திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்." - எரேமியா 3:15.

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

மனம் மாற அழைப்பு[தொகு]


1 "கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட,
அவள் அவனை விட்டகன்று
வேறு ஒருவனோடு வாழ்கையில்,
அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பிச் செல்வானா?
அந்நாடு தீட்டுப்படுவது உறுதியல்லவா?
நீ பல காதலர்களோடு விபசாரம் செய்தாய்;
உன்னால் என்னிடம் திரும்பிவர முடியுமா?"
என்கிறார் ஆண்டவர்.


2 உன் கண்களை உயர்த்தி மொட்டை மேடுகளைப்பார்;
நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ?
பாலை நிலத்தில் அராபியனைப்போல,
பாதையோரங்களில் நீயும் காதலர்களுக்காகக் காத்திருந்தாய்;
உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும்
நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.


3 ஆகையால், நாட்டில் மழை பெய்யாது நின்று விட்டது;
இளவேனிற் கால மழையும் வரவில்லை;
உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி;
நீ மானங்கெட்டவள்.


4 இப்போது கூட 'என் தந்தையே!
என் இளமையின் நண்பரே!'
என என்னை நீ அழைக்கவில்லையா?


5 'என்றென்றும் அவர் சினம் அடைவாரோ?
இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ?' என்கிறாய்.
இவ்வாறு சொல்லிவிட்டு உன்னால் இயன்றவரை
தீச்செயல்களையே செய்கிறாய்.


6 யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர்
என்னிடம் கூறியது:
"நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா?
அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும்,
பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள். [1]
7 இவை அனைத்தையும் செய்தபின்
என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன்.
அவளோ திரும்பி வரவில்லை.
நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.
8 நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக,
நான் அவளைத் தள்ளிவிட்டு
அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை
நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். [2]
எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.
9 விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால்,
கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து
நாட்டைத் தீட்டுப்படுத்தினாள்.
10 இவை அனைத்திற்கும் பிறகு கூட
நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா
முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை;
பொய் வேடம் போடுகிறாள்"
என்கிறார் ஆண்டவர்.


11 ஆண்டவர் என்னிடம் கூறியது:
நம்பிக்கையற்ற இஸ்ரயேல்
நம்பிக்கைத் துரோகம் செய்த
யூதாவைவிட நேர்மையானவள்.
12 நீ சென்று வடக்கே திரும்பி
இச்சொற்களை உரக்கக் கூறு:


நம்பிக்கையற்ற இஸ்ரயேலே,
என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர்.
நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்;
ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன்,
என்கிறார் ஆண்டவர்.
நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.


13 உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும்;
உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்தாய்;
பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும்
அன்னியரை நாடி அங்குமிங்கும் ஓடினாய்;
என் குரலுக்கோ நீ செவிசாய்க்கவில்லை,
என்கிறார் ஆண்டவர்.


14 மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்;
ஏனெனில், நானே உங்கள் தலைவன்;
நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு
இருவரையுமாகத் தெரிந்தெடுத்து
உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன்.


15 என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை
உங்களுக்குக் கொடுப்பேன்.
அவர்கள் உங்களை அறிவுடனும்,
முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.
16 நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில்
யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை
பற்றியே பேசமாட்டார்கள்.
அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது.
அது இல்லை என்று வருந்தி
இனி ஒன்றும் செய்யமாட்டார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
17 அக்காலத்தில் எருசலேமை
'ஆண்டவரின் அரியணை' என அழைப்பார்கள்.
ஆண்டவரின் பெயரை முன்னிட்டு
எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர்.
தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.
18 அந்நாள்களில் யூதா வீட்டார்
இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்;
நான் அவர்கள் மூதாதையருக்கு
உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு
வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.


19 உன்னை என் மக்களின் வரிசையிலே
எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும்
திராளான மக்களினங்களுக்கிடையே
அழகான உரிமைச்சொத்தாகிய இனிய நாட்டை
உனக்கு எவ்விதம் தருவேன் என்றும்
எண்ணிக்கொண்டிருந்தேன்.
'என் தந்தை' என என்னை அழைப்பாய் என்றும்,
என்னிடமிருந்து விலகிச் செல்லமாட்டாய் என்றும்
எண்ணியிருந்தேன்.


20 நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண்
தன் காதலனைக் கைவிடுவது போல,
இஸ்ரயேல் வீடே!
நீயும் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய்,
என்கிறார் ஆண்டவர்.


21 மொட்டை மேடுகளில் கூக்குரல் கேட்கிறது;
அது இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டலுமாம்;
ஏனெனில், அவர்கள் நெறிதவறித்
தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.


22 என்னைவிட்டு விலகிய மக்களே!
திரும்பி வாருங்கள்;
உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து
உங்களைக் குணமாக்குவேன்;
'இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம்.
நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.


23 குன்றுகளிலிருந்தும் மலைகளில் செய்யப்படும்
அமளிகளிலிருந்தும் கிடைப்பது ஏமாற்றமே;
இஸ்ரயேலின் விடுதலை
எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.


24 எங்கள் இளமை முதல்,
எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற
ஆடுமாடுகளையும்,
புதல்வர் புதல்வியரையும்
வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது.
25 மானக்கேடே எங்கள் படுக்கை;
அவமானமே எங்கள் போர்வை.
ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை
நாங்களும் எங்கள் மூதாதையரும்
எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு
எதிராகப் பாவம் செய்தோம்;
அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.'


குறிப்புகள்

[1] 3:6 = 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.
[2] 3:8 "அவளுடைய சகோதரி யூதா கண்டாள்" என்பது
"நான்...கண்டேன்" என்று எபிரேய பாடத்தில் உள்ளது.


அதிகாரம் 4[தொகு]


1 இஸ்ரயேலே, நீ திரும்பிவருவதாக இருந்தால்
என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர்.
அருவருப்பானவற்றை அகற்றி விட்டால்
என் திருமுன்னிருந்து அலைந்து திரியமாட்டாய்.


2 வாழும் ஆண்டவர் மேல் ஆணை என்று சொல்லி
உண்மையோடும் நீதியோடும் நேர்மையோடும் ஆணையிட்டால்,
மக்களினத்தார் அவர் வழியாகத்
தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்;
அவரில் பெருமை பாராட்டுவர்.


3 யூதாவிலும் எருசலேமிலும் உள்ள மக்களுக்கு
ஆண்டவர் கூறுவது இதுவே:
தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்;
முட்களிடையே விதைக்காதீர்கள். [*]


4 யூதாவின் மக்களே,
எருசலேமில் குடியிருப்போரே,
ஆண்டவருக்காக விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள்;
உங்கள் இதயத்தின் நுனித்தோலை அகற்றிவிடுங்கள்;
இல்லையேல் உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு
என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப் பற்றியெரியும்;
அதனை அணைப்பார் எவருமிலர்.

வடக்கிலிருந்து வரும் அழிவு[தொகு]


5 "யூதாவில் அறிவியுங்கள்;
எருசலேமில் பறைசாற்றுங்கள்;
நாட்டில் எக்காளம் ஊதுங்கள்"
எனச் சொல்லுங்கள்.
ஒன்று கூடுங்கள்;
"அரண்சூழ் நகர்களுக்குச் சென்றிடுவோம்"
என உரக்கக் கூவுங்கள்.


6 சீயோனுக்கு நேராகக்
கொடியை உயர்த்திப் பிடியுங்கள்;
விரைந்து தப்பியோடுங்கள்;
நிற்காதீர்கள்;
ஏனெனில், வடக்கிலிருந்து
தீமை வரச்செய்வேன்;
அது பேரழிவாய் இருக்கும்.


7 சிங்கம் ஒன்று புதரிலிருந்து கிளம்பியுள்ளது;
மக்களினங்களை அழிப்பவன் புறப்பட்டு விட்டான்;
உங்கள் நாட்டைப் பாழாக்க,
அவன் தன் இடத்திலிருந்து வெளியேறிவிட்டான்;
உங்கள் நகர்கள் பாழடைந்து குடியற்றுப் போகும்.


8 எனவே, சாக்கு உடை உடுத்திக் கொள்ளுங்கள்.
அழுது புலம்புங்கள்;
ஒப்பாரி வையுங்கள்;
ஏனெனில், ஆண்டவரின் கோபக் கனல்
நம்மை விட்டு நீங்கவில்லை.
9 அக்காலத்தில் அரசனும் தலைவர்களும்
நம்பிக்கையிழந்துவிடுவர், என்கிறார் ஆண்டவர்;
குருக்கள் திடுக்கிட்டுப் போவர்;
இறைவாக்கினர் திகைத்து நிற்பர்.
10 அப்போது நான்,
"ஆ! என் தலைவராகிய ஆண்டவரே!
நீர் இம்மக்களையும் எருசலேமையும்
முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்;
ஏனெனில் வாள் எங்கள்
தொண்டைமீது இருக்கும்போதே
'உங்களுக்குச் சமாதானம்' என்கிறீர்" என்றேன்.


11 அக்காலத்தில் இம்மக்களுக்கும்
எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்:
பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து
அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும்.
அது தூற்றுவதற்கும்
தூய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று.
12 அதைவிடப் பெரும் காற்று ஒன்று
என்னிடமிருந்து வருகின்றது.
இப்போது நானே அவர்கள் மேல்
தண்டனைத் தீர்ப்பு வழங்கப் போகிறேன்.


13 இதோ, மேகங்களைப் போல் எதிரி வருகிறான்.
அவன் தேர்கள் சூறாவளி போன்றவை;
அவன் குதிரைகள் கழுகுகளைவிட
விரைவாகச் செல்பவை;
நமக்கு ஐயோ கேடு! நாம் அழிந்தோம்.
14 எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால்,
உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு;
இன்னும் எத்துணைக் காலத்திற்குத்
தீய சிந்தனைகள் உன்னில் குடி கொண்டிருக்கும்?
15 தாணிலிருந்து எழும்பும் குரலொலி அறிக்கையிடுகிறது.
எப்ராயிம் மலையிலிருந்து கேடு அறிவிக்கப்படுகிறது.
16 'தொலை நாட்டிலிருந்து உன்னை
முற்றுகையிடுவோர் வருகின்றனர்;
யூதாவின் நகர்களுக்கு எதிராகப்
போர்க் குரல் எழுப்புகின்றனர்' என
மக்களினங்களை எச்சரியுங்கள்.
இதை எருசலேமுக்கு அறிவியுங்கள்.
17 வயல்வெளியின் காவலாளியென,
அவர்கள் அவளைச் சுற்றி வளைத்து
எதிர்த்து நிற்கின்றனர்.
ஏனெனில் அவள் எனக்கு எதிராகக்
கலகம் செய்தாள், என்கிறார் ஆண்டவர்.
18 உன் நடத்தையும் உன் செயல்களும்
இவற்றை உன்மேல் வருவித்தன.
உனக்கு வந்த இக்கேடு எத்துணைக்
கசப்பாய் உள்ளது?
அது உன் இதயத்தையே நொறுக்கி விட்டது.


19 என் அடிவயிறு கலங்குகின்றது;
நான் வேதனையால் துடிக்கின்றேன்;
என் இதயம் துயரத்தால் பதைபதைக்கின்றது;
நான் வாளாவிருக்க முடியுமா?
என் நெஞ்சே,
எக்காள ஒலி என் காதில் விழுகிறதே!
போர்க்குரல் கேட்கிறதே!


20 அழிவின் மேல் அழிவு
என்ற செய்தியே வருகின்றது;
நாடு முழுவதும் பாழடைந்துவிட்டது;
நொடிப்பொழுதில் என் கூடாரங்களும்,
இமைப்பொழுதில் மூடு திரைகளும் அழிந்து போயின;


21 எதுவரைக்கும் நான் போர்க்கொடியைப்
பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?
எக்காளத்தின் குரலைக்
கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?


22 என் மக்கள் அறிவிலிகள்;
என்னை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை;
மதிகெட்ட மக்கள் அவர்கள்;
உய்த்துணரும் ஆற்றல், அவர்களுக்கில்லை;
தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்;
நன்மை செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை.


23 நான் நாட்டைப் பார்த்தேன்;
அது பாழ்நிலமாய்க் கிடந்தது;
வானங்களைப் பார்த்தேன்;
அவற்றில் ஒளியே இல்லை.


24 நான் மலைகளைப் பார்த்தேன்;
இதோ! அவை அதிர்ந்தன;
குன்றுகள் அனைத்தும் அசைந்தன.


25 நான் பார்த்தேன்;
மனிதரையே காணவில்லை;
வானத்துப் பறவைகள் அனைத்தும்
பறந்து போய்விட்டன.


26 நான் பார்த்தேன்;
இதோ செழிப்பான நிலமெல்லாம்
பாலை நிலமாகிவிட்டது;
ஆண்டவரின் திருமுன் அவரது கோபக் கனலால்
அதன் நகர்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டன.


27 ஆண்டவர் கூறுவது இதுவே:
நாடு முழுவதும் பாழடைந்து போகும்;
எனினும் அதனை முற்றிலும் பாழாக்கமாட்டேன்.


28 இதனை முன்னிட்டு நாடு புலம்பும்;
மேலே வானங்கள் இருளடையும்;
எனெனில், நான் சொல்லிவிட்டேன்;
இது பற்றி வருந்தமாட்டேன்;
நான் முடிவு செய்து விட்டேன்;
மனம் மாறமாட்டேன்.


29 குதிரை வீரர், வில் வீரர் எழுப்பும் ஒலி கேட்டு,
நகரினர் அனைவரும் ஓட்டமெடுப்பர்;
புதர்களுக்குள் மறைந்துகொள்வர்;
பாறைகள் மீது ஏறிக்கொள்வர்;
நகர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிடுவர்;
அவற்றில் குடியிருக்க எவருமே இரார்.


30 பாழ்பட்டவளாகிய நீ
ஏன் கருஞ் சிவப்பு ஆடை உடுத்துகின்றாய்?
பொன் அணிகலன்களால் அலங்கரிக்கின்றாய்?
நீ உன்னை அழகுபடுத்துவது வீண்;
உன் காதலர் உன்னை அவமதிக்கின்றனர்;
உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.


31 பேறுகாலப் பெண் எழுப்பும் குரல் போன்றும்
தன் முதற் பிள்ளையைப் பெற்றெடுப்பவளின்
வேதனைக் குரல் போன்றும்
குரல் ஒன்று கேட்டேன்.
அது, மூச்சுத் திணறி, கைகளை விரித்து,
"எனக்கு ஐயோ கேடு!
கொலைஞர் முன்னால் நான்
உணர்வற்றுக் கிடக்கிறேன்!"
என்று அலறும் மகள் சீயோனின் குரலாகும்.


குறிப்பு

[*] 4:3 = ஓசே 10:12.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை