திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
"உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்...அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன். மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன்." - எசேக்கியேல் 16:8,11-12

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

திராட்சைக் கொடியின் உவமை[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:


2 மானிடா! காட்டிலிருக்கும் எல்லா மரக்கிளைகளையும்விட
திராட்சைக்கொடி எவ்வகையில் சிறந்தது?


3 ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து
கட்டை எடுக்கப்படுகிறதா?
அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட
ஒரு முளையை அதிலிருந்து செய்வார்களா?


4 இதோ, அது நெருப்புக்கு இரையாகப் போடப்படுகிறது;
அதன் இரு முனைகளையும் நெருப்பு எரிக்கிறது;
அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது;
அது எந்த வேலைக்காவது பயன்படுமா?


5 இதோ, அது முழுமையாய் இருந்த போதே
அதைக்கொண்டு ஒரு வேலையும் செய்யமுடியவில்லை.
நெருப்பால் எரிந்து கருகிய அதை
எந்த வேலைக்காவது பயன்படுத்த முடியுமா?


6 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
காட்டுத் தாவரங்களுள் ஒன்றான திராட்சைக் கொடியை
நான் நெருப்புக்கு இரையாக அளித்தது போல்,
எருசலேமில் வாழ்வோரையும் கையளிப்பேன்.
7 என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவேன்.
அவர்கள் நெருப்பிலிருந்து தப்பிச் சென்றாலும்,
நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.
நான் என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பும்போது
நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8 நான் நாட்டைப் பாழாக்குவேன்.
ஏனெனில் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளனர்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 16[தொகு]

கற்பிழந்த எருசலேம்[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு.
3 நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே:
நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே,
உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள்.
4 நீ பிறந்த வரலாறு இதுவே:
நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை.
நீ நீராட்டப்பட்டுத் தூய்மையாக்கப்படவில்லை;
உப்பு நீரால் கழுவப்படவில்லை;
துணிகளால் சுற்றப்படவுமில்லை;
5 உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி,
இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை.
ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்;
ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய்.
6 அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து
உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு,
இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, 'வாழ்ந்திடு' என்றேன்.
ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, 'வாழ்ந்திடு' என்றேன்.
7 உன்னை வயல் வெளியில் வளரும் பயிர்போல் உருவாக்கினேன்.
நீ வளர்ந்து பருவமெய்தி அழகிய மங்கையானாய்.
உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது;
ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.
8 அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன்.
அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய்.
நான் என் ஆடையை உன்மேல் விரித்து
உன் திறந்தமேனியை மூடினேன்.
உனக்கு உறுதிமொழி தந்து,
உன்னோடு உடன்படிக்கை செய்தேன்.
நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9 நான் உன்னை நீராட்டி,
உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து,
உனக்கு எண்ணெய் பூசினேன்.
10 பூப்பின்னல் உடையால் உன்னை உடுத்தி,
தோல் காலணிகளை உனக்கு மாட்டி,
மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து,
நார்ப்பட்டால் உன்னைப் போர்த்தினேன்.
11 அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்;
கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன்.
12 மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும்,
தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன்.
13 பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணிசெய்யப்பட்டாய்.
நார்ப்பட்டும் மெல்லிய துகிலும்,
பூப்பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின.
மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின.
நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய்.
14 உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று.
என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
15 நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து,
உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி,
வருவோர் போவோரிடமெல்லாம் வேசித்தனம் செய்தாய்.
16 உன் ஆடைகளில் சில எடுத்து தொழுகை மேடுகளை அழகுபடுத்தி
அங்கு வேசித்தனம் செய்தாய்.
ஒருக்காலும் அதுபோல் நடந்ததில்லை;
இனிமேல் நடக்கப் போவதுமில்லை.
17 நான் உனக்குத் தந்த பொன், வெள்ளி அணிகலன்களைக் கொண்டு
நீ ஆண் உருவங்களைச் செய்து, அவற்றுடன் வேசித்தனம் செய்தாய்.
18 உன் பூப்பின்னல் ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் போர்த்தி,
எனக்குரிய எண்ணெயையும் தூபத்தையும் அவற்றின் முன் எரித்தாய்.
19 நான் உனக்கு அளித்த மாவு, எண்ணெய்,
தேன் ஆகிய அதே உணவுப் பொருள்களை,
நீ அவற்றின்முன் நறுமணப் பலியெனப் படைத்தாய்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
20 நீ எனக்குப் பெற்ற உன் புதல்வர் புதல்வியரை
அவற்றுக்குப் பலியிட்டாயே!
நீ வேசித்தனம் செய்தது போதாதென்றோ?
21 என் புதல்வரையும் அவற்றிற்குப் பலியிட்டாய்.


22 இத்துணை அருவருப்பான செயல்களிலும்
நீ வேசித்தனத்திலும் ஈடுபட்டபோது
உன் இளமையில் ஆடையின்றித் திறந்த மேனியாய்
உன் இரத்தத்தில் புரண்டு கொண்டு இருந்த நாள்களை
நீ நினைத்துப் பார்க்கவில்லை.

விலைமகளுக்கொத்த எருசலேமின் வாழ்க்கை[தொகு]


23 எல்லாத் தீச்செயல்களையும் செய்த உனக்கு ஐயோ கேடு,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
24 நீ உனக்கெனத் தொழுகைக்கூடங்கள் அமைத்துக்கொண்டாய்;
திறந்த வெளியிலெல்லாம் தொழுகை மேடுகள் எழுப்பிக் கொண்டாய்.
25 எல்லாத் தெருக்கோடிகளிலும்,
உன் தொழுகை மேடுகளை அமைத்தாய்.
உன் அழகைத் தரக்குறைவாக்கி,
வருவோர் போவோர்க்கெல்லாம் உன் உடலைக் கொடுத்து,
மிதமிஞ்சிய வேசித்தனம் செய்தாய்.
26 உன் அண்டை நாட்டவரும் உடல் பெருத்தவருமான
எகிப்தியரோடு வேசித்தனம் செய்தாய்;
எனக்குச் சினமூட்டுமளவுக்கு மிதமிஞ்சிய விபசாரம் செய்தாய்.
27 ஆதலால் இதோ என் கரத்தை உனக்கு எதிராய் நீட்டி,
உனக்குரிய பங்கைக் குறைப்பேன்.
உன் நெறிகெட்ட நடத்தையைப் பார்த்து, வெட்கி,
உன்னை வெறுக்கும் பெலிஸ்திய நகர்களின்
விருப்பத்திற்கு உன்னைக் கையளித்தேன்.
28 இன்னும் நிறைவடையாமல்
நீ அசீரியரின் புதல்வருடன் வேசித்தனம் செய்தாய்.
அவர்களுடன் விபசாரம் செய்தும் உன் ஆசை அடங்கவில்லை.
29 ஆகையால், வாணிக நாடாகிய கல்தேயாவுடன்
நீ மிகுதியாய் வேசித்தனம் செய்தாய்;
அப்பொழுதும் உன் மோகம் தீரவில்லை.
30 வெட்கங்கெட்ட விலைமகளின் செயல்களையெல்லாம்
உன் இதயத்தின் காமத்தால் செய்தாயன்றோ, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
31 ஒவ்வொரு தெருக்கோடியிலும் தொழுகைக் கூடம் கட்டினாய்;
ஒவ்வொரு திறந்த வெளியிலும் தொழுகை மேடு எழுப்பினாய்;
மற்ற விலைமாதரைப்போல் நீ ஊதியம் கேட்கவில்லை.
32 பிறரின் கணவரை நயக்கும் மனையாள் இவள்!
தன் கணவனுக்குப் பதில் அன்னியரையே நாடுகிறாள் இவள்!
33 எல்லா விலைமாதரும் ஊதியம் பெறுவர்.
நீயோ உன் காதலர் அனைவர்க்கும் ஊதியம் தருகின்றாய்!
நாற்றிசையினின்றும் உன்னுடம் விபசாரம் செய்ய வருவோர்க்குக்
கையூட்டு அளிக்கின்றாய்.
34 எனவே, உன் வேசித்தொழிலில் கூட
நீ பிற பெண்களினின்று வேறுபட்டியிருக்கிறாய்.
கூடா ஒழுக்கத்திற்கு உன்னை யாரும் தூண்டுவதில்லை.
நீயே பிறர்க்கு ஊதியம் தருகிறாய்;
நீ யாரிடமும் பெறுவதில்லை. இதுவன்றோ உன் பண்பாடு!

எருசலேமின் மீது கடவுள் வழங்கவிருக்கும் நீதித்தீர்ப்பு[தொகு]


35 எனவே, விலைமாதே! ஆண்டவரின் வார்த்தையைக் கேள்.
36 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நீ காமவெறி கொண்டு உன் திறந்த மேனியைக் காட்டி,
உன் காதலருடனும், அருவருப்பான உன் சிலைகள் அனைத்துடனும்
வேசித்தனம் செய்தாய்.
இதற்காகவும், உன் பிள்ளைகளை அவற்றுக்குப்
பலியிட்ட இரத்தப்பழிக்காகவும்,
37 நீ இன்பம் துய்த்த உன் காதலர் அனைவரையும்
உனக்கெதிராக நான் ஒன்று திரட்டப்போகிறேன்.
நீ விரும்பியவர்கள், நீ வெறுத்தவர்கள் அனைவரையும்
நாற்றிசையினின்றும் உனக்கெதிராய் ஒன்று சேர்ப்பேன்.
அவர்கள் முன்னிலையில் உன் ஆடையை உரிந்து போடுவேன்.
அவர்கள் அனைவரும் உன் திறந்த மேனியைக் காண்பர்.
38 பிறர் கணவர் நயந்த பெண்டிரையும்,
இரத்தம் சிந்திய பெண்டிரையும் தீர்ப்பிடுதல்போல்,
உன்னையும் தீர்ப்பிடுவேன்;
என் சினத்தாலும் சகிப்பின்மையாலும் உன்மேல் இரத்தப்பழி சுமத்துவேன்.
39 பின் உன்னை அவர்களிடம் கையளிப்பேன்.
அவர்கள் உன் தொழுகைக் கூடங்களைத் தகர்த்து
உன் தொழுகை மேடுகளை தரைமட்டமாக்குவர்;
உன் ஆடைகளை உரிந்து,
உன் அணிகலன்களைப் பிடுங்கிக் கொண்டு,
உன்னைத் திறந்தமேனியாயும் வெறுமையாயும் விட்டுவிடுவர்.
40 உனக்கெதிராக மக்களைத் திரண்டெழச் செய்வேன்.
அவர்கள் உன்னைக் கல்லாலெறிவர்; வாளால் வெட்டிப் போடுவர்.
41 அத்தோடு, உன் வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பர்.
பெண்கள் பலர் முன்னிலையில் உனக்குரிய
தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றுவர்.
நானும் உன் வேசித்தனத்துக்கு முடிவுகட்டுவேன்.
நீ இனி யாருக்கும் அன்பளிப்பு அளிக்க மாட்டாய்.
42 அப்போது, உன்மீது நான் கொண்ட சினம் தணியும்;
என் சகிப்புத் தன்மை உன்னை விட்டு அகன்றுவிடும்;
இனி நான் அமைதி கொள்வேன்; சினமடையேன்.
43 ஏனெனில் உன் இளமையின் நாள்களை நினைக்காமல்,
இவற்றையெல்லாம் செய்து என்னை வெகுண்டெழச் செய்தாய்.
எனவேதான் உன் நடத்தையின் விளைவை
நான் உன் தலைமேல் சுமத்தினேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
உன் அருவருப்புகளை எல்லாம் செய்தது தவிர,
நெறிகேடாகவும், நீ நடந்து கொள்ளவில்லையா?

தாயைப்போல் மகள்[தொகு]


44 இதோ! பழமொழி கூறும் யாவரும்
'தாயைப்போல் மகள்' என்னும் பழமொழியை
உன்னைக் குறித்தே கூறுவர்.
45 தன் கணவனையும் பிள்ளைகளையும்
வெறுக்கும் தாயின் மகள் தானே நீ?
தங்கள் கணவரையும் பிள்ளைகளையும்
வெறுக்கும் பெண்டிரின் சகோதரிதானே நீ?
உன் தாய் ஓர் இத்தியள்; உன் தந்தை ஓர் எமோரியன்.
46 உனக்கு இடப்பக்கமாகத் தன் புதல்விரோடு
வாழ்ந்து வந்த சமாரியா உன் தமக்கை அன்றோ?
உன் வலப்புறம் தன் புதல்வியோடு வாழ்ந்து வந்த
சோதோம் உன் தங்கை அன்றோ?
47 அவர்கள் நடந்து கொண்டவாறு நீயும் நடந்து,
அவர்கள் செய்த அருவருப்புகளை நீயும் செய்யவில்லையா?
அதுமட்டுமன்று;
உன் கெட்ட நடத்தையில் நீ அவர்களையும் மிஞ்சி விட்டாய்.
48 என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
நீயும் உன் புதல்வியரும் செய்துள்ளதை
உன் தங்கை சோதோமும் அவள் புதல்வியரும் செய்ததில்லை.
49 உன் தங்கை சோதோமின் குற்றங்கள் இவையே:
இறுமாப்பு, உணவார்வம், சோம்பல்,
இத்தனையும் அவளிடமும் அவள் புதல்வியரிடமும் இருந்தன.
ஏழை, எளியோரின் கைகளை அவள் வலுப்படுத்தவில்லை.
50 இவர்கள் செருக்குடையவராய்
என் முன்னிலையில் அருவருப்பானவற்றைச் செய்தனர்.
ஆகவே நான் அவர்களைப் புறக்கணித்து விட்டேன்.
இதை நீ அறிவாயன்றோ?
51 சமாரியாவும் உன் பாவங்களில் பாதியளவுகூடச் செய்யவில்லையே.
நீயோ இவர்களைவிட மிகுதியாக அருவருப்பானவற்றைச் செய்தாய்.
நீ செய்த அருவருப்புகள் அனைத்தோடும் ஒப்பிடும்போது
உன் சகோதிரிகள் நேர்மையானவர்களாகத் தோன்றுகிறார்கள்.
52 இப்போது உன் இழிவை நீயே தாங்கிக்கொள்.
உன் சகோதரிகளை விட மிகுதியாக அருவருப்பான பாவங்களைச் செய்து,
அவர்களை உன்னைவிட நேர்மையானவர்கள் ஆக்கிவிட்டாய்.
உன் சகோதரிகளை நேர்மையானவர்கள் ஆக்கிய
அந்த இழிவை நீயே சுமந்து கொள்.

'சோதோமும் சமாரியாவும் விடுவிக்கப்படும்'[தொகு]


53 நான் சோதோமையும் அவள் புதல்வியரையும்
சமாரியாவையும் அவள் புதல்வியரையும்
மீண்டும் நன்னிலைக்குக் கொணர்வேன்.
54 இதனால் நீ செய்த அனைத்திற்காகவும் வெட்கி
அவமானத்தைச் சுமப்பாய்.
அது அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்.
55 உன் சகோதரிகள் சோதோமும் அவள் புதல்வியரும்,
சமாரியாவும் அவள் புதல்வியரும்
தங்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவர்.
நீயும் உன் புதல்வியரும் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவீர்கள்.
56 நீ செருக்குடன் வாழ்ந்த காலத்தில்
உன் தமக்கை சோதோமின் பெயரை
உன் வாயினால் உச்சரிக்கக்கூட மாட்டாய்.
57 உன் தீச்செயல் வெளிப்படுவதற்குமுன் நீ அப்படி இருந்தாய்.
இப்போதோ, சிரியாவின் புதல்வியர்,
அவளைச் சுற்றி உள்ளோர்,
உன்னைச் சுற்றி இருக்கும் பெலிஸ்தியப் புதல்வியர்
ஆகியோரின் வெறுப்புக்கு நீ ஆளானாய்.
58 நீ உன் ஒழுக்கக்கேட்டையும் உன் அருவருப்புகளையும்
இப்போது சுமந்து கொண்டிருக்கிறாய், என்கிறார் ஆண்டவர்.

என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை[தொகு]


59 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
கொடுத்த வாக்கை நீ மீறி, உடன்படிக்கையை முறித்துவிட்டாய்,
நீ செய்தது போலவே நானும் உனக்குச் செய்வேன்.
60 ஆயினும் உன் இளமையின் நாள்களில்
உன்னோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து,
என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.
61 உன் தமக்கைகளையும் தங்கைகளையும்
நான் உனக்குப் புதல்வியராகத் தருவேன்;
நான் உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முன்னிட்டு
அல்லாமலே தந்திடுவேன்.
அவர்களை நீ பெற்றுக் கொள்ளும்பொழுது
உன் நடத்தையை நினைத்து வெட்கமுறுவாய்.
62 உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன்.
அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.
63 நீ செய்ததையெல்லாம் நான் மறைத்திடும்போது,
நீ அவற்றையெல்லாம் நினைத்து வெட்கி,
இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை