திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை
இணைச் சட்டம்
[தொகு]அதிகாரங்கள் 19 முதல் 20 வரை
அதிகாரம் 19
[தொகு]அடைக்கல நகர்கள்
[தொகு](எண் 35:9-28; யோசு 20:1-9)
1 கடவுளாகிய ஆண்டவர் வேற்றினத்தாரை வேரறுத்து, அவர்களின் நாடுகளை உனக்குக் கொடுப்பார். நீ அவற்றை உடைமையாக்கி, அவர்களது நகர்களிலும் வீடுகளிலும் குடியேறுவாய்.
2 நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டினிடையே மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை.
3 கொலை செய்தவன் எவனும் அங்கே தப்பி ஓடும்படி சாலைகளை அமை. இவ்வாறு, உன் உரிமைச் சொத்தாகுமாறு கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை மூன்று பாகங்களாகப் பிரி.
4 அங்கே ஓடிப்போவதன் மூலம் உயிர் வாழத்தக்க கொலையாளி யாரெனில், தற்செயலாய் முன்பகை ஏதுமின்றித் தனக்கு அடுத்திருப்பவனைக் கொலைசெய்பவனே.
5 சான்றாக; ஒருவன் மரம் வெட்டுவதற்காகத் தனக்கு அடுத்திருப்பவனோடு காட்டுக்குள் செல்கிறான். மரத்தை வெட்டுவதற்காகக் கோடரியைத் தன் கையால் ஓங்கும்போது, கோடரியின் இரும்பு கைப்பிடியினின்று கழன்று அடுத்திருப்பவன் மீது விழ அவன் இறந்து போகிறான். அப்போது அப்படிப்பட்டவன் இந்நகர்கள் ஒன்றினுக்குள் தப்பியோடி அங்கே வாழலாம்.
6 இல்லையெனில் கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினன், கோப வெறியால் பழிவாங்கும்படி கொலையாளியைப் பின்தொடரும் போது, செல்லும் வழி நீண்டதாக இருந்தால் அவனைப் பிடித்துக் கொன்றுவிட ஏதுவாகும். ஆனால், கொலை செய்யப்பட்டவன் மீது கொலையாளிக்கு முன்பகை இல்லாததால் அவன் சாவுக்குரிய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது உண்மை.
7 எனவேதான் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்; மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை.
8 நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்றுவதில் நீ கருத்தாய் இருந்து, உன் கடவுளாகிய ஆண்டவர்மேல் அன்புகூர்ந்து, அவரது வழிகளில் என்றும் நடந்தால்,
9 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு வாக்களித்தபடி, உனக்கு இந்த நாடுகள் அனைத்தையும் கொடுத்து, உன் எல்லைகளை விரிவாக்குவார். அப்போது இன்னும் மூன்று நகர்களை இந்த நகர்களோடு சேர்த்துக்கொள்.
10 இல்லையெனில், நீ உரிமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டில், குற்றமில்லாதவனின் இரத்தம் சிந்தப்படுவதால், உன் மேல் இரத்தப்பழி வரலாம்.
11 ஆனால், ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கியிருந்து, அவனைத் தாக்கி, அவனை வெட்டிச் சாகடித்தபின், இந்த நகர்கள் ஒன்றினுக்குள் ஓடி ஒளிந்தால்,
12 அவனது நகர்ப் பெரியோர்கள் ஆளனுப்பி, அங்கிருந்து அவனைக் கொண்டுவந்து கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினனின் கையில் அவனை ஒப்படைப்பர்.
13 நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே. குற்றமில்லாதவனின் இரத்தப்பழியை இஸ்ரயேலில் இருந்து துடைத்துவிடு. அப்போது உனக்கு நலமாகும்!
வழி முறை எல்லைக்கல்
[தொகு]
14 நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் உன் உரிமைச் சொத்தாகிய நாட்டில் முன்னோர்கள் குறித்துள்ள உனக்கு அடுத்திருப்பவனின் எல்லைக் கல்லை நகர்த்தி வைக்காதே. [1]
சாட்சிகளைப் பற்றிய விதிமுறைகள்
[தொகு]
15 ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச்செயலையும் உறுதி செய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதிசெய்யப்பட வேண்டும். [2]
16 ஒருவன்மேல் குற்றம் சுமத்தும்படி ஒரு பொய்ச்சாட்சி முன்வந்தால்,
17 வழக்காடுகிற இருவரும் ஆண்டவரின் திருமுன் அன்றைய நாளில் ஊழியம் புரியும் குருக்களிடமும் நீதிபதிகளிடமும் வரட்டும்.
18 நீதிபதிகள் தீர விசாரிப்பர். சான்று சொன்னவன் பொய்ச்சாட்சி என்றும், தன் சகோதரனை அநியாயமாகக் குற்றம் சாட்டியுள்ளான் என்றும் அறிந்தால்,
19 அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்ததுபோலவே, அவனுக்குச் செய்யுங்கள். இவ்வாறு, உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றுங்கள்.
20 அப்போது அதைக்கேட்டு மற்றவர்களும் அஞ்சுவர். அத்தகைய தீச்செயலை உங்களிடையே எவரும் செய்யத் துணியார்.
21 நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே; உயிருக்கு உயிர்; கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்! [3]
- குறிப்புகள்
[1] 19:14 = இச 27:17.
[2] 19:15 = எண் 35:30; இச 17:6; மத் 18:16; யோவா 19:31; 2 கொரி 13:1; 1 திமொ 5:19; எபி 10:18.
[3] 19:21 = விப 21:23-25; லேவி 24:19-20; மத் 5:38.
அதிகாரம் 20
[தொகு]போரைப் பற்றிய விதிமுறைகள்
[தொகு]
1 நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார்.
2 நீ போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்து வீரர்களிடம் கூற வேண்டியது;
3 "இஸ்ரயேலே கேள்! இன்று நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராகப் போர்புரிய முன்வந்துள்ளீர்கள். உங்கள் இதயம் சோர்ந்து போக வேண்டாம்; அஞ்ச வேண்டாம்; கலங்க வேண்டாம்; அவர்களைப் பார்த்துத் தத்தளிக்கவும் வேண்டாம்.
4 ஏனெனில், உங்களுக்காக உங்கள் பகைவருக்கு எதிராகப் போர்புரியவும், உங்களைக் காப்பாற்றவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களோடு செல்கிறார்.
5 அதன்பின், படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது; "புது வீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதை அர்ப்பணம் செய்ய வேண்டியிருக்கும்.
6 திராட்சைத் தோட்டம் அமைத்து அதன் பயனை அனுபவிக்காதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதன் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
7 ஒரு பெண்ணை மண உறுதிப்பாடு செய்தும் அவளோடு கூடி வாழாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால் வேறு ஒருவன் அவளை மணக்க வேண்டியிருக்கும்."
8 மீண்டும் படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது; உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். இல்லையெனில், அவன் தோழனும் அவனைப்போல் ஊக்கம் இழந்து விடுவான்."
9 இவ்வாறு படைத்தலைவர்கள் வீரர்களிடம் பேசி முடித்தபின், அவர்களை நடத்திச் செல்லும் படைத்தளபதிகளை நியமிக்கட்டும்.
10 ஒரு நகரோடு போரிட நீ அதை நெருங்கும் போது, அது சரணடையுமாறு முயற்சி செய்.
11 அது சரணடைந்து, தன் வாயில்களை உனக்குத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லாரும் உனக்கு அடிமைகளாகி உனக்குப் பணிவிடை செய்வர்.
12 அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு.
13 கடவுளாகிய ஆண்டவர் அதை உன்கையில் ஒப்படைக்கும்போது, அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்றுவிடு.
14 ஆனால், பெண்களையும் சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள். உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம்.
15 இந்த நாடுகளைச் சாராத தொலையிலுள்ள எல்லா நகர்களுக்கும் அவ்வாறே செய்வாய்.
16 ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாபமல் விடாதே.
17 இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்.
18 அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள்.
19 ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே. நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றை வெட்டலாகாது. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே!
20 உணவுக்கு உதவாத மரங்கள் என்று உனக்குத் தெரிபவற்றை மட்டும் வெட்டி அழிக்கலாம். உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும்வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம்.
(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை