திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இஸ்ரயேல் வாக்களிக்கப்பட்ட நாட்டில் புகுதல். விவிலியக் காட்சிகள் வெளியீடு. ஆண்டு: 1896-1913

இணைச் சட்டம்[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]


1 ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம். ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
2 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெரிந்தால்,
3 - நான் கட்டளையிட்டதற்கு எதிராக, வேற்றுத் தெய்வங்கள் அல்லது நிலா, கதிரவன் அல்லது வேறு யாதொரு வான் கோளங்களைப் பின்சென்று, பணிந்து வணங்கினால் - [1]
4 அது பற்றி உனக்குச் சொல்லப்படும் போது அல்லது நீ கேள்விப்படும் போது அதை நீ நன்கு விசாரி. அது உண்மை எனவும் அத்தகைய அருவருப்பான செயல் இஸ்ரயேலில் நடந்தது உறுதி எனவும் நீ கண்டால்,
5 அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்குக் கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.
6 இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும். ஒரே சாட்சியின் வாக்குமூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படலாகாது. [2]
7 முதலில் சாட்சிகளின் கைகளும் பின்னர் எல்லா மக்களின் கைகளும் கொல்லப்பட வேண்டியவனுக்கு எதிராக ஓங்கட்டும். இவ்வாறு உன் நடுவிலிருந்து தீமையை அகற்றுவாய்.
8 இரத்தப் பழிகளைக் குறித்தோ, உரிமை வழக்குகளைக் குறித்தோ, தடியடியைக் குறித்தோ தீர்ப்புக் கூறுவது கடினமாய் இருந்தால் அல்லது உன் நகரிலுள்ள வேறு எந்த வழக்கும் சிக்கலானதாக இருந்தால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்.
9 அங்கு, லேவியரான குருக்களிடத்திலும் அன்றைய நாளின் நீதிபதிகளிடமும் அறிவுரை கேள். நியாயத் தீர்ப்பை அவர்கள் உனக்குத் தெரிவிப்பார்கள்.
10 ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திலிருந்து அவர்கள் உனக்குத் தெரிவிப்பதன்படி நட. அவர்கள் கற்பித்தபடி எல்லாம் செயல்படுவதில் கருத்தாயிரு.
11 அவர்கள் உனக்குக் கற்பித்த சட்டங்களின்படியும், அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பின்படியும் செயல்படு. அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பினின்று இடமோ வலமோ பிறழாதே.
12 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஊழியம் புரிய அங்கே நிற்கும் குருக்களுக்கோ நீதிபதிகளுக்கோ செவிகொடாமல் செருக்குடன் செயல்படுகிறவன் சாகவேண்டும். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்றுவாய்.
13 எல்லா மக்களும் அதைக் கேட்டு, அஞ்சுவர்; எவரும் செருக்குடன் செயல்படார்.

அரசனுக்கான விதிமுறைகள்[தொகு]


14 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், 'என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன்' என்று நீ சொல்வாய். [3]
15 அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.
16 அவன் தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளாமலும், குதிரைகளை மிகுதியாக்கிக்கொள்ளும் பொருட்டு மக்களை மீண்டும் எகிப்துக்குப் போகச் சொல்லாமலும் இருக்கட்டும். ஏனெனில், இனி அந்த வழியாகத் திரும்பவும் செல்லக்கூடாதென ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியுள்ளார். [4]
17 அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது; வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது. [5]
18 அவன் தன் அரசுக் கட்டிலில் அமர்ந்தபின், லேவியராகிய குருக்கள் பொறுப்பிலுள்ள இச்சட்ட நூலின் நகல் ஒன்றைத் தனக்கென ஓர் ஏட்டில் எழுதிக் கொள்ளட்டும்.
19 அதைத் தன்னோடு வைத்துக்கொள்ளட்டும். அதை நாள்தோறும் அவன் வாழ்நாள் முழுவதும் வாசிக்கட்டும். அதனால், அந்தச் சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், அதன் நீதிமுறைகளையும் நிறைவேற்றுதவன் மூலம் அவன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வான்.
20 அதனால், அவன் இதயத்தில் இறுமாப்புக்கொண்டு, தன் சகோதரருக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், கட்டளைகளிலிருந்து வலமோ இடமோ பிறழாமலும் இருப்பான். அப்போது அவனும் அவன் புதல்வர்களும் இஸ்ரயேலில் நெடுநாள் ஆட்சி புரிவர்.

குறிப்புகள்

[1] 17:3 = விப 22:20.
[2] 17:6 = எண் 35:30; இச 19:15; மத் 18:16; 2 கொரி 13:1; 1 திமொ 5:19; எபி 10:28.
[3] 17:14 = 1 சாமு 8:5.
[4] 17:16 = 1 அர 10:28; 2 குறி 1:16; 9:28.
[5] 17:17 = 1 அர 10:14, 22-27; 11:1-8; 2 குறி 1:15; 9:27.


அதிகாரம் 18[தொகு]

குருக்களுக்கான பங்கு[தொகு]


1 லேவிய குருக்களுக்கும் அனைத்து லேவிய குலத்தாருக்கும் இஸ்ரயேல் மக்களிடையே பங்கும் சொத்துரிமையும் இல்லை. ஆண்டவருக்கெனச் செலுத்தப்படும் எரிபலிகளையும் அவருக்கே உரியவைகளையும் அவர்கள் உண்பார்கள்.
2 அவர்கள் சகோதரர்கள் நடுவே அவர்களுக்கு உரிமைச்சொத்து இல்லாதிருக்கட்டும். ஆண்டவர் அவர்களுக்கு வாக்களித்தபடி அவரே அவர்களின் உரிமைச் சொத்து. [1]


3 மக்களிடமிருந்து குருக்களுக்குச் சேரவேண்டிய உரிமம் ஆவது: பலியிட வருவோர் பலியிடப்படும் ஆடு, மாடு இவற்றின் முன்னந்தொடை, தாடைகள், இரைப்பை ஆகியவற்றைக் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.
4 உன் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் முதற்பலனையும், கத்தரித்த ஆட்டு மயிரின் முதற்பங்கையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும்.
5 ஏனெனில், அவனும் அவன் புதல்வர்களும் உன் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் அவர் முன்னிலையில் என்றென்றும் ஊழியம் செய்யும்படி அவர் அவனை உங்களது குலங்கள் அனைத்திலிருந்தும் தேர்ந்து கொண்டார்.


6 இஸ்ரயேலில் பரவியுள்ள யாதொரு நகரில் வாழும் ஒரு லேவியன் அங்கிருந்து புறப்பட்டு ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திற்கு விரும்பி வந்தால்,
7 அங்கே ஆண்டவரின் முன்னிலையில் ஊழியம் செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல, அவனும் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஊழியம் செய்வான்.
8 அவன் தன் தந்தைவழிச் சொத்தில் வரவேண்டியதை அனுபவிப்பதுமின்றி, தன் ஊழியத்திற்கான பங்கையும் உணவுக்காகப் பெற்றுக்கொள்ளட்டும்.

வேற்றின வழக்கங்கள் குறித்த எச்சரிக்கை[தொகு]


9 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின், அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே.
10 தன் புதல்வனை அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும், குறி சொல்கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும், [2]
11 மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது. [3]
12 ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார்.
13 கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு. [4]

இறைவாக்கினரை அனுப்பவதற்கான உறுதிமொழி[தொகு]


14 ஏனெனில், நீ துரத்திவிடவிருக்கும் இந்த வேற்றினத்தார் குறிசொல்லுகிறவர்களுக்கும், நாள் பார்க்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். அவ்வாறு செயல்பட உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுமதிக்கவில்லை.
15 கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. [5]
16 ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, 'நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக' என்று விண்ணப்பித்தபோது,
17 ஆண்டவர் என்னைநோக்கி, 'அவர்கள் சொன்னதெல்லாம் சரி' என்றார்.
18 உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான்.
19 என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். [6]
20 ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.
21 'ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று எப்படி நான் அறிவது?' என்று நீ உன் மனத்தில் எண்ணலாம்.
22 ஓர் இறைவாக்கினன் ஆண்டவரின் பெயரால் உரைப்பது நடைபெறாமலும் நிறைவேறாமலும் போனால், அந்த இறைவாக்கினன் தன் எண்ணப்படியே பேசுபவன். அவனுக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை.

குறிப்புகள்

[1] 18:2 = எண் 18:20.
[2] 18:10 = லேவி 19:26; விப 22:18.
[3] 18:11 = லேவி 19:31.
[4] 18:13 = மத் 5:48.
[5] 18:15 = திப 3:22; 7:37.
[6] 18:19 = திப 3:23.


(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை