திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அப்போது ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு சென்றது. நானோ மனம் கசந்து, சினமுற்றுச் சென்றேன். ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது." - எசேக்கியேல் 3:14

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]


1 அவர் என்னை நோக்கி,
"மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு.
இச்சுருளேட்டைத் தின்றபின்
இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு" என்றார்.
2 நானும் என் வாயைத் திறக்க,
அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார்.
3 மேலும் அவர் என்னை நோக்கி,
"மானிடா! நான் உனக்குத் தருகின்ற
இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு" என்றார்.
நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது. [1]
4 மேலும் அவர் என்னை நோக்கி,
"மானிடா! புறப்படு.
இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்
என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு.
5 ஏனெனில், புரியாத பேச்சும்
கடின மொழியும் உடைய மக்களிடம் அல்ல,
இஸ்ரயேல் வீட்டாரிடமே நீ அனுப்பப்படுகிறாய்.
6 புரியாத பேச்சும் கடின மொழியும்
உனக்கு விளங்காத சொற்களும் கொண்ட
பல்வேறு மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை.
அத்தகைய மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பியிருந்தாலாவது
அவர்கள் உனக்குச் செவி சாய்த்திருப்பார்கள்.
7 ஆனால் இஸ்ரயேல் வீட்டார்
நான் சொல்வதைக் கேட்க விரும்பாததால்
அவர்கள் நீ சொல்வதைக் கேட்கவும் விரும்பமாட்டார்கள்.
அவர்கள் தலைக்கனமும் கல்நெஞ்சமும் கொண்டவர்கள்.
8 எனவே, நான் உன் முகத்தை
அவர்கள் முகங்களுக்கு எதிராகவும்
உன் நெற்றியை
அவர்கள் நெற்றிகளுக்கு எதிராகவும் கடுமையாக்கியுள்ளேன்.
9 உன் நெற்றியைத் தீக்கல்லை விட உறுதிபெற்ற
வைரக்கல் போல் ஆக்கியுள்ளேன்.
அவர்களுக்கு அஞ்சாதே.
அவர்களின் பார்வையைக் கண்டு கலங்காதே.
ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்" என்றார்.
10 மேலும் அவர் என்னை நோக்கி,
"மானிடா! நான் உனக்குக் கூறும் சொற்களையெல்லாம்
செவிகொடுத்துக் கேட்டு உன் இதயத்தில் பதித்துக் கொள்.
11 நீ புறப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கும் உன் மக்களின் பிள்ளைகளிடம் போ;
அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும்
அவர்களுடன் பேசி,
'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று
அவர்களுக்குச் சொல்" என்றார்.
12 அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது.
ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, [2]
நான் என்பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன்.
13 உயிரினங்களின் இறக்கைகள்
ஒன்றோடொன்று உராயும் ஒலியும்
சக்கரங்களின் ஒலியும் இணைந்து
மாபெரும் அதிரொலியின் ஓசைபோல் ஒலித்தது.
14 அப்போது ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு சென்றது.
நானோ மனம் கசந்து, சினமுற்றுச் சென்றேன்.
ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது.
15 பின்னர், நான் கெபார் ஆற்றோரம்
தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன்.
அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய்
அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன்.

ஆண்டவர் எசேக்கியேலைக் காவலாளியாக அமர்த்தல்[தொகு]


16 ஏழு நாள்களுக்குப்பின்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
17 மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக்
காவலனாக நியமித்துள்ளேன்.
என் வாயின் சொற்களைக் கேட்டு
அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய்.
18 தீயோரிடம் 'நீங்கள் சாவது உறுதி' என்று நான் சொல்ல,
நீ அவர்களை எச்சரிக்காவிடில் -
அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால்,
தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று
அவர்களை எச்சரிக்காவிட்டால் -
அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர்.
ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
19 மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும்,
அவர்கள் தம் தீச்செயலினின்றும்
தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால்,
அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர்.
நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
20 நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில்
நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர்.
நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால்
அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்;
அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா.
ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
21 மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி
நீ அவர்களை எச்சரித்ததால்
அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி.
நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய்.

எசேக்கியேல் பேசும் ஆற்றலை இழத்தல்[தொகு]


22 அங்கே ஆண்டவரின் கைவன்மை என்மீது இருந்தது.
அவர் என்னை நோக்கி,
"எழுந்து சமவெளிக்குச் செல்.
அங்கே நான் உன்னோடு பேசுவேன்" என்றார்.
23 நானும் எழுந்து சமவெளிக்குச் சென்றேன்.
இதோ ஆண்டவரின் மாட்சி,
கெபார் ஆற்றோரம் நான் கண்டதைப் போன்றே விளங்கிற்று.
நான் முகம்குப்புற விழுந்தேன்.
24 பின்னர், ஆவி என்னுள் புகுந்து
என்னை எழுந்து நிற்கச் செய்தது.
அப்போது அவர் என்னிடம் உரைத்தது:
"நீ சென்று உன் வீட்டினுள் உன்னை அடைத்துக் கொள்!
25 மானிடா! நீ வெளியே சென்று
அவர்களிடையே நடமாட முடியாதபடி
உன்மேல் கயிறுகள் போட்டு
அவற்றால் உன்னைக் கட்டுவார்கள்.
26 நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன்.
நீயும் ஊமையாகி, அவர்களைக்
கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய்.
ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.
27 ஆனால் நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன்.
நீ அவர்களிடம் 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல்.
கேட்பவன் கேட்கட்டும்; மறுப்பவன் மறுக்கட்டும்;
ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.


குறிப்புகள்

[1] 3:1-3 = திவெ 10:9-10.
[2] 3:12 = 'போற்றி!' என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 4[தொகு]

எசேக்கியேல் எருசலேமின் முற்றுகையைச்
செய்கையால் எடுத்துக் கூறல்
[தொகு]


1 மானிடா! நீ செங்கல் ஒன்றை எடுத்து,
அதை உன் முன்னே வைத்து
அதன் மேல் எருசலேம் நகரை வரைந்திடு.
2 அதைச் சுற்றி முற்றுகையிட்டாற்போல்
அதற்கெதிராகத் கொத்தளங்கள் கட்டி,
மணல்மேடு ஒன்றையும் எழுப்பு.
அதற்கு எதிராகப் போர்ப் பாசறைகளை அமைத்து,
சுற்றிலும் அரண்தகர் பொறிகளையும் வை.
3 மேலும் நீ இரும்புத்தட்டு ஒன்றை எடுத்து
அதனை உனக்கும் நகருக்கும் இடையே
ஓர் இரும்புச் சுவராக எழுப்பு.
அதற்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொள்.
இப்பொழுது அது முற்றுகையின்கீழ் உள்ளது.
முற்றுகையிடுபவன் நீயே;
இது இஸ்ரயேல் வீட்டாருக்கு ஓர் அடையாளம்.
4 நீ உன் இடப்பக்கமாய்ப் படுத்து,
உன்மேல் இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமத்திக் கொள்.
நீ அப்பக்கமாய்ப் படுத்திருக்கும் நாள்கள் வரை
அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய்.
5 எத்தனை ஆண்டுகள் அவர்கள் தவறிழைத்தார்களோ,
அத்தனை நாள்களை
அதாவது முந்நூற்றுத் தொண்ணூறு நாள்களை
உன்மேல் சுமத்தியுள்ளேன்.
இத்தனை நாள்கள் நீ இஸ்ரயேல் வீட்டாரின்
குற்றத்தைச் சுமக்க வேண்டும்.
6 இதை நீ செய்தபின், மீண்டும் உன் வலப்பக்கமாய்ப் படுத்து,
யூதா வீட்டாரின் குற்றத்தை ஓர் ஆண்டுக்கு
ஒரு நாளென நாற்பது நாள்களுக்குச் சுமக்கவேண்டும்.
ஓர் ஆண்டுக்கு ஒரு நாள் என்றே நான் உனக்குக் குறித்துள்ளேன்.
7 மேலும் முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்கு நேராக
உன் முகத்தை வைத்துக்கொண்டு,
திறந்த புயத்தோடு,
அதற்கெதிராக இறைவாக்கு உரைக்க வேண்டும்.
8 மேலும் உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.
நீ உன் முற்றுகையின் நாள்களை முடிக்கும்வரை
ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குப் புரள உன்னால் இயலாது.
9 நீயோ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு,
சிறுபயறு, தினை, சாமை ஆகியவற்றை ஒரு பானையில் எடுத்துக்கொள்.
நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும்
முந்நூற்றுத் தொண்ணூறு நாள்கள்வரை
அவற்றால் அப்பம் சுட்டுச் சாப்பிடு.
10 நாளொன்றுக்கு இருபது செக்கேல் நிறையுள்ள உணவே சாப்பிடு.
அதையும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நீ உண்ண வேண்டும்.
11 தண்ணீரையும் அளவு பார்த்தே குடிக்கவேண்டும்.
ஒரு கலயம் [*] அளவையில் ஆறிலொரு பங்கைக்
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே குடி.
12 உணவை வாற்கோதுமை அடைகளெனச் சாப்பிடு.
மனித மலத்தின் வறட்டிகளைப் பயன்படுத்தி
அவர்கள் கண்முன் அந்த அடையைச் சுடவேண்டும்.
13 ஆண்டவர் உரைத்தது:
'இவ்வாறே இஸ்ரயேல் மக்களும்
நான் அவர்களை விரட்டியடிக்கும் நாடுகளுக்குள்
தங்கள் அப்பத்தைத் தீட்டுப்பட்டதாகச் சாப்பிடுவார்கள்.'
14 அப்போது நான், "தலைவராகிய ஆண்டவரே!
நான் ஒருபோதும் தீட்டுப்பட்டதில்லை.
என் இளமை முதல் இப்போதுவரை தானாய்ச் செத்ததையோ,
மற்ற விலங்குகளால் கிழிக்கப்பட்டதையோ நான் உண்டதில்லை.
தீட்டான இறைச்சி கூட என் வாயில் நுழைந்ததே இல்லை" என்றேன்.
15 அப்போது அவர் என்னிடம்,
"சரி, மனித மலத்துக்குப் பதிலாக உனக்கு
மாட்டுச் சாணத்தை அனுமதிக்கிறேன்.
அதைக் கொண்டு உன் அப்பத்தைச் சுடு" என்றார்.
16 மேலும் அவர் என்னை நோக்கி,
"மானிடா! இதோ நான் எருசலேமில்
உணவின் தரவைக் குறையச் செய்வேன்.
அவர்கள் அப்பத்தை நிறைபார்த்துக் கவலையோடு உண்பர்.
தண்ணீரை அளவு பார்த்துக் கலக்கத்தோடு குடிப்பர்.
17 இதனால் அப்பமும் தண்ணீரும்
அவர்களுக்குக் குறைந்து கொண்டே போக,
ஒவ்வொருவரும் தம் சகோதரை அவநம்பிக்கையோடு பார்த்துத்
தம் குற்றப்பழியை முன்னிட்டு நலிந்து போவர்.


குறிப்பு

[*] 4:11 'கீன்' என்பது எபிரேய பாடம்.



(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை