திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விவிலிய கையெழுத்துக் கலைச்சுவடி. ஆண்டு: 1407. காப்பிடம்: மாம்சுபரி துறவற இல்லம், இங்கிலாந்து.

இணைச் சட்டம்[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 29[தொகு]

மோவாபு நாட்டில் ஆண்டவர் இஸ்ரயேலுடன் செய்துகொண்ட உடன்படிக்கை[தொகு]


1 ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு:
2 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது: எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலர் அனைவருக்கும், அவன் நாடு முழுமைக்கும் உங்கள் கண்முன்பாக ஆண்டவர் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள்.
3 கொடிய சோதனைகளையும், அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், வியத்தகு செயல்களையும் அங்கே உங்கள் கண்களால் கண்டீர்கள்.
4 ஆயினும், புரிந்துகொள்ளும் உள்ளத்தையும், காண்கின்ற கண்களையும், கேட்கின்ற செவிகளையும் இந்நாள் வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை.
5-6 'நாற்பது ஆண்டுகள் நான் உங்களைப் பாலைநிலத்தில் கூட்டிவந்தேன். அப்பொழுது உங்கள் மேலுள்ள ஆடைகள் நைந்து போகவில்லை; உங்கள் காலிலுள்ள காலணிகள் பழுதடைந்து போகவுமில்லை. நீங்கள் அப்பம் உண்ணவோ, இரசம் குடிக்கவோ, மதுபானம் அருந்தவோ இல்லை. இதனால், நானே கடவுளாகிய ஆண்டவர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.'
7 நீங்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் நமக்கு எதிராகப் போர்புரிய வந்தனர். நாம் அவர்களை முறியடித்தோம். [1]
8 அவர்களது நாட்டைப் பிடித்து, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம். [2]
9 எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.


10 இன்று நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றீர்கள். உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ரயேலின் ஆடவர் ஏனையோரும்,
11 உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அன்னியராகிய விறகு வெட்டியும் தண்ணீர் சுமப்பவனும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள்.
12 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும்,
13 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இன்று உங்களோடு செய்யப்போகின்ற அவர்தம் உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் பங்கு கொள்ளுமாறும் நீங்கள் நிற்கின்றீர்கள்.
14 வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்து கொள்ளவில்லை.
15 மாறாக, இங்கு நம்மோடு நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றவர்களோடும், இன்று இங்கு நம்மோடு இல்லதாவர்களோடும் செய்துகொள்கிறார்.


16 எகிப்து நாட்டில் நாம் எவ்வாறு குடியிருந்தோம் என்பதையும் வேற்றினங்களிடையே நாம் எவ்வாறு கடந்து வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
17 அவர்களின் அருவருப்புகளை, மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் பொன்னாலுமான அவர்களின் தெய்வச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்கள்.
18 அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும். [3]
19 அத்தகையோர் இந்த வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும், 'நாங்கள் இதயப்பிடிவாதத்தோடு நடந்தாலும், எங்களுக்கு எல்லாம் நலமாகும்' என்று சொல்லித் தங்களையே தேற்றிக் கொள்வார்களாகில், பசுமையானதும் உலர்ந்ததும் சேர்ந்தழியும்.
20 ஆண்டவர் அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டார். மாறாக ஆண்டவரின் சினமும் சகிப்பின்மையும் அவர்கள் மீது கனன்றெரியும். இந்த நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் அவர்கள்மேல் விழும். ஆண்டவர் அவர்களது பெயரை மண்ணுலகினின்று துடைத்து விடுவார்.
21 இந்தத் திருச்சட்ட நூலில் எழுதியுள்ள உடன்படிக்கையின் சாபங்களுக்கு ஏற்ப, ஆண்டவர் அத்தகையோரை இஸ்ரயேலின் குலங்கள் அனைத்தினின்றும் பிரித்தெடுத்துத் தீமைக்கு உள்ளாக்குவார்.


22 அப்பொழுது, உங்களுக்குப் பின்வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், நெடுந்தொலை நாட்டிலிருந்து வரும் அன்னியரும், ஆண்டவர் இந்த நாட்டின்மேல் வரச்செய்த வாதைகளையும், நோய்களையும் காணும்போது,
23 ஆண்டவர் தம் சினத்திலும் சீற்றத்திலும் வேரறுத்த சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் போன்ற இடங்கள் அழிந்ததைப்போல, இந்த நாட்டின் நிலம் முழுவதும், கந்தகமும் உப்புமாக வெந்துபோய் விதைப்பும், விளைச்சலுமின்றி யாதொரு புற்பூண்டும் முளைக்காமல் இருப்பதைக் காணும் போது, [4]
24 வேற்றினத்தார் அனைவரும் 'ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார்? இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன?' என்று கேட்பர்.
25 அதற்கு மறுமொழியாக, அவர்களுடைய மூதாதையரின் கடவுள் அவர்களை எகிப்திலிருந்து கூட்டி வரும்பொழுது, அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டு விலகினர்.
26 அவர் அவர்களுக்குக் கொடுக்காதவையும் அவர்கள் அறியாதவையுமான வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு ஊழியம் செய்தனர்.
27 ஆகவே, ஆண்டவர் சீற்றம் கொண்டு, இந்நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தையும் இந்நாட்டின்மீது வரச்செய்தார்.
28 அவர் தம் சினத்தாலும், கோபத்தாலும், சீற்றத்தாலும், அவர்களை அவர்களது நாட்டிலிருந்து வேரறுத்தார். இந்நாளில் இருப்பது போல் அவர்களை வேற்று நாட்டுக்கு விரட்டியடித்தார் என்று சொல்லப்படும்.
29 எனவே, மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை. வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.

குறிப்புகள்

[1] 29:7 = எண் 21:21-35.
[2] 29:8 = எண் 32:33.
[3] 29:18 = எபி 12:15.
[4] 29:23 = தொநூ 19:24-25.

அதிகாரம் 30[தொகு]

மறுவாழ்வும் ஆசியும் பெறுவதற்கான நிபந்தனைகள்[தொகு]


1 இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய்.
2 நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளின்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா. நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால்,
3 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பார். உன்மேல் இரக்கம்கொண்டு, உன்னை அவர் சிதறடித்துள்ள எல்லா நாடுகளிலுமிருந்து மீண்டும் கூட்டிச் சேர்ப்பார்.
4 நீ வானத்தின் கடையெல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர், அங்கிருந்து உன்னைக் கூட்டிச் சேர்ப்பார். ஆண்டவர் அங்கிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருவார்.
5 உன் கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் உடைமையாக்கியிருந்த நாட்டுக்குள் உன்னைக் கொணர்வார். நீயும் அதை உடைமையாக்கிக்கொள்வாய். உனக்கு நன்மைகள் ஈந்து உன் மூதாதையரைவிட உன்னைப் பெருகச் செய்வார்.
6 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய். அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய்.
7 உன் கடவுளாகிய ஆண்டவர், இந்தச் சாபங்களை எல்லாம் உன் பகைவர்மீதும், உன்னை வெறுப்பவர்மீதும், உன்னைக் கொடுமைப்படுத்துவோர் மீதும் வரச்செய்வார்.
8 நீ ஆண்டவரிடம் திரும்பிவா. அவரது குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.
9 நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீ நிறைவு பெறும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் செய்வார். உனது கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்று உனது நிலத்தின் பயன் அனைத்தும் நலமே அமையுமாறு செய்வார். உன் மூதாதையரில் மகிழ்வு கொண்டது போல், உன் நன்மையின் பொருட்டு உன்மீது மீண்டும் மகிழ்வார்.
10 எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.


11 ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை.
12 'நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்' என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை.
13 'நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்' என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை.
14 ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. [1]
15 இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.
16 அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.
17 ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,
18 இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.
19 உன் மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்.
20 கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய். [2]

குறிப்புகள்

[1] 30:12-14 = உரோ 10:6-8.
[2] 30:20 தொநூ 12:7; 26:3; 28:13.


(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 31 முதல் 32 வரை