திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
எரேமியா என்ற இறைவாக்கினர் கி.மு. 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தார். இந்நெடிய பணிக்காலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு நிகழவிருந்த தண்டனை பெற்றி முன்னெச்சரிக்கை விடுத்தார். பாபிலோனிய மன்னனால் எருசலேமும் திருக்கோவிலும் அழிவுற்றதையும் கண்டார். ஆயினும் அம்மக்கள் பாபிலோனிய .அடிமைத்தனத்தினின்று மீளவிருப்பதையும் நாடு புத்துயிர் பெறவிருப்பதையும் முன்னறிவித்தார்.
எரேமியா மென்மையான அன்புள்ளம் படைத்தவர். ஆயினும் மக்களுக்கெதிராகத் தண்டனைத் தீர்ப்பு உரைக்குமாறு இறைவனால் பணிக்கப்பட்டார். கடவுள் தந்த இவ்வழைப்பிற்காகத் 'துன்புறும் மனிதன்' ஆன இவரைப் பற்றிய உணர்ச்சிகரமான பல பகுதிகள் இந்நூலில் காணக்கிடக்கின்றன. இந்நூலின் சில சிறப்பான பகுதிகளில், 'இதயத்தில் எழுதப்பட்ட சட்டத்தைக் கொண்ட புதியதோர் இறைக்குலம் தோன்றவிருக்கிறது' என்னும் நம்பிக்கைப் பேரொளி சுடர்விடுகின்றது.
எரேமியா
[தொகு]நூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. எரேமியாவின் அழைப்பு | 1:1-19 | 1099 - 1100 |
2. யூதா, எருசலேமுக்கு எதிரான இறைவாக்குகள் | 2:1 - 25:38 | 1100 - 1143 |
3. நல்வாழ்வு பற்றிய இறைவாக்குகள் | 26:1 - 35:19 | 1143 - 1163 |
4. எரேமியாவின் துன்பங்கள் | 36:1 - 45:5 | 1163 - 1177 |
5. வேற்றினத்தார்க்கு எதிரான இறைவாக்குகள் | 46:1 - 51:64 | 1177 - 1194 |
6. பிற்சேர்க்கை: எருசலேமின் வீழ்ச்சி | 52:1-34 | 1194 - 1196 |
எரேமியா
[தொகு]அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
அதிகாரம் 1
[தொகு]எரேமியாவின் அழைப்பு
[தொகு]
1 பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த
குருக்களுள் ஒருவரான
இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:
2 ஆமோன் மகனும் யூதா அரசருமான
யோசியாவின் காலத்தில்,
அவரது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில்
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.
3 யோசியா மகனும் யூதா அரசனுமாகிய
யோயாக்கீம் காலத்திலும்,
யோசியா மகனும் யூதா அரசனுமாகிய
செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின்
இறுதி வரையிலும்,
அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட
அதே ஆண்டின் ஐந்தாம் மாதம்வரை
ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது.
4 எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
5 'தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே
அறிந்திருந்தேன்;
நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்;
மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.'
6 நான், 'என் தலைவராகிய ஆண்டவரே,
எனக்குப் பேசத் தெரியாதே,
சிறுபிள்ளைதானே' என்றேன்.
7 ஆண்டவர் என்னிடம் கூறியது:
"'சிறுபிள்ளை நான்' என்று சொல்லாதே;
யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ
அவர்களிடம் செல்;
எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ
அவற்றைச் சொல்.
8 அவர்கள்முன் அஞ்சாதே.
ஏனெனில், உன்னை விடுவிக்க
நான் உன்னோடு இருக்கின்றேன்,
என்கிறார் ஆண்டவர்."
9 ஆண்டவர் தம் கையை நீட்டி
என் வாயைத் தொட்டு
என்னிடம் கூறியது:
"இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்.
10 பிடுங்கவும் தகர்க்கவும்,
அழிக்கவும் கவிழ்க்கவும்,
கட்டவும் நடவும்,
இன்று நான் உன்னை
மக்களினங்கள் மேலும்
அரசுகள் மேலும்
பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் ".
11 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
'எரேமியா, நீ காண்பது என்ன?' என்னும் கேள்வி எழ,
"வாதுமை [] மரக்கிளையைக் காண்கிறேன்' என்றேன்.
12 அதற்கு ஆண்டவர் என்னிடம்,
"நீ கண்டது சரியே.
என் வாக்கைச் செயலாக்க நானும்
விழிப்பாயிருப்பேன்" என்றார்.
13 ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை
எனக்கு அருளப்பட்டது:
"நீ காண்பது என்ன?" என்னும் கேள்வி எழ,
"கொதிக்கும் பானையைக் காண்கிறேன்.
அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது" என்றேன்.
14 ஆண்டவர் என்னிடம் கூறியது:
"நாட்டில் குடியிருப்போர் அனைவர் மீதும்
வடக்கிலிருந்தே தீமை பாய்ந்து வரும்."
15 இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும்
நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
அவர்கள் வந்து ஒவ்வொருவரும்
எருசலேமின் வாயில்களிலும்,
அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும்,
யூதா நகர்களுக்கு எதிரிலும்
தம் அரியணையை அமைப்பர்.
16 என் மக்களின் தீய செயல்களுக்காக
அவர்களுக்கெதிராகத் தீர்ப்புக் கூறப் போகிறேன்.
அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள்.
வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினார்கள்.
தங்கள் கைவேலைப்பாடுகளை வழிபட்டார்கள்.
17 நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள்.
புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும்
அவர்களிடம் சொல்.
அவர்கள் முன் கலக்கமுறாதே.
இல்லையேல், அவர்கள் முன் உன்னைக்
கலக்கமுறச் செய்வேன்.
18 இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும்,
அதாவது, யூதாவின் அரசர்களுக்கும்
அதன் தலைவர்களுக்கும்
அதன் குருக்களுக்கும்
நாட்டின் மக்களுக்கும் எதிராக
அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும்
வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.
19 அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள்.
எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது.
ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்"
என்கிறார் ஆண்டவர்.
- குறிப்புகள்
[1] 1:2 = 2 அர 22:3-23:7; 2 குறி 24:8-35:19.
[2] 1:3 = 2 அர 23:36-24:7,18-25:21;
2 குறி 36:5-8,11-21.
[3] 1:11 எபிரேயத்தில், 'விழிப்பாயிருக்கும் மரம்'
என்பது பொருள்.
அதிகாரம் 2
[தொகு]இஸ்ரயேலின் பற்றுறுதியின்மை
[தொகு]
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது
2 "நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும்
கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று.
ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் இளமையின் அன்பையும்
மணமகளுக்குரிய காதலையும்
விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை
எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும்
நான் நினைவுகூர்கிறேன்.
3 இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது;
அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது;
அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்;
அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது,
என்கிறார் ஆண்டவர்.
4 யாக்கோபின் வீட்டாரே,
இஸ்ரயேல் வீட்டின் அனைத்துக் குடும்பத்தாரே,
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
5 ஆண்டவர் கூறுவது இதுவே:
என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி
வீணாகும் அளவுக்கு உங்கள் தந்தையர்
என்னிடம் என்ன தவறு கண்டனர்?
6 எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும்
பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும்
வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும்
யாருமே கடந்து செல்லாததும்,
யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில்
நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே?
என்று அவர்கள் கேட்கவில்லையே!
7 செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும்
நலன்களையும் நுகருமாறு
நான் உங்களை அழைத்து வந்தேன்.
நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து
அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்;
எனது உரிமைச் சொத்தை நீங்கள்
அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.
8 குருக்கள், 'ஆண்டவர் எங்கே?'
என்று கேட்கவில்லை;
திருச்சட்டத்தைப் போதிப்போர்
என்னை அறியவில்லை;
ஆட்சியாளர் [*] எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்;
இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப்
பயனற்றவற்றைப் பின்பற்றினர்.
9 ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்'
என்கிறார் ஆண்டவர்.
உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன்.
10 சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக்
கடந்து சென்றுபாருங்கள்;
கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்;
இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.
11 தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும்,
அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா?
என் மக்களோ, என் மாட்சியைப்
பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.
12 வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்;
அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள்,
என்கிறார் ஆண்டவர்.
13 ஏனெனில், என் மக்கள்
இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்:
பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய
என்னைப் புறக்கணித்தார்கள்;
தண்ணீர் தேங்காத,
உடைந்த குட்டைகளைத்
தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.
14 இஸ்ரயேல் ஓர் அடிமையா?
வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா?
அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?
15 அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து,
பெருமுழக்கம் செய்து
அவனது நாட்டைப் பாழடையச் செய்தன;
அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன;
அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.
16 மெம்பிசு, தகபனேசு நகரினர்
உன் தலையை மழித்தனர்.
17 உன் கடவுளாகிய ஆண்டவர்
உன்னை வழிநடத்திச் செல்லும்போதே
அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ
இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?
18 நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ
எகிப்துக்குப் போவதால்
உனக்கு வரும் பயன் என்ன?
யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க
அசீரியாவுக்குப் போவதால்
உனக்கு வரும் பயன் என்ன?
19 உன் தீச்செயலே
உன்னைத் தண்டிக்கும்;
உன் பற்றுறுதியின்மையே
உன்னைக் கண்டிக்கும்;
உன் கடவுளாகிய ஆண்டவராம்
என்னைப் புறக்கணித்தது தீயது எனவும்
கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள்.
என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை,
என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
20 நெடுங்காலத்துக்கு முன்பே
உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்;
உன் தளைகளை அறுத்துவிட்டாய்;
"நான் ஊழியம் செய்வேன்" என்று சொன்னாய்.
உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும்,
பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும்
விலைமாதாகக் கிடந்தாயே!
21 முற்றிலும் நல்ல கிளையினின்று
உயர் இனத் திராட்சைச் செடியாய்
உன்னை நட்டு வைத்தேன்;
நீ கெட்டுப்போய்த்
தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய்
மாறியது எப்படி?
22 நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும்,
எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும்,
உன் குற்றத்தின் கறை
என் கண்முன்னே இருக்கிறது,
என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.
23 'நான் தீட்டுப்படவில்லை;
பாகால்களுக்குப்பின் திரியவில்லை'
என எப்படி நீ கூற முடியும்?
பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்;
நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்;
இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.
24 பாலைநிலத்தில் பழகியதும்,
காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான
காட்டுக் கழுதை நீ!
அதன் காம வெறியை
யாரால் கட்டுப்படுத்த முடியும்?
அதனை வருந்தித் தேடத் தேவையில்லை;
புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.
25 'கால் தேய ஓடாதே;
தொண்டை வறண்டுபோக விடாதே' என்றால்,
நீயோ, 'பயனில்லை.
நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்;
அவர்கள் பின்னே திரிவேன்' என்றாய்.
26 திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல,
இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும்
தலைவர்களும் குருக்களும்
இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.
27 ஒரு மரத்தை நோக்கி,
'நீயே என் தந்தை' என்பர்;
ஒரு கல்லை நோக்கி,
'நீயே என்னைப் பெற்றெடுத்தவள்' என்பர்.
எனக்கு முகத்தையல்ல,
முதுகையே காட்டுகின்றனர்;
ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில்,
'எழுந்தருளி எங்களை விடுவியும்' என்பர்.
28 உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே?
உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில்,
முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே!
யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ,
அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே!
29 என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்?
நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க்
கலகம் செய்தவர்களே,
என்கிறார் ஆண்டவர்.
30 நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்;
அவர்கள் திருந்தவில்லை;
சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே
உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது.
31 இத்தலைமுறையினரே!
ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள்.
நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா?
அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா?
'நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்;
இனி உம்மிடம் வரமாட்டோம்'
என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்?
32 ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ?
மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ?
என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய்
மறந்து விட்டார்கள்.
33 காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்;
ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட
உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
34 மாசற்ற வறியவரின் இரத்தக்கறை
உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது;
அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா?
35 இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ,
'நான் மாசற்றவள்;
அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி' என்கிறாய்.
'பாவம் செய்யவில்லை' என்று நீ கூறியதால்,
நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
36 ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை
மாற்றிக் கொள்கின்றாய்?
அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல்
எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!
37 உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான்
அங்கிருந்து திரும்பி வருவாய்;
ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை
ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்;
அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை."
- குறிப்பு
[*] 2:8 'மேய்ப்பர்' என்பது எபிரேய பாடம்.
(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை