதற்கேற்ப, உன் கைகளால் அவருக்குத் தன்னார்வக் காணிக்கைகளைச் செலுத்து.
11 கடவுளாகிய ஆண்டவர் தம்பெயர் விளங்குமாறு தெரிந்தெடுக்கும் இடத்தில், நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும், உன் நகரில் உள்ள லேவியனும் அன்னியனும் அனாதைகளும், கைம்பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மகிழ்வீர்களாக.
12 நீ எகிப்தில் அடிமையாய் இருந்தாய் என்பதை நினைவிலிருத்தி, இந்த முறைமைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. [2]

கூடார விழா

[தொகு]

(லேவி 23:33-43)


13 களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய்.
14 நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் அடிமைகளும், உன் அடிமைப் பெண்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அன்னியனும், அனாதைகளும், கைம்பெண்களும் இவ்விழாவில் மகிழுங்கள்.
15 உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய். [3]


16 ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், புளிப்பற்ற அப்ப விழாவிலும் வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.
17 கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக!

நீதி வழங்கும் முறை

[தொகு]


18 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய். அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.
19 நீதியைத் திரித்துவிடாதே. ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே. கையூட்டு வாங்காதே. ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும். [4]
20 நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய்.
21 கடவுளாகிய ஆண்டவருக்கு நீ எழுப்பவிருக்கும் பீடத்தின் அருகில் அசேராக் கம்பங்களை ஊன்ற வேண்டாம். [5]
22 சிலைத் தூண்களையும் நிறுத்தாதே. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் அவற்றை வெறுக்கிறார். [6]

குறிப்புகள்

[1] 16:1-8 = லேவி 23:5-8; எண் 28:16-25.
[3] 16:9-12 = எண் 28:26-31.
[4] 16:13-15 = எண் 29:12-38.
[5] 16:19 = விப 23:6-8; லேவி 19:15.
[6] 16:21 = விப 34:13.
[7] 16:22 = லேவி 26:1.


(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை