திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

விக்கிமூலம் இலிருந்து
கானான் நாட்டை உளவுபார்த்து, அங்கிருந்து பழங்கள் கொணரும் உளவாளிகள் (எண் 13:23-24). கலைஞர்: பீட்டர் பவுல் மெட்ஸ் (1830-1912). காப்பிடம்: செருமனி

எண்ணிக்கை[தொகு]

அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

அதிகாரம் 29[தொகு]

புத்தாண்டு விழாப் படையல்கள்[தொகு]

(லேவி 23:23-25)


1 ஏழாம் மாதம் முதல் நாளன்று உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; நீங்கள் கடினவேலை ஏதும் செய்யக்கூடாது. உங்களுக்காக எக்காளங்கள் முழங்கும் நாள் அது.
2 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியை நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டியவை: இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
3 அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளைக்காக ஆறு படியும், ஆட்டுக் கிடாய்க்காக நான்கு படி அளவில் இருக்கும்.
4 ஏழு ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி அளவாக இருக்கும்.
5 மேலும் உங்களுக்குக் கறை நீக்கம் செய்யப் பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை.
6 இவை தவிர மாதந்தோறும் அளிக்கும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை அவர்கள் முறைமையின்படி ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலியாக அமையும்.

பாவம்போக்கும் நாளுக்கான படையல்[தொகு]

(லேவி 23:26-32)


7 இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; அப்போது உங்களை நீங்களே வருத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருங்கள்.
8 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியொன்றை நீங்கள் அவருக்குச் செலுத்துங்கள். அதற்குத் தேவையானவை: இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்கவேண்டும்.
9 அத்துடன் உணவுப்படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு காளைக்காக ஆறுபடியும் ஆட்டுக்கிடாய்க்காக நான்குபடி அளவில் இருக்கும்.
10 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி என்ற அளவில் இருக்கும்.
11 மேலும் கறை நீக்கத்திற்கான பாவம் போக்கும் பலி, எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்துவாய். [*]

கூடாரத் திருநாள் படையல்கள்[தொகு]

(லேவி 23:23-44)


12 ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்; நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது; ஏழு நாள்கள் நீங்கள் ஆண்டவருக்கு விழா எடுக்க வேண்டும்.
13 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புப் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டியவை: இளங்காளைகள் பதின் மூன்று, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
14 அத்துடன் உணவுப் படையலான எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்கும் ஆறு படி இரண்டு ஆட்டுக்கிடாய்களில் ஒவ்வொன்றுக்கும் நான்குபடி பங்கு.
15 பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு படி அளவில் இருக்கும்.


16 மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய் செலுத்துவாய்.


17 இரண்டாம் நாள்: இளங்காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
18 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக் கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றிற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்.
19 மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.


20 மூன்றாம் நாள்: காளைகள் பதினொன்று, ஆட்டுக் கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடையனவும் பழுதற்றனவுமான ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
21 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய படையல், நீர்மப் படையல்கள்.
22 மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிரப் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.


23 நான்காம் நாள்: காளைகள் பத்து, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
24 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்;
25 மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதன் நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.


26 ஐந்தாம் நாள்: காளைகள் ஒன்பது, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்;
27 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்.
28 மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.


29 ஆறாம் நாள்: காளைகள் எட்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
30 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல்கள்;
31 மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய அதன் உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.


32 ஏழாம் நாள்: காளைகள் ஏழு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
33 அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்.
34 மேலும், எந்நாளும் செலுத்தம் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.


35 எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடைபெறும்; நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது.
36 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புக் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டுபவை: காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
37 அவற்றுடன் முறைமைப்படி காளை, ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்;
38 மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.


39 நியமிக்கப்பட்ட திருநாள்களில் நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியவை இவையே. உங்கள் பொருத்தனைகள், தன்னார்வப் படையல்கள், எரிபலிகள், உணவுப் படையல்கள், நீர்மப் படையல்கள், நல்லுறவுப் பலிகள் ஆகியவை நீங்கலாகச் செய்ய வேண்டியவை இவையே.


40 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னார்.


குறிப்பு

[*] 29:7-11 = லேவி 16:29-34.

அதிகாரம் 30[தொகு]

பொருத்தனை பற்றிய விதிமுறைகள்[தொகு]


1 மோசே இஸ்ரயேல் மக்களின் குலத் தலைவர்களிடம் கூறியது: கடவுள் கட்டளையிட்டிருப்பது இதுவே:
2 ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும். [*]
3 ஒரு பெண் இளமையில் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போது ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றைச் செய்து உறுதிமொழிக்குத் தான் கட்டுப்பட்டிருக்க,
4 அவள் தந்தை அவள் செய்து கொண்ட பொருத்தனையையும் அவள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியையும் கேட்டும் எதையும் அவளிடம் சொல்லவில்லையெனில் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்; அவள் எடுத்துக்கொண்ட ஒவ்வோர் உறுதிமொழியும் நிலைக்கும்.


5 ஆனால் அவள் தந்தை அதைக் கேட்ட நாளில் அவளுக்கு ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனையோ, அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியோ எதுவும் நிலைக்காது. ஆண்டவரும் அவளை மன்னிப்பார். ஏனெனில் அவள் தந்தை அதற்கு ஒப்புதல் தரவில்லை.
6 ஆனால் அவள் பொருத்தனை செய்திருக்கையில் அல்லது கருத்தின்றிக் கூறிய சொற்களால் கட்டுண்டிருக்கையில் ஒருவனுக்கு மணம் முடிக்கப்பட்டிருக்க,
7 தன் கணவன் அதைக் கேட்டு அவன் அதைக் கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும்; அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும்.
8 ஆனால் அவள் கணவன் அதை அறியவரும் நாளில் ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகளையும் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கருத்தின்றிக் கூறிய சொற்களையும் அவன் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறான். ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.
9 ஒரு விதவை அல்லது மணமுறிவு செய்யப்பட்டவள் செய்துகொண்ட பொருத்தனைக்கும் அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறிய எதற்கும் அவளே பொறுப்பாவாள்.
10 மேலும் அவள் கணவன் வீட்டில் பொருத்தனை செய்திருக்க அல்லது தன்னைக் கட்டக்குள்ளாக்கும் அளவில் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்க,
11 அவள் கணவன் அதைக் கேட்டும் அவளிடம் ஒன்றும் சொல்லாமலும் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமலும் இருந்திருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்; அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறியது ஒவ்வொன்றும் நிலைக்கும்.
12 ஆனால் அவள் கணவன் அவற்றைக் கேட்ட நாளில் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகளோ, அவளைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் கூறிய வார்த்தைகளோ எவையும் நிலைக்கா; அவள் கணவன் அவற்றை ஒன்றுமில்லாமலாக்கி விட்டான்; ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.
13 தன்னை வருத்திக்கொள்ளுமாறு அவள் செய்து கொண்ட எந்தப் பொருத்தனையையும் தன்னைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் எடுத்துக்கொண்ட எந்த உறுதி மொழியையும் அவள் கணவன் நிலைப்படுத்தலாம்; அல்லது ஒன்றுமில்லாமல் ஆக்கலாம்.
14 ஆயினும் அவள் கணவன் ஒருநாளும் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால் அவள் செய்துகொண்ட எல்லாப் பொருத்தனைகளையும் அல்லது அவளைக் கட்டுக்குள்ளாக்கும் அவளின் உறுதிமொழிகள் அனைத்தையும் அவன் நிலைப்படுத்துகிறான். அவன் அவற்றைக் கேட்ட அவளிடம் ஒன்றும் சொல்லாதபடியால் அவன் அவற்றை நிலைப்படுத்தி விட்டான்.


15 ஆனால் அவற்றைப் பற்றிக் கேட்டபின் அவன் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால் அவளின் குற்றத்திற்கு அவனே பொறுப்பு.
16 ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்குமிடையிலும், ஒரு தந்தைக்கும் அவர் வீட்டில் இளமையாயிருக்கும் ஒரு மகளுக்குமிடையிலும் இருக்குமாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிமுறைகள் இவையே.


குறிப்பு

[*] 30:2 = இச 23:21-13; மத் 5:33.


(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 31 முதல் 32 வரை