திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"நான் வறட்சியையும், கொடிய விலங்குகளையும் உங்கள் மேல் ஏவுவேன்." - எசேக்கியேல் 3:14

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

எசேக்கியேல் தன் தலையையும்
தாடியையும் மழித்துக் கொள்ளல்
[தொகு]


1 "மானிடா! மழிக்கும் கத்தியைப் போன்று
கருக்கலான ஒரு வாளை எடுத்து,
அதைக்கொண்டு உன் தலையையும் தாடியையும் மழித்துக்கொள்.
ஒரு தராசை எடுத்து அந்த முடியைப் பங்கிடு.
2 அதில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாள்கள் முடியும்போது
நகரின் நடுவில் நெருப்பினால் சுட்டெரி;
மூன்றிலொரு பங்கை நகரைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போடு;
மூன்றில் ஒரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு.
ஏனெனில் நான் அவர்களை உருவிய வாளுடன் பின்தொடர்வேன்.
3 அதில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனைகளில் முடிந்து வை.
4 பிறகு அதில் இன்னும் கொஞ்சம் எடுத்து,
அதைத் தீயிலிட்டுச் சுட்டெரி.
அதனினின்று இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் எதிராகத் தீ புறப்படும்."
5 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
வேற்றினத்தாரிடையேயும் சூழ்ந்துள்ள நாடுகள் நடுவிலும்
நான் திகழச் செய்த எருசலேம் இதுவே.
6 அம்மக்கள் வேற்றினத்தாரைவிடக்
கேடு கெட்டவர்களாய் என் நீதிநெறிகளை எதிர்த்தார்கள்.
தங்கைச் சுற்றியுள்ள நாடுகளைவிட மிகுதியாக
என் நியமங்களை எதிர்த்தார்கள்.
ஏனெனில் அவர்கள் என் நீதிநெறிகளை ஒதுக்கித் தள்ளி,
என் நியமங்களின்படி நடவாமற் போனார்கள்.
7 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களைக் காட்டிலும்
அதிகமாய் நீங்கள் கிளர்ச்சி செய்தீர்கள்;
என் நியமங்களின்படி நடக்கவில்லை.
என் நீதி நெறிகளைக் கடைப்பிடிக்கவில்லை.
உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களின் நீதிநெறிகளின்படிகூட
நீங்கள் நடக்கவில்லை.
8 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
வேற்றினத்தார் கண்முன் நானே உங்கள் நடுவிலிருந்து
உங்களுக்கெதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.
9 உங்கள் எல்லா அருவருப்பான செயல்களுக்காகவும்,
நான் இதுவரை செய்யாததும்
இனிச் செய்யாதிருக்கப் போவதுமான ஒன்றை
உங்கள் நடுவே செய்யப்போகிறேன்.
10 எனவே உங்களுள் பெற்றோர் தம் பிள்ளைகளையும்
பிள்ளைகள் தம் பெற்றோரையும் தின்பர்;
உங்களுக்கு நான் தண்டனைத் தீர்ப்பு அளித்து
உங்களுள் எஞ்சியிருப்போர் அனைவரையும்
எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன். [1]
11 என்மேல் ஆணை!
வெறுப்புக்கும் அருவருப்புக்கும் உரிய
உங்கள் எல்லாச் செயல்களாலும்
என் திருத்தூயகத்தை நீங்கள் தீட்டுப்படுத்தியதால்
நான் உங்களைவிட்டு விலகிவிடுவேன்.
என் கண்கள் உங்களுக்கு இரக்கம் காட்டா.
இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.
12 உங்களுள் மூன்றிலொரு பங்கினர் கொள்ளை நோயால் மடிவர்;
பஞ்சத்தால் அழிவர்;
இன்னும் மூன்றிலொரு பங்கினர் வாளால் வீழ்வர்;
எஞ்சிய மூன்றிலொரு பங்கினரை எத்திசையிலும்
சிதறுண்டு போகச் செய்து,
அவர்களை உருவிய வாளோடு தொடர்வேன்.
13 இவ்வாறு என் சினம் தணியும்;
அவர்கள்மீது எனக்குள்ள சீற்றத்தை ஆற்றிக்கொள்வேன்,
பழிதீர்த்துக் கொள்வேன்.
என் சீற்றம் அவர்கள் மீது பாய்ந்து முடியும்போது
ஆண்டவராகிய நான் என் பேரார்வத்தினால் பேசியுள்ளேன் என
அவர்கள் அறிந்து கொள்வர்.
14 இவ்வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி
உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களிடையே உன்னைப் பாழாக்கி,
பழிச்சொல்லுக்கு ஆளாக்குவேன்.
15 சினத்தோடும், சீற்றத்தோடும்
உனக்கு நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும்போது,
உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களுக்கு
அது பழிச்சொல்லும் வசைமொழியும்
எச்சரிக்கையும் திகிலுமாய் இருக்கும்.
ஆண்டவராகிய நான் பேசியுள்ளேன்.
16 உங்களைப் பாழாக்குவதற்காக
நான் வறட்சியின் கொடிய அம்புகளை அவர்கள்மீது எய்வேன்.
உங்களை அழிப்பதற்காகவே அவற்றை எய்வேன்.
உங்களிடையே வறட்சியை மிகுதிப்படுத்தி
உங்கள் உணவின் தரவை நிறுத்திவிடுவேன்.
17 நான் வறட்சியையும், கொடிய விலங்குகளையும்
உங்கள் மேல் ஏவுவேன்.
அதனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை இழப்பீர்கள்;
கொள்ளை நோயும் இரத்தக் களறியும் உங்களிடையே உண்டாகும்.
ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன். [2]


குறிப்புகள்

[1] 5:10 = புல 4:10
[2] 5:17 திவெ 6:8.


அதிகாரம் 6[தொகு]

சிலைவழிபாட்டிற்கு எதிரான ஆண்டவரின் கண்டனம்[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
2 மானிடா! நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு நேராக
உன் முகத்தை வைத்துக்கொண்டு
அவர்களுக்கு எதிராக இறைவாக்கு உரைத்திடு.
3 நீ சொல்லவேண்டியது:
"இஸ்ரயேல் மலைகளே!
தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
மலைகளுக்கும் குன்றுகளுக்கும்
மலை இடுக்குகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும்
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நானே உங்கள்மேல் வாளை வரச்செய்து
உங்கள் தொழுகைமேடுகளை அழிப்பேன்.
4 உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட,
உங்கள் தூபபீடங்கள் தகர்க்கப்படும்.
உங்களுள் கொலையுண்டோரை உங்கள் சிலைகளின்முன் விட்டெறிவேன்.
5 இஸ்ரயேல் மக்களின் பிணங்களை
அவர்களுடைய சிலைகளின்முன் போடுவேன்.
உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும்
உங்கள் எலும்புகளைச் சிதறச் செய்வேன்.
6 நீங்கள் வாழும் எல்லா இடங்களிலும் நகர்கள் அழிக்கப்படும்;
தொழுகை மேடுகள் சிதைக்கப்படும்.
இதனால் உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட்டுப் பாழாக்கப்படும்.
உங்கள் சிலைகள் உடைத்து நொறுக்கப்படும்.
உங்கள் தூப பீடங்கள் தகர்க்கப்படும்.
உங்கள் கைவேலைப்பாடுகள் அழித்தொழிக்கப்படும்.
7 கொலையுண்டோரும் உங்கள் நடுவில் வீழ்ந்து கிடப்பர்.
அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8 ஆயினும், நீங்கள் நாடுகளுக்குள்ளே சிதறடிக்கப்படும்போது,
வாளுக்குத் தப்பும் சிலரை
எஞ்சியோராக நான் வேற்றினங்களிடையே விட்டுவைப்பேன்.
9 இவ்வாறு, வேற்றினங்களிடையே சிறைப்படுத்தப்பட்டு
உயிர் தப்புவோர் என்னை நினைவு கூர்வர்.
ஏனெனில் என்னை விட்டு விலகி விபசாரம் செய்த
தங்கள் இதயத்தையும்,
சிலைகள் மீது காமுற்ற தங்கள் கண்களையும் குறித்து
தங்களையே நொந்து கொள்ளச் செய்வேன்.
அவர்கள் தங்கள் அருவருப்பான எல்லாச் செயல்களுக்காகவும்,
எல்லாக் கேடுகளுக்காகவும் தங்களைத் தாங்களே வெறுப்பர்.
10 அப்போது, நானே ஆண்டவர் என்றும்
'இக்கேட்டை அவர்களுக்கு வருவிப்பேன்' என
நான் பொய்யாகச் சொல்லவில்லை என்றும் அவர்கள் அறிவார்கள்."
11 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நீ கையடித்துக் காலை உதறிச் சொல்;
ஐயோ கேடு! இஸ்ரயேல் வீட்டாரின் எல்லாத்
தீய அருவருப்புகளுக்காகவும்
அவர்கள் வாளாலும் வறட்சியாலும் கொள்ளை நோயாலும் மடிவர்.
12 தொலையில் இருப்போர் கொள்ளை நோயால் மடிவர்;
அருகில் இருப்போர் வாளால் வீழ்வர்.
மீந்திருந்து முற்றுகையிடப்படுவோரோ வறட்சியால் சாவர்.
இவ்வாறு அவர்கள்மேல் என் சீற்றத்தைத் தணித்துக்கொள்வேன்.
13 ஒவ்வோர் உயர்ந்த குன்றிலும் எல்லா மலையுச்சிகளிலும்,
ஒவ்வொரு பசுமரத்தடியிலும்,
தழைத்து நிற்கும் எல்லாக் கருங்காலி மரங்களடியிலும்,
எங்கெங்கு அவர்கள் தங்கள் சிலைகளுக்கெல்லாம்
நறுமணத் தூபம் காட்டினரோ
அங்கெல்லாம் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றி
அவர்களுடைய சிலைகளோடு
அவர்களுள் கொலையுண்டோரும் கிடக்கும்போது
நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
14 நான் அவர்கள்மீது என் கையை ஓங்கிப்
பாலைநிலம் முதல் திப்லாவரை
அவர்கள் குடியிருக்கும் எல்லா இடங்களையும்
அழித்துப் பாழாக்குவேன்.
அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை