திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மிதியான் மன்னர் ஐவர் கொல்லப்படுகின்றனர் (எண் 30). விவிலிய ஓவியம். காலம்: 1728. இடம்: ஹேக் நகர், ஓலாந்து.

எண்ணிக்கை[தொகு]

அதிகாரங்கள் 31 முதல் 32 வரை

அதிகாரம் 31[தொகு]

மிதியானுக்கு எதிரான புனிதப் போர்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம்,
2 "இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்" என்றார்.


3 மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
4 இஸ்ரயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரம் பேரைப் போருக்கு அனுப்ப வேண்டும்.


5 அப்படியே இஸ்ரயேலின் பல்லாயிரத்தவர்களிலிருந்து குலம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் பன்னீராயிரம் பேர் போரிடுவதற்குத் தயார் நிலையில் அனுப்பப்பட்டனர்.
6 மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் வந்த ஆயிரம் பேரை குரு எலயாசர் மகன் பினகாசுடன் போருக்கு அனுப்பினார். அவர் திருத்தலத் துணைக்கலன்களையும் போர் எக்காளங்களையும் கையோடு எடுத்துச் சென்றார்.
7 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மிதியானுக்கெதிராகப் எதிராக போரிட்டு ஆண்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினர்.
8 இவ்வாறு வெட்டி வீழ்த்தப்பட்டவர்களைத் தவிர மிதியான் மன்னர்களையும் அவர்கள் கொன்றனர்; மிதியானின் ஐந்து அரசர்கள் ஏலி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியோர்; அத்துடன் பெகோரின் மகன் பிலயாமையும் அவர்கள் வாளால் வெட்டி வீழ்த்தினர்.


9 இஸ்ரயேல் மக்கள் மிதியானின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிறைப்பிடித்தனர்; அவர்களுடன் அவர்களின் கால்நடைகள், மந்தைகள் அனைத்தையும் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் கொள்ளைப் பொருளாகக் கவர்ந்து கொண்டனர்.
10 அவர்கள் குடியிருந்த இடங்களின் அனைத்து நகர்களையும் அவர்களின் அரண்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.
11 ஆள்களும் கால்நடைகளும் உட்பட அவர்கள் கொள்ளையடித்தவை, சூறையாடியவை அனைத்தையும் கொண்டு சென்றனர்.
12 பின்பு அவர்கள் சிறைப்பிடித்தோர், கொள்ளையடித்தவை, சூறையாடியவை ஆகியவற்றை எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையத்திலிருந்த மோசே, குரு எலயாசர், இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆகியோரிடம் கொண்டு சென்றனர்.

படை திரும்பி வருதல்[தொகு]


13 மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவர்களைச் சந்திக்கும்படி பாளையத்துக்கு வெளியே
வந்தனர். 14 ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களாகிய படைத்தளபதிகள், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த போது அவர்கள் மேல் மோசே சினங்கொண்டார்.
15 மோசே அவர்களிடம் கூறியது: பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா?
16 பிலயாமின் சொல் கேட்டு இஸ்ரயேல் மக்கள் பெகோர் காரியத்தில் ஆண்டவருக்கு எதிராக இழிவாக நடக்கக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே! அதனால்தான் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பினுள் கொள்ளைநோய் வந்தது. [*]
17 எனவே ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.
18 ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்.
19 உங்களுள் ஆளைவெட்டி வீழ்த்திய ஒவ்வொருவனும் தீட்டுப்பட்டதைத் தொட்டவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் பாளையத்துக்கு வெளியே தங்கியிருங்கள். உங்களையும், நீங்ள் சிறைப்பிடித்தவர்களையும் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்துங்கள்.
20 உடைகள், தோல் பொருள்கள், வெள்ளாட்டு உரோம வேலைப்பாடுகள், மரப்பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும்.


21 பின்னர் குரு எலயாசர் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களைப் பார்த்துக் கூறியது: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டருளிய திருச்சட்ட நியமம் இதுவே:
22 பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய
23 நெருப்பைத் தாங்கக் கூடிய அனைத்தையும் நீங்கள் நெருப்பிலே போட்டு எடுக்க வேண்டும். அப்பொழுது அவற்றின் தீட்டு அகலும். மேலும் அவை தண்ணீராலும் தூய்மையாக்கப்பட வேண்டும்; நெருப்பைத் தாங்கக் கூடாதது எதுவோ அதைத் தண்ணீரில் தோய்த்தெடுத்த வேண்டும்.
24 ஏழாம் நாளில் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுது உங்கள் தீட்டு அகலும்; நீங்கள் பாளையத்துக்குள் வரலாம்.

கொள்ளைப் பொருளைப் பங்கிடுதல்[தொகு]


25 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
26 ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள்.
27 போருக்குச் சென்றிருந்த படைவீரருக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அனைவருக்குமிடையில் கொள்ளைப் பொருளைப் பங்கிடுங்கள்.
28 போருக்குச் சென்றிருந்த படை வீரரிடமிருந்த ஆள்கள், மாடுகள், கழுதைகள், மந்தைகள், ஆகியவற்றில் ஐந்நூற்றில் ஒன்றை ஆண்டவருக்குரிய பங்காகக் கொடுங்கள்.
29 அவர்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து அதை எடுத்து ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாகக் குரு எலயாசரிடம் கொடுக்க வேண்டும்.
30 இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கான ஆள்கள், காளைகள், கழுதைகள், மந்தைகள் ஆகியவற்றிலிருந்து ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து ஆண்டவரின் திருவுறைவிடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் லேவியரிடம் கொடுக்க வேண்டும்.
31 மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.


32 படைவீரர் சூறையாடிய கொள்ளைப் பொருளில் மீந்திருந்தவை: ஆறு லட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள்,
33 எழுபத்தீராயிரம் மாடுகள்,
34 அறுபத்தோராயிரம் கழுதைகள்,
35 ஆள்கள் மொத்தம் முப்பத்தீராயிரம் பேர்; அவர்கள் ஆணுறவு கொண்டிராத பெண்கள்.
36 போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
37 ஆண்டவர் பங்கில் இருந்த ஆடுகள் அறுநூற்று எழுபத்தைந்து.
38 காளைகளின் தொகை முப்பத்தாறாயிரம்; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.
39 கழுதைகளின் தொகை முப்பத்தாயிரத்து ஐந்நூறு; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.
40 ஆள்கள் தொகை பதினாறாயிரம்; அவர்களிலிருந்து ஆண்டவருக்குரிய பங்காகத் தரப்பெற்றவர்கள் முப்பத்திரண்டு பேர்.
41 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆண்டவருக்குரிய பங்காகிய உயர்த்திப் படைக்கும் படையலை மோசே குரு எலயாசரிடம் கொடுத்தார்.


42 போருக்குச் சென்றிருந்த ஆள்களுக்குரியது போக மோசே இஸ்ரயேல் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தப் பாதிப் பங்கு:
43 மக்கள் கூட்டமைப்புக்குரிய பாதிப் பங்கில் ஆடுகள் மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
44 காளைகள் முப்பத்தாறாயிரம்.
45 கழுதைகள் முப்பத்தாறாயிரத்து ஐந்நூறு,
46 ஆள்கள் பதினாறாயிரம் பேர்.
47 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து ஆள்களிலும் கால்நடைகளிலும் ஐம்பத்துக்கு ஒன்று வீதம் எடுத்து அவற்றை ஆண்டவரின் திருவுறைவிடத்திற்குப் பொறுப்பாயிருந்த லேவியரிடம் மோசே கொடுத்தார்.


48 பின்பு பல்லாயிரத்தவர் படைத்தளபதிகள் - ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும் - மோசேயை அணுகினர்.
49 அவர்கள் மோசேயிடம், "உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட போர்வீரரை எண்ணியபோது ஒருவரும் குறையவில்லை.
50 அத்துடன் ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்குக் கறை நீக்கம் செய்வதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் தேடி எடுத்த பொன்னணிகளான காப்பு வகைகள், கடகங்கள், முத்திரை மோதிரங்கள், காது வளையங்கள், குமிழ் மணிகள் ஆகியவற்றை ஆண்டவருக்கு நேர்ச்சையாகக் கொண்டு வந்துள்ளோம்" என்றனர்.
51 மோசேயும் குரு எலயாசரும் அவர்களிடமிருந்த கைவினைப் பொருள்களான எல்லாப் பொன் அணிகளையும் பெற்றுக் கொண்டனர்.
52 ஆயிரத்தவர் தலைவர்களும் நூற்றுவர் தலைவர்களும் ஆண்டவருக்கு உயர்த்திப் படைத்த பொன்னின் நிறை மொத்தம் ஏறக்குறைய இருநூறு கிலோ கிராம்.


53 ஒவ்வொரு படைவீரனும் கொள்ளைப் பொருளைக் கவர்ந்து கொண்டான்.
54 மோசேயும் குரு எலயாசரும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர்; அதை ஆண்டவர் திருமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாகச் சந்திப்புக் கூடாரத்தினுள் கொண்டு வந்தனர்.


குறிப்பு

[*] 31:16 = எண் 25:1-9.


அதிகாரம் 32[தொகு]

யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த குலங்கள்[தொகு]

(இச 3:12-22)


1 ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன; அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்; அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது.
2 எனவே அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து,
3 "அற்றரோத்து, தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ, பெயோன் ஆகிய பகுதிகள்
4 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் பார்வையில் ஆண்டவர் அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்றவை; உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு" என்றனர்.
5 மேலும் அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்; எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம்" என்றனர்.


6 ஆனால் மோசே காத்துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது: நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா?
7 ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்?
8 அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர்.
9 அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர். [1]
10 அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது; அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது:
11 எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டினைக் காணமாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை.
12 எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு; ஏனெனில் அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர்.
13 அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது; அவர் இப்பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்; ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது. [2]


14 இப்போதும் நீங்கள் உங்கள் மூதாதையருக்குப் பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள். இஸ்ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் கனலை இன்னும் கடுமையாக்கி விடுகிறீர்களே!
15 அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்; இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.


16 பின்னும் அவர்கள் அவரிடம் நெருங்கி வந்து, "நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்;
17 ஆயினும் நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்; எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்;
18 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.
19 நாங்கள் யோர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர்களுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம். ஏனெனில் எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தானுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது" என்றார்கள்.
20 மோசே அவர்களிடம் கூறியது: நீங்கள் இதைச் செய்தால் - ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால்,
21 உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொருவரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால் -
22 நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்; அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்; ஆண்டவருக்கும் இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்; இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும்.
23 ஆனால் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம்.
24 உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்; நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள்.


25 காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மோசேயிடம், "எம் தலைவர் கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்;
26 எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்;
27 ஆனால் எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம்" என்றனர்.


28 இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார்.
29 மோசே அவர்களிடம், "காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்; நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்; பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்;
30 ஆனால் அவர்கள் போர்க்கலந்தாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமைகள் பெறுவர்" என்றார்.
31 காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, "ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்;
32 நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்; எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்" என்றனர். [3]


33 மோசே, காத்துப் புதல்வர், ரூபன் புதல்வர், யோசேப்பு மகன் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரிய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் ஓகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அதன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற நகர்களையும் கொடுத்தார்.
34 காத்துப் புதல்வர் தீபோன், அற்றரோத்து, அரோயேர்,
35 அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா,
36 பெத்நிம்ரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர்.
37 ரூபன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம்,
38 நெபோ, பாகால்மெகோன், (இந்தப் பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்; அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர்.
39 மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர்.
40 மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்; அவர் அதில் வாழ்ந்தார்.
41 மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்; அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார்.
42 நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்; அவர் அதைத் தம் பெயராலேயே 'நோபாகு' என்று அழைத்தார்.


குறிப்புகள்

[1]32:8-9 = எண் 13:17-33.
[2] 32:10-13 = எண் 14:26-35.
[3] 32:28-32 = யோசு 1:12-15.


(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 33 முதல் 34 வரை