திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்ரா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாரசீக மன்னர் சைரசு என்பவரின் புதைப்பிடமும் நினைவு மண்டபமும்.

எஸ்ரா (The Book of Ezra)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

வழிபாடு மீண்டும் நடைபெறல்[தொகு]

1 தம் நகரில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் ஏழாம் மாதம் வந்த போது எருசலேமில் ஒருசேரக் கூடினர்.
2 அப்பொழுது யோசதாக்கின் மகன் ஏசுவாவும் அவருடைய சகோதர குருக்களும், செயல்தியேல் மகனான செருபாபேலும், அவருடைய சகோதரர்களும், கடவுளின் மனிதரான மோசே திருச்சட்டநூலில் எழுதியுள்ளபடி எரிபலிகள் ஒப்புக்கொடுக்க இஸ்ரயேலின் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டியெழுப்பினர். [1]
3 வேற்று நாட்டு மக்களால் அச்சம் தோன்றினும் பலிபீடத்தை அதற்குரிய இடத்திலே அமைத்தார்கள். காலையிலும், மாலையிலும் ஆண்டவருக்கு எரிபலிகள் ஒப்புக்கொடுத்தனர். [2]
4 திருச்சட்ட நூலில் உள்ளபடி கூடாரத்திருவிழாவைக் கொண்டாடினர். ஒவ்வொரு நாளும் முறைமைப்படி அந்நாளுக்குரிய எரிபலிகளைச் செலுத்தினர். [3]
5 அதன்பிறகு ஒவ்வொரு அமாவாசையின்போதும், ஆண்டவரின் எல்லாத் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்தினர். ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக்கொடுக்க விரும்பியவர்கள் ஒப்புக்கொடுத்தார்கள். [4]
6 ஏழாவது மாதத்தில் முதல் நாளிலிருந்து ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால், ஆண்டவருடைய கோவிலுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை.

எருசலேம் கோவில் மீண்டும் கட்டப்படல்[தொகு]


7 பாரசீக மன்னர் சைரசு அவர்களுக்குக் கொடுத்திருந்த அனுமதியின்படி, கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து யோப்பா கடலுக்குக் கொண்டுவரச் சீதோன், தீர் நகரத்தினருக்கு உணவு, பணம், எண்ணெய் ஆகியன கொடுத்தார்கள்.
8 அவர்கள் எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் தளத்திற்கு வந்தடைந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில், செயல்தியேலின் மகன் செருபாபேல், யோசதாக்கின் மகன் ஏசுவா, அவருடைய சகோதர குருக்கள், லேவியர்கள், மற்றும் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்கள் அனைவரும் கோவில் வேலையைத் தொடங்கினர். ஆண்டவரின் இல்ல வேலையைக் கண்காணிக்க இருபதும், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய லேவியர்களை நியமித்தனர்.
9 ஏசுவா, அவருடைய புதல்வர், உறவினர், கத்மியேல், அவருடைய புதல்வர், யூதாவின் புதல்வர், லேவியரான ஏனிதாதின் புதல்வர், அவர்களுடைய புதல்வர், உறவினர் ஆகியோர் கோவில் வேலையைக் கண்காணிக்க ஒருசேர நின்றனர்.


10 கட்டுபவர்கள் ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இட்டபோது இஸ்ரயேலின் அரசர் தாவீது உரைத்தபடி குருக்கள் தங்களுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, எக்காளத்தோடும், ஆசாபின் புதல்வரான லேவியர் கைத்தாளங்களோடும் ஆண்டவரைப் புகழ்ந்தனர். [5]
11 அவர்கள் ஆண்டவரைப் புகழ்ந்து, நன்றி கூறி, "அவர் நல்லவர், ஏனெனில் அவர் இரக்கம் இஸ்ரயேல்மீது என்றென்றும் உள்ளது" என்று பாடினர். ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர். [6]
12 முதல் கோவிலைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மூப்பர்கள் பலர் இந்தப் புதிய கோவிலின் அடித்தளத்தைக் கண்டபோது, உரத்த குரலில் அழுதனர். வேறு பலர் மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்பாலும் குரல் எழுப்பினர்.
13 நெடுந்தொலைவு கேட்குமளவுக்கும் மக்கள் பெருங்கூக்குரல் எழுப்பியதால், மகிழ்ச்சிக் குரலொலியை அவர்களின் அழுகைக் குரலிலிருந்து பிரித்துணர எவராலும் இயலவில்லை.

குறிப்புகள்

[1] 3:2 = விப 27:1.
[2] 3:3 = எண் 28:1-8.
[3] 3:4 = எண் 29:12-38.
[4] 3:5 = எண் 28:11-29:39.
[5] 3:10 = 1 குறி 25:1.
[6] 3:11 = 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; திபா 100:5; 106:1; 107:1; 118:1; 136:1; எரே 33:11.

அதிகாரம் 4[தொகு]

கோவில் கட்டும் வேலை தடைப்படல்[தொகு]

1 அடிமைத்தனத்திலிருந்து திரும்பியிருந்த மக்கள் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருக்குக் கோவில் கட்டுவதை யூதா, பென்யமின் குலங்களின் பகைவர் அறிந்தனர்.
2 அவர்கள் செருபாபேலையும் குலத்தலைவர்களையும் அணுகி, "நாங்களும் உங்களோடு சேர்ந்து கட்டுகின்றோம். ஏனெனில் உங்கள் கடவுளையே நாங்களும் உங்களைப்போல் வழிபடுகின்றோம். அசீரிய மன்னன் ஏசர்கத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாளிலிருந்து அவருக்கே பலி செலுத்தி வருகின்றோம்" என்றனர். [2]
3 ஆனால், செருபாபேலும் ஏசுவாவும் இஸ்ரயேலின் எஞ்சிய குலத்தலைவர்களும் அவர்களிடம், "நீங்களும் நாங்களும் சேர்ந்து எங்கள் கடவுளுக்கு கோவில் கட்ட வேண்டியதில்லை. மாறாகப் பாரசீக மன்னரான சைரசு எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்கள் மட்டுமே, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோவில் கட்டுவோம்" என்றனர்.


4 ஆதலால், அந்நாட்டு மக்கள், யூதாவின் மக்களது கோவில் கட்டும் பணியைத் தடுத்தனர்; அவர்களை அச்சுறுத்தவும் செய்தனர்.
5 பாரசீக மன்னரான சைரசு ஆட்சிக்காலம் தொடங்கிப் பாரசீக மன்னரான தாரியு ஆட்சிக்காலம்வரை அரசு அலுவலர்களுக்குக் கையூட்டுக் கொடுத்து, அவர்களின் திட்டங்களைச் சீர்குலைக்கத் தூண்டினர்.

எருசலேம் புதுப்பிப்பு தடைப்படல்[தொகு]


6 அகஸ்வேர் ஆட்சியின்போது, அவரது ஆட்சியின் தொடக்கத்திலேயே யூதாவிலும் எருசலேமிலும் குடியிருந்தவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஒன்று எழுதினர். [2]
7 அர்த்தக்சஸ்தாவின் காலத்தில் பிஸ்லாம், மித்ரதாத்து, தாபேல், அவர்களைச் சார்ந்த மற்றவர்களும், பாரசீக மன்னனான அர்த்தக்சஸ்தாவிற்கு ஒரு மடல் எழுதினர். அம்மடல் அரமேயத்தில் எழுதப்பட்டிருந்தால், மொழிபெயர்க்கப்பட வேண்டியிருந்தது.
8 ஆளுநர் இரகூமும் எழுத்தாளரான சிம்சாயும் எருசலேமுக்கு எதிராக அர்த்தக்சஸ்தா மன்னருக்குக் கீழ்க் கண்டவாறு ஒரு மடல் எழுதினர்:
9 ஆளுநர் இரகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களைச் சார்ந்து நீதிபதிகள், தூதர், ஆலோசகர், அதிகாரிகள் மேலும் எரோக்கியர், பாபிலோனியர், எலாமித்தியரான சூசா நகரின் மக்கள்,
10 மாட்சியும், மேன்மையும் பொருந்திய ஒஸ்னப்பர் அடிமைத்தனத்திற்கு இட்டுச் சென்ற மக்களைச் சமாரியா நதியின் அக்கரைப் பகுதியின் ஊர்களிலும் குடியேற்றிய பிற மக்கள் ஆகியோர் எழுதும் மடல்:


11 மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்கு அனுப்பிய கடிதத்தின் உட்பொருள் இதுவே: நதியின் அக்கரையில் வாழும் உம் பணியாளராகிய மக்கள் அறிவிப்பது:
12 உம்மிடமிருந்து எங்களிடம் வந்த யூதர்கள் எருசலேமுக்கச் சென்று கலகம் மிகுந்த, தீங்கு நிறைந்த அந்நகரைக் கட்டுகின்றார்கள்; மதில் சுவர்களைக் கட்டி முடிக்கின்றார்கள், அடித்தளங்களைப் பழுதுப்பார்க்கின்றார்கள்.
13 மேலும் மன்னர் அறிய வேண்டியது: அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதில்கள் கட்டி முடிக்கப்படுமானால், அவர்கள் வரியும், தீர்வையும் தரவோ, கட்டாய வேலை செய்யவோ மாட்டார்கள். எனவே மன்னருக்குரிய வருமானம் குறையும்.
14 நாங்களோ அரண்மனை உப்பைத் தின்பதாலும், மன்னரின் இழிவைப் பார்ப்பது முறையற்றது என்பதாலும், நாங்கள் மன்னருக்கு இதை அனுப்பித் தெரிவித்துக்கொள்கின்றோம்.
15 எனவே, உம்முடைய முன்னோரின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், அதில் அந்நகர் கலகம் மிகுந்த அரசர்களுக்கும், மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கண்டுணர்வீர். அதில் தொன்றுதொட்டுக் கலகங்கள் எழுந்துள்ளன. அதன் பொருட்டே அந்நகர் அழிக்கப்பட்டது.
16 ஆகையால் அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதிற் சுவர்கள் கட்டுதல் நிறைவேறுமானால், பேராற்றுக்கு அக்கரைப் பகுதி உமக்குச் சொந்தமாகாது என்பதை மன்னருக்குத் தெரிவிக்கின்றோம்.


17 ஆட்சியாளரான இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும், சமாரியாவில் வாழ்ந்தவர்களுக்கும், நதிக்கு அக்கரையில் வாழும் மற்றவர்களுக்கும் சமாதானம் கூறி மன்னர் அனுப்பிய செய்தி பின்வருமாறு:
18 "நீங்கள் எங்களுக்கு அனுப்பிய மடல் என்முன் தெளிவாக வாசிக்கப்பட்டது.
19 எனவே என்னிடமிருந்து ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டு தொன்றுதொட்டு அந்நகர் மன்னருக்கு எதிராக எழுந்தது என்றும், குழப்பமும் கிளர்ச்சியும் அதில் இருந்து வந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
20 மேலும் எருசலேமில் ஆற்றல்மிக்க அரசர்கள் இருந்திருக்கின்றனர்; அவர்கள் பேராற்றுக்கு அக்கரைப் பகுதிகளையெல்லாம் ஆட்சி செய்துள்ளனர்; வரி மற்றும் ஆயம் வசூலித்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
21 எனவே நான் மறுஆணை பிறப்பிக்கும் வரை அந்நகரைக் கட்டியெழுப்பாமல் இந்த ஆள்கள் வேலையை நிறத்துமாறு கட்டளை கொடுங்கள்.
22 இதைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மன்னருக்குத் தீங்கு வரும் அளவிற்குத் தீமை ஏன் பெருகவேண்டும்?"
23 மன்னர் அர்த்தக்சஸ்தாவின் மடலின் நகல் இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர்முன் வாசிக்கப்பட்டது. உடனே அவர்கள் எருசலேமில் வாழ்ந்த யூதர்களிடம் சென்று ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலையை நிறுத்தும்படி செய்தனர்.


24 எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் வேலை தடைப்பட்டு, பாரசீக மன்னர் தாரியு ஆட்சியின் இரண்டாம் ஆண்டுவரை நிறுத்தப்பட்டிருந்தது. [3]

குறிப்புகள்

[1] 4:2 = 2 அர 17:24-41.
[2] 4:6 = எஸ் 1:1.
[3] 4:24-5:1 = ஆகா 1:1; செக் 1:1.

(தொடர்ச்சி): எஸ்ரா:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை