திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கடவுளின் கட்டளைகள். விவிலியக் கண்ணாடி ஓவியம். எருசலேம்.

இணைச் சட்டம்[தொகு]

அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

அதிகாரம் 27[தொகு]

கடவுளின் கட்டளைகள் கற்களில் எழுதப்படல்[தொகு]


1 மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: "இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்.
2 நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட்டி, அவற்றின்மேல் சாந்து பூசுங்கள்.
3 உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தது போல், உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்குள் நீங்கள் நுழையுமாறு கடந்து சென்றதும், அக்கற்களின் மீது திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிவையுங்கள்.
4 நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள்.
5 அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். அவற்றின்மீது இரும்புக்கருவி படவேண்டாம்.
6 கற்களால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலிகளைச் செலுத்துங்கள். [1]
7 நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
8 மேலும், அக்கற்களின்மீது இத்திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் மிகத் தெளிவாக எழுதிவையுங்கள்.' [2]
9 பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது: 'இஸ்ரயேலே, கவனமாகக் கேள். நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய்.
10 எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நிறைவேற்று'.

கீழ்ப்படியாமைக்குச் சாபங்கள்[தொகு]


11 மோசே அன்று மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:
12 நீங்கள் யோர்தானைக் கடந்தபின், மக்களுக்கு ஆசிவழங்குமாறு, சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமின் ஆகியோர் கெரிசிம் மலைமீது நிற்கட்டும். [3]
13 மக்களுக்குச் சாபம் வழங்குமாறு, ரூபன், காத்து, ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோர் ஏபால் மலைமீது நிற்கட்டும்.
14 லேவியர் இஸ்ரயேலர் அனைவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியது:
15 'ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும்'. உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக 'அப்படியே ஆகட்டும்' என்பர். [4]
16 'தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும்'. உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர். [5]
17 'தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும்'; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர். [6]
18 'பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும்'. உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர்.
19 'அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும்'; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர். [7]
20 'தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்'; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர்.
21 'எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்'; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர். [8]
22 'தன் தந்தையில் புதல்வி அல்லது தன் தாயின் புதல்வியாகிய தன் சகோதரியுடன் கூடுகிறவன் சபிக்கப்படட்டும்'; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர். [9]
23 'தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்'; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர். [10]
24 'தமக்கு அடுத்திருப்பவரை ஒளிந்திருந்து கொல்பவன் சபிக்கப்படட்டும்'; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர்.
25 'குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும்' ; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர்.
26 'இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்'; உடனே மக்கள் அனைவரும் 'அப்படியே ஆகட்டும்' என்பர். [11]

குறிப்புகள்

[1] 27:5-6 = விப 20:25.
[2] 27:2-8 = யோசு 8:30-32.
[3] 27:12 = இச 11:29; யோசு 8:33-35.
[4] 27:15 = விப 20:4; 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 5:8.
[5] 27:16 = விப 20:12; இச 5:16.
[6] 27:17 = இச 19:4; 27:18; லேவி 19:14.
[7] 27:19 = விப 22:21; 23:9; லேவி 19:33-34; இச 24:17-18; 27:20; லேவி 18:8; 20:11; இச 22:30.
[8] 27:21 = விப 22:19; லேவி 18:23; 20:15.
[9] 27:22 = லேவி 18:9; 20:17.
[10] 27:23 = லேவி 18:17; 20:14.
[11] 27:26 = கலா 3:10.

அதிகாரம் 28[தொகு]

கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்[தொகு]

(லேவி 26:3-13; இச 7:12-24)


1 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்.
2 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.
3 நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்; வயல் வெளியிலும் ஆசிபெற்றிடுவாய்.
4 உன் கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும் உன் கால்நடைகளின் ஈற்றுகளும், உன் மாடுகளின் கன்றுகளும் உன் ஆடுகளின் குட்டிகளும் ஆசி பெற்றிடும். [1]
5 உன் கூடையும் உன் மாவுபிசையும் தொட்டியும் ஆசி பெற்றிடும்.
6 நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்.
7 உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஒருவழியாய் உனக்கு எதிராக வருவர்; ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப்போவர்.
8 உன் களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய்.
9 உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார்.
10 அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக்கண்டு உனக்கு அஞ்சுவர்.
11 உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி உன் கால் நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார்.
12 தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்கமாட்டாய்.
13 இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்.
14 எனவே, நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எதிலிருந்தும் விலகாதே. வலமோ இடமோ விலகி நடக்காதே, வேற்றுத் தெய்வங்களின் பின்சென்று அவற்றுக்கு ஊழியம் செய்யாதே.

கீழ்ப்படியாமையின் பின் விளைவுகள்[தொகு]

(லேவி 26:14-46)


15 ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாமலும், இன்று நான் உனக்கு விதிக்கும் இந்தக் கட்டளைகளையும், நியமங்களையும் கடைப்பிடிப்பதில் கருத்தின்றியும் இருந்தால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.
16 நீ நகரிலும் சபிக்கப்படுவாய், வயல்வெளியிலும் சபிக்கப்படுவாய்.
17 உன் கூடையும் உன் மாவு பிசையும் தொட்டியும் சபிக்கப்படும்.
18 உன் கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும், உன் மாடுகளின் கன்றுகளும், உன் ஆடுகளின் குட்டிகளும் சபிக்கப்படும்.
19 நீ வருகையிலும் சபிக்கப்படுவாய், செல்கையிலும் சபிக்கப்படுவாய்.
20 நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும், நீ கெட்டு விரைவில் அழியுமட்டும், ஆண்டவர் உன்மீது சாபமும், குழப்பமும் பேரழிவுமே வரச்செய்வார். ஏனெனில் உன் பொல்லாத செயல்களினால் என்னைவிட்டு விலகிவிட்டாய்.
21 நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலிருந்து, ஆண்டவர் உன்னை அழிக்குமட்டும், கொள்ளை நோய் உன்னைவிடாது தொற்றிக்கொள்ளச் செய்வார்.
22 உருக்கு நோய், காய்ச்சல், கொப்புளம், எரிவெப்பம், வாள், இடி, நச்சுப்பனி ஆகியவற்றால் ஆண்டவர் உன்னை வதைப்பார். நீ அழியும் மட்டும் அவை உன்னை வாட்டும்.
23 உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமாகவும் உனக்குக் கீழேயுள்ள நிலம் இரும்பாகவும் இருக்கும்.
24 ஆண்டவர் புழுதியையும் தூசியையும் உன் நாட்டின் மழையாகப் பொழியச் செய்வார். நீ அழியுமட்டும் அவை வானத்திலிருந்து உன்மேல் விழும்.


25 உன் பகைவர்களுக்கு முன்னால் நீ முறியடிக்கப்படுமாறு ஆண்டவர் உன்னை விட்டுவிடுவார். ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ ஏழு வழியாய் அவர்கள் கண்களுக்கு முன்னே ஓடிப்போவாய். உனக்கு நேர்வதைக்கண்டு பூவுலகின் எல்லா நாடுகளும் பேரச்சம் கொள்ளும்.
26 உன் பிணம் வானத்துப் பறவைகள் அனைத்திற்கும் நிலத்தின் விலங்குகளுக்கும் இரையாகும். அவற்றை விரட்டியடிப்பார் எவரும் இரார்.
27 எகிப்தின் கொப்புளங்களாலும், மூல நோயாலும், சொறியினாலும், சிரங்கினாலும், ஆண்டவர் உன்னை வதைப்பார். அவற்றிலிருந்து நீ நலம் பெற முடியாது.
28 மூளைக்கோளாறினாலும், பார்வையிழப்பாலும், மனக் குழப்பத்தாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.
29 பார்வையற்றோன், இருளில் தடவித்திரிவது போல் நீ பட்டப்பகலில் தடவித்திரிவாய். உன் முயற்சிகளில் நீ வெற்றிபெறமாட்டாய். நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறி கொடுக்கிறவனுமாய் இருப்பாய். உன்னை விடுவிக்க எவரும் இரார்.


30 நீ ஒரு பெண்ணை மணமுடிப்பாய்; வேறு ஒருவன் அவளோடு கூடி வாழ்வான். நீ ஒரு வீட்டைக்கட்டுவாய்; ஆனால் அதில் நீ குடியிருக்க மாட்டாய். நீ திராட்சைத் தோட்டத்தை அமைப்பாய்; ஆனால், அதன் பயனை அனுபவிக்கமாட்டாய்.
31 உன் மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்; ஆனால் அதிலிருந்து நீ உண்ண முடியாது. உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால் கொள்ளையிடப்படும்; அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது. உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும். அவற்றை விடுவிப்பார் எவரும் இரார்.
32 உன் கண்முன்னே, உன் புதல்வரும் புதல்வியரும் வேற்று மக்களுக்குக் கொடுக்கப்படுவர். அவர்களைப் பார்க்க நாள்தோறும் உன் கண்கள் ஏங்கி எதிர்பார்த்துப் பூத்துப்போகும். உன் கைகளும் வலிமையற்றுப்போகும்.
33 நீ அறியாத மக்களினம் உன் நிலத்தின் கனிகளையும் உன் உழைப்பின் பயனையும் உண்ணும். நீயோ எந்நாளும் ஒடுக்கப்பட்டவனும் நொறுக்கப்பட்டவனுமாய் இருப்பாய்.
34 உன் கண்கள் காணும் இக்காட்சிகளால் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்.
35 முழங்கால்களிலும் தொடைகளிலும் தோன்றும், குணப்படுத்தவே முடியாத, கொடிய கொப்புளங்களால் ஆண்டவர் உன்னை வதைப்பார். உன் உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை அது பரவும்.


36 உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திய அரசனையும், உனக்கும், உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் போகச் செய்வார். அங்கு மரத்தாலும் கல்லாலுமான வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.
37 ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய்விடும் அனைத்து மக்கள் நடுவிலும், நீ அருவருப்புப் பொருளாக, கேலிப் பழமொழியாக, நகைப்புச் சொல்லாக ஆகிவிடுவாய்.


38 வயலில் மிகுதியாக விதைத்துக் கொஞ்சமே அறுப்பாய்; ஏனெனில் வெட்டுக் கிளிகள் அதைத் தின்று அழித்துவிடும்.
39 திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்; ஆயினும் இரசம் குடிக்கவும் மாட்டாய்; பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்; ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும்.
40 ஒலிவ மரங்கள் உனக்குரிய நிலமெங்கும் இருக்கும்; ஆனால் நீ எண்ணெய் தேய்க்க மாட்டாய். ஏனெனில் உன் ஒலிவம்பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்.
41 நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்; ஆயினும் அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.
42 உன் மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும்.
43 உன்னிடையே வாழும் அன்னியர் உன்னைவிட மேம்பட்டு மேலும் மேலும் உயர்வர்; நீயோ படிப்படியாகத் தாழ்ந்து போவாய்.
44 உனக்குக் கடன் கொடுக்க அவர்களால் முடியும். அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது. அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய்.


45 இந்தச் சாபங்கள் அனைத்தும் உன்னைத் துரத்திவந்து பிடித்து, நீ அழியுமட்டும் உன்னை வதைக்கும். ஏனெனில், நான் உனக்குக் கட்டளையிட்ட அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீ கடைப்பிடிக்கவில்லை; உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவுமில்லை.
46 இச்சாபங்கள் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் அடையாளமாகவும் வியத்தகு செயலாகவும் என்றும் இருக்கும்.
47 எல்லா நலன்களும் நிறைந்திருக்கையில் நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு மன மகிழ்வோடும் இதயக்களிப்போடும் ஊழியம் செய்யவில்லை.
48 எனவே, பசியோடும், தாகத்தோடும், வெற்றுடம்போடும் யாதுமற்ற நிலையிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கெதிராக அனுப்பும் உன் பகைவர்களுக்கு நீ பணிவிடை செய்வாய். அவர்கள் உன்னை அழித்தொழிக்கும் மட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தில் வைப்பர்.
49 வெகு தொலையிலிருந்து, பூவுலகின் கடைக்கோடியிலிருந்து, ஓர் இனத்தை ஆண்டவர் உனக்கு எதிராக எழச்செய்வார். அது கழுகைப்போல மிக வேகமாக வரும். அந்த இனத்தின் மொழி உனக்குப் புரியாது.
50 அந்த இனம் கொடிய முகம் கொண்டது; முதியவர்களை மதிக்காது; இளைஞர்களுக்கு இரக்கம் காட்டாது.
51 நீ அழிந்து போகும்வரை அந்த இனம் உன் கால்நடைகளின் ஈற்றுகளையும் உன் நிலத்தின் பயனையும் உண்ணும். உன்னை அழிக்கும்வரை, உன் தானியத்தையும், இரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் கன்றுகளையும், உன் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம்விட்டு வைக்காது.
52 உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும். ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும்.


53 உன் பகைவன் முற்றுகையிட்டு உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ள உன் கருவின் கனிகளான உன் புதல்வர், புதல்வியரின் சதையைக்கூட உண்பாய்.
54-55 உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவன், இனி எதுவுமே இல்லாததால், தான் உண்ணும் தன் பிள்ளையின் சதையைத் தன் சகோதரனுக்கோ, தன் அன்பு மனைவிக்கோ, எஞ்சியுள்ள தன் பிள்ளைகளுக்கோ கொடுக்கமாட்டான்; உணவின் பொருட்டு அவர்களை வெறுப்பான்.
56-57 உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவள், தன் உள்ளங்காலைத் தரையில் நன்றாக ஊன்றி நடக்காத அளவு இனிமையும் மென்மையும் மிக்கவள், இனி எதுவுமே இல்லாததால், குழந்தை பிறந்த உடனே தன் குழந்தையையும் அதனோடு வருகின்ற கழிவுகளையும் மறைவாக உண்பாள்; எவருக்கும் கொடுக்க மாட்டாள். உணவின் பொருட்டுத் தன் இனிய கணவனையும், தன் புதல்வர் புதல்வியரையும் வெறுப்பாள். [2]
58 'உன் கடவுளாகிய ஆண்டவர்' என்னும் மாட்சிமிகு, அச்சந்தரும் இந்தத் திருப்பெயருக்கு அஞ்சும்படி, இந்நூலில் எழுதியுள்ள திருச்சட்டத்தின் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.
59 இல்லையெனில், உன்மீதும் உன் வழிமரபினர்மீதும் விவரிக்க இயலாத வாதைகளை, கொடிய, நீங்கா வாதைகளை, கடின, நீங்கா நோய்களை ஆண்டவர் வரச்செய்வார்.
60 மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார். அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும்.
61 இந்தத் திருச்சட்ட நூலில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழிந்து போகும்வரை ஆண்டவர் உன்மீது வரச்செய்வார்.
62 எண்ணிக்கையில் வானத்து விண்மீன்களைப் போன்று இருந்த உங்களுள் மிகச் சிலரே எஞ்சியிருப்பீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் செவிகொடுக்கவில்லை.
63 உங்களுக்கு நன்மைகள் செய்து உங்களைப் பெருகச் செய்வதில் மகிழ்ந்த ஆண்டவர், உங்கள்மேல் அழிவைக் கொணர்ந்து உங்களை வேரறுப்பதில் மகிழ்வார். நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலிருந்து நீங்கள் பிடுங்கி எறியப்படுவீர்கள்.


64 உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உள்ள எல்லா மக்களினங்களிடையிலும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார். அங்கு, நீயும் உன் மூதாதையரும் அழியாத, மரத்தாலும் கல்லாலும் ஆன வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.
65 அந்த மக்களினங்களிடையே உனக்கு ஓய்வு இராது; உன் உள்ளங்கால்கள் தங்கி இளைப்பாற இடம் இராது. அங்கே ஆண்டவர் நடுநடுங்கும் இதயத்தையும், பஞ்சடைந்த கண்களையும், தளர்வுற்ற மனத்தையும் உனக்குக் கொடுப்பார்.
66 உன் உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும். உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.
67 உன் கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும், 'இது மாலையாக இருக்கக் கூடாதா?' என்பாய்; மாலையானதும், 'இது காலையாக இருக்கக்கூடாதா?' என்பாய்.
68 நீங்கள் இனி ஒரு நாளும் மீண்டும் மேற்கொள்ள மாட்டீர்கள் என எந்தப் பயணத்தைப்பற்றி நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேனோ, அந்தப் பயணத்தைக் கப்பல்களில் மேற்கொண்டு நீங்கள் எகிப்துக்குத் திரும்பிச் செல்லுமாறு ஆண்டவர் செய்வார். அங்கே உங்களை நீங்களே அடிமைகளாக, ஆண், பெண் அடிமைகளாக, உங்கள் பகைவர்களுக்கு விற்க முயல்வீர்கள்; ஆனால் உங்களை எவரும் விலைக்கு வாங்கமாட்டார்.

குறிப்புகள்

[1] 28:1-4 = இச 11:13-17.
[2] 28:57 = 2 அர 6:28-29; புல 4:10.


(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 29 முதல் 30 வரை