திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
"தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'நீண்ட, பல வண்ண இறகுகள் கொண்ட பரந்த இறக்கைகளையுடைய பெரிய கழுகு ஒன்று லெபனோனுக்கு வந்து, கேதுரு மரம் ஒன்றின் உச்சியில் அமர்ந்தது.'" - எசேக்கியேல் 17:3

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]

கழுகுகள் மற்றும் திராட்சைக்கொடி உவமை[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! இஸ்ரயேல் வீட்டாருக்கு
விடுகதையின் வடிவில் உவமை ஒன்று கூறு.
3 நீ சொல்:
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
"நீண்ட, பல வண்ண இறகுகள் கொண்ட
பரந்த இறக்கைகளையுடைய பெரிய கழுகு ஒன்று
லெபனோனுக்கு வந்து,
கேதுரு மரம் ஒன்றின் உச்சியில் அமர்ந்தது.
4 அது, அம்மரத்தின் உச்சிக்கொழுந்து ஒன்றைக் கொய்து,
ஒரு வாணிப நாட்டிற்குக் கொண்டு வந்து,
வணிகர் நகரொன்றில் அதை வைத்தது.
5 பின் அந்நாட்டின் விதைகளில் ஒன்றை எடுத்துவந்து,
வளமிகு வயலில் விதைத்து,
அதன் நாற்றை நீர்மிகு நிலத்தில் கருத்தாய் நட்டது.
6 அது துளிர்த்து தாழ்ந்து படரும் திராட்சைக் கொடியாயிற்று.
"அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேர் மேலே வளர்ந்தன.
வேர்களோ அதற்கு நேர் கீழே படர்ந்தன.
இவ்வாறு அது திராட்சைக் கொடியாகி,
கொப்புகளை விட்டுக் கிளைகளைப் பரப்பியது.
7 ஆனால், பரந்த இறக்கைகளும் மிகுந்த இறகுகளும் கொண்ட
வேறொரு கழுகும் இருந்தது.
இந்தத் திராட்சைக் கொடி, நீர் பெறவேண்டி,
தான் நடப்பட்டிருந்த நிலப்பரப்புக்கு அப்பால் இருந்த
அக்கழுகை நோக்கித் தன் வேர்களை ஓடச்செய்து,
தன் கிளைகளையும் அதன் பக்கமாய்த் திருப்பிற்று.
8 கிளைபரப்பிக் கனிகொடுக்கும் சிறந்த ஒரு
திராட்சைக் கொடியாய் விளங்கும் பொருட்டன்றோ
செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!
9 நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
இது செழிக்குமா? இதனை வேரோடு பிடுங்கி
இதன் பழக்குலைகளைக் கொய்து விட,
துளிர்த்த இதன் இவைகளொல்லாம் வாடி வதங்க இது பட்டுப் போகாதா?
இதனை வேரோடு பிடுங்கியெறிய மிகுந்த கைவன்மையோ,
மக்கள் திரளோ வேண்டியதில்லை.
10 இது வேறிடத்தில் நடப்பட்டாலும் செழிக்குமா?
கீழைக்காற்று இதன்மேல் வீசும்போது இது முற்றிலும் வாடி விடாதா?
இது முளைவிட்ட பாத்தியிலேயே உலர்ந்து போகுமே.

உவமையின் விளக்கம்[தொகு]


11 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
12 அந்தக் கலக வீட்டாரிடம் நீ சொல்:
இவை யாவும் எதைக் குறிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாதா?
பாபிலோனின் மன்னன் எருசலேமுக்கு வந்து அதன் அரசனையும்,
அதன் உயர்குடி மக்களையும் சிறைப்பிடித்துப்
பாபிலோனுக்குக் கொண்டு வந்துள்ளான்.
13 பின்னர், அவன் அரச மரபில் தோன்றிய ஒருவனைத் தேர்ந்தெடுத்து,
அவனுடன் உடன்படிக்கை செய்து,
அவனிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டான்.
நாட்டின் தலைவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றான்.
14 குடிமக்கள் கிளர்ந்தெழாமல் பணிந்திருப்பதற்காகவும்
உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதன்மூலமே
அவர்கள் பிழைத்திருக்க இயலும் என்பதற்காகவும் அவன் இவ்வாறு செய்தான்.
15 அந்த அரச மரபினன் அவனுக்கெதிராகக் கிளர்ந்து
குதிரைகளையும் திரளான படையையும்
தனக்குக் கொடுக்க வேண்டுமென்று
எகிப்துக்குத் தூதர்களை அனுப்பினான்.
இவன் வெற்றி பெறமுடியுமா? இவன் தப்ப இயலுமா?
உடன்படிக்கையை முறிக்கும் இத்தகையவன் தப்பவே முடியாது. [*]
16 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் மேல் ஆணை! தன்னை அரசனாக்கிய மாமன்னனுக்கு
அளித்த வாக்குறுதியைப் புறக்கணித்து,
அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்த இவன்,
பாபிலோன் நகருக்குள்ளேயே சாவான்.
17 மண்மேடு எழுப்பப்பட்டுக் கொத்தளம் கட்டப்பட்டு
பலர் வீழ்த்தப்பட இருக்கும் நிலையில்
பெரிய படையும் திரளான வீரரும் கொண்ட பார்வோன்
இவனுக்குத் துணை செய்ய வரப்போவதில்லை.
18 உடன்படிக்கையை முறிப்பதற்காக
வாக்குறுதியை இவன் புறக்கணித்துள்ளான்;
கைமேல் அடித்து வாக்களித்திருந்தும் இவ்வாறு செய்துள்ளான்.
இவன் தப்பவே முடியாது.
19 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
என்மேல் ஆணை! எனக்களித்திருந்த வாக்குறுதியை
அவன் புறக்கணித்ததையும் என் உடன்படிக்கையை முறித்ததையும்
அவன் தலை மேலேயே சுமத்துவேன்.
20 நான் என் வலையை அவன்மீது வீச,
அவன் என் கண்ணியில் சிக்குவான்.
நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்து,
எனக்கெதிராய் அவன் செய்த துரோகத்துக்காக
அங்கே அவனுக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
21 அவனுடைய படைவீரர்களுள் அவனுடன்
தப்பியோடிவரும் யாவரும் வாளால் வீழ்வர்.
எஞ்சியோர் எத்திக்கிலும் சிதறடிக்கப்படுவர்.
அப்போது இதை உரைத்தது ஆண்டவராகிய நானே
என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதி[தொகு]


22 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன்.
இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து,
ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன்.
23 இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன்.
அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும்.
அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும்.
அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.
24 ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி,
தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும்,
பசுமையான மரத்தை உலரச் செய்து,
உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும்,
அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும்.
ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்.


குறிப்பு

[*] 17:12-15 = 2 அர 24:15-29; 2 குறி 36:10-13.


அதிகாரம் 18[தொகு]

ஒவ்வொருவரின் பொறுப்பு[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
2 'புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன,
பிள்ளைகளின் பல் கூசிற்றாம்' என்னும் பழமொழியை
இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?
3 என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது.
4 உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம்.
பெற்றோரின் உயிர் என்னுடையது;
பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே.
பாவம் செய்யும் உயிரே சாகும்.


5 ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும்,
நேர்மையையும் கடைப்பிடித்தால்,
6 மலைகளின் மேல் உண்ணாமலும்,
இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித்
தன் கண்களை ஏறெடுக்காமலும்,
பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும்,
தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால்,
7 அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து,
கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து,
பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து,
ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால்,
8 வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து,
தன் கையால் அநீதி செய்யாது விலகி,
மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால்,
9 என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து,
உண்மையுள்ளவனாக நடந்துகெண்டால், அவன் நீதிமான் ஆவான்;
அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


10 ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும்,
இரத்தம் சிந்துபவனாகவும்
முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால்,
11 தந்தை இவற்றுள் எதையும் செய்யாதிருக்க -
மகனோ மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்டு,
பிறன் மனைவியைக் கறைப்படுத்தி,
12 எளியவரையும் வறியவரையும் ஒடுக்குபவனாகவும்,
கொள்ளையிடுபவனாகவும், அடைமானத்தைத் திருப்பித் தராதவனாகவும்,
சிலைகளை வணங்குபவனாகவும், அருவருப்பானதைச் செய்பவனாகவும்,
13 வட்டிக்குக் கொடுப்பவனாகவும்,
கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால்,
அவன் வாழ்வானோ? அவன் வாழ மாட்டான்.
அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால்
அவன் சாவது உறுதி.
அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும்.
14 ஆனால், இவனுக்குப் பிறந்த மகன்
தன் தந்தை செய்த பாவங்களை எல்லாம் கண்டு தெளிந்து
அவ்வாறு செய்யாதிருந்தால் -
15 அதாவது மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும்,
இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை வணங்காமலும்,
பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும்,
16 ஒருவரையும் ஒடுக்காமலும், அடைமானம் பெறாமலும்,
கொள்ளையிடாமலும்,
பசித்தவருக்குத் தன் உணவை அளித்தும்,
ஆடையின்றி இருப்பவருக்கு ஆடை கொடுத்தும்,
17 எளியவருக்குத் தீங்கிழைக்காமலும்,
வட்டி வாங்காமலும், கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும்,
என் நீதி நெறிகளைக் கடைப்பிடித்தும்,
என் நியமங்களின்படி நடந்தும் இருந்தால் -
அவன் தன் தந்தையின் குற்றத்திற்காகச் சாக மாட்டான்; அவன் வாழ்வது உறுதி.
18 மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக்
கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே
நல்லன அல்லாதவற்றைச் செய்தால்,
தன் குற்றத்திற்காக மடிவான்.
19 ஆயினும், தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமக்கக்கூடாது?'
என்று நீங்கள் கேட்கலாம்.
மகன், நீதியையும் நேர்மையும் கடைப்பிடித்து,
என் நியமங்களை எல்லாம் கைக்கொண்டு ஒழுகினால்,
அவன் வாழ்வது உறுதி.
20 பாவம் செய்பவரே சாவர்.
பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள்.
அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள்.
நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும்.
பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும்.


21 தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி,
என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு,
நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால்
அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.
22 அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும்
அவர்களுக்கெதிராக நினைக்கப்படமாட்டா.
அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர்.
23 உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்?
அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும்
என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
24 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி,
தவறிழைத்து, பொல்லாரைப் போல்
வெறுக்கத் தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ?
அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானதெதுவும் நினைக்கப்படமாட்டாது.
அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும்,
செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.
25 ஆயினும், 'தலைவரின் வழி செம்மையானதாக இல்லை'
என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள்.
என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!
26 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால்,
அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.
27 பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி,
நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால்,
தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.
28 அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து,
தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால்,
அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.
29 ஆயினும், 'தலைவரின் வழி நேர்மையானதாக இல்லை'
என இஸ்ரயேல் வீட்டார் சொல்கிறார்கள்.
இஸ்ரயேல் வீட்டாரே! என் வழிகளா நேர்மையற்றவை?
உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!
30 எனவே, இஸ்ரயேல் வீட்டாரே!
ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள்.
அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது.
31 எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள்.
புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்?
32 எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை