திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"இதோ! லெபனோனின் கேதுரு மரமாகிய அசீரியாவைப் பார்! அழகிய கிளைகளுடன், அடர்ந்த நிழலுடன், மிகுந்த உயரத்துடன் அது இலங்கிற்று; அதன் உச்சி மேகங்களை ஊடுருவிற்று...அது உயர்ந்து வளர்ந்து தன் உச்சியை மேகங்களுக்குள் நுழைத்து, தன் உயரத்தைப் பற்றித் தன் இதயத்தில் செருக்குற்றது. எனவே அதனை வேற்றினத்தாருள் வலிமைமிக்க ஒருவனிடம் ஒப்புவிப்பேன்." - எசேக்கியேல் 31:3,10-11

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

அதிகாரம் 31[தொகு]

கேதுரு மரத்துக்கு ஒப்பான எகிப்து[தொகு]


1 பதினோராம் ஆண்டில், மூன்றாம் மாதத்தின் முதல் நாள்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனுக்கும்
அவனுடைய மக்கள் திரளுக்கும் சொல்:


மேன்மையில் உனக்கு நிகர் யார்?


3 இதோ! லெபனோனின் கேதுரு மரமாகிய அசீரியாவைப் பார்!
அழகிய கிளைகளுடன், அடர்ந்த நிழலுடன்,
மிகுந்த உயரத்துடன் அது இலங்கிற்று;
அதன் உச்சி மேகங்களை ஊடுருவிற்று.


4 தண்ணீர் அதனைத் தழைக்கச் செய்தது;
ஆழ் ஊற்றுகள் அதனை உயர்ந்து வளரச் செய்தன;
அவை தம் அருவிகளாக அதனைச் சுற்றி ஓடி
கால்வாய்களாகக் காட்டின் எல்லா மரங்களுக்கும் நீர் பாய்ச்சின.


5 காட்டின் எல்லா மரங்களையும் விட அது ஓங்கி வளர்ந்தது;
அதன் தளிர்கள் பெருகின;
நீர் வளத்தால் கிளைகள் நீண்டன; கொப்புகள் மிகுந்தன.


6 வானத்துப் பறவைகள் எல்லாம் அதன் கிளைகளில் கூடுகள் கட்டின;
காட்டு விலங்குகள் எல்லாம் கன்றுகள் ஈன்றன;
அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம் வாழ்வு கண்டன.


7 மிகுந்த நீரினுள் அதன் வேர்கள் சென்றதால்,
கிளைகள் தழைத்து அது அழகுத் தோற்றமிக்கதாய் இருந்தது.


8 கடவுளின் சோலையிலிருந்த கேதுரு மரங்களுக்கு
அதற்குச் சமமான கிளைகள் இல்லை;
அர்மோன் மரங்களுக்கு அதற்கு இணையான கொப்புகள் இல்லை;
கடவுளின் சோலையிலிருந்த எந்த மரமும்
அதைப்போன்று அழகுடன் இருந்ததில்லை. [*]


9 அடர்ந்த கிளைகளால் நான் அதனை அழகுபடுத்தினேன்;
கடவுளின் சோலையாகிய ஏதேன் தோட்டத்தின் மரங்களெல்லாம்
அதன்மேல் பொறாமை கொண்டன.


10 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
அது உயர்ந்து வளர்ந்து தன் உச்சியை மேகங்களுக்குள் நுழைத்து,
தன் உயரத்தைப் பற்றித் தன் இதயத்தில் செருக்குற்றது.


11 எனவே அதனை வேற்றினத்தாருள்
வலிமைமிக்க ஒருவனிடம் ஒப்புவிப்பேன்.
அவன் அதன் தீச்செயலுக்குத் தக்கவாறு அதனை நடத்துவான்.
நானும் அதனைப் புறம்பாக்குவேன்.
12 மக்களினங்களில் மிகக் கொடியோரான அன்னியர்
அதனை வெட்டி வீழ்த்திவிடுவர்.
மலைகளிலும் அனைத்துப் பள்ளத்தாக்குகளிலும்
அதன் கிளைகள் விழுந்து கிடக்கும்;
அதன் கொம்புகள் நாடெங்கிலுமுள்ள ஓடைகளில் முறிந்து கிடக்கும்.
மண்ணின் மக்களெல்லாம் அதன் நிழலை விட்டுப்பிரிந்து
அதனைப் புறக்கணிப்பர்.
13 வீழ்ந்து கிடக்கும் அதன் மேல்
வானத்துப் பறவைகள் எல்லாம் வந்து அடையும்.
அதன் கிளைகளுக்கிடையே காட்டு விலங்குகள் யாவும் உலவும்.
14 இதனால் நீர்நிலைகளுக்கருகில் இருக்கும் எம்மரமும்
மிகுந்த உயரத்திற்கு வளராது;
தன் உச்சியை மேகங்களுக்கிடையில் நுழைக்காது;
நீர்க்காலை அடுத்த எம்மரமும் அவற்றை எட்டும் அளவுக்கு உயராது.
ஏனெனில் அவையெல்லாம் பாதாளப் படுகுழிக்குச் செல்லும்
மானிடருடன் அழிவுக்குக் குறிக்கப்பட்டுள்ளன.


15 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில்,
ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன்.
அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்;
அதனை முன்னிட்டு லெபனோனை இருளால் மூடுவேன்.
காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.
16 கீழே படுகுழிக்குள் செல்வோருடன் நான் அதனைப்
பாதாளத்தினுள் தள்ளும்போது நாடுகள் நடுங்கும்.
நீர் நடுவே வளரும் ஏதேனின் அனைத்து மரங்களும்,
லெபனோனின் மேலானவையும் சிறந்தவையுமான மரங்களும்
கீழுலகில் ஆறுதல் பெறும்.
17 அதன் நிழலில் வாழ்ந்த கூட்டுநாடுகள்
அதனோடு சேர்ந்து வாளால் மடிந்தவர்களுடன் பாதாளத்தில் போய்ச்சேரும்.
18 மேன்மையிலும் பெருமையிலும் ஏதேனின் எந்த மரம் உனக்கு ஒப்பாகும்?
ஆயினும், ஏதேனின் மரங்களுடன் சேர்ந்து
நீயும் கீழுலகுக்குத் தள்ளப்படுவாய்.
விருத்தசேதனமில்லார் நடுவே,
வாளால் மடிந்தாரோடு நீயும் கிடப்பாய்.
பார்வோனுக்கும் அவனது மக்கள் திரளுக்கும் நடக்கவிருப்பது இதுவே,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


குறிப்பு

[*] 31:8 = தொநூ 2:9.


அதிகாரம் 32[தொகு]

முதலைக்கு ஒப்பான எகிப்திய மன்னன்[தொகு]


1 பன்னிரண்டாம் ஆண்டில், மாதத்தின் முதல் நாளில்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:


2 'மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனைக் குறித்து
இரங்கற்பா ஒன்று பாடி, அவனிடம் சொல்:
நாடுகளிடையே உன்னை ஒரு சிங்கம் என எண்ணுகின்றாய்!
ஆனால், நீ நீர்வாழ் பெருவிலங்குபோல் இருக்கின்றாய்!
ஆற்றினைச் சேறாக்குகின்றாய்!
கால்களினால் நீரினைக் கலக்குகின்றாய்!
ஆறுகளைக் குழப்புகின்றாய்.


3 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்:
மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கொண்டு
நான் என் வலையை உன்மீது வீசுவேன்;
அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துவருவர்.


4 உன்னைத் தரையில், வெட்ட வெளியில், எறிந்து விடுவேன்;
வானத்துப் பறவைகள் அனைத்தும் உன்மேல் வந்து அடையும்;
மண்ணுலகின் விலங்குகள் அனைத்தும் உன்னை அடித்து விழுங்கும்.


5 உன் சதையை மலைகளின்மேல் வீசியெறிந்து,
பள்ளத்தாக்குகளை உன் அழுகிய பிணத்தால் நிரப்புவேன்.


6 வழிந்தோடும் உன் இரத்தத்தால்
மலைகள்வரை நிலத்தை நனைப்பேன்;
நீரோடைகள் உன்னால் நிரம்பியிருக்கும்.


7 நான் உன்னை இல்லாமல் ஆக்கும்போது,
வானங்களை நான் மூடுவேன்;
அவற்றின் விண்மீன்களை இருளச் செய்வேன்;
கதிரவனை மேகத்தால் மறைத்திடுவேன்;
நிலாவும் அதன் ஒளியைக் கொடாது. [*]


8 வானத்தின் ஒளி விளக்குகள் எல்லாம்
உனக்கு இருண்டு போகச் செய்து,
உன் நாட்டின்மீது இருள் கவியச் செய்வேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


9 நீ அறியாத அன்னிய நாட்டினரிடையே
நான் உனக்கு அழிவைக் கொண்டுவருகையில்,
பல மக்களினங்களின் இதயங்களை கலக்கமுறச் செய்வேன்.
10 பல்வேறு மக்களினங்களை உன்னைக் குறித்துத்
திகிலடையச் செய்வேன்.
நான் என் வாளை அவர்களின் மன்னர்கள்முன் வீசுகையில்,
உன்னைக் குறித்து அவர்கள் நடுக்கமுறுவர்.
நீ வீழ்ச்சியுறும் நாளில், அவர்களுள் ஒவ்வொருவரும்
தம் சொந்த உயிர் குறித்து நடுங்குவர்.
11 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
பாபிலோன் மன்னனின் வாள் உன்மீது பாயும்.
12 மக்களினங்களில் மிகக் கொடியவரான
வலியோரின் வாள்களினால் உன் படைத்திரளை வீழ்ச்சியுறச் செய்வேன்.
அவர்கள் எகிப்தின் பெருமையைக் குலைத்து அதன் மக்கள்திரளை அழிப்பர்.
13 நீர்நிலைகளின் ஓரத்திலுள்ள
அதன் கால்நடைகளை எல்லாம் நான் அழித்து விடுவேன்.
மனித காலடியோ குளம்போ அவற்றை இனிக் குழப்பாது.
14 அப்போது நான் நீர்நிலைகளைத் தெளியச் செய்து,
அவற்றின் ஆறுகளை எண்ணெய் போல் ஓடச்செய்வேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
15 எகிப்திய நாட்டை நான் பாழாக்குவேன்,
அதன் நிலத்தினின்று, அதில் உள்ளது அனைத்தையும் பறித்திடுவேன்;
அதில் வாழ்வோரை எல்லாம் அழித்திடுவேன்.
அப்போது, 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.
16 இது புலம்பிப் பாடப்படவிருக்கும் ஓர் இரங்கற்பா.
நாடுகளின் புதல்வியர் இதனைப் பாடிடுவர்.
எகிப்தையும் அதன் அனைத்து மக்கள் திரளையும் குறித்துப் பாடிடுவர்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

இறந்தோர் உலகம்[தொகு]


17 பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதத்தின்
பதினைந்தாம் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:


18 மானிடா! எகிப்தின் மக்கள் திரளைக் குறித்து நீ ஓலமிடு;
அதனையும் பெருமைமிகு நாடுகளின் புதல்வியரையும்
படுகுழிக்குள் செல்கிறவர்களோடு கீழுலகுக்கு அனுப்பிவை.


19 "அழகில் நீ யாரைவிட மிகுந்தவள்?
நீ கீழிறங்கி, விருத்தசேதனம் இல்லாரோடு கிட."


20 வாளால் கொல்லப்படுவோரோடு எகிப்தின் மக்கள் வீழ்வர்.
இதோ! ஒரு வாள் அவர்களைக் கொல்ல உருவப்பட்டுள்ளது.


21 போரில் வலிமைமிக்கோர் பாதாளத்தின் நடுவினின்று
எகிப்தியரையும் துணையாளரையும் குறித்து
"விருத்தசேதனமில்லார் வாளால் வெட்டுண்டுவர்களுடன் கிடக்கின்றனரே" என்பர்.


22 அதோ அசீரியா கிடக்கின்றாள்!
அவளுடன் அவளுடைய மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே.
அவளைச் சுற்றி கல்லறைகள் கிடக்கின்றன.


23 அவர்களின் கல்லறைகள் படுகுழியின் ஆழத்தில் அமைந்துள்ளன;
அவளுடைய மக்கள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவருமே வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே;
வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.


24 அதோ, ஏலாம் கிடக்கின்றாள்!
அவளுடைய கல்லறையைச் சுற்றிலும்
அவளுடைய மக்கள் கூட்டத்தார் கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்;
விருத்தசேதனமில்லாமல் கீழுலகுக்குள் சென்றவர்கள்;
வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
படுகுழிக்குள் செல்வோருடன் சேர்ந்து
அவர்களும் தங்கள் மானக்கேட்டைச் சுமக்கின்றார்கள்.


25 வெட்டுண்டோர் நடுவே அவளுடைய படுக்கையை அமைந்துள்ளது.
அவளுடைய மக்கள் திரள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றன;
அவர்கள் அனைவரும் விருத்தசேதனமில்லார்;
வாளால் வெட்டுண்டவர்கள்;
வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
அவர்கள் படுகுழிக்குச் செல்வோருடன் சேர்ந்து
தங்கள் மானக்கேட்டைச் சுமந்து
வெட்டுண்டவர்களின் நடுவிலே கிடக்கின்றார்கள்.


26 அதோ! மெசேக்கும் தூபாலும் கிடக்கின்றனர்!
அவர்களின் மக்கள் கூட்டத்தார் அவர்களின் கல்லறைகளைச்
சுற்றிக் கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்;
வாளால் வெட்டுண்டவர்கள்;
வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.


27 தங்கள் போர்க் கருவிகளுடன் பாதாளத்தில் இறங்கித்
தங்கள் வாள்களைத் தங்கள் தலைகளுக்கு அடியிலும்,
தங்கள் கேடயங்களைத் தங்கள் எலும்புகள் மேலும் வைத்துக்கொண்டு
இறந்துபோன பழங்கால வீரருடன் அவர்கள் கிடக்கவில்லை;
ஏனெனில் அந்த வீரரைக் குறித்த அச்சம்
வாழ்வோரின் நாட்டில் பரவி இருந்தது.


28 எனவே, நீங்கள் நொறுக்கப்பட்டு,
விருத்தசேதனமில்லார் நடுவில்
வாளால் வெட்டுண்டவர்களோடு கிடப்பீர்கள்.
29 அதோ ஏதோமும் அவளுடைய மன்னர்களும்,
முதன்மைத் தலைவர்களும் கிடக்கின்றார்கள்!
அவர்கள் எத்துணை வலிமை உடையவர்களாயிருந்தும்
வாளால் வெட்டுண்டவர்களோடு, விருத்தசேதனமில்லாது,
படுகுழிக்குச் செல்வோருடன் கிடக்கின்றார்கள்.
30 அதோ, வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும்,
எல்லாச் சீதோனியரும் கிடக்கின்றார்கள்;
அவர்கள், வலிமையால் எவ்வளவோ அச்சம் விளைவித்தவர்களாயிருந்தும்
மானக்கேட்டுக்கு உள்ளாகி,
வெட்டுண்டவர்களோடு கீழே சென்றுள்ளார்கள்.
விருத்தசேதனமின்றி வாளால் வெட்டுண்டவர்களோடு
அவர்கள் கிடக்கின்றார்கள்;
படுகுழிக்குச் செல்வாரோடு தங்கள் மானக் கேட்டைச் சுமக்கின்றார்கள்.
31 பார்வோனும் அவனுடைய படைத்திரளும் அவர்களைப் பார்த்து,
வாளால் வெட்டுண்ட தம் மக்கள் கூட்டம் அனைத்துக்காகவும்
தம்மைத் தேற்றிக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
32 வாழ்வோரின் நாட்டில் அவன் அச்சத்தைப் பரவச் செய்ததால்,
பார்வோனும் அவனுடைய மக்கள் கூட்டத்தார் அனைவரும்
விருத்தசேதனமில்லாது வாளால் வெட்டுண்டவர்களுடன் கிடப்பர்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


குறிப்பு

[*] 32:7 = எசா 13:10; மத் 24:29; மாற் 13:24-25;
லூக் 21:25; திவெ 6:12-13; 8:12.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 33 முதல் 34 வரை