திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் - பாட்டு)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இனிமைமிகு பாடல்" - விவிலிய எழுத்தோவியம்: தலைவனும் தலைவியும். காலம்: 12ஆம் நூற்றாண்டு. காப்பகம்: இங்கிலாந்து

இனிமைமிகு பாடல் (Song of Songs)[தொகு]

முன்னுரை

"இனிமைமிகு பாடல்" என்னும் இந்நூல் உண்மையில் ஒரு தொகைநூல்; காதற் கவிதைகளின் ஒரு தொகுப்பு. யூதப் பரம்பரையின்படி, இந்நூலில் அடங்கியுள்ள பாடல்களின் ஆசிரியர் மாமன்னர் சாலமோன்; ஆனால் சாலமோனின் காலத்திற்குப் பிற்பட்ட பாடல்களும் இந்தத் தொகைநூலில் இடம்பெற்றுள்ளன என்பதை மறுத்தல் இயலாது.

இந்நூலின் பாடல்களுக்குப் பல்வேறு பொருள்பொருத்தம் தருகின்றனர் விரிவுரையாளர்கள். கடவுளுக்கும் இஸ்ரவேல் மக்களினத்திற்கும் இடையே நிலவும் அன்புறவை (காதலுறவை) வருணிப்பவை இவை என்பர் சிலர்; பாலஸ்தீன நாட்டு மக்கள் நடுவில் திருமணத்தின்போது பாடப்பட்டவை என்பர் மற்றும் சிலர். ஆனால் ஆண்-பெண் இருவருக்கும் நடுவில் முகிழ்க்கும் இயல்பான காதலுணர்வை இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது கூற்றுகள் இவை என்பதே ஏற்புடையது.

இந்தத் தொகைநூலில் காணும் பாடல்களின் எண்ணிக்கை பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மொத்தம் இருபத்தெட்டுப் பாடல்களாகக் காண்பதே இங்குப் பின்பற்றியுள்ள கொள்கை.

காதலுணர்வு புனிதமானது; இயற்கையின்.அன்பளிப்பு; கடவுளின் கொடை; இதனை விவிலியம் ஏற்கிறது. இந்நூலில் கடவுளின் பெயர் ஒருமுறைகூட வரவில்லை. எனினும், இறை ஏவுதல் பெற்ற திருமறை நூல்களில் இந்நூலும் இடம்பெறுதல் வியப்பன்று. ஆண்-பெண் காதலுணர்வும் காதலுறவும் கடவுளின் அன்புக்கு ஓர் உயர்ந்த அடையாளம் என்னும் அளவில் இப்பாடல்கள் கடவுள் - இஸ்ரயேல், கிறிஸ்து - திருச்சபை, கடவுள் - ஆன்மா ஆகியோர்க்கிடையில் நிலவும் அன்புணர்வையும் அன்புறவையும் குறிக்கப் பயன்படுதல் மிகவும் பொருத்தமே என்க.

இனிமைமிகு பாடல் (Song of Songs)[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
பாடல் 1: தலைவி கூற்று 1:1-4 993
பாடல் 2: தலைவி கூற்று 1:5-6 993
பாடல் 3: தலைவன் - தலைவி உரையாடல் 1:7-8 993
பாடல் 4: தலைவன் - தலைவி உரையாடல் 1:9-14 993-994
பாடல் 5: தலைவன் - தலைவி உரையாடல் 1:15-17 994
பாடல் 6: தலைவன் - தலைவி உரையாடல் 2:1-3 994
பாடல் 7: தலைவி கூற்று 2:4-7 994
பாடல் 8: தலைவி கூற்று 2:8-13 994
பாடல் 9: தலைவன் கூற்று 2:14 994
பாடல் 10: தலைவி கூற்று 2:15 994-995
பாடல் 11: தலைவி கூற்று 2:16-17 995
பாடல் 12: தலைவி கூற்று 3:1-5 995
பாடல் 13: கண்டோர் கூற்று 3:6-11 995
பாடல் 14: தலைவன் கூற்று 4:1-7 996
பாடல் 15: தலைவன் கூற்று 4:8-11 996
பாடல் 16: தலைவன் - தலைவி உரையாடல் 4:12 - 5:1 996-997
பாடல் 17: தலைவி கூற்று 5:2 - 6:3 997-998
பாடல் 18: தலைவன் கூற்று 6:4-7 998
பாடல் 19: தலைவன் கூற்று 6:8-10 998
பாடல் 20: தலைவன் கூற்று 6:11-12 998
பாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல் 6:13 - 7:5 998-999
பாடல் 22: தலைவன் கூற்று 7:6-9 999
பாடல் 23: தலைவி கூற்று 7:10-13 999
பாடல் 24: தலைவி கூற்று 8:1-5அ 999 - 1000
பாடல் 25: தலைவி கூற்று 8:5ஆ-7 1000
பாடல் 26: தமையர் - தலைவி உரையாடல் 8:8-10 1000
பாடல் 27: தலைவன் கூற்று 8:11-12 1000
பாடல் 28: தலைவன் - தலைவி உரையாடல் 8:13-14 1000

இனிமைமிகு பாடல்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]


1 சாலமோனின் தலைசிறந்த பாடல் [*]


பாடல் 1: தலைவி கூற்று[தொகு]


2 தம் வாயின் முத்தங்களால் அவர் என்னை முத்தமிடுக!
ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!
3 உமது பரிமளத்தின் நறுமணம் இனிமையானது;
உமது பெயரோ பரிமள மணத்தினும் மிகுதியாய்ப் பரவியுள்ளது;
எனவே, இளம் பெண்கள் உம்மேல் அன்பு கொள்கின்றனர்.
4 உம்மோடு என்னைக் கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்;
அரசர் என்னைத் தம் அறைக்குள் அழைத்துச் செல்லட்டும்!
களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்;
திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைக் கருதிடுவோம்;
திராட்சை இரசத்தினும் உமது அன்பைப் போற்றிடுவோம்!


பாடல் 2: தலைவி கூற்று[தொகு]


5 எருசலேம் மங்கையரே,
கறுப்பாய் இருப்பினும், நான் எழில்மிக்கவளே!
கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்;
சாலமோனின் எழில்திரைகளுக்கு இணையாவேன்.
6 கறுப்பாய் இருக்கின்றேன் நான் என
என்னையே உற்றுப் பார்க்க வேண்டா!
கதிரவன் காய்ந்தான்; நான் கறுப்பானேன்;
என் தமையர் என்மேல் சினம் கொண்டனர்;
திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்;
என் தோட்டத்தையோ நான் காத்தேன் அல்லேன்!


பாடல் 3: தலைவன் - தலைவி உரையாடல்[தொகு]


7 என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே!
எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்?
எங்கே நண்பகலில் மந்தையை இளைப்பாற விடுவீர்?
எனக்குச் சொல்வீர்!
இல்லையேல், உம் தோழர்களின் மந்தைகட்கருகில்
வழி தவறியவள் போல் நான் திரிய நேரிடும்!
8 பெண்களுக்குள் பேரழகியே,
உனக்குத் தெரியாதெனில், மந்தையின் கால்சுவடுகளில்
நீ தொடர்ந்துபோ;
இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே
உன்னுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!


பாடல் 4: தலைவன் - தலைவி உரையாடல்[தொகு]


9 என் அன்பே,
பார்வோன் தேர்ப்படை நடுவே உலவும் பெண்புரவிக்கு
உன்னை ஒப்பிடுவேன்.
10 உன் கன்னங்கள் குழையணிகளாலும்
உன் கழுத்து மணிச்சரங்களாலும் எழில் பெறுகின்றன.
11 பொன்வளையல்கள் உனக்குச் செய்திடுவோம்;
வெள்ளி வளையங்கள் அவற்றில் கோத்திடுவோம்.
12 என் அரசர் தம் மஞ்சத்தில் இருக்கையிலே,
என் நரந்தம் நறுமணம் பரப்புகின்றது.
13 என் காதலர் வெள்ளைப்போள முடிப்பென
என் மார்பகத்தில் தங்கிடுவார்.
14 என் காதலர் எனக்கு மருதோன்றி மலர்க்கொத்து!
எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி!


பாடல் 5: தலைவன் - தலைவி உரையாடல்[தொகு]


15 என்னே உன் அழகு! என் அன்பே, என்னே உன் அழகு!
உன் கண்கள் வெண்புறாக்கள்!
16 என்னே உம் அழகு என் காதலரே! எத்துணைக் கவர்ச்சி!
ஆம், நமது படுக்கை பைந்தளிர்!
17 நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரங்கள்;
நம்முடைய மச்சுகள் தேவதாரு கிளைகள்.


குறிப்பு

[*] 1:1 = 1 அர 4:32.


அதிகாரம் 2[தொகு]

பாடல் 6: தலைவன் - தலைவி உரையாடல்[தொகு]


1 சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்;
பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்.
2 முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல்,
மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்.
3 காட்டு மரங்களிடை நிற்கும் கிச்சிலிபோல்,
காளையருள் இலங்குகின்றார் என் காதலர்தாம்.
அவரது நிழலிலே அமர்வதில் இன்புறுவேன்;
அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.


பாடல் 7: தலைவி கூற்று[தொகு]


4 திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள்ளே
என்னை அவர் அழைத்துச் சென்றார்;
அவர் என் மேல் செலுத்திய நோக்கில் காதல் இருந்தது!
5 திராட்சை அடைகள் கொடுத்து என்னை வலிமைப்படுத்துங்கள்;
கிச்சிலிப்பழங்களால் எனக்கு ஊக்கமூட்டுங்கள்.
காதல் நோயால் தான் மிகவும் நலிந்து போனேன்.
6 இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்;
வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.
7 எருசலேம் மங்கையரே!
கலைமான்கள்மேல் ஆணை!
வயல்வெளி மரைகள்மேல் ஆணை!
உங்களுக்கு நான் கூறுகிறேன்:
காதலைத் தட்டி எழுப்பாதீர்;
தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.


பாடல் 8: தலைவி கூற்று[தொகு]


8 என் காதலர் குரல் கேட்கின்றது;
இதோ, அவர் வந்துவிட்டார்;
மலைகள்மேல் தாவி வருகின்றார்;
குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.
9 என் காதலர் கலைமானுக்கு அல்லது
மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.
இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்;
பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்;
பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார்.
10 என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:
"விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.
11 இதோ, கார்காலம் கடந்துவிட்டது;
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
12 நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;
பாடிமகிழும் பருவம் வந்துற்றது;
காட்டுப் புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது.
13 அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன;
திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;
விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா."


பாடல் 9: தலைவன் கூற்று[தொகு]


14 பாறைப் பிளவுகளில் இருப்பவளே,
குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே!
காட்டிடு எனக்கு உன் முகத்தை;
எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.
உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!


பாடல் 10: தலைவி கூற்று[தொகு]


15 பிடியுங்கள் எமக்காக நரிகளை;
குள்ளநரிகளைப் பிடியுங்கள்;
அவை திராட்சைத் தோட்டங்களை அழிக்கின்றன;
எம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.


பாடல் 11: தலைவி கூற்று[தொகு]


16 என் காதலர் எனக்குரியர்; நானும் அவருக்குரியள்;
லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.
17 பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள்,
திரும்பிடுக, என் காதலரே!
மலைமுகட்டுக் கலைமான்போன்று
அல்லது மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!


(தொடர்ச்சி): இனிமைமிகு பாடல்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை